சுதேசிப் பிரசாரம்
நமது நாட்டின் பொருளாதாரத் துறையை விருத்திச் செய்ய வேண்டு மென்பதிலும் இதற்கு ஆதாரமானத் தொழில்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பதிலும் நாம் யாருக்கும் பின்வாங்கியவர் அல்லோம் என்பதை நமது மகாநாடுகளில் அவ்வப்போது நிறைவேற்றப் பட்டிருக்கும் தீர்மானங் களைக் கொண்டு அறியலாம்.
பொருளாதாரத் துறையிலும், தொழில் அபிவிருத்தியிலும் நாம் முன்னேற்றமடைய வேண்டுமானால் கூட்டுறவுத் தொழில் முறையில் இயந்திரங்களை விருத்தி செய்தால் ஒழிய நாம் வியாபாரத்தில் அன்னிய தேசங்களுடன் போட்டி போட ஒரு நாளும் முடியாது என்பதே நமது கொள் கையாக இருந்து வருகின்றது. இந்தத் தத்துவத்தைக் கொண்டுதான் நாம், ராஜீயச் சின்னமாக உபயோகப்பட்டு வருகின்ற கதர்த் திட்டத்தைப் பலமாக எதிர்த்து வருகின்றோம்.
அன்றியும் இப்பொழுது காந்தீயத்தினால் ஏற்பட்ட ‘சுதேசீயம்’ என்னும் பிரசாரம் மக்களை மீண்டும் பழய மிருகப் பிராயத்திற்கு இழுத்துச் செல்லும் தத்துவத்தை யுடையதென்று கூறி அதை அடியோடு கண்டிக் கின்றோம்.
ஒவ்வொரு மனிதனும் தனக்கு வேண்டிய பொருள்களைப் பிறரு டைய கூட்டுறவை விரும்பாமல் தானே உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் திரு. காந்தியின் தேசீயமாகும். இத் தேசீயத்திலிருந்து முளைத்தது தான் கதர்த்திட்டம் என்பதும். மேற்கூறிய “தனக்குத் தானே உதவி செய்துகொள்ளுதல்” என்னும் கொள்கையை அஸ்திவாரமாகக் கொண்டு தான் இப்பொழுது நமது நாட்டு ‘ராஜீயம்’, ‘தேசீயம்’, ‘காந்தீயம்’, ‘சுதேசியம்’ ஆகிய எல்லாம் நடைபெற்று வருகின்றன.
மனிதர்கள் உற்பத்தியான பழய காலத்தில் – அவர்கள் மிருகப் பிராயமுடையவர்களாக இருந்த காலத்தில், ஒவ்வொருவரும் தத்தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் தேடிக் கொண்டு தனித்தனியே வாழ்ந்து வந்தனர். அதன் பின் சிறிது அறிவு விளக்கமான பின்பு தனித்தனிக் குடும்பங்களாக இருந்து வாழ்க்கை நடத்த ஆரம்பித்தனர். அதன் பின் தனித்தனி சமூகங்களாகப் பெருகினர். இப்பொழுது எல்லா மக்களும் ஒரே சமூகமாக வாழ வகை தேடுகின்றனர்.
இதைப் போலவே தொழில்களும் கூட்டுறவு முறையில் வளர ஆரம்பித்தன. ஒருவனுக்கு வேண்டிய பண்டத்தை அவனே செய்து கொள்ளாமல், ஒவ்வொன்றை ஒவ்வொருவன் செய்யவும், ஒருவன் தான் செய்த பொருளை மற்றொருவனிடம் கொடுத்து தனக்கு வேண்டிய பொருளை அவனிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் நேர்ந்தது. இதுதான் பண்ட மாற்றுதல் என்னும் வியாபாரத்திற்குக் காரணமாகும். இந்த முறையில் தான் பொருளாதாரத் துறையும், தொழில் அபிவிருத்தியும் முன்னேற்ற மடைய முடியும். மக்களுடைய தனித்தனி சமூக அமைப்பும் ஒழிந்து ஒரே சமூகமாக வழியும் உண்டாகும். இந்த முறைதான் தேசத்தின் முற்போக்குக்கு ஏற்ற வழியாகும்.
