கறுஞ்சட்டை அணிய வேண்டும் ஏன்? பெரியார்
மதுரை கறுஞ்சட்டைப் படை மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கறுஞ்சட்டைப் படைக்கு தமிழக அரசு தடை போட்டது. அது குறித்து பெரியார் விடுத்த அறிக்கை:
திராவிடர் கழகக் கொள்கைகளை விளக்கு முன்னால், கறுஞ்சட்டை ஸ்தாபனத் தின் மீது விதிக்கப்பட்டு இருக்கிறது என்னும் தடையுத்தரவு குறித்து சில கூற விரும்புகிறேன். நமது மாகாண சர்க்கார், கறுஞ்சட்டை ஸ்தாபனம் சட்டவிரோதமான ஸ்தாபனம் என்று பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள். அம்மாதிரி ஸ்தாபனமொன்றும் திராவிடர் கழகத்தின் சார்பாகவோ தனிப்பட்ட தன்மையிலோ இல்லை. ஆனால், ஒரு காலத்தில் பொதுக் கூட்டங்களின் போதும், மாநாடுகளின் போதும் தொண்டர்களாயிருந்து பணியாற்ற ஒரு கறுஞ்சட்டைக் கூட்டத்தை ஏற்படுத்துவது நலமென்று கருதி, ஒரு ஏற்பாடு செய்ய வேண்டு மென்று நினைத்து அறிக்கை விட்டோம். அதையொட்டி அக்கூட்டத்தில் இருந்து தொண்டாற்ற விரும்பும் தோழர்களைச் சில கேள்விகள் கேட்டோம். உங்களால் கழகத்துக்கு முழு நேரத்தை தொண்டாற்ற முடியுமா? அல்லது தேவைப்பட்ட நேரத்தில்தான் தொண் டாற்ற முடியுமா? என்று கேட்டோம். முழுநேரத் தொண்டர்களாயிருப்பதால் உங்களுக்கு ஏதாவது ஊதியம் வேண்டுமா? அல்லது உங்கள் வீட்டிலேயே சாப்பிட்டுக் கொண்டு தொண்டாற்றுவீர்களா? என்று பல தகவல்கள் கேட்டோம். அத்தகவல்கள் சரிவர வந்து சேருவதற்குள் நம் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, கறுப்புச் சட்டையை நம் இயக்கச் சின்னமாக்கி, சிலருக்கு அதை சில சமயங்களுக்கு அவசிய உடையாக்கிவிட்டு, திராவிடர்கள் யாவரும் பிறவி இழிவுக்காக அவமானப்படும், துக்கப் படும் அறிகுறியாக திராவிடர் கழகத் தோழர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் அனைவரும் கறுஞ்சட்டை அணிந்து கொள்ள வேண்டு மென்று வேண்டுகோள் செய்தோம்.
சட்டத்தில், சாஸ்திரத்தில், சம்பிரதாயப் பழக்கவழக்கத்தில், கோயில் முறையில், சாதி முறையில் நமக்கு இருந்துவரும் இழிவை எடுத்துக்காட்டினோம். அதன் அறிகுறிதான் கறுப்பென்றோம். அந்த இழிவு அழிக்க முயற்சி எடுத்துக்கொள்ளத் தீர்மானித்து விட்டோம் என்பதைக் காட்ட கறுஞ்சட்டை அணியுங்கள் என்றோம். யாராவது, ஏனப்பா கறுஞ்சட்டை அணிந்து கொள்கிறீர்கள்? என்று கேட்டால், நான் என்னமோ சட்டப்படி, சாஸ்திரப்படி சூத்திரனாம்; பார்ப்பானின் தாசி மகனாம்; அப்படி இருக்க எனக்கு இஷ்டமில்லை. அது எனக்கு அவமானமாக, துக்ககரமானதாக இருக்கிறது. அந்த இழிவை உணர்ந்திருக்கிறேன். அதைப் போக்கிக் கொள்ள முயற்சிப்பேன் என்பதன் அறிகுறியாக இதை அணிந்து கொள் கிறேன்; உனக்கும் அவமானமாயிருந்தால் அணிந்து கொள்; அப்படி உனக்கு மானமில்லை யானால் கறுப்புச் சட்டை அணிந்து கொள்ள வேண்டாம் என்று பதில் கூறும்படியும் தெரிவித்தோம்.
