அண்ணா நேருக்குநேர் நடத்திய சொற்போர் ஆரிய இராமனை ‘கற்புக்கரசனாக்கிய’ கம்பன்
1943, 1948ஆம் ஆண்டு “இராமாயணம், பெரியபுராணம் எரிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா?” எனும் தலைப்பில் நேருக்கு நேர் விவாதங்கள் நடந்தன என்ற வரலாறு – இன்றைய இளைய தலைமுறை பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. எரிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டு வாதத்தில் வென்று காட்டினார் அண்ணா. முதல் வாதப் போர் 9.2.1943 அன்று சென்னை சட்டக்கல்லூரியில் இந்து மத பரிபாலன வாரியத் தலைவர் என். இராமச்சந்திர செட்டியார் தலைமையில் நிகழ்ந்தது. “எரிக்கப்பட வேண்டும்” என்ற தலைப்பில் அண்ணா மற்றும் ஈழத்தடிகளும், “எரிக்கக் கூடாது” என்ற தலைப்பில் ஆர்.பி. சேதுப் பிள்ளை மற்றும் சீனிவாசன் ஆகியோரும் வாதிட்டனர். அப்போது சட்டக் கல்லூரி, தமிழ்க் கழக அமைச்சராக இருந்து பிறகு உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த வேணுகோபால்தான் அன்று தலைவரை முன்மொழிந்து பேசியவர். தொடர்ந்து 14.3.1943இல் இதே தலைப்பில சேலம் செவ்வாய்ப்பேட்டை தேவாங்கர் பாடசாலை மண்டபத்தில் இதே விவாதப்போர் நடந்தது. இதில் அண்ணாவும் நாவலர் சோம சுந்தர பாரதியாரும் நேருக்கு நேர் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களும் தொகுக்கப்பட்டு
‘தீ பரவட்டும்’ என்ற தலைப்பில் நூலாக வெளி வந்திருக்கிறது. அண்ணாவின் தர்க்கபூர்வ வாதங்களுக்கு முன் பழமையாளர் வாதங்கள் தோற்றோடின. அண்ணா எடுத்துரைத்த வாதங்களிலிருந்து சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளை ‘நிமிர்வோம்’ வெளியிடுகிறது.
கம்பரோ? தாம் இராமாயணம் எழுதியதற்கு நோக்கம் கூறாது, நொந்த மனம் கொண்டு, வையகம் என்னை இகழுமோ? மாசு வந்து எய்துமோ? என்று கூறுகிறார். ஆண்டவனின் அவதாரம் என்று ஆரியராலும், கம்பராலும் போற்றப்படும் இராமகாதை பாடுவதற்குக் கம்பர் ஏன் இவ்வளவு சஞ்சலப்படுகிறார்? இதனால் உலகு பழிக்குமோ, என்ற சந்தேகம் ஏன் கொண்டார்? என்று கேட்கிறேன். ஆரியக் காதையைப் பாடுவது கூடாது என்பதையும், அதற்குப் பூச்சுவேலை செய்து வைப்பது தமிழருக்குத் தீங்காகும் என்பதையும் ஒருவாறு உணர்ந்தே, இங்ஙனம் உரைத்தாரோ என்று கேட்கிறேன்.
இற்றைக்கு 700 ஆண்டுகட்கு முன்பு இயற்றப்பட்ட கம்ப இராமாயணத்தையே மக்கள் பெரிதும் அறிவர்; போற்றுவர். அதற்குக் காரணம், அதிலே உள்ள ஆரிய நெறி, தமிழ் மக்களை அடிமைப்படுத்தியதுதான். கம்ப இராமா யணத்திலே, சங்க நூற்களிலே காணப்படும் அணிகளும் அலங்காரங்களும் உவமைகளும் நிரம்ப உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. குறள் நன்றாக நுழைக்கப்பட்டிருக்கிறது. கம்ப இராமாயணக் கவிச்சுவை என்று எதைப் பண்டிதர்கள் எடுத்துரைக்கிறார்களோ, அவை கம்பனின் சொந்தச் சரக்குமல்ல; சங்க நூற்கள் தந்த சுவை! அந்த மூலத்தை இழக்கும்படி நாங்கள் கூறவில்லை. அந்தச் சுவையை ஓர் ஆரியக் கற்பனைக்குப் பயன்படுத்தியதால், அக்கற்பனை யின் விளைவு கேடு தருவதால், அந்த ஏடு வேண்டாம் என்று கூறுகிறோம்.
