வைதீக வெறி
இந்துப் பெண்மணிகள் பலவகையிலும் சுதந்திரம் இல்லாதவர்களாய் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கு முதன்மையான காரணம், அவர்கள் ஆண் களின் தயவைக் கொண்டு ஜீவனம் பண்ணக் கூடிய நிர்ப்பந்தமான நிலை யிலிருப்பதேயாகும். இந்த வகையான நிர்ப்பந்த நிலைமை இருப்பதற்குக் காரணம் இந்தப் பாழும் இந்து மதமும், அதன் மூலம் செய்யப்பட்டிருக்கும் சட்டங்களுமே என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகையால் ஆண் மக்களுக்கு இருப்பது போன்ற எல்லா உரிமைகளும் பெண் மக்களுக்கும் சட்ட மூலமாக ஏற்பட்டால் தான் அவர்கள் சீர்திருத்தமடைய முடியுமென்று நாம் கூறி வருகிறோம். ஈரோடு, விருதுநகர், சென்னை முதலிய இடங்களில் கூடிய நமது இயக்கப் பெண்கள் மகாநாடுகளிலும் இது சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டிருக்கின்றன. ஆனால் எந்த விதமான மாறுதலையும் விரும்பாமல் தங்கள் சுயநலம் ஒன்றையே விரும்புகின்ற வைதீகர்கள், பெண் மக்கள் உரிமைகளுக்கு எதிராகவே கிளர்ச்சி செய்து கொண்டு வருகின்றனர். பெண் மக்கள் கேட்கும் சுதந்தரங்களையெல்லாம் மதத்திற்கு விரோதம், ‘கடவுள்’ கட்டளைக்கு விரோதம், சாஸ்திரங்களுக்கு விரோதம்; அவர்கள் விருப்பத்தின்படி சுதந்தரம் கொடுத்துவிட்டால் மதம் போய்விடும்; கடவுள்கள் போய்விடுவார்கள்; சாஸ்திரங்கள் அழிந்து விடும் என்றெல்லாம் வீண் கூச்சலிட்டுத் தடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் கல்வி யறிவும் உலக நாகரீக அறிவும் சுயமரியாதை உணர்ச்சியும், சுதந்தர தாகமும் உள்ள பெண்மக்கள் எல்லோரும் இந்த வைதீகர்களின் பூச்சாண்டிகளுக்குக் கொஞ்சமும் பயப்படாமல் தங்கள் அபிப் பிராயங்களை வெளியிட்டு வருகின்றனர். நாமும் இவர்களுடைய அபிப்பி ராயங்களை ஆதரித்து சட்டங்கள் செய்ய வேண்டுமெனக் கிளர்ச்சி செய்து கொண்டு வருகிறோம். இவ்வாறு பெண்மக்களும் சீர்திருத்தக்காரர்களும், சுயமரியாதை இயக்கமும் உழைத்ததன் பயனாகவே திவான்பகதூர் அரி விலாச சாரதா அவர்களால் இந்திய சட்டசபையில் இளமை மணத்தைத் தடுக்கும் சட்டம் கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டது. ஆயினும் நமது நாட்டு வைதீக மூடர்களின் கிளர்ச்சியாலும், அரசியல் கிளர்ச்சிக்காரர்களின் ஆர்ப்பாட்டங்களாலும் அந்தச் சட்டம் சில மாதங்கள் சரியாக அநுஷ்டிக் கப்படாமல் இருந்தது. இப்பொழுதும் அச்சட்டம் அமுலிலிருப்பதாகத் தான் சொல்லப்பட்டு வருகிறது. இன்றும் வைதீகர்கள் அனைவரும் இச்சட்டத்தைக் கண்டித்து இதனால் மதம் போய்விட்டதென்றும், வருணாச்சிரம தருமம் போய்விட்டதென்றும், சனாதன தருமத்திற்கு அழிவு வந்துவிட்டதென்றும், ஆகையால் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும் குலைத்துக் கொண்டு கிடக்கிறார்கள். இச்சட்டத்தை ஒழிப்பதற்கென்றே தஞ்சை திருச்சி ஜில்லாக்களின் பிரதிநிதியாகத் திரு. ராஜா பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் இந்திய சட்டசபையில் போய் உட்கார்ந்து கொண்டு திருத்த மசோதாவும் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அம்மசோதாவை ஆதரிக்கும் மனப் பான்மையுடைய வைதீகர்களும் சபையில் அங்கத்தினர்களாயிருக்கின்றனர்.
