பெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்? ர. பிரகாசு
இந்தியாவில் மொபைல் போன்கள் பயன்பாட்டில் காணப்படும் பாலினப் பாகுபாடுகள் குறித்து ஹார்வர்டு கென்னடி ஸ்கூல் ஆய்வு நடத்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
A tough call: Understanding barriers to and impacts of women’s mobile phone adoption in India என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மொபைல் போன்கள் பயன்படுத்துவதிலும் கூட பெருமளவில் பாலினப் பாகுபாடு நிலவுவதை இந்த ஆய்வறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல; பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளிலும் மொபைல் பயன்பாட்டில் ஆண்-பெண் பாலினப் பாகுபாடு மிகுந்துள்ளது. நாம் இங்கு இந்தியாவைக் கணக்கில் கொள்வோம். இந்தியாவில் 71 விழுக்காடு ஆண்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், 38 விழுக்காடு மட்டுமே பெண்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இடைவெளி 31 விழுக்காடாக உள்ளது. இதை வெறுமனே பொருளாதாரக் காரணி என்ற அளவில் மட்டும் சுருக்கிவிட இயலாது. சாதி, மத, சமூகக் கட்டமைப்பு கொடுக்கும் அழுத்தங்கள் பெண்களை மொபைல் போன்கள் கூட பயன்படுத்த அனுமதிக்காமல் எத்தகைய வன்முறையை 21ஆம் நூற்றாண்டிலும் கூட கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வுக்காக 5 மாநிலங்களில் உள்ள 125 ஆண்கள் மற்றும் பெண்களிடம் உரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும் அரியலூர், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, தெற்கு – கிழக்கு டெல்லி, மத்தியப் பிரதேசத்தின் குவாலியர், மகாராஷ்டிராவின் அமராவதி ஆகிய பகுதிகளில் இந்த ஆய்வுக்கான உரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளிலும், தமிழ்நாட்டில் தமிழிலும், மேற்கு வங்கத்தில் வங்க மொழியிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அனைவரிடமும் குரல் பதிவும் சேமிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன்கள் பயன்பாட்டில் ஆண்கள்-பெண்கள் இடையிலான பாலினப் பாகுபாடு மிகுந்து காணப்படுவதற்கு இரண்டு முக்கியக் காரணிகளை இந்த ஆய்வு முன் வைக்கிறது. ஒன்று பொருளாதாரம், மற்றொன்று சமுகக் காரணிகள். மொபைல் போன்களை சொந்தமாக வாங்கிப் பயன்படுத்துவதற்கு பெண்களின் பொருளாதார நிலைகள் ஒரு காரணியாக எடுத்துக் கொள்ளப் படுகிறது. ஆனாலும் பொருளாதாரப் பற்றாக்குறை மட்டுமே பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதாக இல்லை. மொபைல் போன் வாங்கிப் பயன் படுத்துவதற்கான பொருளாதார வாய்ப்புகள் இருந்தாலும் கூட தனிப்பட்ட குடும்ப விதிகள் அல்லது சமூக விதிகள் பெண்களை மொபைல் போன் பயன்படுத்த விடாமல் கட்டுப்படுத்து கிறது. அது எவ்வாறு என்பதைக் காண்போம்.
பாலின நெறிமுறைகள்
இந்திய சமூகம் காலங்காலமாக ஆணாதிக்க சமூகமாகவே விளங்கி வருகிறது. பெற்றோர் காட்டும் நபரை மட்டுமே மகள் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எழுதப்படாத விதிமுறை இந்தியாவில் இன்றள விலும் மிகக் கூர்மையாகப் பின்பற்றப்படுகிறது. பெண்ணின் புனிதம் காக்கப்பட வேண்டும், சாதிய-மதக் கட்டமைப்புகளுக்கு அடிபணிய வேண்டும், அதன்வழியாக குடும்பப் பெருமை காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பெண்ணை சுற்றியே அனைத்துக் கட்டுப்பாடு களும் இங்கு விதிக்கப்பட்டிருக்கின்றன. சாதியக் கட்டமைப்பின் பாதுகாப்பு என்பதன் உச்சமே பெண்களை மாற்று சாதியில் திருமணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்பதில்தான் இருக்கிறது. ஆனால், காதல் திருமணங்கள் இவற்றை அடியோடு தகர்க்கும் ஆயுதமாய் இருக்கிறது. அதனாலேயே பெண்களின் வாழ்க்கைக்கு பல்வேறு விதமான கடுமையான விதிகளும், நெறிகளும் இங்கு விதிக்கப்பட் டுள்ளன.
