அய்.நா.வில் தலித் பெண்கள் சமர்ப்பித்த ஆவணம்
‘தலித்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்த மத்திய சமூக நலத் துறை அய்.நா.விலும் தலித் உரிமைகளைப் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் நடக்கும் ஜாதிய ஒடுக்கு முறை தலித் மீதான வன்முறைகள் குறித்து அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் ‘தலித் பெண்கள் ஒருங்கிணைப்பு’ என்ற பெண்கள் அமைப்பு விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. தலித் மனித உரிமைகளுக்கான இயக்கம் என்ற அமைப்பின் ஒரு பகுதியாக தலித் பெண்கள் ஒருங்கிணைப்பு என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அய்.நா. மனித உரிமை ஆணையம் நடத்தும் விவாத அரங்குகளில் பங்கேற்று முதன்முதலாக இந்தியாவில் நிலவும் ஜாதி பாகுபாடு மற்றும் தலித் மக்கள் மீதான பிரச்சினையை அறிக்கையாக்கி சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். “ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்: இந்தியாவில் ‘தலித் பெண்களின் கதை’ என்ற தலைப்பில் இந்த விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு ஜூன் 21ஆம் தேதி ஜெனிவாவில் அய்.நா. மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இனப் பாகுபாடுகளுக்கு எதிரான அய்.நா.வின் சிறப்பு அதிகாரி (சுயயீயீடிசவநரச) இசாக் நிதாய் (ஐணளயம – சூனயைலந) – ஜாதிய பாகுபாடு என்பதும் இனப்பாகுபாடு தான். இதற்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் இந்திய அரசுக்கு அழுத்தம் தந்து, ஒடுக்குமுறை களுக்கு எதிரான கொள்கைகளை உருவாக்க உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 2016ஆம் ஆண்டு ஜாதியப் பாகுபாடுகள் குறித்து இதே அதிகாரி மனித உரிமை ஆணையத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத் தக்கது. இந்திய அரசு (மோடி ஆட்சி) இந்த அறிக்கையை முழுமையாகப் புறந்தள்ளியதோடு மட்டுமல்ல; ஜாதி குறித்த பிரச்சினைகளை எழுப்பும் உரிமை சிறப்பு அதிகாரிக்குக் கிடையாது என்று கூறியது. அப்போது இந்த சிறப்பு அதிகாரி மைனாரிட்டி மக்களுக்கான பாகுபாடுகளுக்கு எதிராக செயல்படும் அதிகாரியாக இருந்தார். இந்தியாவுக்கான அய்.நா. சிறப்பு அதிகாரி அஜித் குமார், “மைனாரிட்டி பாகுபாடுகளுக்கு மட்டுமே நீங்கள் அதிகாரி; இந்தியாவின் ஜாதி பற்றிப் பேச உங்களுக்கு உரிமை இல்லை” என்று கூறிய போது, மைனாரிட்டிகள் பிரச்சினைக்கும் ஜாதியத்துக்கும் பொதுவான பண்புகள் உண்டு. மைனாரிட்டிகளைப் போலவே ஜாதியமைப் பிலும் மைனாரிட்டிகளாக உள்ள மக்கள் பாகுபாடுகளுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளா கிறார்கள். சமூகத்தில் பல நேரங்களில் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்” என்று அவர் பதிலளித்தார்.
‘ஜாதி’, ‘தலித்’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருந்தாலே ஜாதி ஒழிந்து விடும் என்று பா.ஜ.க. கருதுகிறது. அண்மையில் ஆர்.எஸ்.எஸ். ‘தலித்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று தனது உறுப்பினர் களுக்கு அறிவுறுத்தியது. அதற்கு முன் ம.பி. உயர்நீதிமன்றம், ‘தலித்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த தடை போட்டது. இதைக் காரணம் காட்டி நடுவண் ஆட்சியின் சமூக நீதித் துறை அனைத்து மாநில அரசுகள் யூனியன் பிரதேசங் களுக்கு ‘தலித்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அப்படி ஒரு வார்த்தை அரசியல் சட்டத்திலோ, வேறு சட்டங்களிலோ இடம் பெறவில்லை என்றும் கடிதம் எழுதியது. ‘பட்டியல் இனப் பிரிவு’ என்ற வார்த்தை சட்டத்தில் இடம் பெற்றிருந்தாலும் ‘தலித்’ என்பது அடையாள அரசியலுக்காக சில தலைவர்களால் பிரபலமாக்கப்பட்டது. ஜாதியப் பிரச்சினையில் கண்களை மூடிக் கொண்டு சொல் விளையாட்டு நடத்தி வரும் பாரதிய ஜனதா கட்சியின் இந்த நாடகத்தை அதன் கூட்டணி கட்சிகளே ஏற்கவில்லை. பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தலித் உறுப்பினரான உதித்ராஜ், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ‘பாரத் பந்த்’ நடத்திய தலித் மக்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதை சுட்டிக்காட்டிக் கண்டித்துள்ளார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் அது. 2019ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தலித் மக்களின் ஆதரவு கிடைக்கப் போவதில்லை என்றும் உதித்ராஜ் அதன் தோழமைக் கட்சியாக இருக்கும் நிலையிலும் கூறியுள்ளார்.