இதற்கிடையில் இளமை மணத்தடைச் சட்டத்தைக் கொண்டு வந்த திவான் பகதூர் அரிவிலாச சாரதா அவர்களே மற்றொரு சிறந்த சீர்திருத்த மசோதாவைச் சென்ற 26-1- 32 இந்திய சட்டசபையில் கொண்டு வந்து அதைத் தனிக் கமிட்டிக்கு அனுப்ப வேண்டுமென்று பிரேரேபித்தார். அந்த மசோதா வின் நோக்கம் ‘பெண்களுக்குப் புருஷனுடைய சொத்தில் பாகம் இருக்க வேண்டும்’ என்பதேயாகும். நியாய புத்தியும் பகுத்தறிவும் மனிதத் தன்மை யும் உள்ள எவரும் இம்மசோதாவை அப்படியே ஒப்புக் கொள்வது தான் ஒழுங்காகும்; ஜீவகாருண்யத் தன்மையும் சமரச நோக்கமும் உள்ள எந்த ஒரு மனிதனும் இம்மசோதாவை ஒப்புக் கொள்ளப் பின் வாங்க மாட்டான்.
இந்து மதப் பெண்கள் எவ்வளவு செல்வமுள்ள குடும்பத்தில் பிறந்தா லும், பிறந்த அகத்திலுள்ள சொத்திலும் அவர்களுக்குப் பாத்தியம் இல்லை. எந்த செல்வவானுடைய குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டாலும், புருஷன் இருக்கும் வரையில் கொஞ்சம் சுகமாக இருக்கலாமே யொழிய புருஷன் இறந்து விதவையாகிவிட்டால், சொத்துரிமையும், சுகமும் இல்லாமல் துன்பப் படக் கூடிய நிலையில் இருக்கின்றனர். இத்தகைய கொடுமையை இந்துமத பெண்கள்தான் பாழும் இந்து மதத்தில் பிறந்ததற்காக அனுபவிக்க வேண்டிய வர்களாக இருக்கிறார்கள். இவ்வளவு கஷ்ட நிலை கிறிஸ்தவ, முஸ்லீம் பெண்களுக்கு இல்லவே இல்லை. வேறு எந்த நாகரீகம் பெற்ற நாட்டிலும் இல்லை என்றே கூறலாம். இந்தப் பரிதாபகரமான நிலையை நீக்கிப் பெண் களைப் புருஷனுடைய சொத்துக்கு உரிமையுடையவராகச் செய்வதே திரு. சாரதா அவர்கள் மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.
இத்தகைய அரிய மசோதாவைப் பிரரேரேபித்த போது அதை திரு. அமர்நாத் தத்தர், திரு. லால் சந்து நாவல்ராய் திரு. ராஜா பகதூர் கிருஷ்ண மாச்சாரியார் ஆகிய மூவரும் எதிர்த்தனர். அரசாங்கத்தின் சார்பாக சர். லாஸ்பெடட் கிரஹாம் அவர்களும் சபை அங்கத்தினர்களில் மூன்று பேர் எதிர்த்ததைக் காரணமாகக் கொண்டு மசோதாவை ஆதரிக்க மறுத்தார். ஆனால் மற்ற அங்கத்தினர்கள் அனைவரும் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் ஆகியவர்களும் இம்மசோதாவை வரவேற்று ஆதரிப்பதாக யூகிக்க இடமிருக்கிறது. ஆகவே இந்த மசோதாவுக்குச் சட்டசபையில் தாராளமான ஆதரவிருப்பது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. இனி