இதில் ஒன்றாகத்தான் மொபைல் போன் பயன்பாடு பெண்களுக்கு கட்டுப்படுத்தப் பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. ”திருமணத்துக்கான தூய்மையைப் பேணுதல் (கற்பு சார்ந்த), சாதி அல்லது மத மறுப்புத் திருமணங்கள், பெண்ணுக்கு உரிய முக்கியத் துவம் அளிக்கக் கூடாது என்ற எண்ணம் என்பது போன்ற காரணங்கள்தான் பெண் களுக்கு மொபைல் போன்கள் மறுக்கப்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது” என்கிறது இந்த ஆய்வு.
பெண்கள் நற்பெயரைக் கெடுக்கிறதா மொபைல் போன்கள்
ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களை ஒடுக்குவதற்குப் பல நெறிமுறைகள் வகுக்கப்பட் டுள்ளன என்பது கவனிக்கப்பட வேண்டியது. கிராமப்புறங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும் இந்த ஒப்பீடுகள் மாறுபடுகிறது. கிராமப் புறத்தில் பெண்கள் மொபைல் போன்கள் பயன்படுத்தவே இயலாத நிலை அதிகமாகவும், நகர்ப்புறத்தில் மொபைல் போன் பயன்படுத்தக் கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலையும் காணப் படுகிறது. இதுவும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.
தமிழ்நாட்டில் பெண்கள் அல்லது மாணவிகளுக்கு பெரும்பாலும் மொபைல் போன் மறுக்கப்படுவதற்கு முதன்மைக் காரணியாக இருப்பது ”பெண்கள் அல்லது மாணவிகள் மொபைல் போன் பயன்படுத் தினால் அவர்களின் தூய்மைத்தன்மை (கற்பு சார்ந்த) கெட்டுவிடும் என்று பெற்றோர் அல்லது கணவன் அஞ்சுவதுதான்” என்று இந்த ஆய்வு கூறுகிறது. கிராமப்புற மத்தியப் பிரதேசம் மற்றும் நகர்ப்புற மகாராஷ்டிராவில் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தினால் அவர்களிடம் ஒழுக்கமின்மை அதிகரிக்கும் என்று அதிகளவில் கூறியுள்ளனர்.
பெண்கள் ஸ்மார்ட் போன் பயன் படுத்துவதால் சமூக வலைதளங்களில் தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது என்று தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்டப் பகுதிகளில் ஆய்வில் பங்கேற்றவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பெரும்பாலும் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு திருமணமாகாத பெண்களுக்குத்தான் விதிக்கப்பட்டுள்ளது. அப்படியே சிலர் பயன்படுத்தினாலும் ஆண் நண்பர்களை வைத்து, பெண்களின் நடத்தைகள் குறித்து அவதூறு கிளப்பப்படுவதும் சாதாரணமாக நிகழ்கிறது என்கிறது இந்த
ஆய்வு.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், ஒரு இளம்பெண் பொது இடத்தில் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தால் பொது சமூகத்தின் பார்வை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி கூறுகையில், “ஒரு இளம்பெண் பொது இடத்தில் மொபைல் போனில் பேசிக்கொண்டு சென்றால், அவள் தன்னுடைய ஆண் நண்பனிடம் பேசுவதாக மட்டுமே கருது கின்றனர். அந்தப் பெண்ணைப் பற்றி புரிந்து கொள்ளவே மாட்டார்கள். அந்தப் பெண் அவளுடைய படிப்பு தொடர்பாகப் பேசலாம் என்றுகூட கருத மாட்டார்கள். சந்தேகம்தான் அதிகமாக இருக்கும்” என்கிறார்.