இதை விட்டு விட்டுத் திரு. காந்தியின் “தனக்குத் தானே உதவி செய்து கொள்ளுதல்” என்னும் தத்துவத்தை உடைய தேசீயத்தைப் பின்பற்றும் தேசம், தொழில் முறையிலும், வியாபாரத்துறையிலும், பொருளாதாரப் பெருக்கத்திலும் வளர்ச்சியடைய முடியாமலும், மக்களுக்குள் சமத்துவமும் சகோதரத்துவமும் உண்டாக முடியாமலும், வருணாசிரம தரும வாழ்க்கை யிலேயே இருந்து கொண்டு அதிவிரைவாகப் பழய மிருகப் பிராயத்திற்குச் செல்ல வேண்டியதுதான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இதனால் தான் தேசீயமும், சுயமரியாதையும் எந்தக் காலத்திலும் ஒன்று சேரமுடியாதென்றும் கூறி வருகின்றோம்.
இவ்விஷயங்களையே சென்ற ஆண்டில் விருது நகரில் நடந்த சுயமரியாதை மூன்றாவது மகாநாட்டில் நிறைவேற்றிய,
“பொருளாதாரத் துறைக்கும், தொழில் அபிவிருத்திக்கும் இயந்திர வளர்ச்சிக்கும் சமதர்ம உணர்ச்சிக்கும் கதர் தத்துவம் விரோதமாய் இருப்பதால் கதர் தேசீயப் பொருளதாரத்து தொழில் திட்டம் என்பதை இம்மகாநாடு மறுக்கின்றதுடன் தொழில் முறை இயந்திர வளர்ச்சியை இம்மகாநாடு ஆதரிக்கின்றது”.
என்ற தீர்மானமும் வற்புறுத்துகின்றது.
ஆகவே, தேசத்தில் பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக சமத்துவத்தையும் உண்டாக்க விரும்புகின்றவர்கள் எவரும் இயந்திரங் களினால் செய்யக் கூடிய தொழில்களை எல்லாம் இயந்திரங்களைக் கொண்டே கூட்டுறவு முறையில் அபிவிருத்தி செய்வதற்கு முயற்சி பண்ணினால் ஒழிய நமது நாடு முன்னேற்றம் அடைய முடியாது. என்பதை உணர்ந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
ஆனால் இந்த முறையில் பண்டங்களை உற்பத்தியாக்க நமது நாட்டில் இது வரையிலும் ஒரு முயற்சியும் செய்யப்படவுமில்லை; பண்டங்கள் உற்பத்தியாகவும் இல்லை. ஆனால் அன்னிய நாட்டுப் பொருள்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்னும் சத்தம் மாத்திரம் பலமாக இருந்து கொண்டு வருகிறது.
இப்பொழுது “பகிஷ்காரக் கூச்சல்காரர்களு”க்கு ஆபத்து உண்டான வுடன் இக்கூச்சலே வேறு விதமாக மாறி “சுதேசிப் பொருள்களை வாங்குங் கள்” என்ற கூச்சலாகப் புறப்பட்டிருக்கின்றது.
உண்மையிலேயே நமது நாட்டில் சுதேசிப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்குமானால் அவற்றை வாங்குங்கள் என்று செய்யும் பிரசாரத்தை நாம் வரவேற்பதுடன், நாமும் அந்தப் பிரசாரத்தை மேற்கொண்டு முன்னணியில் நின்று வேலை செய்வோம். ஆனால் நமக்குத் தேவையான சுதேசிப் பொருள்கள் கிடைக்காமலும், கூட்டுறவு முறையில் இயந்திரத் தொழில்களை உற்பத்தி செய்யாமலும், இவ்வாறு தொழில்களைச் செய்ய சிறிது கூட முயலாமலும், இக்கொள்கையைக் கூட ‘தேசீய வாதிகள்’ ஒப்புக் கொள்ளாமலும் இருக்கின்ற போது “சுதேசியை வாங்குங்கள்” என்னும் பிரசாரமும், இப்பெயரினால் சங்கங்களும் உண்டாவதில் என்ன அர்த்த மிருக்கிறது என்று நமக்கு விளங்கவில்லை.
