இந்துத்துவ முழக்கம் தோற்கும்போது, போரை ஆயுதமாக்குவார்கள்! – எழுத்தாளர் அருந்ததிராய்
நீங்கள் புனைவுகளின் எல்லைக்குள் நிற்காமல் அரசியல் கட்டுரைகள் எழுதுவதால் தான் இந்தச் சிக்கலா?
“இல்லை. ழுடின டிக ளஅயடட வாiபேள என்ற என் புத்தகத்திற்காக, ஒழுக்கத்தைக் கெடுக்கிறேன் என்று என் மீது பத்தாண்டுக்காலம் கிரிமினல் வழக்கு நடந்தது. நான் அப்படி எதையும் திட்டமிடுவதில்லை. என்னுடைய அடுத்த நாவலில் காஷ்மீர் சிக்கலையும், இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்னை களையும் இணைத்து எழுத முயற்சி செய்திருக்கிறேன். புனைவின் எல்லைக்குள் தான் இது எளிதில் சாத்தியம். தலித்துகளையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் எதிர்த்துக் கல்வி நிறுவனங்களுக்குள் “பிராமணிய” நடவடிக்கைகள் அதிகமாகும் இந்தச் சூழ்நிலையில், வெவ்வேறு புள்ளிகளாக இருக்கும் பிரச்னைகளை ஒப்பிட்டு இணைப்பதன் மூலம் புரிதல் மேம்படும் என நினைக்கிறேன்.
இரண்டு சாதிகளுக்கிடையிலோ, இரண்டு பழங்குடிகளுக்கு இடையிலோ நடக்கிற சண்டையோ, இந்துத்துவச் சக்திகள் தூண்டி விடும் சண்டையோ, வெறும் தண்ணீர் நெருக்கடியை மறைப்பதற்காகக்கூட இருக்கலாம். ஆகவே, புள்ளிகளை இணைத்துப் புரிந்து கொள்வது காலத்தின் தேவையாக இருக்கிறது எந்தப் பிரச்சினையையும் தனியாகப் புரிந்து கொள்ள முடியாது.
சமீபத்திய போர்ச் சூழல் குறித்து உங்கள் கருத்து?
“காஷ்மீரில் நடக்கும் எந்தவொரு நிகழ்வைக் குறித்தும் வெளி வருகிற செய்திகளைக் கொண்டு மட்டுமே அதன் முழுப் பரிணாமத்தைப் புரிந்து கொள்ள முடியாது. ஏன் நடந்தது, ஏன் இப்போது நிகழ்ந்தது என்று எதையும் உறுதியாகக் கூறிவிட முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால், நடைமுறைப்படுத்தப்படும் தனியார் மயக் கொள்கைகளின் தாக்கத்தை மறைக்க இந்துத்துவ முழக்கங்களையும், அது சரிவராத பட்சத்தில் போரையும் ஆயுதமாகக் கையிலெடுப்பார்கள் என்று ஏற்கெனவே பலரும் பேசியிருக்கிறோம்.
ஆளும் மத்திய அரசுக்கு, மக்களுக்கு மறக்க வைக்க வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, தனியார் மயக் கொள்கைகள், பன்னாட்டு முதலாளித்துவத்துக்கு ஆதரவான நிலைப்பாடு, ரபேல் ஊழல் என நிறைய இருக்கின்றன. போர் முழக்கங்களின் மூலம் இவற்றை மறைக்க முயலலாம்.
தன்னுடைய 56 இன்ச் மார்பில் தனியார் மயம், தாராளமயம், சாதியம், மதவாதம் என அனைத்தையும் உள்ளடக்கிய பிரச்னையாக மோடி இருக்கிறார். அவருடைய முதுகில் இருக்கும் கரும் பலகையில், சமாதானம் விரும்பும் எல்லோரும் இணைந்து இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான பார்முலா எழுதும் நேரம் வந்துவிட்டது. நேரம் மிகக் குறைவாக இருக்கிறது.
எழுத்தாளர் அருந்ததிராய்
(‘ஆனந்தவிகடன்’ பேட்டி)
நிமிர்வோம் மார்ச் 2019 மாத இதழ்