கவியும் பண்டிதரும்

காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானத்தின் பேரில், காங்கிரஸ்காரர்கள் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டு இருக்கும் காலத்திலேயே பூரியில் அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டையும் கூட்ட ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் அரசங்கத்தார் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ்காரர்கள் நடத்திக் கொண்டிருக்கும் போது காங்கிரஸ் மகாநாடு கூடினால் சட்ட மறுப்பு இயக்கத்தை இன்னும் பலப்படுத்துவதற்குக் காரணமாகும் என்று கூறி பூரி காங்கிரசைத் தடுத்து விட்டார்கள்.

இதன்பின் காங்கிரஸ் கமிட்டியினர் மகாநாடு கூட்டும் விஷயத்தில் கவலை கொள்ளுவதை விட்டுச் சட்டமறுப்பு இயக்கத்தையே நடத்தினர். இதன் பலனாகக் காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டி அங்கத்தினர் பெரும்பாலும் சிறை சென்றுவிட்டனர். இப்பொழுது வெளியிலிருப்பவர்கள் இரண்டொரு வரே யாவார்கள்.

இந்த நிலையில் இப்பொழுது காங்கிரசின் ஆக்டிங் தலைவராக இருக்கும் திருமதி சரோஜினிதேவியார் காங்கிரசின் 47வது மகாநாட்டை டில்லியில் கூட்டத் தீர்மானித்து, அதற்குத் திரு. மாளவியா பண்டிதரைத் தலைமை வகிக்கும்படி கேட்டு, அவரும் ஒப்புக் கொண்டு, மற்றும் மகாநாட்டு உத்தியோகஸ்தர்களும் நியமிக்கப்பட்டுப் பத்திரிகைகளிலும் வெளியிடப் பட்டன.

இதற்கிடையில் அரசாங்கத்தாரால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை யில் “காங்கிரசை நடத்த முன் வருவோர், சட்ட மறுப்பு இயக்கத்திற்கு ஆதரவான தீர்மானங்கள் ஒன்றும் காங்கிரஸ் கூட்டத்தில் கொண்டு வரப்பட மாட்டாதென்று உறுதி கூறினால், காங்கிரஸ் கூட்டத்திற்கு அரசாங்கத்தார் ஒரு தடையும் செய்ய மாட்டார்கள்” என்ற விஷயம் காணப்பட்டது. இதை திருமதி சரோஜினி தேவியாரும், திரு. மாளவியா பண்டிதரும் கவனித்துத் தானிருக்க வேண்டும்.

இந்த நிலையில், டில்லி மகாநாட்டுக்குக் காரியதரிசியாக நியமிக்கப் பட்டிருந்தவர் மகாநாடு கூடுவதற்கு வழக்கம்போல இட வசதியளிக்க வேண்டுமென டில்லி கமிஷனருக்கு எழுதியிருந்தார். கமிஷனர், கலெக்டர் மூலமாக, காங்கிரஸ் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்தி வருவதால் இடவசதி யளிக்க முடியாது எனக் கூறிவிட்டார்.

இவ்விஷயம் வெளியானவுடன் நமது நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம், அரசாங்கத்தாரின் செய்கையைக் கண்டிக்க ஆரம்பித்துவிட்டன. ஜனங் களிடையில் கொஞ்சங் கொஞ்சமாக மறந்து போய்க் கொண்டிருந்த காங்கிரஸ் பெயரை மறுபடியும் ஞாபகப்படுத்தப்பட்டது.

டில்லியில் கூடுவதாக ஏற்பாடு செய்த காங்கிரசைப் பற்றி பலர் பலவாறாக அபிப்பிராயங் கூறினர். திரு. மாளவியா பண்டிதர், மிதவாத நோக்க முடையவராகையாலும், திருமதி. சரோஜினி தேவியாரும் தென்னாப்பிரிக்கா விலிருந்து வந்த பின் சட்ட மறுப்புக்கான காரியத்தில் இறங்கிச் சிறைசெல்லா மலிருப்பதினாலும், இருவரும் அரசாங்கத்திற்கும், காங்கிரசிற்கும் சமரசம் உண்டாகும்படியான மார்க்கத்திற்காக ஏற்பாடு செய்வார்களென்று சிலர் கூறினார்கள். சிலர் அமிதவாதிகளிடமுள்ள காங்கிரசை மிதவாதிகளும் புத்தி சாலிகளான இளைஞர்களும் கைப்பற்றிக் கொள்ளப் போகிறார்களென்று கூறினார்கள், இவ்வாறு பலர் அபிப்பிராயம் கொண்டது வெறும் யூகமே ஒழிய வேறு இதற்குத் தக்க காரணம் ஒன்றும் கிடைக்கவில்லை.