இம்மசோதாவை எதிர்த்த வைதீகர்களும் அரசாங்கத்தாரும் தாங்கள் அம்மசோதாவை எதிர்ப்பதற்கு கூறிய காரணங்களைப் பற்றிக் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம். இம்மசோதாவை எதிர்த்த திரு. அமர்நாத் தத்தர் என்பவர் தாம் வருணாச்சிரம தருமத்தில் நம்பிக்கை உடையவர் என்றும் பண்டைக் கால மகான்களின் புனித சட்டங்களில் கை வைக்க ஒருவருக்கும் சுதந்தரம் கிடையாது என்றும் சொன்னார். இந்த வைதீக மனப்பான்மையுள்ள கனவான் பேச்சைச் சிறிது ஆராய்ந்து பாருங்கள். இவர் வருணாச்சிரம தருமத்தில் நம்பிக்கையுடையவராயிருந்தால், இவர் அதைப் பின்பற்றி நடக்கிறாரா? இவரால் நடக்கத் தான் முடியுமா? வெள்ளைக்கார அரசாங்கத் தால் ஏற்படுத்தப்பட்ட சட்டசபையில் சட்டை, தலைப்பாகையோடு வந்து உட்கார்ந்து கொண்டு பேச எந்தப் “பண்டைக்கால மகான்களின் புனித சட்டம்” போதிக்கிறது? “மிலேச்ச” பாஷையாகிய ஆங்கில பாஷையைப் படிக்கவும், உத்தியோகம் பெறவும், பேசவும் எந்த “பண்டைக்கால மகான் களின் புனித சட்டம் கூறுகிறது? என்று தான் கேட்கிறோம்.
அடுத்தபடியாக இந்த மசோதாவை எதிர்த்த திரு. கிருஷ்ணமாச் சாரியார் இந்து விதவைகள் கஷ்டப்படுகிறார்கள், அநீதியாக நடத்தப்படு கிறார்கள் என்னும் கதை மெய்ப்பிக்கப்பட வில்லை யென்றும், இம்மசோதா இந்து சமூகத்தின் வேரையும் தர்மத்தையும் வெட்டி வீழ்த்தி விடும் என்றும், இந்து மதத்தின் அடிப்படையான அஸ்திவாரங்களைப் பலமாய்த் தாக்குகிறது என்றும் பேசி இருக்கிறார். இவர் பேசியிருப்பதில் உண்மையாவது, அல்லது அறிவுக்குப் பொருத்தமான வாதமாவது இருக்கிறதா? என்று பாருங்கள்! உண்மையில் இவர், வருணாச்சிரம தருமத்தைப் பற்றி பேசவோ, அல்லது தன்னை ஒரு வருணாசிரம தரும இந்துவாகச் சொல்லிக் கொள்ளவோ எவ்வளவு தூரம் சுதந்திரம் உள்ளவர் என்று தான் நாம் கேட்கின்றோம். வேதங்களை மனப்பாடம் பண்ணித் தவளையைப் போல் கத்திக் கொண்டு காவிரிக் கரையில் உட்கார்ந்து கொண்டு ஓமம் பண்ணிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு இங்கிலீஷ் பாஷை பயிற்சியும், உயர்ந்த உத்தியோகஸ் தர்களாகிய இங்கிலீஷ்காரர்களின் கூட்டுறவும் வைத்துக் கொண்டிருக்கும் இவர் வருணாச்சிரம தரும இந்து ஆவாரா? இனி இவர் பேசியதில் உள்ள விஷயங்களைக் கவனிப்போம்.