யாராவது, என்னடா, இழவுக்குப் போகின்றவன் மாதிரி கறுப்புடை அணிந்திருக் கிறாயே; அல்லது நீ என்ன திருட்டுப் பயலா? என்று கேலி செய்தால், இது ஒன்றம் அப்படி அல்லப்பா; இழிவு போக்கும் முயற்சியின் அறிகுறிதானப்பா இந்தக் கறுப்புச்சட்டை; கறுப்புடை அணிந்து கொள்வதற்காக என்னைச் சாவுக்குப் போகிறவன் என்றோ, திருடப் போகிறவன் என்றோ கூறினால், கறுப்புடை அணிந்து கோர்ட்டுக்குச் செல்லும் வக்கீல் எல்லாம் என்ன இழவுக்கா போகிறார்கள்? அல்லது, திருடத்தான் போகிறார்களா? கோர்ட்டில் கறுப்புடை அணிந்து நீதி வழங்கும் நீதிபதிகள், வெயிலுக்குக் கறுப்புக் குடை பிடித்துச் செல்வோர் பள்ளி ஆசிரியர் இவர்கள் எல்லாம் என்ன, இழவுக்குப் போகிறார்களா? கறுப்புடையணிந்து பட்டம் பெறும் பட்டதாரிகள் எல்லாம் என்ன, இழவுக்குப் போகிறார்களா? கறுப்புடையணிந்து பட்டம் பெறும் பட்டதாரிகள் எல்லாம் திருட்டுத்தனத் திற்காகவா பட்டம் பெறுகிறார்கள்? என்றெல் லாம் கேளுங்கள் என்று கூறினோம். அதைக் கேட்ட மக்கள் பெருவாரியாக கறுஞ்சட்டை அணிய ஆரம்பித்தனர். குறிப்பாக இளைஞர்கள் பலர் உற்சாகத்தோடு அணிந்து கொண்டனர். கறுப்புச் சட்டை அணிந்து செல்வதை ஒரு பெருமையாகக்கூடப் பலர் கருத ஆரம்பித்து விட்டனர்.
இதைக் கண்ட இழிவில்லாதவர்களும், மற்றவர்களை இழிவுபடுத்தி வாழுபவர்களுமான சுயநலக் கூட்டம் ஆத்திரப்பட்டு, இதை ஒழிக்க வேண்டுமென்று முயற்சித்தது. அதற்குக் கையாளாக இருக்கும் காங்கிரஸ் சர்க்கார் கறுப்புச் சட்டைப் படை ஒன்று இருப்பதாகக் கற்பனை செய்து தடை உத்தரவு போட்டு விட்டது.
உண்மையாகவே இது ஓர் படை அமைப் பாகுமானால் இதில் வயது முதிர்ந்த கிழவிகளும், சின்னஞ்சிறு குழந்தைகளும் சேர்ந்திருக்க முடியுமா? இன்று கறுப்புடை அணிந்திருக்கும் இத்தனை பேர்களுக்கும் இந்தப் படையில் இடமிருக்குமா? இவ்விழிவு நீங்க வேண்டு மென்று எத்தனை பேர் முன் வந்துள்ளார்கள் என்பதை மக்கள் அறிய வேண்டும்; அதன் மூலமாக இயக்கத்தின் உண்மைத் தன்மை மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் மேலும் மேலும் கறுஞ்சட்டை அணிந்து கொள்வதை வற்புறுத்தி வந்திருக்கிறோம். கறுப்புத் துணி தாராளமாய்க் கிடைத்திருந்தால் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கறுப் புடை அணிந்திருப்பார்கள். இந்தக் கறுஞ் சட்டைக்கு எந்த ஒரே ஒரு மாதிரியையும் குறிப்பிடவில்லை. யார் வேண்டுமானாலும் எந்த மாதிரிச் சட்டையை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் என்றும், பெண்கள் ஒரு இரவிக்கையாவது அணியட்டும் என்றும் கூறினோம்.