கடந்தகால ஆட்சிகளில் தலித் மக்கள் மீது அடக்குமுறைகள் நடக்கவே இல்லை என்று எவரும் கூறவில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக் கொண்டுள்ள கருத்தியல் என்பதே தலித் மக்கள் தங்கள் விடுதலைக்கு முன்னிறுத்தும் கருத்தியலுக்கு நேர் முரணானது. சித்தாந்த அடிப்படையிலேயே ஆர்.எஸ்.எஸ். ஜாதியத்தை ஆதரிக்கிறது என்பதே இதில் மிகவும் கவனிக்கத்தக்கது. ஏதோ தலித் மக்களிடம் தன்னுடைய ஆட்சி ஆதரவாக இருப்பதாக மோடி ஊர் ஊராகப் போய் பேசுகிறார். ஆனால் கள நிலையோ இதற்கு நேர்மாறாக இருக்கிறது. தேசிய குற்ற ஆவணப் பதிவகத்தின் தகவலின்படி 2016ஆம் ஆண்டில் தலித் மக்களுக்கு எதிராக 40,801 வன்முறைகள் பதிவாகியுள்ளன. 2015இல் இந்த எண்ணிக்கை 38,670. பெரும்பாலான குற்றங்கள் தலித் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை, தாக்குதல், நிர்வாணமாக்கி அவமதித்தல், பாலியல் துன்புறுத்தல்கள் என்பவைகளாகவே உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுதும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை 66 சதவீதம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை இருமடங்கு அதிகரித்துள்ளது. 2006ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் 3 தலித் பெண்கள் பாலுறவு வன்முறைக்கு உள்ளானார்கள் என்றால், 2015இல் ஒவ்வொரு நாளும் 6 தலித் பெண்கள் இதே குற்றங்களுக்கு உள்ளானார்கள். வழக்குகளாக பதிவு செய்யப்பட்ட புள்ளி விவரங்கள்தான்இவை. கவனத்துக்கு வராமலேயே மறைக்கப்பட்டவை இதைவிடப் பன்மடங்கு. காவல்துறையின் ஒத்துழைப்பு இல்லாமை, உயர்ஜாதிக்காரர்களின் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வழக்குகள் பதிவாகாமலேயே மறைக்கப்பட்டு வருகின்றன.
மிக மோசமான வன்கொடுமைகள் நிகழ்ந்த ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 2014தான். இந்த ஆண்டு 47,064 வழக்குகள் பதிவாயின. இதற்கு முந்தைய ஆண்டைவிட 19 சதவீதம் அதிகம். 2014இல், 77 தலித்துகள் கொலை செய்யப்பட்டனர். 2013இல் இந்த படுகொலை 676 ஆக இருந்தது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அல்லது பா.ஜ.க. கூட்டணி ஆளும் மாநிலங்களில்தான் தலித் மீதான வன்கொடுமைகள் அதிக எண்ணிக்கையில் நிகழ்வதாக குற்ற ஆவணப் பதிவகத்தின் புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. தலித்துகளுக்கு எதிராக தண்டனைக்குரிய குற்றங்கள் நடந்த மாநிலங்களில் ம.பி. முதலிடம் (43.4 சதவீதம்), இரண்டாவது இராஜஸ்தான் (42 சதவீதம்), மூன்றாவது கோவா (36.7 சதவீதம்), நான்காவது குஜராத் (32.5 சதவீதம்). 12 நிமிடங்களுக்கு ஒரு முறை தலித் மீதான வன்முறை நாட்டில் நடக்கிறது என்றும், கடந்த 4 ஆண்டுகளில் தலித் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக நடந்த வன்முறை அளவுக்கு முன் எப்போதும் நடந்தது இல்லை என்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு தலித் சமூகத்தில் பிறந்தார்கள் என்பதற்காகவே அவமதிப்புக்கும் வன்முறைக்கும் உள்ளாக்கப்பட்ட ஏராளமான நிகழ்வுகள் நடந்துள்ளன. ம.பி. மாநிலம் சத்தப்பூரில் அலங்கரிக்கப்பட்ட காரில், ஒரு தலித் மணமகன் ஊர்வலமாக வந்தார் என்பதற்காகவே மாப்பிள்ளையும் ஊர்வலத்தில் வந்தவர்களும் மூர்க்கமாகத் தாக்கப்பட்டனர். உ.பி. மாநிலம் குஷிங் நகருக்கு முதல்வர் ஆதித்யநாத் வருகிறார் என்பதற்காக அங்கே வாழ்ந்த தலித் மக்களுக்கு சோப், ஷாம்பு தந்து சுத்தப்படுத்திக் கொள்ளுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியது. குஜராத்தில் குருனல் மகேரியா என்ற 30 வயது தலித் இளைஞர் மீசை வைத்திருந்தார் என்பதற்காக அவரை அடித்து மீசையை எடுத்தார்கள். அதே குஜராத்தில் 17 வயது தலித் இளைஞர் டிகந்த் மகேரியா, சொந்தமாக ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கினார் என்பதற்காகத் தாக்கப்பட்டார். இதே குஜராத்தில் 21 வயது தலித் இளைஞர் ஒரு நடன விழாவைப் பார்க்க வந்ததால் பட்டேல் ஜாதி வெறியர்களால் அடித்தே கொல்லப் பட்டார்.