இந்து சமூக விதவைகள் கஷ்டப்படுகிறார்கள் என்பதும் அநீதியாக நடத்தப்படுகிறார்கள் என்பதும் மெய்ப்பிக்கப்படவில்லையாம். இது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போன்ற பேச்சேயாகும். மற்ற சமூகத்தை விடத் திரு. ஆச்சாரியார் அவர்களின் பார்ப்பன சமூகத்திலேயே விதவைகள் அதிகம். அவர்கள் வீடுகளில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது வீடுகளில் விதவைகள் இல்லாமல் இல்லை. அவர்கள் படும் கஷ்டங்களுக்கு அளவில்லை. வேண்டுமானால் நாலு மொட்டை அம்மாள்களைக் கூப்பிட்டு விசாரித்தால் உண்மை விளங்கும். இது போகட்டும். இந்த மசோதா இந்து சமூகத்தின் வேரையும், தர்மத்தையும் வெட்டி வீழ்த்தி விடுமாம்! இந்து சமூகத்தின் அடிப்படையான அஸ்திவாரங்களைப் பலமாக தாக்குகிறதாம்! எவ்வளவு உண்மையான – சீவகாருண்யமான பேச்சு பாருங்கள்! பெண் மக்களை மிருகங்களிலும் கேடாகக் கொடுமைப் படுத்தி, பிள்ளை பெறும் யந்திரங்களாகவும் அடிமை வேலை செய்யும் கருவிகளாகவும் வைத்திருப் பது தானா இந்து மதம்? ஜன சமூகத்தில் பாதியாக இருக்கின்ற தாய்மாரைத் தவிக்க விடுவது தானா இந்து மதம்? இந்து மத தர்மம்? இந்து மதத்தின் அடிப்படையான அஸ்திவாரம்? என்று தான் நாம் கேட்கின்றோம். இப்படிப் பட்ட சட்டங்களைக் கொண்டிருக்கும் ஒரு மதம் மதமாகுமா? என்று யோசித் துப் பாருங்கள். இப்படிப்பட்ட சட்டங்களை உண்டாக்கியவர்கள் மகான்களா? அல்லது சுயநலவாதிகளா? ஜீவகாருண்ய முள்ளவர்களா? அல்லது வன் நெஞ்சர்களா? யோக்கியர்களா? அல்லது அயோக்கியர்களா? என்று நன்றாய் யோசனை செய்து பாருங்கள்!
ஆகையால் தான் நாம் இத்தகைய அயோக்கியத் தனங்கள் நிறைந்த இந்து மதத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று சொல்லுகிறோம். இந்த மதம் ஒழிந்தலான்றி பெண்மக்களுக்கோ, மற்ற ஜாதிக் கொடுமையால் கஷ்டப் படும் கூட்டத்தார்க்கோ சுதந்திரம் கிடைக்கப் போவதில்லை என்று உறுதி யாகச் சொல்லுகிறோம். ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் எல்லா மக்களை யும் மக்களாகப் பாவித்து சுதந்தரம் வழங்கக் கூடியதாக ஒரு மதமோ அல்லது ஒரு கடவுளோ அல்லது ஒரு வேதமோ இருந்தால் அதை நாம் ஆட்சேபிக்க வில்லை. இப்படி யில்லாமல் ஒரு கூட்டத்தாரை உயர்ந்த பதவியிலிருந்து எல்லாச் சுகங்களையும் அடையக் கூடியவராகவும், மற்றொருக் கூட்டத் தாரைப் பிறந்தது முதல் இறக்கும் வரை அடிமையாயிருந்து எல்லாத் துன்பங் களையும் அனுபவிக்கக் கூடியவராகவும் வைத்திருக்கக் கூடியவராகவும், வைத்திருக்கக் கூடியது மதமாயிருந்தாலும் சரி அல்லது கடவுளாயிருந்தாலும் சரி அல்லது வேதங்களாயிருந்தாலும் சரி அவைகளை நெருப்பிலிட்டுக் கொளுத்தி அச்சாம்பல்களை ‘அட்லாண்டிக் ஓஷன்’ என்னும் கடலில் கொண்டுபோய் கொட்டவேண்டுமென்பதே நமது முடிவான தீர்மானமாகும்.