கறுஞ்சட்டை அணிபவர்களை யாருக் காவது தொல்லை கொடுக்கும்படியோ யாரையாவது துன்புறுத்தும்படியோ நாங்கள் கூறியது இல்லை. அவர்களை ஏதாவது ஒரு ஆயுதத்தையோ, தடியையோ, வேறு அறிகுறியையோ வைத்துக் கொள்ளும்படியும் நாங்கள் கூறியதில்லை. அவர்களைத் தெருவில் நிறுத்தி கவாத்துப் பழகும்படியும் நாங்கள் கூறவில்லை. அதற்கான பயிற்சியாளர்களோ, பயிற்சிக் கூடமோ நாங்கள் வைத்திருக்கவில்லை. எங்காவது மகாநாடுகள், பொதுக் கூட்டங்கள் நடத்த அழைக்கப்பட்ட தலைவருக்கு ஊர்வலம் நடைபெறுமானால், அங்கு கறுப்புடை அணிந்துள்ள தோழர்கள், சிறுவர்கள், தாய்மார்கள் யாவரும் ஒருவர்பின் ஒருவராக வரிசையாக நின்று ஊர்வலம் செல்வார்கள். ஒரு சில இடங்களில் உற்சாகத்திற்காக, வந்துள்ள தலைவர்களைத் தம்முடன் நிறுத்திப் போட்டோ எடுத்துக் கொள்வார்கள். தங்கள் ஊர்வலத்தைக் கறுஞ்சட்டைத் தொண்டர் ஊர்வலம் என்று பல மாதிரியாய்ப் பெயரிட்டு அழைப்பார்கள். இவ்வளவு தானேயொழிய இவர்கள் ஒருபோதும் பலாத்காரத்தில் இறங்கியதாகவோ, அல்லது எப்போதேனும் இவர்களுக்குப் பலாத்கார உணர்ச்சி ஊட்டப்பட்டதாகவோ யாராலும் கூற முடியாது.
சர்க்கார் கனவு கண்டிருக்கலாம், ஒரு தடையுத்தரவு பிறப்பித்து விட்டால் இவர்கள் ஆத்திரப்பட்டு ஏதாவது செய்வார்கள்; அதையே சாக்காக வைத்துக் கொண்டு திராவிடர் கழகத்தையே அடியோடு கலைத்து விடலாம் என்று. நாங்களென்ன மடையர்களா? நம் ஆட்களை நம்மவனையே கொண்டு அடிக்கச் செய்ய? தடையுத்தரவு பிறப்பிக்குமுன் உனக்கு அறிவிருந்தால் சிந்திக்க வேண்டாமா? இந்த இயக்கம் எத்தனை காலமாக இருந்து வருகிறது? இதுவரை எந்தெந்த இடத்திலாவது, சர்க்காருக்கு ஏதாவது தொந்தரவு கொடுத் திருக்கிறதா என்று?
நமக்கு வேண்டுமானால் சர்க்கார் எவ்வளவோ தொல்லை கொடுத்து இருக்கிறது. மதுரையில் நடந்த கறுஞ்சட்டை மாநாட்டின் போது சில காலிகளால் எங்கள் பெரிய பந்தலுக்கு பட்டப்பகல் 12.30 மணிக்குத் தீ வைக்கப்பட்டபோது ஜில்லா சூப்பிரண்டென்டு முதல் அதிகாரிகள், மாஜிஸ்ட்ரேட் அனை வருந்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள், ஒழுங்காகத் தீ மூட்டப்படுகிறதா என்று. கொஞ்சம் தடுத்திருந்தால்கூட அன்று ஒரு 50 ஆயிரம் ரூபாய் பொருள் சேதம் ஏற்பட்டிருக்காது. ஏனென்று ஆட்சியாளர்கள் கேட்டதுண்டா? ஏதோ விசாரணை ஒன்று தலைவர்கள் நடத்தினார்கள். அதன் முடிவு என்ன என்று கேட்டால், அது இரகசியம், சொல்ல முடியாது என்று கூறிவிட்டார்கள். சமீபத்தில் சங்கீத மங்கலத்தில் எங்கள் கழகத் தோழர்கள் காங்கிரஸ் காலிகளால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். போலீஸார்கூட தமது எப்.ஐ.ஆர். புத்தகத்தில் குற்றவாளிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர் என்றாலும், அவர்கள் மீது எதுவும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படவில்லை. சேலத்தில் சில காலிகளால் சோடா புட்டி வீசப்பட்டு எங்கள் தோழர் ஒருவருக்குக் கண்ணில் காயம்பட்டு 20 நாள் ஆஸ்பத்திரியில் கிடந்தார்; முடிவில் கண்ணை இழந்தார். அதற்காக நியூசன்ஸ் சார்ஜ் செய்து 2 ரூபாய் அபராதம் விதித்தார்கள். அண்ணாமலை காலேஜில் திராவிடர் கழக மாணவர்களை நடுச்சாமத்தில் போலீஸை வைத்துக் கொண்டு அடித்துப் புடைத்து, கடைசியாக அடித்தவர்கள் மீதுள்ள பிராதை வாபஸ் வாங்கிக் கொண்டு உதைப்பட்டவர்கள் மீது கேசு நடக்கிறது. வேறு எந்த மலைசாதி அரசாங்கமாவது இப்படிப்பட்ட கொடுங்கோல் ஆட்சி நடத்துமா? இவ்வளவையும் நாங்கள் பொறுத்துக் கொண்டுதானே வந்திருக்கிறோம்!
