கீதைக் கூட்டமா? காங்கிரஸ் கூட்டமா?
காங்கிரஸ்காரர்கள், தங்களுடைய காரியங்களுக்கு இப்பொழுது ஜனக்கூட்டம் சேர்வதும் கஷ்டமாகி விட்டதை அறிந்து புதிய வழிகளைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. இன்று திரு. காந்தியவர்கள் தமது “ராமராஜ்ய”ப் பேச்சையும், “பகவத்கீதை”ப் பிரபாவத்தையும் விட்டு விடுவாரானால் அவருக்கும் பொது ஜனங்களிடம் உள்ள மதிப்புக் குறைந்து போகும் என்பதில் ஐயமில்லை. பொது ஜனங்கள், தாங்கள் கொண்டிருக்கும் மூட நம்பிக்கை காரணமாக “ராமராஜ்யம்” “பகவத் கீதை” முதலிய வார்த்தை களைக் கேட்டே ஏமாறுகிறார்கள் என்பதில் ஐயமில்லை.
சென்ற 14 – 3 – 32ல் கராச்சியில் காங்கிரஸ் கமிட்டி காரியதரிசி சுவாமி கிருஷ்ணானந்தர் என்பவர் ஐவுளிக்கடை வீதியில் காங்கிரசின் பெயரால் கூட்டம் சேர்ப்பதற்கு ஒரு தந்திரம் செய்தார். இரு தெருக்கள் சந்திக்கும் ஒரு சந்தியில் உட்கார்ந்து கொண்டு ‘பகவத்கீதை’ பாராயணம் பண்ண ஆரம்பித்தார். உடனே அதைக் கேட்க ஜனக்கூட்டம் சேரத் தொடங்கிற்று. பிறகு வழக்கம்போல் போலீஸார் வருவதும், கலகஞ் செய்வதும், கைது செய்வதும் ஆகிய காரியங்கள் நிறைவேறின.
இவ்வாறு காங்கிரஸ் கூட்டம் கூட்டுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்று தான் நாம் கேட்கிறோம். சாதாரணமாக மருந்து விற்கின்றவன் ஒருவன் ஒரு சந்தியில் நின்று கொண்டு, தனது மருந்தைப் பற்றியும், அது தீர்க்கும் வியாதிகளைப் பற்றியும் பிரசங்கம் பண்ண ஆரம்பித்தால் அங்கும் வேடிக்கை பார்க்கத் திரளான ஜனங்கள் கூடி விடுகின்றனர். கழைக் கூத்தாடி ஒருவன் தனது கழைக் கோலை நட்டு வைத்து விட்டுத் தனது வாத்தியத்தை முழக்கத் தொடங்கினால் அங்கும் திரளான ஜனங்கள் கூடிவிடுகின்றனர். செப்பிடு வித்தைக்காரன் ஒருவன் தனது கோணிப்பையை எடுத்து வைத்துக் கொண்டு தண்டு தளவாடங்களுடன் உட்கார்ந்து தனது சங்கதிகளை எடுத்து விடத் தொடங்கினால் அங்கும் திரளான ஜனங்கள் கூடி விடுவார்கள். பாம்பாட்டி ஒருவன் தனது பாம்புப் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டு தன் மகிடியை ஊத ஆரம்பிப்பானாயின் அங்கும் எண்ணில்லாத மக்கள் கூடி விடுகின்றார்கள்.
இந்த அற்பமான காரியங்களுக்கே இவ்வளவு ஜனங்கள் கூடுவார்க ளாயின் சாதாரணமாக, பொது ஜனங்கள் உண்மையானவை யென்றும் கேட்டால், படித்தால் மோட்சமும் சகல சௌகரியமும் உண்டாகுமென்றும் நம்பிக் கொண்டிருக்கும் ராமாயண பாரத பாகவதம் முதலியவைகளையும், பகவத்கீதையையும் பாராயணம் பண்ணத் தொடங்கினால், மூட நம்பிக்கை யை யுடைய மக்கள் ஏராளமாகக் கூடுவார்கள் என்பதில் என்னதடை?
ஆகையால் மக்கள் மயங்கத் தகுந்த இதுபோன்ற காரியங்களைச் செய்து ஜனக் கூட்டத்தைச் சேர்த்து, அதை அரசியல் கூட்டமென்றும், காங்கி ரஸ் கூட்ட மென்றும், சொல்லி ஏமாற்றுவதுதான் ஒழுங்கா என்று கேட்கின் றோம். இத்தகைய காரணங்களின் மூலம் பொது ஜனங்கள் காங்கிரசை ஆதரிப்பதாகவும்; அரசாங்கத்தை வெறுப்பதாகவும் விளம்பரம் பண்ணு வதனால் வெள்ளைக்காரர்களோ மற்றவர்களோ ஏமாந்து விடுவார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.
ஆகையால்தான் பொது ஜனங்கள் ஏமாறாமல் இருக்க வேண்டு மானால், அவர்களுடைய ஏமாற்றத்திற்குக் காரணமான மூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று நாம் கூறி வருகின்றோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 20.03.1932