வரலாற்று வெளிச்சத்தில் கீழ்வெண்மணி (1) பசு. கவுதமன்
1968 டிசம்பர் 25ஆம் நாள் ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நாகப்பட்டினம் அருகே உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் 44 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கொடூரமான குருதி படிந்த வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை வெளிக் கொண்டு வருகிறது, இத் தொடர்.
ஒரு முன்னுரையாக:
1989-90களுக்குப் பின்னால் ஏற்பட்ட ‘தலித் அறிவுஜீவி’களின் வளர்ச்சிப் பார்வை அல்லது ஆய்வு நோக்கு – எது எப்படியோ தந்தை பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும் தாழ்த்தப்பட்ட, ஆதி திராவிட, பட்டியலின மக்களுக்கு எதிரானவர்களாகக் கட்டமைப்பதில் மிகக்கவனம் எடுத்துக் கொண்டு செயல்பட்டன என்று சொன்னால் அது மிகையில்லை.
என்னுடைய எழுத்துக்கள் எதுவும் ஆய்வுக்கும், விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவை அல்ல. பெரியாரும், திராவிடர் இயக்கமும் அதற்கு உட்பட்டது தான். ஆனால், விமர்சனம் என்ற பெயரில் அவதூறு களையும், காழ்ப்புணர்ச்சிகளையும், அழிச்சாட்டியமான விதண்டாவாதங்களையும் கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் அறிவு நாணயம் என்று விளங்கவில்லை. காரல் மார்க்ஸ் தன்னை, தன்னுடைய சித்தாந்தத்தை ‘சர்வரோக நிவாரணி’ என்று சொல்லிக் கொண்ட தில்லை. பெரியாரும் அப்படித்தான்.
“…இந்த சொத்துமுறைகள் மாறி பொதுவுடமை முறை வந்து தாண்டவம் ஆடும்போது – இந்த முறைகூட இருக்காது என்பதோடு இதை ஒரு மூடநம்பிக்கை – காட்டுமிராண்டி காலமுறை என்று சொல்ல வேண்டி வரும் என்பதோடல்லாமல் இன்று உங்களில் பலரால் புரட்சிக்காரன் என்று கூறப்படுகின்ற என்னை ஒரு மூடநம்பிக்கைக்காரனாக –வைதீகப் பிடுங்கல் ராமசாமி என்று ஒருவன் இருந்தான் என்று என்னை உங்கள் பிள்ளைகள் – பேரர்மார்கள் சொல்லும்படியான நிலைகூட வந்துவிடும்” என்று (06.12.1944, ராஜ பாளையத்தில் ஒரு திருமண நிகழ்வில் பேசும்போது) பெரியார் சொன்னார்.
அந்தக் காலம் – அப்படியான சூழல் இங்கு வந்துவிட்டதா? அந்த மாற்றம் – பெரியார் ராமசாமியை, வைதீகப் பிடுங்கல் ராமசாமி – மூடத்தனமான ராமசாமி என்று சொல்லக் கூடிய மாற்றம் வந்துவிட்டதா? (இப்போது சிலர் சொல்லிக் கொண்டுதான், உடைத்துக் கொண்டுதான் உள்ளார்கள். அவர்களின் ‘களியாட்டத்திற்குள்’ நான் போகவில்லை) மாற்றம் என்பதே மாறுதலுக்குட்பட்டது என்று மார்க்சியம் சொல்கின்றதே, அந்த மாற்றம் வந்துவிட்டதா? அதிலும் கூட பெரியார் சொல்வார், “அந்த மாற்றம் வெறும் மாற்றமாக இல்லாமல் மனிதகுல வளர்ச்சிக்கு – மனிதகுலப் பயன்பாட்டுக்குரிய வளர்ச்சியாக இருத்தல் வேண்டும்” என்று. அத்தகைய மாற்றம் – வளர்ச்சி இங்கே என்ன முழுமையாக ஏற்பட்டுள்ளது? எனவே இங்கே பெரியாரும், மார்க்சும் தவிர்க்க முடியாதவர்கள், ஒதுக்க முடியாதவர்கள் – நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். விவாதத்திற்கோ அல்லது தங்களின் அறிவின் மேதாவிலாசத்தைக் காட்டிக் கொள்ளவோ எப்படி வேண்டுமானாலும் பேசிவிட்டு, எழுதி விட்டுப் போகலாம்தான். ஆனால் அதுவல்ல உண்மை என்று அவர்களுக்கும் தெரியும், எங்களுக்கும் புரியும்.