ஆனால் இது வரையிலும் நமது நாட்டில் ‘ஹோம்ரூல்’, ‘சுயராஜ்யம்’, ‘காங்கிரஸ்’, ‘காந்தீயம்’, ‘தேசீயம்’ என்ற பற்பல வார்த்தை களைக் கூறித் தேசாபிமானிகளாக விளங்கியவர்கள் எவ்வாறு அவ் வார்த்தைகளைக் கொண்டு பொது ஜனங்களை ஏமாற்றிப் பட்டங்களையும் பதவிகளையும் பெற்று வந்தார்களோ, அவ்வாறே தான் இப்பொழுதும் “சுதேசியை வாங்குங் கள்” என்ற பிரசாரத்தை மேற்கொண்டிருப்பவர்களும், வரப் போகும் தேர்தல் களில் வெற்றி பெறுவதற்கு இதை ஒரு தந்திரமாக ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.
‘சுதேசியை வாங்குங்கள்’ என்னும் இந்த புதிய தேர்தல் பிரசாரம் முதலில் யாரால் கிளப்பிவிடப்பட்டது. இப்பொழுதும் யாரால் நடத்தப்படு கிறது? எப்படி நடத்தப்படுகிறது? என்ற விஷயங்களை அறிந்தால் அதன் பின் இதைக் கண்டு யாரும் ஏமாற மாட்டார்கள் என்பது நிச்சயம். ஆகையால் அவ்விஷயங்களை ஆராய்வோம்.
வருணாச்சிரம தரும வாதியாகிய திரு. மாளவியா பண்டிதர் இங்கிலாந்திலிருந்து வட்ட மேஜை மகாநாட்டை விட்டுத் திரும்பி வந்த வுடனேயே இந்த இயக்கத்திற்கு விதை போட்டார். காங்கிரஸ் பெயராலோ, காந்தியின் பெயராலோ, சத்தியாக்கிரகத்தின் பெயராலோ, பகிஷ்காரத்தின் பெயராலோ, தேர்தல் பிரசாரம் பண்ணினால் நிச்சயமாகத் தடியடியோ, அபராதமோ, சிறை தண்டனையோ பெற்று கஷ்டமடையும்படி நேரும் என்பது அவருக்குத் தெரியும். ஆகையால் அன்னிய நாட்டுப் பொருள் களைப் பகிஷ்கரியுங்கள் என்று சொல்லுவதை விடச் ‘சுதேசியை வாங்குங்கள்’ என்று பிரசாரம் செய்வது சட்ட விரோதமும் ஆகாது; தேர்தல் பிரசாரம் நடப்பதற்கு வழியும் ஆகும் என்று கருதிப் பிரசாரம் பண்ண ஆரம்பித்தார்.
இச்சமயத்தில் அடக்குமுறைச் சட்டங்களால் மூலைகளிற் பதுங்கிக் கிடந்த பதவி வேட்டைக்காரர்கள் அனைவரும் இப்பிரசாரத்தை வரவேற்றனர். இவர்கள் எல்லோரும் பார்ப்பனர்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. உதாரணமாகச் சென்னையிலும், கும்பகோணம், கோய முத்தூர், திருநெல்வேலி முதலிய இடங்களிலும் இப்பொழுது ஆரம்பிக்கப் பட்டிருக்கும் இச்சங்க நிர்வாகிகளைப் பார்த்தாலே இவ்வுண்மை விளங்கும். இனி மற்ற ஊர்களில் ஆரம்பிக்கப்படப் போகும் சங்க நிர்வாகிகளும் பார்ப்பனர்களாகவேதான் இருப்பார்கள் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. இவர்கள் எல்லோரும் அடக்கு முறைச் சட்டங்கள் ஏற்படு வதற்குமுன்பு தேர்தலுக்காக வேண்டி ‘காந்தி’, ‘காங்கிரஸ்’, ‘சத்தியாக்கிரகம்’, ‘சட்ட மறுப்பு’, ‘பூரண சுயேட்சை’, ‘கதர்’ என்ற வார்த்தைகளைக் கூறித் திரிந்தவர்கள் தான் என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம்.