ஆனால் எதற்காக  திருமதி. சரோஜினி தேவியாரும், திரு. மாளவியா பண்டிதரும் மகாநாடு கூட்ட முன் வந்தார்களென்றால், இருக்கின்ற கிளர்ச்சி கள் போதாவென்று இன்னுஞ் சில கிளர்ச்சிகளை உண்டாக்கித் தேசத்தில் குழப்பத்தை உண்டு பண்ணும் பொருட்டாகவே என்று தான் நாம் கூறுவோம்.

உண்மையில் திருமதி, சரோஜினி தேவியாரும், திரு. மாளவியா பண்டிதரும் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்த முயற்சி செய்யும் நோக்க முடை யவராயிருந்தால், அல்லது அரசாங்கத்தாருக்கும், காங்கிரசுக்கும் சமாதானம் செய்து வைப்பவர்களாயிருந்தால் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தும்படி காங்கிரஸ்காரர்களை வேண்டிக் கொண்டு மகாநாடு கூட்டும் விஷயத்தில் பிரவேசித்திருக்கலாம். இவர்கள் இவ்வாறு ஒன்றும் செய்ய முன்வரவில்லை அல்லது அவர்களாவது தனித்த முறையிலாவது சட்ட மறுப்பு இயக்கத்தைக் கண்டிக்கின்றவர்களாகவுமில்லை. இந்த நிலையில் இவர்களால் நடை பெறக்கூடிய ஒரு மகாநாடு சட்ட மறுப்பு இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கத்தோடு கூடுகிறது என்று தான் யாரும் கருதக் கூடுமே யொழிய வேறு வகையாக ஒரு நாளும் கருதவே முடியாது.

அன்றியும், இவ்விருவருடைய தனித்தனி நடவடிக்கைகளை யெடுத்துக் கொண்டு பார்த்தால், ஒருவரையாவது நம்பி ஒரு காரியத்தையும் செய்ய முடியாது.

முதலில் திருமதி. சரோஜினி தேவியாரை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு கவி என்பது நாடறிந்த விஷயம். எப்பொழுதுமே கவிகளும், மகாத்மாக்களும், பைத்தியக்காரர்களும், பாலர்களும், பக்தர்களும், பேதையர் களும் ஒரு தன்மையானவர்கள். இவர்கள் எப்பொழுதும் உறுதியாக இருக்க மாட்டார்கள். இவர்களுக்குப் பொறுப்பு என்பதும் இருக்காது. இவர்களை நம்பி ஒரு காரியமும் செய்ய முடியாது என்பது உலகறிந்த விஷயமாகும். ஆகவே கவியரசியாகிய திருமதி. சரோஜினி யாரைத் தேசத்தின் அமைதி யைப் பாதுகாப்பவர் என்று எப்படி நம்ப முடியும்.

இரண்டாவது திரு. மாளவியா பண்டிதரை எடுத்துக் கொள்ளுவோம். இவர் மிதவாதி என்பது உண்மையே.  ஆனால் வருணாச்சிரம வாதி என்பதை யாரும் மறுக்க முடியாது. சென்ற வட்ட மேஜை மகாநாட்டில், வகுப்புப் பிரச்சினை சம்பந்தமாக திரு. காந்தியார் பிடிவாதமாக இருந்து குழப்பம் விளைத்ததற்கு உறுதியான பக்கபலமாக இருந்தவர் திரு. மாளவியா பண்டிதரே என்பதை யாரும் அறிவார்கள். இத்தகைய பண்டிதரைத் தலைமை யாகக் கொள்ளும் காங்கிரஸ், முழு வருணாச்சிரம தரும ஸ்தாபனமாகவும், இந்து முஸ்லீம் கலகத்தை அதிகப்படுத்துகின்ற ஸ்தாபனமாகவும், தாழ்த்தப் பட்டார் உயர்த்திக் கொண்டிருப்பவர் சண்டையைப் பெருக்குகின்ற ஸ்தாபன மாகவும் மாறக் கூடுமே யொழிய வேறு எந்த வகையிலும் சீர்திருத்தமடைய முடியாதென்பது நிச்சயம்.