ஒருவேளை திருமணத்துக்கு முன்பு இளம் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தி னாலும், அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. குறிப்பாக முகநூலில் பெண்கள் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது, அதிகநேரம் மொபைல் போன்கள் பயன்படுத்துவது அல்லது வீட்டுக்கு வெளியே மொபைல் போன்கள் பயன் படுத்துவது போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
திருமணத்துக்காக கற்பைப் பாதுகாக்க வேண்டுமென்பதும், குடும்பக் கட்டுக்கோப்புகள் மற்றும் சமூக அடக்குமுறைகள் உள்ளிட்ட யாவும் பெண்களுக்கு மட்டுமே இங்கு விதிக்கப் பட்டிருக்கிறது. ஆண்களுக்கு மொபைல் போன் பயன்படுத்தவோ, சமூக வலைதளங்களில் இயங்கவோ எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. ஆண்கள் சமூக வலைதளங்களில் கட்டற்று செயல்படலாம். இவர்களுக்கு எவ்விதமானக் கட்டுப்பாட்டையும் எந்தப் பெற்றோரும், பொது சமூகமும் விதித்ததே இல்லை. ஆனால், சமூக வலைதளங்களில் முகம் காட்டக் கூட இன்னும் துணியாத பெண்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கக் கூடாது என்ற புரிதலை உள்வாங்கிக் கொள்ளக்கூட இங்கு பெண்ணியம் பற்றிய பார்வை தேக்கமாய்தான் உள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த திருமணமாகாத பெண் ஒருவர் இந்த ஆய்வில் கூறுகையில், ‘பெண்களை மண் பானைகளாகவும், ஆண்களை உலோகப் பானைகளாகவும் இந்தச் சமூகம் சித்திரிக்கிறது. ஆண்கள் வலிமையான வர்களாகவும், பெண்கள் வலிமையற்றவர் களாகவும் கருதப்படுகின்றனர்” என்றார்.
சமூக அழுத்தங்கள்
பெண் குழந்தைகள் வளர்ப்புக்குப் பெற்றோர் முக்கியத்துவம் அளிப்பதற்கு மற்றொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. தமிழகம், டெல்லி போன்ற பகுதிகளில் இந்த ஆய்வில் பதிலளித்தவர்கள் ஒன்றைத் தவறாமல் கூறியுள்ளனர். அதாவது பெண் குழந்தைகள் நடத்தை மற்றும் செயல்பாடுகள் குறித்து அவரைச் சூழ்ந்துள்ள சமூகத்தினர் பெற்றோரிடம் குற்றம்சாட்டுவது வாடிக்கையாக உள்ளது. இது பெற்றோரின் வளர்ப்பை கேள்விக் குறியாக்குவதாகக் கருதி பெண் குழந்தைகள் மீது அடக்குமுறைகள் ஏவப்படுகிறது.
இளம் பெண்களை, மொபைல் போன் பயன்பாட்டின் அடிப்படையில் அவர்களின் நடத்தையைக் கணிக்கும் அவலங்களும் நடந்து வருவதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இதனால் இயல்பாகவே சமூக வலைதளங்களில் தங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்திக் கொள்ளவே பெண்களும் விரும்புகின்றனர். பெண்கள் சமூக வலைதளங்களில் புகைப் படங்களை பதிவேற்றாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. சமூக வலை தளங்களில் புகைப்படங்களை பதிவேற்றுவதும், தீவிரமாகச் செயல்படுவதும் திருமண வரன்களைப் பாதித்துவிடும் என்ற அச்சம் இளம் பெண்களிடமும், அவர்களின் பெற்றோர் களிடமும் உள்ளது.