இனி அரசாங்கத்தின் நோக்கத்தையும் கவனிப்போம். நமது பிரிட்டீஷ் அரசாங்கத்தார் “இந்துக்களின் மதத்தில் தலையிடுவதில்லை” என்று சொல்லிக்கொண்டு நமது சமூக சீர்திருத்தத்தில் சிறிதும் கவனமில்லாமலே தான் இது வரையிலும் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். உண்மை யிலேயே அரசாங்கமும் சமூக சீர்திருத்தம் பண்ணுவதில் கவனமுடையதாக இருந்திருக்குமானால் பிரிட்டீஷ் அரசாங்கம் ஏற்பட்ட இந்த நூற்றைம்பது வருஷ காலத்திற்குள் நமது இந்து சமூகம் எவ்வளவோ சீர்திருத்தமான நிலைமைக்கு வந்திருக்கக் கூடும். ஆனால் அரசாங்கத்தாரோ சீர்திருத்தத்தில் கொஞ்சமும் கவலை இல்லாமல் “நாங்கள் மதத்தில் தலையிட மாட்டோம்” என்னும் அந்தப் பழயப் பல்லவியையே வைதீக வெறியர்களின் மிரட்டு தலுக்குப் பயந்து இன்னும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆதரவற்ற பெண் களுக்குச் சொத்துரிமை வழங்கும் பொருட்டுக் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த மசோதாவைப் பற்றி அரசாங்கத்தின் சார்பாக “இந்த மசோதாவுக்குப் பலமான பொது ஜன ஆதரவிருப்பதாக எங்களுக்குத் தெரிந்தால் ஒழிய நாங்கள் இதை ஆதரிக்க மாட்டோம்” என்று சொல்லிவிட்டார்கள். அரசாங்கத் தார் இம்மசோதாவை ஆதரிக்க முன்வராமல் இவ்வாறு எதிர்த்ததை நாம் பலமாகக் கண்டிக்கின்றோம். பெண்கள் சம்பந்தமாகக் கொண்டு வரும் இம்மசோதாவுக்குப் பொது ஜன ஆதரவு இருப்பதை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை அரசாங்கத்தாருக்கு ஞாபகப் படுத்த விரும்பு கின்றோம். உண்மையில் இந்தச் சாரதா மசோதாவுக்குப் பொது ஜன ஆதரவு இருக்கிறதா என்று அறிய வேண்டுமானால் சொத்துரிமை இல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கும் பெண் மக்களின் அபிப்பிராயங்களை அறிவது தான் ஒழுங்காகும். இம்மசோதாவைப் பற்றி வைதீக வெறி பிடித்த, சுயநலமுடைய ஆண் மக்கள் கூறும் அபிப்பிராயம் பொருத்த மற்றதாகும். ஏனென்றால் பெண்களை அடிமையாக வைத்திருப்பதுதான் இந்து மதம். சிறு குழந்தை களைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதுதான் இந்து மதம் -ஆண் மக்கள் சொத்து சுதந்தரத்தோடு சுகமடைவதும் பெண் மக்கள் அவையில்லாமல் துன்பமடைவதுந்தான் இந்து மதம், இந்து மத தர்மம், இந்த மதத்தின் அஸ்திவாரம் என்ற கொள்கையுடையவர்கள் எப்படி இம்மசோதாவை ஆதரிக்கக் கூடும்? ஆகையால் பெண் மக்களின் அபிப்பிராயத்தையே அனுசரித்து இம்மசோதாவுக்கு ஆதரவு கொடுப்பது தான் அரசாங்கத்தின் நியாயமான கடமையாகும். “இந்தியர்களைக் காப்பாற்றவே நாங்கள் இந்தியா வுக்கு ஊழியம் புரிகிறோம்” என்று வெள்ளைக்கார அரசாங்கம் சொல்லிக் கொண்டிருப்பது உண்மையானால் இந்த மசோதாவை ஆதரித்துப் பெண் மக்களுக்கு நியாயம் வழங்குவது தான் நேர்மையாகும் என்று எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.
கடைசியாகப் பொது ஜனங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லி முடிக் கிறோம். சாரதா சட்டத்தைக் கண்டித்து வைதீக வெறியர்கள் கிளர்ச்சி செய்தது போல் இப்பொழுது அந்தக் கூட்டத்தார் கிளர்ச்சி செய்யப் போகின்றார்கள். ஆகையால் நாம் அவர்களுடைய விஷமப் பிரசாரத்திற்கு இடங்கொடாமல், இந்த மசோதாவை ஆதரித்துப் பொதுக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறை வேற்றி அரசாங்கத்தார்க்கு அனுப்பி அவர்களையும் எச்சரிப்பது அவசியம் ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
நாம் எதிர்பார்த்ததற்கு விரோதமாக பலத்த விவாதத்திற்குப் பின் மேற்படி மசோதா தோற்றுவிட்டதாக இன்றைய செய்தியறிய மிகவும் விசனிக்கிறோம். இதைப் பற்றி மறுமுறை எழுதுவோம்.
குடி அரசு – தலையங்கம் – 07.02.1932