தலித்துகளுக்கு எதிரானவர் பெரியார், தலித்துகளுக்கென்று அவர் எந்த ஒன்றையும் செய்யவில்லை; அவர் இடைநிலை பிற்படுத்தப் பட்டவர்களையும் ஏமாற்றி அவர்களுக்குத் தலைவரானவர்; அதற்கு தாழ்த்தப் பட்டவர்களைப் பயன்படுத்திக் கொண்டார் என்று இப்படிக் காட்சிப்படுத்தி, கட்டமைப்பதற்காக தலித் அறிவுஜீவிகளும் (அனைவரும் அல்ல, ஒரு சிலர்), இப்போது கொஞ்ச காலத்திற்கு முன்னால் உற்பத்தியாகி யுள்ள இனவாதத் தமிழ் தேசிய நடமாடும் ஆய்வகங்களும் கையில் எடுக்கும் ‘பேராயுதங்களில்’ ஒன்றுதான் “வெண்மணி விவகாரம்”.
பொதுவாக டிசம்பர் வந்துவிட்டால் மேலே சொன்னவர்களுக்கும் அவர்களோடு புரட்சிகர இடதுசாரி பொதுவுடமைவாதி களுக்கும் ‘வெண்மணி ஜீரம்’ வந்துவிடும். அனத்தல்கள் அதிகமாகிவிடும். சமூக வலைதளங்களில் இவர்கள் யாரோ, எப்போதோ எடுத்த வாந்திகளை இவர்கள் வாயால் எடுப்பார்கள். அந்த அளவிற்கு அறிவார்ந்த அறிவாளிகள். வரலாற்றை வாய்தாமுறையில் படிப்பவர்கள். வெண்மணியின் ஏகபோக மொத்த முதலாளிகள்.
உங்கள் யாரிடமும் பங்கு கோரியோ, பாத்தியதை கேட்டோ இந்தப் பதிவினை செய்யவில்லை. அதுபோலவே செங்கொடியின் அதன் ஒவ்வொரு தனி மனிதனின் அளப்பரிய தியாகத்திற்கும், பங்களிப்பிற்க்கும் தலை தாழ்ந்து வீரவணக்கம் செலுத்தியேதான் இது பதிவிடப்படுகின்றது. ஆனால் தோழர்களே… தமிழ்ச் சூழலில் பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும் புறந்தள்ளிவிட்டு அல்லது ஒதுக்கி வைத்துவிட்டு இங்கே எந்தத் தரவுகளும் இல்லை என்ற உண்மையினையும் எல்லா வரலாற்று நிகழ்வுகளும் சொல்லிக் கொண்டு தான் உள்ளது என்பதனையும் அவ்வளவு எளிதில் விட்டு விலகிவிட முடியாது. அந்த அடிப்படையில்தான் இந்தப் பதிவினை தொடர்கின்றேன்.
ட
கொஞ்சம் இருங்க..
இந்தக் கலந்துரையாடலைக் கேட்டுவிட்டு பிறகு நாம் பயணிக்கலாம்.