இந்த விவரங்களோடு தலித் பெண்கள் ஒருங்கிணைப்பின் அறிக்கை, அரசின் கல்வி, சுகாதாரம், வாழ்வுரிமைத் திட்டங்களில், ஜாதிய பாகுபாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி தலித் மக்கள் எண்ணிக்கை. மக்கள் தொகையில் 16.6. சதவீதம். 2015ஆம் ஆண்டில் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி (சூயவiடியேட குயஅடைல ழநயடவா ளுரஎநல) தலித் மக்கள் எண்ணிக்கை 20.6 சதவீதம். இதில் நகரங்களில் வாழ்வோர் 16.8 சதவீதம். கிராமங்களில் வாழ்வோர் 22.6 சதவீதம். தேசிய மாதிரி கணக்கெடுப்பு கிராமங்களில் பல்வேறு சமூகக் குழுக்களை ஒப்பிட்டு நடத்திய ஆய்வு, வீடுகளில் தினக் கூலிகளாக வேலை செய்யும் தலித் மக்கள் எண்ணிக்கை 52.6 சதவீதம் என்றும், அதுவே அவர்களுக்கான முதன்மையான வருவாய் என்றும் கூறுகிறது. கிராமங்களில் நிலம் வைத்திருக்கும் சமூகக் குழுக்களில் கடை நிலையில் இருப்பவர்கள் தலித்துகள் 0.8 சதவீதம்பேரிடம் மட்டுமே சிறிதளவு நிலம் இருக்கிறது. இவர்களிடம் உள்ள மொத்த நிலம் 4.01 ஹெக்டருக்கும் சற்று அதிகம். எழுதப் படிக்கத் தெரிந்திருப்பதிலும் சமூகக் குழுக் களிடையே பெரிய இடைவெளி இருக்கிறது. தலித் ஆண்களில் 64.21 சதவீதம் பேர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். தலித் பெண்கள் 48.33 சதவீதம் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். இராஜஸ்தான், பீகார், ஹரியானா, உ.பி., ம.பி. மாநிலங்களில் தலித் பெண்களின் வளர்ச்சிக்காக செயல்படும் குழுக்களைச் சார்ந்தவர்கள் தலித் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக ஆதிக்க ஜாதியினரைச் சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது என்றும், திருமணம், சிகிச்சை போன்ற எந்தத் தேவைக்கும் ஆதிக்க ஜாதியினரிடம் கடன் பெறும் நிலை யிலேயே இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.
தலித்துகளிடம் இருக்கும் சொற்ப நிலங்களையும் தலித் அல்லாதவர்கள் பறித்துக் கொள்வதோடு அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து பெண்களை தங்கள் பாலுறவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், சில நேரங்களில் கணவருக்கு மது வாங்கிக் கொடுத்து மயங்க வைத்து மனைவியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் இராஜஸ்தானைச் சார்ந்த செயல்பாட்டாளர் சுமன் தேவாத்தியா என்பவர் கூறுகிறார். ‘சமூகத்தின் மிக மோசமான பாகுபாடு – பாலுறவு வன்முறைக்கு உள்ளாகும் பெண்களுக்கு நீதிமன்ற அமைப்புகள் வழியாக நீதி வழங்கப்படாதது தான் நீதிமன்றங்களே நீதிக்கு தடையாக இருப்பதை அறிந்த பிறகே அரசு அமைப்புகள், அரசு நிறுவனங்களின் ஜாதியக் கண்ணோட்டம் குறித்து ஆராயத் தொடங்கினோம் என்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விருந்தோ குரோவர்.