இதை விடப் பெரிய கொடுமை ஒன்றையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. கல்வி நிறுவனங்களில் படிக்கும் இளம் பெண்கள், நிறுவனத்திற்குள்ளும், கல்லூரி தங்கும் விடுதிகளிலும் மொபைல் போன்கள் பயன்படுத்தத் தடை விதிக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் பல கல்லூரிகளில் சட்ட திட்டமாகவே இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண் நண்பர்களுடன் மாணவிகள் மொபைல் போனில் பேசலாம், அதன்மூலம் காதல் வயப்படலாம் என்ற எண்ணத்தில் கல்வி நிறுவனங்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்த மாணவிகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கின்றன. இதுவே கண்டிக்கத்தக்கது என்றாலும்கூட, நம் மாநிலத்தில் நாம் இதைத் தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், வடஇந்தியாவின் சில கிராமங்களில், வீட்டுக்குள் கூட பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்ற கட்டாய விதிகள் விதிக்கப்பட் டிருக்கிறது என்பதை இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
மத்தியப் பிரதேசத்தின் கிராமப்புற உள்ளூர் சமுதாய அமைப்பைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆய்வில் தெரிவிக்கையில், “எங்கள் கிராமத்தில் யார் தங்களுடைய திருமணமாகாத பெண் குழந்தை மொபைல் போன் பயன்படுத்த அனுமதிக்கிறாரோ அவருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதுவே 2ஆவது முறை நடந்தால் 11,000 ரூபாய் அபராதமும், 3ஆவது முறை நடந்தால் வீட்டை காலி செய்துவிட்டு வெளியேறவும் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்” என்றார். சாதாரண மொபைல் போன் பயன்பாட்டுக்கு அபராதம் விதிப்பது என்பதே கொடுமையானது. இதற்காக ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்பதெல்லாம் எத்தகைய மோசமான சிந்தனை கொண்ட சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நம்மை எண்ணிப்பார்க்க வைக்கிறது.
திருமணத்துக்குப் பின்
மொபைல் போன் பயன்பாடு
திருமணத்துக்குப் பின்னர் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவது இன்றைய தலைமுறையில் அதிகரித்து வருகிறது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால், திருமணம் உறுதியானாலே குறிப்பிட்ட அந்த ஆண் தன்னுடைய எதிர்கால மனைவிக்கு ஸ்மார்ட் போன் பரிசாகக் கொடுப்பதை இப்போது பரவலாகக் காண முடிகிறது. இதனால் பெண்கள் திருமணத்துக்கு முன்பு எதிர்கொண்ட இத்தகைய அடக்கு முறைகளிலிருந்து முற்றிலும் விடுதலை கிடைத்துவிடும் என்று பொருள் கொள்ள இயலாது. திருமணத்துக்குப் பின்னும் மொபைல் போன் பயன்பாட்டுக்கு ஆணாதிக்க சமூகம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்கிறது இந்த ஆய்வறிக்கை.
இந்தியாவைப் பொறுத்தவரையில் திருமணத்துக்குப் பிறகு பெண்கள்தான் குடி மாறுகிறார்கள். ஆண் தன்னுடைய வீட்டிலோ அல்லது தான் பணிபுரியும் நகரத்திற்கோ தனது புது மனைவியுடன் குடியேறுகிறான். ஆனால், பெண்தான் முற்றிலும் புதிய சூழலுக்கு மாற நேரிடுகிறது. இதனால் தனது ரத்த உறவு களுடனோ, நெருங்கிய நண்பர்களுடனோ அல்லது கணவனுடனோ தொடர்பில் இருக்க மொபைல் போன் தேவைப்படுகிறது. பல குடும்பங்களில் இதற்கு மட்டுமே மொபைல் போன் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.
அதிலும் திருமணத்துக்குப் பின்னர் நீண்ட நேரம் மொபைல் போனில் பெண் உரையாடிக் கொண்டிருந்தால், தனது கணவர் வீட்டாரால் கண்டிக்கப்படுவதும் மிகச் சாதாரணமாக நடைபெறுகிறது. திருமணத்துக்குப் பின்னர் மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதால் வீட்டு வேலைகள் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவினர் இந்த ஆய்வில் கூறியுள்ளனர். ஆகவே பெண்கள் மட்டும்தான் வீட்டு வேலைகளுக்குப் பணிக்கப்படுகிறார்கள் என்பதும் வெளிப்படுகிறது. இதைத் தொடர்பு படுத்தி பல்வேறு கேளிக்கை காணொளிகளும் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதையும் காணலாம்.
