ஏ. பி. சி. வைதீகம்
– தேசீயத்துரோகி
நாம் சொல்லுவதைத் தயவு செய்து கொஞ்சம் காதுகொடுத்துக் கேளுங்கள். பிறகு அதைப் பற்றிக் கொஞ்சம் ஆலோசனையும் செய்து பாருங்கள். அதன் பின் வேண்டுமானால் நம்மைத் தூற்றுங்கள். தாராளமாகக் கேட்டுக் கொள்ளுகிறோம். கூடுமானால் நாம் பதில் சொல்லுகிறோம். “காங் கிரஸ் இயக்கம் முதலாளிகள் இயக்கம் அதில் உள்ளவர்கள் அனைவருமே முதலாளிகளின் ஆதிக்கத்தை எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்கச் சம்மதிக்க மாட்டார்கள்” என்று எந்தக் கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டும் சொல்லத்தயார். இதற்குக் காரணம் சொல்லுகிறேன் கேளுங்கள்!
இப்பொழுது சட்ட மறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போயிருக் கின்றவர்களைப் பாருங்கள். அவர்கள் ஜெயிலுக்குப் போன விதத்தையும் ஆலோசனை பண்ணுங்கள். ஜெயிலில் போய் அடையும் கஷ்ட நஷ்டங் களையும் கொஞ்சம் ஆலோசனை செய்து பாருங்கள். நாம் கூறுவதன் உண்மை காந்த விளக்கைப் போலத் தெரியும்.
முதலில் தொண்டர் கூட்டத்தைப் பாருங்கள். இவர்களெல்லாம் மறியல் செய்து போலீஸ்காரரிடம் தடியடியும், பிறம்படியும் பட்டு ஜெயிலுக்குப் போகின்றார்கள். தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் அடிபட்ட வர்களே. அடிபடாதவர்கள் மிகக் கொஞ்சம்.
இரண்டாவது தலைவர்கள் கூட்டத்தைப் பாருங்கள். அவர்களை இரு பிரிவாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒருபிரிவு பார்ப்பனரல்லாத தலைவர்கள், மற்றொரு பிரிவு பார்ப்பனத் தலைவர்கள், பார்ப்பனர்களிலும், தெலுங்கப் பார்ப்பனர்கள், தமிழ்ப் பார்ப்பனர்கள் என்று இரு வகையாகப் பிரித்துக் கொள் ளலாம். இவர்கள் ஜெயிலுக்குப் போன கதையைப் பாருங்கள். பிறகு இவர் களில் எந்தக் கூட்டத்தார் கெட்டிக்காரரென்று யோசியுங்கள்.
பார்ப்பனரல்லாத சோணகிரித் தலைவர்கள், போலீசாரிடம் அடிபட்டுத் தான் ஜெயில் செல்லுகிறார்கள். இதற்கு உதாரணம், திரு. பக்தவச்சலம், முத்துரங்க முதலியார் போன்றவர்கள் உதைபட்டுச் சிறைசென்றதே போதீய உதாரணமாகும். தெலுங்குப் பார்ப்பனர்களாகிய திரு. பிரகாசம், நாகேசுவர ராவ் பந்துலு போன்றவர்களும் கொஞ்சம் கஷ்டப்பட்டே சிறைசென்றார்கள். ஆனால் இவர்களில், தமிழ்ப் பார்ப்பனர்கள்தான் மிகவும் தந்திரசாலிகள். திரு. சத்தியமூர்த்தி, ராஜ கோபாலாச்சாரி முதலியவர்கள் எப்படிச் சிறை சென் றார்கள் என்று பார்த்தீர்களா? தடியடி படவில்லை; பிரம்படி படவில்லை; கால் நடையாக நடந்து சென்று கூட காங்கிரசுக்கு ஒன்றும் செய்யாமல் சிறை சென் றார்கள், மோட்டார்கார்களில் உட்கார்ந்தபடியே நோட்டீஸ் வழங்கிவிட்டுச் சிறை சென்றார்கள். ஆகையால் இப்பொழுது தொண்டர்கள் சமர்த்தர்களா? தலைவர்களில் பார்ப்பனரல்லாதார் சமர்த்தர்களா? தெலுங்கப் பார்ப்பனர்கள் சமர்த்தர்களா? தமிழ்ப் பார்ப்பனர்கள் சமர்த்தர்களா? என்றுதான் கேட் கிறோம். இனி இவர்கள் சிறையில் சென்று அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங் களைப் பாருங்கள்!