மங்கனூர் ரோட்டோர வயலுக்கு நடுவே உள்ள அந்தக் களத்துமேட்டுக் குடிசையில் சன்னமான வெளிச்சம். அமைதியான, ஆனால் ஆக்ரோசமான வாதப்பிரதிவாதங்களோடு தோழர்கள். மத்தியக் கமிட்டிக்குச் சென்று வந்த தோழர், அங்கு எடுக்கப்பட்ட தீர்மானகரமான முடிவினை அறிவித்துவிட்டு அதுகுறித்து பேசியதற்குப் பின்னால்தான் இந்த வாதப்பிரதிவாதங்கள். அவர் இப்படித்தான் ஆரம்பித்தார்,
“தோழர்களுக்கு என்னுடைய புரட்சிகர வணக்கங்கள். நம்முடைய தலைமைக்குழு கூடி எடுத்த முக்கிய முடிவுகளை உங்களிடம் சொல்லி விளக்குவதற்காக நான் வந்திருக்கின்றேன். முரண்பட்ட, சிக்கலான சூழ்நிலையில் நானிருக்கிறேன். நம்முடைய வழமையான பாதையிலிருந்து விலகி, ஒரு புதிய பாதையில் நாம் பயணிக்க வேண்டியவர்களாக, மாற வேண்டிய – மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. அழித்தொழிப்பு அல்லது கலகம் அல்லது கைப்பற்றுதல் என்ற கருத்துருவாக்கங்களின் அடிப்படையில் நியாயங்களை நிர்மாணிப்பது என்ற நிலையில் ரகசியக் குழுக்களாக – தலைமறைவு இயக்கமாக நாம் செயல்பட்டுக் கொண்டிருந்தோம். இப்போது கூட ஒரு குழு அழித்தொழிப்பு நடவடிக்கை ஒன்றினை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டு, இங்கே நமக்கு முன்னால் அமர்ந்திருக்கின்றார்கள் என்பதும், இன்னும் ஒரு அழித்தொழிப்பு நிகழ்வு நடத்தப்பட உள்ளது என்பதையும் நாம் அறிவோம். இந்தச் சூழலில் ஆயுதம் தாங்கி அறுவடையை கையகப்படுத்துதல், கலகத்தை ஏற்படுத்துதல், தூண்டுதல், அழித்தொழிப்பு போன்ற இயங்குமுறைகளை – நடைமுறைகளை விட்டுவிட்டு சனநாயக வழியில் மக்கள் ஆதரவினைப் பெற்று இயக்கத்தினை புனரமைப்பது அல்லது கட்டமைப்பது என்று நமது தலைமைக்குழு கட்சி முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக தலைமைக் குழுவில் – கட்சியின் உயர்மட்டத்தில் பல்வேறு விதமான மிகக் கடுமையான விவாதங்கள் நடந்து கடைசியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ”
“தோழர், அப்ப நாங்க நடத்தப்போற அழித்தொழிப்பை கட்சி நிறுத்தச் சொல்கிறதா, நிறுத்த வேண்டுமா?”
“தோழர் நான் கட்சியின் உயர்மட்ட முடிவச் சொல்றேன், என்னோட முடிவ சொல்லல?
“நாப்பத்துநாலு உசுரு தோழர், நிமிசத்தில கருகிப் போச்சுது தோழர், பன்னெண்டு வருச வெறி, பகை தோழர் இது. அழித்தொழிப்பு வேணாம், ஜனநாயகரீதியான்னா பேசிப் பஞ்சாயத்துப் பண்ணிக்குவோமா தோழர்?”
“காம்ரேட், உங்க கோபத்த என்னால உணரமுடியுது.”
“காம்ரேட், நாங்க இந்த அழித்தொழிப்ப தீர்மானகரமா நடத்தி முடிப்போம். அதிலே எங்களுக்கு சந்தேகமில்ல. இப்ப என்னோட – மன்னிக்கனும், எங்களோட கேள்வி கட்சி இன்னைக்கு ஜனநாயகப் பாதைக்குப் போயிடுச்சின்னு சொல்றீங்க, அதனால அழித் தொழிப்புல்லாம் இனிமே கிடையாதுங்கிறீங்க. சரி, கமிட்டியின் நேத்தைய முடிவுப்படி நாயுடுவ அழித்தொழிக்க தேதி குறிச்சோம். தலைமைக் குழு உள்பட எல்லாரோட ஒத்துழைப்பு, சம்மதத்தோட! அத நடத்தப் போறோம். அப்படின்னா, நாங்க கட்சியின் முடிவை மீறி செயல்படப் போறோம்னு அர்த்தமாகுது. அப்ப நாங்க கட்சிக்காரர்களா இல்லியா? கட்சி எங்க நடவடிக்கைய அங்கீகரிக்குமா, அங்கீகரிக் காதா?”
தோழர்களின் வாதப்பிரதிவாதங்கள் சூடேற, “தோழர்களே, உயர்மட்டக் குழுவோட இந்த முடிவு செயல் வடிவம் பெறுவது முன்தேதியிட்டா? இல்ல, பின் தேதியிலா? இல்ல, இன்னியிலிருந்தா? ஆனா, எடுக்கப்பட்ட முடிவில், கட்சியோட முடிவில் மாற்றமில்லை என்பது மட்டும் சர்வ உண்மை.”