அரியானா மாநிலத்தைச் சார்ந்த மோகினி என்ற தலித் பெண் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பிறகும்கூட ஒரு தலித் பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பப்படுவது இல்லை. பொதுவாக பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளா கிறார்கள் என்றாலும் தலித் பெண்கள் மேலும் மோசமான கொடுமைகளை ஒப்பீட்டளவில் சந்திக்கிறோம் என்கிறார். தலித் பெண்கள் கை இல்லாத இரவிக்கை, ஜீன்ஸ் உடைகளை வீட்டுக்குள் அணிவதையே பிற ஜாதி சமூகத் தினர் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். சொல்லப் போனால் சொந்த தலித் சமூகத்தி லிருந்தே எதிர்ப்புகள் வருகின்றன. எங்கள் சமூகத்தி லிருந்து எதிர்ப்பவர்களைக்கூட நாங்கள் தட்டிக் கேட்க முடியும். காரணம் அவர்களைப் பற்றிய அனைத்தும் எங்களுக்குத் தெரியும். எங்களையும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால், ஆதிக்க ஜாதியினரிடமிருந்து கேலி, கிண்டல் வந்தால் நாங்கள் அதைக் கண்டு கொள்ளாமல் போவதைத் தவிர வேறு வழி இல்லை. அவர்களின் ஜாதி பலம், பணபலம், அதிகார பலம் எங்களுக்கு தெரியும். அவர்கள் எங்களை எது வேண்டுமானாலும் செய்ய முடியும். பெண்கள் – மார்பை மூடும் துப்பட்டாக்களை கட்டாயம் அணிந்தாக வேண்டும். இதற்கு முன்பு தலையில் முக்காடிட்டுத்தான் செல்ல வேண்டி யிருந்தது. எங்களை கிண்டல் செய்கிறவர்கள்மீது நாங்கள் பிரச்சினையை உருவாக்கினால் ஆதிக்க ஜாதியினர் எங்களுடைய சகோதரர்களை தாக்குவார்கள். பிறகு, பெரும் கலவரமாகிவிடும். எனவே அவமானங்களை நாங்கள் அமைதி யாகக் கடந்து செல்கிறோம்” என்று அந்த அரியானா தலித் பெண் ஆவணத்தில் தனது சாட்சியமாக பதிவு செய்துள்ளார்.
“தலித் அல்லாத பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் ஊரே திரண்டுவிடும். ஆனால் தலித் பெண்களுக்கு அவமானம் – பாலியல் வன்முறை என்றால் எவரும் முன்வர மாட்டார்கள். ஜாட் சமூகத்திடம் அடங்கித்தான் போக வேண்டும். அவர்களை பகைத்துக் கொண்டு வாழ முடியாது என்று இளம் பருவத்திலிருந்தே எங்கள் மூளையில் திணிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறோம்” என்கிறார், அதே அரியானாவைச் சார்ந்த தலித் வழக்கறிஞர் கவிதா.
ம.பி. மாநிலத்தைச் சார்ந்த காயத்ரி அளித்த வாக்குமூலத்தில், “கிராம சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் பிரதிநிதிகளே தலித் மீதான வன்முறைகளை கேள்வி கேட்க முடியாது; கேட்டால் அடி – உதை கிடைக்கும்; வீடு தாக்கப்படும். ஆதிக்க ஜாதியினரின் அதிகாரத்துக்கு அடிபணிந்துதான் செயல்பட முடியும்” என்று கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் அய்.நா.வின் பல்வேறு அமைப்புகள் ஜாதிய வன்முறைகள் பற்றி கவலையுடன் செயல்பட்டு வந்தன. இந்த வன்முறைகள் குறித்து அவ்வப்போது பரிசீலித்து அறிக்கைகள் தயார் செய்து அரசின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளன. முன்னாள் மனித உரிமை ஆணையர் நவநீதப் பிள்ளை, தலித் பெண்கள் மீதான பாலுறவு வன்முறை தாக்குதல்களுக்கு அவர்கள் நிலமற்றவர்களாக பொருளாதார பலம் இல்லாதவர்களாக படிப்பறிவு இல்லாதவர்களாக இருப்பதே காரணம். எனவே உரிமைகள் அவர்களுக்கு கிடைக்கச் செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவில் ஜாதிய வன்முறைகள் அதிகரித்து வருவதைக் கண்டித்து அய்ரோப்பிய நாடாளுமன்றம் பலமுறை தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. ஆனால் இந்தியாவே எந்தக் குரலையும் காதில் வாங்க தயாராகவே இல்லை என்று விரிவாகப் பேசுகிறது, இந்த ஆவணம்.
ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக சர்வதேச அமைப்பைப் பயன்படுத்த முன் வந்திருக்கும் இந்தப் புரட்சிகரப்பெண்களை பாராட்ட வேண்டும்.
‘பிரண்ட்லைன்’ இதழிலிருந்து
தமிழில் ‘இரா’
நிமிர்வோம் ஜனவரி 2019 மாத இதழ்