சிறையில் ராஜீயக் கைதிகளுக்கு மூன்று விதமான உபசாரம் நடக் கின்றது. அவை ஏ. வகுப்பு, பி. வகுப்பு சி. வகுப்பு என்பன. இந்த ஏ. பி. சி. வகுப்புப் பிரிவினை நமக்குப் பழயகால மனுநீதியைத்தான் ஞாபகம் படுத் துகிறது. மனுநீதியில்தான் ஒரு குற்றத்தை பார்ப்பான் செய்தால் அவனுக்குக் குறைந்த தண்டனையும், க்ஷத்திரியன் அதே குற்றத்தைச் செய்தால் இன்னும் அதிகமான தண்டனையும், வைசியன் அதே குற்றத்தைச் செய்தால் க்ஷத்திரியனுக்குக் கொடுப்பதைக் காட்டிலும் அதிகமான தண்டனையும், சூத்திரன் அந்த குற்றத்தைச் செய்தால் சகிக்க முடியாத கொடுந் தண்டனையும் விதிக்கும்படி எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே ஜாதிக்கொரு நீதி கூறும் மனு நூலை நாம் வெறுக்கிறோம்; கொளுத்த வேண்டுமென்று கூறுகிறோம். ஆனால் மநுநீதியைப் போலவே இப்பொழுது பிரிட்டிஷ் அரசாங்கத்திலும் ராஜீயக் கைதிகளுக்கு ஏ. பி. சி. வகுப்பு அளிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் யார்? பணக்கார ஜாதியாராக இருக்கின்ற காங்கிரஸ்காரர் தானே? முன்னே அதாவது இந்துமத அரசர்கள் காலத்தில், ஜாதியின் பேரால் தண்டனை கொடுக்கப்பட்டது. இப்பொழுது பணத்தின் பேரால் தண்டனை கொடுக் கப்படுகிறது. இவை இரண்டில் என்ன வித்தியாசம் இருக்கிறது? பெரிய பணக்காரனாகவும் தலைவன் என்று பெயர் படைத்தவனாகவும் இருக்கிறவன் ஏ. வகுப்புக் கைதியாவான். கொஞ்சம் குறைந்த பணக்காரனாகவும் சின்னத் தலைவனாகவும் இருக்கின்றவன் பி. வகுப்புக் கைதியாவான், சாதாரண மானவர்களும் அன்னக்காவடிகளும் சி. வகுப்புக் கைதிகள்.
இக்கைதிகளுக்குள் ஏ. வகுப்புக் கைதிகளுக்கு யாதொரு கஷ்டமும் இல்லை. மாமியார் வீடாகவே ஜெயிலை நினைத்துக் கொள்ளலாம். மாமியார் வீட்டைக் காட்டிலும் அதிக சௌகரியமும் உபசாரமும், ஏ. வகுப்புக் கைதிக ளுக்கு உண்டு. பி. வகுப்புக் கைதிகளுக்கும் அவ்வளவு கஷ்டமில்லை, அவர் களும் அனேகமாக மாமியாள் வீடாக இல்லா விட்டாலும் தங்கள் சொந்த வீட்டில் இருப்பது போலவாவது இருக்கலாம். ஆனால் நமது தோழர்களாகிய தொண்டர்களும், மற்றவர்களும் பெறும் சி. வகுப்புக்கும், மற்ற திருட்டு கொலை முதலிய குற்றங்கள் செய்த கைதிகள் நிலைக்கும் வேறுபாடில்லை என்றே சொல்லலாம்.
பொதுவாகப் பார்க்கும் போது சுய ராஜ்யம் பெறத் தியாகிகளாக வெளி வரும் பணக்காரனுக்கு ஒரு கஷ்டமும் இல்லை. அவன் வெளியிலும் சுகம் அடைகின்றான். ஜெயிலுக்குள் சென்றாலும் ஏ வகுப்பில் அமர்ந்து இன்பம் அனுபவிக்கின்றான். ஆனால் வறுமையினாலும் வேலை யில்லாமையாலும், திண்டாடும் சாதாரண மக்கள் வெளியிலிருந்தாலும் கஷ்டந்தான் அடை கிறார்கள். காங்கிரஸ் பேரைச் சொல்லிச் சிறைசென்றாலும் அங்கேயும் சி வகுப்பில் சேர்க்கப்பட்டு வெளியிலிருந்ததைக் காட்டிலும் அதிக கஷ்டத் தைத்தான் அடைய வேண்டியிருக்கின்றது. அந்தோ! பரிதாபம்!! பரிதாபம்!!!