அரசு போவதறிந்து இராமனின் முகம் கோணியதை வால்மீகி கூறினார். கம்பர் மெழுகினார். இராமனாவது தந்தை சொல்லால், சிற்றன்னை கொடுமையால் அரசு துறந்தான். இளங்கோ அடிகளோ தாமாகவே மனமுவந்து அரசு துறந்தார் – இது உண்மைத் தியாகம்.
எனவேதான், மக்களின் பொது அறிவு வளர்ந்த நாடுகளில் தெளிவு கொண்ட மக்கள் உள்ள தேசங்களில் இத்தகைய கற்பனைக் கதைகள் இருப்பினும் கவியழகை மட்டும் கண்டு கருத் துரையிலே உள்ள ஆபாசத்தை, மூடத்தனத்தை நீக்குகின்றனர். கிரேக்க உரோமானியர்கள் இதிகாச காலக் கடவுள்களாகக் கொண்டிருந்த ‘வீனஸ்’ அபாலோ முதலியனவற்றை, ஏசுவிடம் விசுவாசம் வைத்ததும் விட்டொழித்தனர். பிரிட்டனிலே கிறித்தவ மார்க்கம் பரவியதும், பழங்காலத்திலே வணங்கிய தார் ஒடின் எனும் தெய்வங்களை மறந்தனர். இங்கோ அன்று தொட்டு இன்று வரை, ஆரியக் கற்பனையான சிறு தெய்வங்களிலே ஒன்றை நீக்கவும், மக்கள் தயாரில்லை. இந்நிலை கண்டு, புலவர்கள் என் செய்தனர் என்று கேட்கிறேன். ஆரியர், தம் இன வளத்துக்காக வேண்டிப் புனைந்து கொண்ட கற்பனைகளை எல்லாம், கடவுளெனக் கொண்டுள்ள மக்களின் மதியைத் திருத்த முன் வந்தனரா என்று கேட்கிறேன்.
காடேக இராமன் கிளம்பும்போது, உடன் வர புறப்பட்ட சீதையுடன் வாதிடுகையில், சீதை கூறும் மொழியின் தன்மையும், இலக்குவன், கைகேயியை நிந்திக்கும் பகுதியையும், சீதையை இராவணன் எடுத்துச் சென்ற விதத்தையும் வால்மீகி கூறி உள்ளபடியே கம்பர் எடுத்து எழுதியிருப்பின் அந்த ஆரியப் பாத்திரங்களிடம் ஆபாச குணங்கள் கிடந்ததை, தமிழர் கண்ட அவர்களைத் தெய்வங்கள் என்று போற்றும் கீழ் நிலைக்கு வந்திருக்க மாட்டார்கள். ஆனால், கம்பரோ ஆரிய இராமனைக் குற்றம் குறையற்ற கற்புத்திரனாக்கி வழிபாட்டிற்கு உரிய தெய்வ மாக்கி விட்டார்.
இராமனும், குகனும் கண்டவுன் நட்புக் கொண் டனர். குகன் இராமனுடைய எல்லையினன். ஆனால், கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் காணாமலேயே நட்பு கொண்டு உயிர் துறந்தனர்.
- வாலியை மறைந்திருந்து கொன்றது.
- சூத்திரன் சம்புகன் தவம்செய்தான் என்பதற்காக அவன் தலையைக் கொய்தது.
- இராமன் அரசு தனக்குச் சொந்த மானதல்ல. பரதனுக்குச் சொந்தமானது எனத் தெரிந்தும் தசரதர் தனக்கு முடிசூட்டு விழா வைத்ததை ஒப்புக் கொண்டு இராச்சியம் ஆள இசைந்தது இவை கொடுஞ் செயல்கள்.
தமிழரோ ஆரிய மார்க்கத்தையும், கலையையும் தமக்கெனக் கருதிக் கொண்டு, ஆரியக் கற்பனைகளைத் தமிழ்க் கலையிலே கலக்கிக் கொண்டதனாலேயே இன்று, தமிழர் என்ற தனி உரிமைக்கோ, தன்மானத்துக்கோ, தன்னரசுக்கோ, போரிட முடியாத நிலை பெற்றனர். எனவே, தமிழரும், இஸ்லாமியர் போலவே, தங்களின் தனிக் கலையைப் போற்றிப் பிற இனக் கலையை ஒழித்து வாழ்ந்தால் தான் சுயமரியாதையுடன் வாழ முடியும். ஆகவேதான் கம்ப இராமாயணம் பெரிய புராணம் ஆகிய ஆரிய நெறி கூறும் ஏடுகள் பொசுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறோம்.