“கட்சி ஜனநாயகப் பாதைக்குப் போகட்டும் தோழர். தேர்தலில் நின்னுகூட ஓட்டு கேட்கட்டும். ஆனா, நாங்க நாயுடுவை அழித்தொழிப்பதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை. கட்சி எங்களை தள்ளி வச்சாலும் சரி, அதப்பத்தி எங்களுக்குக் கவலையில்ல. அப்படி ஒண்ணு நடந்தா, அதாவது கட்சி இந்த அழித்தொழிப்ப ஏத்துக்கலேன்னா இந்த நடவடிக்கைக்கு கட்சி தார்மீகமா உரிமை கோர முடியுமாங்கறத மாத்திரம் உங்க மூலமா கட்சிக்கு சொல்லிக்கிறோம்.” என்று வாக்குவாதங்களாக மாறிப்போன வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தபோது, பொழுது புலரத் துவங்கியது.
தோழர்களே, இது முழுக்கவும் கற்பனை அல்ல, ஆனால் காலங்கள் மாறலாம், காட்சிப் படுத்தப்பட்ட களங்கள் வேண்டுமானால் மாறலாம்…! இது அவர்கள் கட்சிப் பிரச்சனை. தலைமை ஒரு முடிவெடுத்து அது தன்னுடைய தோழர்களுக்குச் சொல்லிவிட்டது. அதை நடைமுறைப்படுத்தக் கூடிய தோழர்கள் எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம். நமக்கும் அதற்கும் தொடர்புமில்லை, சம்பந்தமுமில்லை. ஆனால் வரலாறு எல்லாவற்றையும் பதிவு செய்யும். வாதப்பிரதிவாதங்கள் – விமர்சனங்கள் -தீர்வுகள் – தீர்ப்புகள் எல்லாவற்றையும் வரலாறு பதிவு செய்யும்…! நாளைக்கோ அல்லது பின்னாளிலோ பார்வைகள் மாறலாம். அதிலொன்றும் சந்தேகமில்லை.
மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது, இல்லையா…!
நமக்கான தேடுதல் அது அல்ல. நம்முடைய தேடுதலும் அதிலில்லை. ஆனால், யாராவது அல்லது எங்கிருந்தாவது, இங்கே என்ன தேடுகின்றீர்கள்? இது எங்களுடைய தளம். உங்களுக்கான இடம் இதில் கொஞ்சமும் இல்லையே – அல்லது – இந்த வரலாறு எங்களுடையது. இதில் நீங்கள் ஏன் தலையிட்டு உரிமை கோருகின்றீர்கள் என்று உரிமைக்குரல் எழுப்பக்கூடும். அல்லது வரலாற்றைத் திரிக்காதீர்கள். வலிந்து உங்களை திணித்துக் கொள்ளாதீர்கள் என்றுகூட சொல்லக்கூடும்.
உண்மைதான், உள்ளே அத்துமீறி புகுந்து உங்களிடம் உரிமை கோரவில்லை. இதில் எங்களுடைய உரிமைக்கான குரல் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதைப் போலவே எங்களை திணித்துக் கொள்ளாத உங்களுடைய வரலாற்றுத் தளத்தில் எங்களுடைய இரத்தமும் சிந்தப்பட்டுள்ளது என்பதும் நிதர்சனமான, உங்களால் மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மையல்லவா!
எனவே அது ஏன்? எப்படி? என்ற உண்மையினை எங்கள் உணர்வுகளின், வலிகளின் வழியாக –
ட
14.12.1980 – மாலை சுமார் 4 மணி
கீழ்வெண்மணிக்குப் பக்கத்தில் உள்ள கிராமம்தான் அணக்குடி. அதுதான் இருஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடுவின் விரிந்து, பரந்த பண்ணை ராஜ்ஜியம் உள்ள ஊர்.
கடைசி அறுவடையும் முடிந்து விட்டது. பண்ணை வீட்டிலிருந்து, நெல் மூடைகள் அளந்து கட்டப்படும் இடத்திற்கு, எப்போதும் உடன்வரும் நாய் இல்லாமல் – ஜீப்பில் வராமல் – இரண்டு பக்கத்திலும் அடர்ந்த இலுப்பை மரங்கள், நெடுக மண்டிக் கிடக்கும் கருவேலப் புதர்கள். சப்தமே இல்லாத அந்த சந்தைவேலித் தோப்பின் ஒற்றையடிப் பாதையில் இடது கை கக்கத்தில் ஒரு மஞ்சள் பையும், வலது கையில் குடையுமாக தனியாக நடந்து வந்து கொண் டிருந்தார் இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு.