தோழர்களே! காங்கிரஸ் காதலர்களே! இங்கே கொஞ்சம் ஆலோசனை பண்ணுங்கள்! ஏழை மக்களின் சௌகரியத்திற்காக சுயராஜ்யம் வேண்டு மென்று கேட்கின்ற இந்த காங்கிரஸ் தலைவர்கள் உள்ளக் கிடக்கையைக் கொஞ்சம் நுழைந்துபாருங்கள்! இந்தத் தலைவர்களுக்கு மதிப்பிருக்கும் படி உழைப்பவர்கள் தொண்டர்களல்லவா? தொண்டர்கள் இல்லாவிட்டால் தலைவர்கள் எப்படி வெளிவர முடியும்? இப்படிப்பட்ட தொண்டர்களுக்குச் சிறையில் சௌகரியம் வேண்டுமென்பதற்காக இவர்கள் இதுவரையிலும் என்ன செய்தார்கள்? இவர்கள் மாத்திரம் ஏ வகுப்பில் போய் சுகமாகக் கவலை யற்று வாழ்கிறார்களே ஒழிய வேறு என்ன செய்கிறார்கள்? சிறையிலும் தங்க ளுக்கும் தொண்டர்களுக்கும் சமத்துவமான ஸ்தானமே இருக்கவேண்டு மென்று யாரேனும் கேட்டார்களா இவர்கள்தானா நாளை சுயராஜ்யம் பெற்று ஏழை மக்களுக்குச் சமத்துவம் கொடுக்கப்போகிறார்கள்?
சுயராஜ்யத்திற்காக எவ்வளவோ தியாகம் செய்யத் தயாரென்று முன்வந்திருக்கும் இந்தத் தலைவர்களில் எவரேனும் இதுவரையிலும் “எங்கள் சகாக்களான – தேச மக்களான – அரசியல் கைதிகளில் அநேகர் சி வகுப்பில் இருக்கும்பொழுது நாங்கள் ஏ வகுப்பிலும், பி வகுப்பிலும் இருக்க மாட்டோம். அவர்களுக்கும் எங்களைப் போலவே ஏ வகுப்போ, பி வகுப்போ கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்களும் சி வகுப்பிலேயே இருக் கிறோம்” என்று எந்தத் தலைவர்களாவது தியாக புத்தியுடன் சொல்ல முன்வந்தார்களா? என்று பாருங்கள்.
நீங்கள் மகாத்மா என்று சொல்லுகிற திரு. காந்தியாகட்டும், குட்டி காந்தி என்று சொல்லுகிற திரு. ராஜகோபாலச்சாரியாகட்டும், அல்லது மற்ற பேர்வழிகளாகட்டும், அவர்கள் அனைவரும் இன்று ஏ வகுப்பில்தானே இருக்கின்றார்கள்? வெளியில் இருப்பதுபோலவே ஜெயிலுக்குள்ளும், பகவத்கீதை படித்துக்கொண்டும், பத்திரிகை பார்த்துக் கொண்டும், உலாவிக் கொண்டும், காற்று வாங்கிக் கொண்டும் இருக்கிறார்கள் அல்லவா? ஆனால் நமது ஏழைத் தோழர்களின் கதி யென்ன? கல்லுடைப்பதும், மூட்டை தூக்குவதும், இட்ட வேலைகளைச் செய்வதும், சுதந்தரம் இன்றி இருப்பதும் ஆகிய கஷ்டங்களைத்தானே அடைந்து வருகிறார்கள்?
இதிலிருந்தே நமது ராஜீயத் தலைவர்களின் மனப்பான்மை விளங்கவில்லையா? ஜெயிலில் நடக்கும் குறைகளைப் பற்றி பத்தி பத்தியாக பத்திரிகைகளில் எழுதும் தேசாபிமானிகளில் யாராவது இந்த ஏ, பி, சி என்னும் புதிய வருணாச்சிரம தர்மத்தைக் கண்டித்தார்களா? எந்தெந்த காரியத்தைப் பற்றியோ சட்டசபைகளில் கேள்விகள் கேட்டுத் தங்களை விளம்பரப்படுத் திக் கொள்ளும் காருண்ய கனவான்களில் யாரேனும் இந்த ஏ, பி, சி வருணாச் சிரமத்தைப் பற்றி கண்டித்ததுண்டா? கேள்வி கேட்டதுண்டா? என்று யோசித் துப் பாருங்கள். ஆகவே எல்லா ராஜ்யத் தலைவர்களும் சிறையில் இந்த ஏ, பி, சி பிரிவு இருக்க வேண்டுமென்று தானே விரும்புகின்றார்கள் இவர்கள் அதிகாரம் வகிக்கக் கூடிய சுயராஜ்யத்திலும் இந்த ஏழை பணக்கார ராஜ்யந் தானே இருக்கும்? காங்கிரஸ் பேரைச் சொல்லி சிறைசெல்லும் சோணகிரி களே ஏ, பி, சி யைக் கவனிங்கள்! நீங்கள் கொண்டிருக்கும் மயக்கம் தெளியும். அதன்பின் நம்மோடு சண்டைக்கு வாருங்கள்.
குடி அரசு – கட்டுரை – 13.03.1932