சர். ரெட்டி நாயுடு அவர்கள்
இந்திய சர்க்காரின் ஏஜண்டாகத் தென்னாப்பிரிக்காவில் உத்தியோகம் வகித்திருந்த சர். கே. வி. ரெட்டி நாயுடு அவர்கள் தமது உத்தியோகத்தினின் றும் நீங்கி இந்தியாவுக்கு வந்து விட்டார். சர். ரெட்டி நாயுடு அவர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியாவின் நன்மைக்காக உண்மையாகவும், அஞ்சாமலும் உழைத்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. சர். ரெட்டி நாயுடு அவர்கள் சமுதாய ஊழியத்தில் அளவு கடந்த பற்றும், உண்மையாகத் தனது கொள்கைகளைக் கைப்பற்றி நடக்கும் தன்மையும் உள்ளவர் என்பதை அவரை நேரில் அறிந்த நமது மாகாண வாசிகள் அனைவரும் அறிவர். இவருக்கு முன் தென்னாப்பிரிக்காவில் ஏஜண்டாயிருந்த மகாகனம் சீனிவாச சாஸ்திரிகளைக் காட்டிலும் ஊக்கமாகவும், உண்மையாகவும் இந்தியர்களுக் காக உழைத்தவராவார். ஆனால் மகாகனம் சீனிவாச சாஸ்திரிகள் தென்னாப் பிரிக்காவிலிருந்த காலத்தில், அவர் எங்கேயாவது மூச்சு விட்டாலும், தும்மி னாலும், இருமினாலும் அவற்றையெல்லாம் நமது நாட்டுப் பத்திரிகைகள் பிரமாதமாக வெளியிட்டு விளம்பரம் பண்ணி வந்தன. அதற்குக் காரணம் அவர் பார்ப்பனராயிருந்ததும், நமது நாட்டுப் பத்திரிகைகளும் பார்ப்பனர் களுடையதாயிருப்பதுமேயாகும். ஆனால் “சர். ரெட்டி நாயுடு அவர்களோ பார்ப்பனரல்லாதார்; அதிலும் வருணாச்சிரம தருமப் புரட்டுகளில் நம்பிக்கை யற்ற ஓர் சீர்திருத்தவாதி” ஆகையால் இவருடைய உண்மையான ஊழி யத்தை பற்றிக் கூட எந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளும் எடுத்துக்காட்டா திருந்தன. இது நமது நாட்டு வழக்கமாகவே இருந்து வருகின்றது. இதனா லேயே ஒன்றுக்கும் உதவாப் பார்ப்பனர்களும் கூடப் பெரிய தலைவர்க ளாகவும், பிரபல தேசாபிமானிகளாகவும் ஆகிவிடுகின்றார்கள். உண்மையாக நாட்டு மக்களுக்கு உழைக்கும் பார்ப்பனரல்லாதார்கள் எப்படிப்பட்டவர் களாயிருந்தாலும் குடத்துள் வைத்த விளக்கைப் போல் இருக்கின்றார்கள் என்பது நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளின் போக்கையறிந்தவர் களுக்குத் தெரிந்த விஷயமாகும்.
இறுதியாக நாம், சர். கே. வி. ரெட்டி நாயுடு அவர்களுடைய ஊழி யத்தைப் பாராட்டுகிறோம். இனி அவர் நமது நாட்டில் உள்ள வருணாச் சிரம தருமச் சூழ்ச்சிகளையெல்லாம் ஒழித்து உண்மையான சமதர்மத்தைப் பரவச் செய்ய முன் வருவாரென நம்புகின்றோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 13.03.1932