அவர் நடந்து வந்து கொண்டிருந்த பாதையின் எதிரே நட்ட நடுவே நின்று கொண்டிருந்த ஓர் ஆள், அவர் போவதற்காக பவ்யமாக உடல் குனிந்து ஒதுங்க,
“ ஏன்டா இங்க நின்னு என்னா பண்ணிகிட்டு இருக்கே, முனிய மவந்தானே நீ?”
கழுத்துப் பக்கம் வலது கையை வைத்து சொறிந்து கொண்டே, “ஆமாங்கய்யா, ஒன்னுமில்லிங்க அய்யா, குருவிதட்டு போட்டுருக்கேன் அதாங் ..”
“இன்னியோட நிறுத்திக்க, இனிமே போடாதே, எல்லாத்தையும் ஏலம் உடப் போறேன்”
“சரிங்க அய்யா ”
பேசிக்கொண்டே முனியன் மகனை கடந்த நொடியில் எதிரே இரண்டு புதிய ஆட்கள் வருவதை அவதானித்து,
“யார்ரா ஆளுங்க புதுசா இருக்கு”
இரிஞ்சியூர் கோபாலகிருஷ்ண நாயுடு கேட்டு முடிப்பதற்குள், அவரின் இடது முதுகுப் பக்கத்திற்கு கீழே அடிவயிற்றில் முனியன் மகனின் வலது கையிலிருந்த கத்தி ஆழமாகப் பாய்ந்தது. கோபாலகிருஷ்ண நாயுடு சுதாரித்து திரும்பும்போது, எதிரே வந்த ஒருவரின் கையிலிருந்த கண்டரைக் கோடாரி பலமாகவும், ஆழமாகவும் அவரின் பின்னந்தலையில் இறங்க, மற்றொருவரின் கையிலிருந்த அரிவாள், நாயுடுவின் பின்னந்தலையில் மீண்டும் வெட்டி தோள்பட்டையில் இறங்கியது. தலையிலிருந்து உருவப்பட்ட கண்டரைக் கோடாரி அடுத்த நொடியே அவரின் அடிவயிற்றில் செருகி இழுக்கப்பட குடல் சரிந்து வெளியே எட்டிப் பார்க்கின்ற வேளையில், பக்கத்திலிருந்த கருவப்புதரிலிருந்து மேலும் இரண்டுபேர் அரிவாள்களுடன் வந்த வேகத்தில் அவரது இடது கால்தொடையில் வெட்ட, கட்டைவிரல் துண்டிக்கப்பட்டு சில நொடிகளில் அந்த இடம் இரத்தச் சகதியாக மாறிப்போனது.
நிலைகுலையும் நேரத்தில் சுதாரித்த கோபாலகிருஷ்ண நாயுடு ஒரு கையை நீட்டி எதிரே இருந்த ஒருவரின் கழுத்தை மடக்கிப் பிடிக்க, அவரிடம் மாட்டிக் கொண்டவரின் விழிகள் பிதுங்க, மற்றொரு கையால் குடையை சிலம்பம்போல ஒரு தேர்ந்த சிலம்பாட்டக் காரனாக சுழற்றத் துவங்கினார். அவருக்கு அருகில் மற்றவர்களால் நெருங்கக்கூட முடியவில்லை. என்ன செய்வது? நாயுடு மீது விழ வேண்டிய வெட்டும், வீச்சும் தங்களுடைய தோழர் மீது விழுந்து விட்டால்…? ஆனாலும் அரைகுறையாக விட்டுவிட முடியாதே..? எனவே துணிந்து நாயுடு மீது பாய, அவரின் பிடி தளர்ந்து, விலகி அப்படியே தியானம் செய்வது போல தரையில் உட்கார்ந்து கொண்டே உயிரின் வலியோடும், பயத்தோடும் கண்களால் கெஞ்சி கையெடுத்துக் கும்பிட்டு, “விட்டுருங்கடா….”
அவரைச் சுற்றி நின்ற அய்ந்து பேரின் மனக்காட்சியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு எரித்துக் கரிக்கட்டைகளாக்கப்பட்ட அந்த 44 மனித ஜீவன்களும் வந்துபோயின.
“உன்னைய விட்டுட்டா, இன்னும் எங்க வாழ்க்கை என்னாவுறது?”