பயன்படுத்துவதில் காணப்படும் வேறுபாடுகள்
தமிழகம் போன்ற மாநிலங்களில் கல்வி நிலைகளில் ஆண்களைக் காட்டிலும், பெண்கள் தங்களை சிறப்பாக மேம்படுத்திக் கொண்டு முன்னேறி வரும் காலம் இது. ஆனால், ஸ்மார்ட் போனில் புதுப்புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள்தான் அதிகம் தெரிந்து வைத்துள்ளனர். ஸ்மார்ட் போன்களில் உள்ள புதுப்புது வசதிகளை அறிந்துகொள்ள தங்களது கணவனையோ அல்லது மகனையோ பெண்கள் நாடுகின்றனர் என்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறுகையில், “என்னுடைய மொபைல் போனில் எண்களை எனக்கு சேமிக்கத் தெரியாது. எனது மகன்தான் எனக்கு கற்றுக் கொடுத்தான். ஆனால், அது ஏன் எனக்குத் தெரியவில்லை என்று நான் சிந்தித்ததில்லை” என்கிறார். ஸ்மார்ட் போன்கள் ஆண்களின் கைகளுக்கு எட்டிய அளவுக்குப் பெண்களின் கைகளுக்கு எட்டவில்லை என்பதை இது மிக எளிமையாக வெளிப்படுத்துகிறது.
சர்வதேசத்துடன் சிறு ஒப்பீடு
ஸ்கேண்டிநேவியன் நாடுகளில் ஒன்றான ஸ்வீடனைச் சேர்ந்த பெரும் நிறுவனம் ‘ஐக்கியா’. மரச்சாமான்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலுக்குப் பயன்படும் பொருட்களைத் தயாரித்து விற்பனையில் ஈடுபடும் ஒரு மிகப்பெரிய நிறுவனம். உலகம் முழுவதும் கிளைகளை விரித்துள்ள இந் நிறுவனத்துக்கு இந்தியாவிலும் ஹைதரா பாத்தில் கிளை நிறுவனம் உள்ளது. இந்தியாவில் 2ஆவது நிறுவனத்தை 2019ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறுவ ஐக்கியா திட்டமிட்டுள்ளது. இதையொட்டி 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் நேரடி வேலைகளில் 5,000 பேர் பணிய மர்த்தப்படவுள்ளனர்.
அதில்தான் கவனிக்கப்பட வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. அதாவது அந் நிறுவனம் தனது அறிவிப்பில், “நாங்கள் சமத்துவத்தை நம்புகிறோம் மற்றும் சமநிலையில் வேலை வாய்ப்புகளை வழங்குகிறோம். அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பான பணிச் சூழலை ஏற்படுத்தித் தர நாங்கள் விரும்பு கிறோம். ஐக்கியாவின் கொள்கைப்படி நிறுவனத் தின் அனைத்து நிலைப் பணிகளிலும் 50 விழுக் காடு பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள். அதுமட்டுமின்றி தன்பாலின ஈர்ப்பாளர்கள் மாற்றுப் பாலினத்தவர்களுக்கும் (டுழுக்ஷகூ) வேலை வாய்ப்புகள் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்று அறிவித்திருக்கிறார்கள். இங்கு அரசுத் துறைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டுமென்பதற்கே நடுவண் அரசுகளுடன் இன்னமும் போராட வேண்டியுள்ளது. ஆனால், ஒரு மேலைநாட்டு தனியார் நிறுவனம் தனது அறிவிப்பில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதைத் தாண்டி, நிறுவனத்தின் எல்லா நிலைகளிலும் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று அறிவித்திருக் கிறது.
சாதி, மதக் கட்டமைப்புகளைப் பாது காக்க, சாதாரண ஸ்மார்ட் போன்களைகூட நம்முடைய பெண்கள் சுதந்திரமாகப் பயன்படுத்துவதை அனுமதிக்காமல் நாம் தடைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின் றோம். ஆனால், மேலை நாடுகள் அனைவருக்கும் அனைத்தும் சமம், பெண்ணுக்கும் சம உரிமை உண்டு என்ற அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நம்முடைய பொது சமூகத் தின் பார்வையும், மேலை நாடுகளின் பார்வையும் எவ்வளவு வேறுபட்டிருக்கிறது என்பதை இதைக் கொண்டு உணர முடிகிறது. உண்மையில் அவர்கள் மனதளவில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறார்கள். ஆனால், நாம்?
– கட்டுரையாளர் :
பத்திரிகையாளர் – பெரியாரிஸ்ட்
நிமிர்வோம் ஜனவரி 2019 மாத இதழ்