கம்பரது கவிதையின் விளைவாகத் தமிழ் இனம் தாழ்ச்சியுற்று, ஆரியத்திடம் அடிமைப்படும் விளைவு நேரிட்டதைக் கண்டு நாங்கள் வேதனைப்படுகிறோம். நாங்கள் கண்டிப்பது கம்பனின் கவித் திறனையல்ல; அதன் தன்மையை, விளைவை என்பதை, அறிஞர்கள் அறிய வேண்டுகிறேன். கம்பர், இராமகாதை பாடியதன் நோக்கம் யாது? என்று கேட்கிறேன்.
கம்பர் இராமகாதை எழுதியதால்தான், இமயம் வரை சென்று ஜெயித்த செங்குட்டுவனையும், பர்மா வரை சென்று புகழ்ப் பெற்ற இராசேந்திரனையும் தமிழர் மறந்தனர். அயோத்தி மன்னனின் மகன், ஆண்டவன் அவதாரம் என்றுரைக்கும் ஆரியத்துக்கு அடிமையாயினர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலே, சமற்கிருத பண்டிதராக உள்ளவர் ஒரு தமிழர். இராவணனும் வடமொழி தெரிந்திருந்ததால், ஆரியனல்லன் என்றார். ஆர்.பி. சேதுப் பிள்ளை அவர்கள் ஆரியரின் குறைகளை நிறைவாக்கியது கம்பனின் பெருந்தன்மை என்றார். மாற்றுக் குறைந்த உலோகத்தைப் பொன்மெருகிட்டு ஏய்ப்பது, சட்டப்படி குற்றமாகும். அதுபோலவே ஆரியக் கற்பனைகளைத் தமிழ்க் கலை எனும் நகாசு வேலை செய்தது, தமிழருக்குக் கம்பர் செய்த கேடு என்பேன். கண்ணகியின் மாண்பைக் கம்பன் சீதையைத் தீட்டுவதிலே காண்கிறோம் என்கிறார். கண்ணகி குறித்த ஏடு இருக்க இது ஏன்? என்று கேட்கிறேன்.
இராவணன் சீதையை எடுத்துச் சென்றது, காமச் செயல் என்றன்றோ இன்றும் கூறுகின்றனர். அக்காலப் போர் முறையிலே, ஆநிரை கவர்தல், மாதரை எடுத்தல், கோட்டை தாக்குதல் என்பன முறைகள். ஆகையால் இராமனைப் போருக் கிழுக்கத் தன் தங்கையை மானபங்கம்செய்த பின்னர் போருக்கிழுக்க, அந்தச் சமயத்திலே இராமனிடம் எஞ்சியிருந்த விலை மதிக்கக் கூடிய பொருள் சீதை மட்டுமேயாகையால், சீதையை எடுத்துச் சென்றான் என்ற உண்மையை உரைக்கலாகாதா?
கம்ப இராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றைக் கொளுத்த வேண்டும் என்று எம் தலைவர் ஈ.வெ. இராமசாமி கூறியது கண்டு, மக்களுக்குக் கோபம் வருவது இயற்கை என்று அமைச்சர் உரைத்தார். உண்மை, மக்கள் கோபிப்பர் என்பதை நாங்களறிவோம். நாங்கள் தொடங்கிய எக்காரியத்துக்கும், நாங்கள் புகுத்திய எக்கருத்துக்கும் எதிர்ப்பு ஏற்பட்டு, மக்கள் கோபித் துப் பின்னர் எம்முடன் சேர்ந்து எமது பாசறை களுக்கு வந்துற்றனர் என்பதை அவர் அறிய வேண்டுகிறேன் என்று வாதிட்டார் அண்ணா.
நாம் ஏன் இந்து அல்ல என்று கூறுகிறோம்?
(‘திராவிட நாடு’ இதழில் எழுதியது)
- செல்வம் படைத்தவர்கள், உழைப்பால் பணம் சேர்ந்தவர்கள், ஏதோ தங்கள் முயற்சியினால் பணம் கிடைத்தது என்று எண்ணாமல் எங்கள் (கடவுள்கள்) அருளால் கிடைத்தது என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின் காரணமாகக் கோயிலுக்கும், கும்பாபிசேகத்திற்கும், கடைக்கும், தேருக்கும் பணத்தைச் செலவிட்டு, பஞ்சத்தையும், பட்டினியையும், பட்டினியால் பிணமாகும் சோகத்தையும் கண்டாலும், கடவுளே! என்று கூறி சும்மா இருந்து விடுகிறார்கள். எங்களுக்காக அவர்கள் செலவு செய்வதை ஏழ்மையைப் போக்கச் செலவிட்டால் எழுபது பேர் இப்படி (பசி பட்டினியால்) செத்திருக்க முடியுமா?