ஆகவே இவ்விருவரும், திடீரென காங்கிரஸ் கூட்ட முற்பட்டபோது, “சட்ட மறுப்பு இயக்கம் நடைமுறையில் இருக்கும்போது, காங்கிரஸ் மகா நாட்டை நடத்த அரசாங்கத்தார் இடங் கொடுக்க மாட்டார்கள்” என்னும் விஷயம் அவர்கள் புத்தியில் படாமல் இருந்திருக்க முடியாது. அவர்கள் சொந்த புத்தியில் படாமலிருந்தாலும், அரசாங்கத்தார் வெளியிட்ட அறிக்கை யையாவது நிச்சயமாகப் பார்த்திருக்கலாம்.  இருந்தும் சட்ட மறுப்புச் சம்பந்த மாக ஒன்றும் பேசாமல் மகாநாடு கூட்டுவதாகத் தடபுடல் செய்தது வீண் கிளர்ச்சிக்கேயாகும்.  இதன்மூலம் அரசாங்கத்தை ஆதரிக்கின்றவர்கள் மனத்திலும் அரசாங்கத்தைப் பற்றிய வெறுப்பை உண்டாக்கிச் சட்ட மறுப் பைப் பலப்படுத்துவதற்குச் செய்த தந்திரமேயாகும்.

அன்றியும், காங்கிரசையும், சட்ட மறுப்பையும் ஞாயமானதென்றும், அரசாங்கத்தாரின் செய்கைகள் அநியாயமானவைகளென்றும் சொல்லிக் கொண்டும், தம்மையும் காங்கிரஸ்காரர்கள் என்று கூறிக்கொண்டும், ஆனால் இன்னும் சட்டமறுப்புச் செய்து சிறைக்கு மாத்திரம் போகாமலிருக்கின்ற திருமதி. சரோஜினி தேவியாரும், திருமாளவியா பண்டிதரும் காங்கிரசுக்காக மிகவும் பாடுபடுகின்றார்கள் என்று புகழ் பெறுவதற்காகவே டில்லியில் மகாநாடு கூட்ட முயற்சித்தார்களென்றும் கூறலாம்.

 

உண்மையில் இவர்கள் சட்டமறுப்பை ஆதரிக்கின்றவர்களா யிருந் தால் இப்பொழுது சிறைக்குள் வாசஞ்செய்து கொண்டிருக்க வேண்டும். அல்லது காங்கிரசுக்கும், அரசாங்கத்திற்கும் சமரசம் பண்ணி நாட்டில் அமைதியை உண்டாக்கும் நோக்கமுடையவர்களாயிருந்தால் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்துவதற்கு வழி தேடியிருக்க வேண்டும். இரண்டுமில்லாமல், அரசாங்கத்தின் எண்ணந்தெரிந்தும் மகாநாடு கூட்ட முற்பட்டது எதற்காக என்றுதான் கேட்கின்றோம்.

ஆகவே அரசாங்கத்தார் தேசமிருக்கும் தற்போதைய குழப்பமான நிலையில், நிபந்தனை கூறாமல் காங்கிரஸ் மகாநாடு கூடத் தொடங்கியதைத் தடுத்த விஷயத்தை நியாய புத்தி உடையவர்கள் எவரும் அக்கிரமமான தென்று கூறமுடியாது, தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க  முயற்சிப்பது போல் ஒரு நிபந்தனையுமில்லாமல் காங்கிரசை நடத்தும்படி விட்டுவிட்டுப் பிறகு, அவர்கள் சட்ட மறுப்புக்கு ஆதரவான தீர்மானங்களை நிறைவேற்றிய பின் இன்னும் பலமான அடக்குமுறைகளைக் கையாளுவதன் மூலம், தேசத் தில் அதிகமான குழப்பம் உண்டாவதை இப்பொழுதே தடுக்க முன்வந்ததைப் புத்திசாலித்தனமான காரியமென்றே நாம் அபிப்பிராயப் படுகிறோம்.