அடுத்த நொடி அய்ந்து பேர்களின் ஆயுதங்களும் ஒருசேர வெட்டிக்குத்த, கோபால கிருஷ்ண நாயுடு தன்னுடைய இரத்தத்தால் சகதியான மண்ணில் முகம் மடங்கி சரிந்து விழுந்து முடிந்து போனார். அவர்கள் அய்ந்து பேரும் அமைதியாக இரத்தத்தில் கைதொட்டு புரட்சி முழக்கமிட்டனர். ஏனோ தெரியவில்லை, கீழே கிடந்த கோபால கிருஷ்ண நாயுடுவின் இடது கையிலிருந்த கடிகாரத்தை முனியன் மகன் பார்த்தபோது மணி (மாலை) 5.32. அவர்களிடம் பதட்டமில்லை. ஆனால், ஓர் அவசர உணர்வு தெரிந்தது. அதனால்தான் அவர்களால் நாயுடுவின் உடலை 44 துண்டுகளாக்கி, வெண்மணியில் தொடங்கி தலையை திருவாரூர் பஸ் ஸ்டாண்டில் வைப்பது என்ற திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. கைகளால் சிகப்பு நிறத்தில் எழுதப்பட்ட நோட்டீசை கோபாலகிருஷ்ண நாயுடுவின் உடல் மீது விசிறி எறிந்துவிட்டு அவர்கள் அய்ந்துபேரும் ஆயுதங்களைக் கழுவி எடுத்துக் கொண்டு லெட்சுமாங்குடி பக்கம், 10 நம்பர் பஸ் வந்தால் ஏறிவிடலாம் என்று நடக்கத் துவங்கினார்கள்.
“நடய்யாவைக் கொன்னுட்டாங்களாம்”
பொழுது சாய்ந்த பிறகுதான் கோபால கிருஷ்ண நாயுடு வெட்டிக் கொல்லப்பட்ட விசயம் வெளியே பரவியது. ‘இந்தக் காரியத்தை செஞ்ச புண்ணியவான் யாருடா?’. சப்தமில்லாத விசாரிப்பு. ஆனாலும் ஊருக்குள் என்ன நடக்குமோ என்ற பயத்தையும் மீறி, ஊர் முழுக்க முகத்தில் காட்டிக் கொள்ள முடியாத சந்தோஷம்.
ட
14.12.1980 – மாலை சுமார் 6.45 மணி
காவல்நிலையத்தில் அதிர்ச்சி. ஆனாலும் பதிவு செய்ய வேண்டுமல்லவா? கொலையுண்ட இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் தம்பி, கோவிந்தராஜ் நாயுடு நின்று கொண்டிருக் கின்றார்.
குற்ற வழக்கு எண் – 254/80
நடந்த தேதி – 14.12.1980, மணி மாலை 6.45
நடந்த இடம் – அணக்குடி, 10 கி.மீ தென்கிழக்கு
சட்டப் பிரிவு – இ.த.ச. 302
புகார்தாரர் — கோவிந்தராஜ் நாயுடு
த/பெ.வேணுகோபால் நாயுடு, செண்பக புரம்
இறந்தவர் – கோபாலகிருஷ்ண நாயுடு
த/பெ பெருமாள்நாயுடு, இருஞ்சூர்
குற்றவாளி(யின்) – பெயர், ஊர் தெரிய வில்லை
“14.12.80ம் தேதி, மாலை 6.45 மணி சுமாருக்கு இருஞ்சியூர் கோபாலகிருஷ்ணநாயுடு என்பவரை அடையாளம் தெரியாத சில நபர்கள், கழுத்து, தலை, வயிறு ஆகிய பாகங்களில் வெட்டி கொலை செய்ததாக, நான் நிலைய பொறுப்பில் இருந்தபோது, செண்பகபுரத்தில் குடியிருக்கும் வேணுகோபால் நாயுடு மகன் கோவிந்தராஜ் என்பவர் 6.45 மணி சுமாரில் காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த ரிப்போர்ட்” என்று காவல் நிலைய முதல் தகவல் அறிக்கையினை தலைமைக்காவலர் (எண் 666) பதிவு செய்கின்றார். வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டது.
(வெளிச்சம் தொடரும்)
(‘கீற்று’ இணையத்தளத்திலிருந்து)
நிமிர்வோம் பிப்ரவரி 2019 மாத இதழ்