தங்கக் குடையில்லாததால் வேங்கடேசன் வெயிலில் வாடியா போனான்? தரித்திரம் நெருப்பை விடக் கொடியதாயிற்றே, அதனின்றும் இந்த ஏழைகளைக் காப்பாற்ற அந்தக் கொடையாளி முன் வந்திருக்கலாமே, வேங்கடேசுவரர் இல்லாதிருந்தால்! மற்ற சீமைகளிலே ஒரே தெய்வம், அதற்காக செலவு மட்டு. இங்கோ நாங்கள் எவ்வளவு பேர் என்ற கணக்கு எங்களுக்கே தெரியாது. எங்களைத் திருப்திபடுத்த, தயவு பெற பணம் செலவிட்ட பிறகு, சீமான்கள் அலுத்துப் போவதுகூட சகஜம். இந்தச் செலவு இல்லாவிட்டால், அவர்கள் பணத்தை ஏழைகளுக்கு இதம் தேடச் செலவிடு வார்கள்.
‘திராவிட நாடு’ (11.7.1943)
- நாலு தலைச் சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்று தலைச் சாமிகள், ஆயிரம் கண் சாமி, ஆறுதலைச் சாமி, ஆனை முகச்சாமி, ஆழிவாய்ச்சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள், காக்கை மீது பறக்கும் கடவுள், தலை மீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் சுகமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணை களிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக் கொண்டால், இவைகளை நமது தெய்வங்கள் என்று ஒப்புக் கொண்டு தொழ வேண்டுமே. இந்தச் சேதியைக் கேட்டால், உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களைவிடக் கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே! இந்தக் கண்ணறாவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக் கொள்ள, நமக்கு மனம் எப்படித் துணியும்? ஆகவேதான், நாம் இந்து அல்லவென்று கூறுகிறோம்.
நமக்கு நாலு, ஆறு, நாற்பத்தெட்டுக் கண் படைத்த கடவுள்கள் வேண்டாம். நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன்! ஊண் வேண்டாத சாமி! ஊரார் காசைக் கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி! ஆடல் பாடல், அலங்கா ராதிகள், அப்பம், பாயசம் அக்காரவடிசல் கேட்காத சாமி! அங்கே, இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி! அர்ச்சனை உண்டியல் என்று கூறி, அக்கிரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும், நம்மிடத்திலிருந்து “தியானத்தைப்” பெறட்டும், அருளைத் தரட்டும்; நம்மிடத்திலிருந்து தட்சணை பெற்றுத் தர்ப்பாசூரர்களுக்குத் தானம் தரும் தேவதைகள் நமக்கு வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தவே, நாம் நம்மை இந்து அல்ல என்று கூறுகிறோம்.
ஆள் நடமாட ஒரு உலகம், ஆவி உலவ மற்றோர் உலகம், இந்திரன் இருக்க ஒரு உலகம், நாகன் தங்க ஒரு உலகம், மேலே ஏழு, கீழே ஏழு எனப் பதினான்கு உலகங்களாம்! அதல, விதல, சுதல, தராதல, இரசாதல, மகாதல, பாதாளம் என ஏழாம்! பூலோக, புவலோக, சுவலோக, சனலோக, தபோலோக, மகாலோக, சத்தியலோகம் என மேல் உலகம் ஏழாம்! இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டு ஏட்டிலே. நமக்கு இவை வேண்டாம்; நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும்; நன்செயும் புன்செயும், சாலையும் சோலையும், வாவியும், நீரோடையும், நதியும், மக்களும் சுபீட்சமும் இருக்கட்டும். காம தேனுவும் கற்பகவிருட்சமும், ரம்பையும் ஊர்வசியும் இருக்கிற உலகத்திலே, டாக்டர் வரதராஜுலுவே உலவட்டும்! முடி சூட்டிக் கொள்ளட்டும்! நாமிருக்கும் நாட்டிலே நமது உழைப்பு நமக்குப் பயன்பட்டு, நாலு ஜாதியிலே நாம் கீழ்ஜாதி என்று கொடுமை இன்றி, நாமார்க்குங் குடியல்லோம் என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தினால் தான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக் கொள்கிறோம்.
நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது, தர்ப்பை ஆகாது. சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது. யோக, யாகப் புரட்டுகள், மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை “இந்து” என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித் தான் மனம் இடந்தரும்? எப்படித்தான் துணியும்? இந்து மதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்தபிறகு யாருக்குத் தான் தன்னை ஓர் “இந்து” என்று கூறிக்கொள்ள மனம் இடம்தரும் ? …..
…… தென்னிந்தியாவில் உள்ள முகமதிய மதம், கிறிஸ்தவ மதம் போக இந்த ஜனங்கள் எந்த மதம் என்று கேட்கிறோம். அவர் எல்லோரும் வேதத்தை ஆதார முறையாகப் பின்பற்றுவார்கள் என்று சொல்ல முடியாது. பிராமணர்கள்கூட பழக்கங்களில் வேதாகமங்கள்படி நடப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியிருக்க எல்லோருக்கும் பொதுவான மதம் என்று சொல்ல எப்படித் துணிந்தாய்?
‘திராவிட நாடு’ (26.9.1943)
- ஆரியம், திராவிட நாகரிகத்தை எவ்வளவு பாழ்படுத்திற்று என்ற ஆராய்ச்சி வரலாறாயிற்று. இயற்கை இன்பத்தை நுகர்ந்து, வீரத்தை வணங்கி, அறத்தை ஓம்பி வாழ்ந்த திராவிடரிடையே, கட்டுக் கதைகளைப் புகுத்திக் கோழைத்தனத்தை வளர்த்தவர் ஆரியரே என்பதும், ஆரியக் கோட்பாடுகள் புகா வண்ணம் திராவிடர் அறிவுத் துறையிலேயே ஆர்வம் கொண்டிருந்தார்களே அல்லாமல், கண்ணுக்குப் புலனாகாததும், கருத்துக்கு எட்டாததும், வாதத்திற்குக் கட்டுப் படாததும், பிரத்யட்சம் பிரமாணத்துக்கு ஒத்து வராததுமான கொள்கைகளிலே மூழ்கிக் கிடக்க வில்லை என்பதும், பிறகு ஆராய்ச்சியாளர்களால் விளக்கப்பட்டது. ஆனால், இவையாவும் பிரேத விசாரணையாகக் கருதப்பட்டதே அல்லாமல், வீழ்ச்சியுற்ற இனத்திற்குத் திருப்பள்ளி எழுச்சியாக உபயோகிக்கப்பட வில்லை.
‘திராவிட நாடு’ 26.9.1943
இந்தக் கடவுள்கள் இப்படிச் செய்தால்!
- விண்ணிலே எதிரி விமானங்கள் வட்ட மிட்டால், விநாயகர் தமது துதிக்கையால் அவற்றை துவம்சம் செய்யலாமே!
- எதிரி விமானங்கள், நம் நாட்டின் மீது படை யெடுத்து வந்தால், விமான அறிவிப்புக்காகத் தமது பாஞ்சான்யம் எனும் சங்கினை மகாவிஷ்ணு ஊதலாம்!
- எதிரி நாடுகளான ஜெர்மனியையும், ஜப்பானையும், பரமசிவம் தமது நெற்றிக் கண்ணைத் திறந்து தீப்பொறி கிளப்பி, பொசுக்கித் தள்ளலாம்! புராணங்களில், இக்கடவுள்களைப் பற்றிக் கூறுவதைப் பார்த்தால், இதுவும் செய்யலாம் இதற்கு மேலும் செய்யலாம்!
ஆனால், நடப்பது என்ன? கோயில்களிலே கொலு வீற்றுக் கொண்டு கோலாகலமாக இக்கடவுள்கள் உள்ளன!
சக்தி உண்டா? இல்லையா? இருந்தும் பயன்படுத்தவில்லையா?
சக்தியில்லையென்றால், இக்கடவுளுக்கு இங்கு இவ்வளவு வைபவங்கள் ஏன்? பக்தர்கள் கூறுவார்களா?
‘திராவிட நாடு’ 3.10.1943
(டாக்டர் அண்ணா பரிமளம் தொகுத்த ‘அண்ணாவின் பகுத்தறிவுக் களஞ்சியம்’ நூலிலிருந்து)
(சிந்தனைகள் தொடரும்)
நிமிர்வோம் மார்ச் 2019 மாத இதழ்