எங்கள் கழகத் தோழர்கள் சிலர் ஆத்திரப்படும்போதுகூட, ஆத்திரப்படாதீர்கள்; ஆத்திரப்பட்டால் இரண்டு கட்சியிலும் அடிபடுபவர் நம்மவராகததான் இருக்க நேரிடும்; ஆகவே, சமாதானமாக நடந்து காங்கிரஸ் திராவிடத் தோழர்களின் அன்புக்குப் பாத்திரமாகுங்கள் என்று தானே அவர்களுக்குச் சமாதானம் கூறி வந்திருக்கிறோம்! இதை யாராவது இல்லையென்று கூற முடியுமா? இந்த உண்மையெல்லாம் சர்க்காருக்குத் தெரியாமலா இருக்கிறது? அல்லது, எங்கள் நடத்தையாவது இதற்கு மாறுபட்டிருந்தது என்று யாராவது கூற முடியுமா? தெரிந்திருந்தும் ஏன் இந்த வீண் வேலை? கனம் சுப்பராயன் அவர்கள், ‘பலாத்காரத்தைக் கையாளாத யாரையும் நாங்கள் வீணாகத் தொல்லை கொடுக்கப் போவதில்லை’ என்று வானொலிப் பேச்சில் கூறினார் என்று கேட்டு அவருடைய நல்லெண்ணத்தில் நம்பிக்கைக் கொண்டு, அதற்காக அவரைப் பாராட்டி மெமோரியல் ஹாலில் பேசி விட்டு வீட்டிற்குப் போகிறேன்; அங்கு தந்தி வந்து சேருகிறது. திருவண்ணா மலையிலிருந்து கறுஞ்சட்டை போட்டுக் கொண்டு இருந்ததற்காகவும் கழகத்தில் அலுவலக கருப்புக் கொடியை இறக்காததற்காக வும், கழகத்துக்கு வந்து, ஆறு தோழர்கள் கைதி யாக்கப்பட்டு லாரியில் ஏற்றிச் செல்லப் பட்டார்கள் என்று. கைது ஏன்? சர்க்காருக்கு, மந்திரிக்கு, போலீசுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டுமென்றா அவர்கள் கருப்புக் கொடி பறக்க விட்டிருந்தார்கள்? எதற்காக அவர்களைக் கைதியாக்கி இருக்க வேண்டும்? எந்த அடக்கு முறைக்கும் சமாதானத்தோடு உட்பட்டு விடுவதுதானே எங்கள் வழக்கம்! இராஜகோபாலாச்சாரியார் ஆட்சியில்கூட நாங்கள் எதிர்வழக்குக்கூட ஆடியதில்லையே! அடக்கியே ஆள்வதென்று நீங்கள் தீர்மானித்திருந்தால் அதற்கு ஒரு முறை வேண்டியதில்லையா? இன்று நிர்வாகக் கமிட்டி கூட்டப் போவதறிந்து எத்தனை தோழர்கள் எனக்கு எழுதி இருந்தார்கள் தெரியுமா? ‘எதுவும் பயங்கொள்ளித்தனமாகத் தீர்மானித்து விடாதீர்கள்; உங்களுக்குப் பயமாயிருந்தால் சற்று விலகியிருந்தாவது, எங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள எங்களை அனுமதித்து விடுங்கள்’ என்று. இவற்றைக் கமிட்டி அங்கத்தினர்களுக்குக்கூட நான் படித்துக் காட்டவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? எப்படியும் சமாதானமாக, அமைதியாக நடந்து கொள்ள வேண்டுமென்று பார்த்தால் ஆட்சியாளர்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள்போல் இருக்கிறதே! இதுதானா காந்தி பேரைச் சொல்லிக் கொண்டு பதவிக்கு வந்த யோக்கியர்கள் நடத்தை? ஒரு கட்சியால் தங்கள் பதவிக்கு ஆபத்து நேரும் என்று கருதினால், அதை இப்படித்தானா காட்டிக் கொள்ள வேண்டும்? அதுவும், காந்தியாரைக் கொன்று கரைத்துவிட்ட ஒரு மாதத்திலேயா? இந்தப் பதவி என்ன சதமா? பதவி போன பிறகு மக்கள் முன் தலைகாட்ட வேண்டாமா?