இப்பொழுது ‘சுதேசியை வாங்குங்கள்’ என்பது பற்றிப் பிரசாரம் செய்யப் புறப்பட்டு இருப்பவர்கள் இவர்கள் கொள்கைப்படி செய்யப் பட்டி ருக்கும் சுதேசிப் பண்டங்கள் ஒன்றும் இல்லாமையால் கதர் ஒன்றைத் தான் பிரசாரம் பண்ண முடியும். கதர் ஒரு தொழிலாகாமையாலும் அதனால் இதுவரையிலும் ஒரு லாபமும் கிடைக்காமையாலும் இனியும் கிடைக்கப் போவதில்லையாகையாலும் கெஜம் இரண்டரை அணா மூன்று அணா பெறக்கூடிய துணிக்கு 9 அணா, 10 அணா கொடுத்து வாங்க வேண்டி யிருப்பதனாலும் கதரை நம்பி நூல் நூற்கின்றவர்கள் ஒரு நாளைக்கு 1 அணா 1ஙூ அணாவுக்கு மேல் பெற வழி இல்லாமையாலும் கதர்ப் பிரசாரத்தால் பரம்பரையாக நெசவு செய்து வாழ்ந்து வந்தவர்களிலும், அதன் மூலம் வியா பாரம் செய்து வந்தவர்களிலும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வேலை யின்றி பட்டினிகிடக்க நேர்ந்தமையாலும், ‘கதர் பிரசாரம்’ என்பது ஏழை மக்களின் பொருளை கொள்ளை அடிக்கப் பார்ப்பனர்களால் செய்யப்படும் ஏமாற்றுப் பிரசாரம் என்பதை நாம் இப்பொழுது புதிதாக எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
நமது நாட்டில் தொழில்களை அபிவிருத்தி செய்து வியாபாரம் பண்ணுவதன் மூலம் பொருளாதாரத்தை வளர்க்க இந்த ‘சுதேசி பக்தர்கள்’ ஒரு முயற்சியும் செய்யாமல் “சுதேசியை வாங்குங்கள்” என்று மாத்திரம் பிரசாரம் பண்ணுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்று மீண்டும் மீண்டும் யோசனை செய்து பார்த்தால் இதில் உள்ள சூழ்ச்சி வெளிப்படாமல் போகாது, சுதேசிப் பண்டங்கள் இருந்தாலல்லவோ அவைகளை வாங்குங்கள் என்று பிரசாரம் பண்ணவேண்டும். அவை இல்லாமலிருக்கும் போது இப்பிரசாரம் செய்ய முன் வந்திருப்பது தேர்தலுக்காகச் செய்யப்படும் சூழ்ச்சியா? அல்லவா? என்று யோசனை செய்து பாருங்கள்.
ஆகவே யாரும் இந்த சுதேசிப் பிரசாரத்தைக் கண்டு ஏமாறாமல் இருக்கும்படி எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம். ஆங்காங்கே உள்ள நமது இயக்கத்தோழர்கள் பார்ப்பனப்புலிகள் இந்தச் ‘சுதேசி’ என்னும் பசுத் தோலைப் போர்த்துக் கொண்டு பொது ஜனங்களை ஏமாற்ற முன் வந்திருப் பதை எடுத்துக்காட்டி பாமர மக்களை எச்சரிப்பார்கள் என்று நம்புகின்றோம்.
காங்கிரஸ் பிரசாரத்தின் பெயரால் தேர்தலுக்குப் பணம் சேர்க்க முடியாமல் போய் விட்ட படியால் இப்பொழுது சுதேசிப் பிரசாரத்தின் பெய ரால் பார்ப்பனர்கள் பணம் சேர்க்கப் புறப்பட்டு இருக்கிறார்கள் என்ற உண்மை யைப் பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டி அவர்களை ஜாக்கிரதையாக இருக்கும்படி செய்ய வேண்டுகிறோம்.
சுதேசி என்னும் பதத்தில் உள்ள ஏமாற்றங்களை எடுத்துக் காட்டுவது நமது கடமையாகும். இப்பொழுது நாம் சும்மா இருந்து கொண்டு சுதேசியின் பேரால் பார்ப்பனர்களைப் பணம் சேர்க்க விட்டு விடுவோமானால் பின்னால் அது பார்ப்பனரல்லாத பொது ஜனங்களுக்கே ஆபத்தாய் முடியும் என்பதில் சந்தேகமில்லை.
குடி அரசு – தலையங்கம் – 03.04.1932