வக்கீல்களின் ஜாதி ஆணவம்

மதுரையில் உள்ள பார்ப்பன வக்கீல்களும், கோயமுத்தூரில் உள்ள பார்ப்பன வக்கீல்களும் சென்னை அரசாங்கத்தின் சட்ட மந்திரி கனம் கிருஷ்ண நாயர் அவர்களுக்கு வரவேற்பு அளிப்பதில்லையென்று தங்கள் சங்கத்தில் தீர்மானம் செய்தனர். ஆனால் கோயமுத்தூரிலுள்ள பார்ப்பன ரல்லாத வக்கீல்கள், தங்கள் சங்கத்தில் இவ்வாறு தீர்மானம் நிறைவேறிய தற்குப் பார்ப்பன வக்கீல்களின் ஜாதி ஆணவமே காரணமென்பதை அறிந்து, பார்ப்பனரல்லாத வக்கீல் சங்கம் ஒன்றை ஸ்தாபனம் பண்ணினார்கள்.   இவ்வாறு பார்ப்பனரல்லாத வக்கீல்கள் செய்த காரியத்தை நாம் வரவேற் கின்றோம்.

நமது மாகாண முழுவதிலும் உள்ள வக்கீல் சங்கங்கள் எல்லாவற்றிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் தான் மிகுந்து நிற்கின்றது. ஆகையால் மாகாணத் தில் உள்ள எல்லா வக்கீல்களுமே பார்ப்பனரல்லாதார் நன்மைக்கென ஒரு தனிச் சங்கம் ஏற்படுத்திக் கொள்ளுவது மிகவும் நன்மையேயாகும். இனி கனம் கிருஷ்ணன் நாயருக்கு வரவேற்பு அளிப்பது கூடாது என்று தீர்மானித்த வக்கீல்களின் மனப்போக்கையும் அவர்கள் செய்த காரியம் உண்மையில் தேசாபிமானத்திற்கு அறிகுறியான காரியமா? அல்லது ஜாதி ஆணவத்திற்கு அடையாளமான காரியமா? என்பதைப் பற்றிக் கொஞ்சம் ஆலோசித்துப் பார்ப்போம்.

அடக்குமுறைச் சட்டங்களை அமல் நடத்திவரும் அரசாங்கத்தில் சட்ட மந்திரியாயிருக்கும் காரணத்தால் கனம் கிருஷ்ண நாயருக்கு வரவேற்பு அளிக்கக்கூடாது என்பதே மேற்படி வக்கீல் சங்கங்களின் மனக்கருத்து என்று சொல்லப்படுகிறது.

ஆனால் அடக்குமுறையை அனுசரித்துவரும் அரசாங்கத்தின் ஆதிக்கத்திலுள்ள கோர்ட்டுகளில் ஆஜராகிப் பணம் சம்பாதிக்கும் இவர்கள் அந்த அரசாங்கத்தின் சட்ட மந்திரியை மாத்திரம் வெறுப்பதில் என்ன அர்த்த மிருக்கிறது? என்று யோசித்துப்பாருங்கள்.

 

உண்மையில் இந்த வக்கீல் கூட்டத்தார்கள் அரசாங்கத்தின் செய் கையை ஆதரிக்காதவர்களாயிருந்தால், உடனே வக்கீல் தொழிலை விட்டு வெளியேறவேண்டும்.   இப்படி யில்லாமல் பணத்திற்காகப் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அடிபணிவதும், பணமில்லாமைக்கு ஒரு தீர்மானம் செய்வதும் எவ்வளவு மோசமான செய்கையாகும்?

மதுரை வக்கீல் சங்கப் பார்ப்பனர்களும், கோயமுத்தூர் வக்கீல் சங்கப் பார்ப்பனர்களும், கனம் கிருஷ்ண நாயருக்கு வரவேற்பு அளிக்க மறுத் தமைக்குக் காரணம் ஜாதி ஆணவத்தைத் தவிர வேறு அரசியல் காரணம் ஒன்றுமே இல்லையென்பதை சர். சி. பி. ராமசாமி அய்யர் அவர்கள் சட்ட மந்திரியாயிருந்த காலத்தில் நடந்த காரியங்களைக் கொஞ்சம் நினைத்துப் பார்ப்பவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

சர். சி. பி. ரா. அய்யர் அவர்கள் சட்டமந்திரியாயிருந்த காலத்திலும், தற்போது நடப்பது போன்ற அடக்குமுறைகள் நடந்து கொண்டு தானிருந்தன. ஆனால், அந்தக் காலத்தில் அவர் சுற்றுப் பிரயாணம் செய்தபோது, எந்த வக்கீல் சங்கங்களும் அவரைப் பகிஷ்கரிக்கவில்லை. ஆங்காங்கே அவருக்குச் சிறப்பாகவே வரவேற்பு அளித்தனர். இதற்குக் காரணம், அவர் பார்ப்பனர் என்பதா? அல்லவா? என்றுதான் கேட்கின்றோம். இப்பொழுதுள்ள சர். கிருஷ்ண நாயரோ பார்ப்பனரல்லாதார். ஆகவே பார்ப்பனரல்லாத சட்ட மந்திரியை கௌரவிப்பது தங்கள் ஜாதிக் கொள்கைக்கு ஏற்றதாகாது என்ற அகங்கார புத்தியால்தான் பார்ப்பன வக்கீல்கள் வரவேற்பு அளிக்கக்கூடாது என்று தீர்மானித்தார்கள் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.

இத்தகைய மனப்பான்மையுள்ள வக்கீல்களும், மற்றும் ஜாதி அகங்காரம் கொண்ட வைதீகப் பார்ப்பனர்களும், இயற்கையிலேயே அகங் காரம் பிடித்த பணக்காரர்களும்தான் சுயராஜ்யத்திற்காகப் பாடுபடுகின்றார்கள். இவர்கள் கையில் தேசத்தின் அதிகாரப் பதவி கிடைத்துவிட்டால் பார்ப்பன ரல்லாத ஏழை மக்களின் கதி என்னாகு மென்பதைக் கவனிக்க வேண்டு கிறோம்.

பார்ப்பனரல்லாத கட்சியினரையும், சுயமரியாதைக் கட்சியினரையும் வகுப்புத் துவேஷிகள் என்று புரளி பண்ணிக் கொண்டுத் திரியும் புத்தி சாலிகள், உண்மையில் வகுப்புத் துவேஷிகள் யார்? என்பதை இப்பொழு தாவது உணர்வார்களா? என்று கேட்கின்றோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 24.04.1932

You may also like...

Leave a Reply