காந்தியார் மறைவுக்கு நான் துக்கப் பட்டது, பெரும்பாலோருக்கு முதலைக் கண்ணீராகவே தோன்றியது; தோன்றினால் தோன்றட்டும். அவர் மறைவுக்கு இனிப்பு வழங்கிய மாபாதகக் கூட்டத்திற்கு வேண்டு மானால் அவர் செத்ததைப் பற்றிக் கவலை இல்லை; மகிழ்ச்சி கூட அடைந்தது. ஆனால் அவர் துர்மரணமடைந்த சேதியைக் கேட்டதும் எனக்குத் துக்கம் தாங்க முடியவில்லை; தலைவலி வந்துவிட்டது; என்ன செய்கிறேன் என்பதுகூட புரியாமல் நெடுநேரம் 15 சதுரமுள்ள அறையில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தேன். காரணம் என்னவென்றால் அவரிடம் அந்தரங்கத்தில் எனக்கு இருந்த பற்றுதல், அவர் கொள்கைகளில், உழைப்பில் இருந்த நலன்கள்; அப்படிப்பட்டவருக்கு இதுதானா கூலி என்ற மனவேதனை ஆகியவைகளே. அவருடைய முறையில் வேண்டுமானால் அபிப்பிராய பேதம் பலமாக இருந்தது உண்டு. ஆனால், அவருடைய முக்கியக் கொள்கையில் அதாவது, சத்தியம், அஹிம்சை, அன்பு ஆகியவைகளில் அபிப்பிராய பேதம் இல்லையே! அதற்காக மனம் பதறி விட்டது. இப்போது இங்குள்ள நமது மந்திரிகளிடத்தும் கூடத்தான், எனக்கு ரொம்ப வருத்தம் ஏற்பட்டிருக்கிறது; இவர்கள் மீது ரொம்பவும் கோபம் கூடத்தான்; பணமும் அதிகாரமும்தான் இவர்கள் இலட்சியமாய் இருந்திருக்கிறதே தவிர இன உணர்ச்சி, மான உணர்ச்சி இல்லையே என்று.
என் மனம் பதறாதா? என்ன இருந்தாலும் ஒரு திராவிட முதன் மந்திரியார் கூடவா கேவலம் பதவிக்காக இப்படி ஓர் உத்தரவை அனுமதிப்பது என்னும் கோபந்தான். என்றாலும், அவரை ஒரு வைத்தியநாதய்யர் போன்ற பார்ப்பனர் சுட்டுக் கொன்றார் என்றால் என்னால் சும்மா இருந்து விட முடியுமா? கனம் சுப்பராயன், நம்மவராக இருந்தும் எங்கள் மீது தடையுத்தரவு பிறப்பித்து விட்டாரே என்று கோபம் எனக்கு எவ்வளவுதான் இருந்தாலும் அவரை ஒரு வரதாச்சாரி கொன்று விட்டார் என்றால் என் மனம் பொறுக்குமா? என்ன இருந்தாலும் நமது காமராஜ் கூடவா இதைத் திருத்தக் கூடாது என்று எனக்கு அவர் மீது வருத்தமிருந்தாலும், அவரை ஓர் கோட்சே கொன்றுவிட்டான் என்றால் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? இயற்கையாகவேனும் ஆத்திரம் வராமல் இருக்குமா? இது நரசிம்ம ராஜ்யமா? இப்படிப்பட்ட நம்மைப் போய் எதிரிகளாய்ப் பாவித்துச் சட்டமியற்றுவது நியாயமா? ஒரு திராவிடனுடைய பண்பு இதற்கு இடங் கொடுக் கலாமா என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!