இது நிற்க, இனி டில்லி காங்கிரசைப் பற்றி இன்னும் சில விஷயங் களைக் கவனிப்போம். டில்லி காங்கிரசுக்கு அரசாங்கத்தார் ஆதரவளிக்க மறுத்தபின்னர் திருமதி. சரோஜினியார் வெளியிட்ட அபிப்பிராயத்தில் “சர்க்கார் காங்கிரஸ் கூட்டத்திற்குத் தடை செய்தது, அதைப் பாராட்டியது போலவேயாகும். ஆகையால் எப்படியும் காங்கிரசை நடத்தியே தீருவேன்” என்று கூறியிருக்கிறார். திரு. மாளவியா பண்டிதரும் “காங்கிரசைப் பொருத்த மட்டில் வருடாந்தரக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு நடந்து கொண்டு தானிருக்கிறது.  குறிப்பிட்ட தேதியில் டில்லியில் கூட்டம் நடக்கலாம்” என்று ஒரு வகையாகச் சந்தேகமான அபிப்பிராயத்தை வெளியிட்டார்.  இதன்பின் டில்லி காங்கிரஸ் காரியதரிசியாகிய திரு. சாஹ்னி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “அரசாங்கத்தார் டில்லி காங்கிரசுக்கு ஆதரவளிக்க மறுத்தா லும், வருஷாந்தரக் கூட்டத்தைக் கூட்ட வரவேற்புக் கழகத்தினர் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டு தானிருக்கின்றனர். இம்மகாநாட்டிற்கு வரும் பிரதிநிதிகள் இதனால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை ஏற்கத் தயாராயிருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால் அரசாங்கத்தாரின் அபிப்பிராயம் மாறிவிட்டதாகத் தெரிய வில்லை. காங்கிரஸ் கூட்டத்தை நடக்கவொட்டாமல் செய்யவேண்டும் என்னும் நோக்கம், அரசாங்கத்தாரிடம் உறுதியாக  இருப்பதாகத் தெரிகின்றது. இந்த நிலையில் கூட்டப்படும் காங்கிரசினால் குழப்பமும், கலகமும் ஏற்படப் போவதைத் தவிர வேறு என்ன நன்மை ஏற்படப்போகிறது?

 

அன்றியும் டில்லி காங்கிரஸ் விஷயத்தில், தற்சமயம் காங்கிரசில் உள்ள அதிதீவிரவாதிகளுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதைக் கூட்டுவதில் விருப்பமில்லையென்றும் சொல்லப்படுகிறது. பாஞ்சாலத்தி லுள்ள தீவிர காங்கிரஸ்வாதிகள் டில்லி மகாநாட்டை ஆதரிக்கவில்லை யென்றும் தெரிகிறது.

ஆகவே, காங்கிரஸ்காரர்களின் ஆதரவில்லாத நிலையிலும், அரசாங் கத்தாரின் எதிர்ப்புக்கிடையிலும், கூட்டப்படுவதாக இருக்கும் இக்கூட்டம் காங்கிரஸ் கூட்டமாகாது.

காங்கிரஸ்காரர்களைத் தவிர மற்றவர்களிடம் திருமதி. சரோஜினி யாருக்கும், திரு. மாளவியா பண்டிதருக்கும் செல்வாக்கில்லாமையால், இது தேசமக்களின் கூட்டமும் ஆகாது. வீணாகக் கிளர்ச்சியையும், கலகத்தையும், குழப்பத்தையும் உண்டாக்குகின்ற ஒரு போலிக்கூட்டமே யாகுமென்றுதான் நாம் கூறுகின்றோம்.

ஆகையால் இக்கூட்டத்தையோ, இக்கூட்டம் சம்பந்தமான கிளர்ச்சி யையோ கண்டு யாரும் ஏமாந்து போக வேண்டாமென எச்சரிக்கை செய் கின்றோம்.

குடி அரசு – தலையங்கம் – 17.04.1932

You may also like...

Leave a Reply