பெண்ணுரிமை பேசிய அண்ணாவின் படைப்புகள்
பெரியார் நீண்ட நெடுங்காலம் பண்பாட்டுத் தளத்திலேயே வேலை செய்தவர். அண்ணா ஒரு கட்டத்துக்கு மேல் அரசியல் நோக்கி நகர்ந்தவர் என்பதால் அண்ணாவை விடவும் பெரியாரின் பெண்ணியப் பார்வை மிக அதிகமாகக் கவனம் பெறுகிறது. பெரியார் அளவுக்கான வெளி அண்ணாவுக்குக் கிடைக்கவில்லை என்றபோதும், கிடைத்த தளத்தில் பெண் விடுதலைக்காக அவர் குரல் கொடுக்கத் தவறவில்லை. அக்டோபர் 10, 1950இல் இந்திய நல்லெண்ணத் தூதுக் குழு பேரறிஞர் அண்ணாவைச் சந்தித்தது. அந்தச் சந்திப்பின் போது தூதுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ராகவதாஸ், திராவிட நாட்டில் பார்ப்பனர்களின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்வியை முன்வைக்கிறார். சற்றும் தாமதிக்காமல் அண்ணா சொல்கிறார், “மனித உரிமையோடு வாழ்வார்கள்” என்று. அண்ணாவின் ஒட்டுமொத்த வாழ்வை ஒரே வரியில் அடக்க வேண்டுமானால் மேற்சொன்ன பதிலில் அடக்கலாம். தன்னளவில் முரண்பட்டு, காலமெல்லாம் தான் எதிர்த்துப் போராடும் தத்துவத்தைப் பின்பற்றுபவர்களும் மனித உரிமையோடு வாழ வேண்டும் என்று நினைத்தவர் அவர். அவரது 50-வது ஆண்டு...