எதற்காக எங்கள் தோழர்களைக் கைதியாக்க வேண்டும்? எதற்காக நாங்கள் கறுஞ்சட்டை அணியக் கூடாது? எதற்காக எங்கள் கொடிகளை நாங்கள் பறக்கவிடக் கூடாது என்று தெளிவாகவாவது ஆட்சி யாளர்கள் கூற வேண்டாமா? எழுத்துரிமை உண்டு; பேச்சுரிமை உண்டு என்று பிரமாதமாய்ப் பேசப்படும் இக்காலத்தில் எங்களுக்குப் பிடித்தமான சட்டையை அணிந்து கொள்ளவும், எங்களுக்குப் பிடித்தமான கொடியைப் பறக்கவிடவும், எங்களுக்குள்ள இழிவை எடுத்துக் கூறி சமாதான முறையில் எங்கள் சமூகத்தைச் சீர்திருத்தம் செய்து கொள்ளவும், அதற்கான பிரச்சாரம் செய்யவும் கூடவா எங்களுக்கு உரிமை இருக்கக் கூடாது? இது என்ன தூண் மறைவிலிருந்து வந்து வயிற்றைக் கிழித்த நரசிம்ம ராஜ்யமா? மரத்தின் மறைவிலிருந்து வாலியைக் கொன்ற ராமராஜ்யமா? நாங்கள் உங்கள் ஆட்சியைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறோமா? அல்லது உங்கள் பதவிக்கு ஆபத்து விளைவிக்கவாவது நாங்கள் பாடுபடுகிறோமா? எங்களுக்குத் தெரியுமே, அரசியலைக் கைப்பற்றுவதாலும் மந்திரி பதவியைப் பெறுவதாலும் எங்கள் கொள்கைகள் வெற்றியடைய முடியாதென்று! நாங்களே ஆட்சியில் அமர்ந்தால்கூட இன்றைய மக்கள் நிலையில், நீங்கள் செய்த அளவுக்குச் சீர்திருத்தம் செய்வதுகூட எங்களுக்குக் கஷ்டமாயிருக்கலாம். ஏனென்றால், பார்ப்பனர் பாமர மக்களைத் தூண்டி விட்டுக் காலித்தனம் செய்விப்பார்கள். ஆதலால், உங்களைச் சீர் திருத்தம் செய்யவும், உங்கள் சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஆதரவைத் தேடிக் கொடுக்கவும், நீங்கள் செய்யாமல் விட்டுவிடுவதை உங்களுக்கு ஞாபகப்படுத்துவதுமான இவற்றிற்காகத்தானே எங்கள் கழகத்தின் கொள்கைகளைக் கண்டிக்கும் போதுகூட நாங்கள் பேசாமல் இருந்துவர வேண்டியிருக்கிறது.
மதுரை, சேலம் சம்பவங்களுக்குப் பிறகு எங்கள் தோழர்கள் அதற்காக மந்திரிகளைப் பகிஷ்கரிக்கும் முறையில் கருப்புக் கொடி பிடிக்க வேண்டும் என்று கருதியபோதுகூட, நான் அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லையே! இக் காரணங்களால் நானும் ஓமந்தூராரும் இரகசியமாக ஏதோ ஒரு பொது இடத்தில் சந்திக்கிறோம் என்ற வதந்திகூடப் பரவி விட்டிருக்கிறதே! ஓமந்தூரார் மந்திரியான பிறகு நான் ஒருமுறைக்கூடப் பார்த்ததில்லை. அவர் என்னுடைய பழைய நண்பர்தான்; நாணயஸ்தர் என்ற போதிலும்கூட. சேதி போக்குவரத்துக்கூட நான் வைத்துக் கொண்டதில்லை. மந்திரிகள் யாரிடத்திலும் எனக்கு எவ்விதப் பேச்சும் நடந்ததில்லை என்றாலும், ஒரு பெரிய சி.ஐ.டி. உத்தியோகஸ்தர் என்னிடம் வந்து ஏதோ பேசிவிட்டு, ஓமந்தூராரும் நீங்களும் சந்தித்துப் பேசியதுண்டா? என்று கேட்டுச் சென்றார். என்னுடைய ஒரு சிறந்த நண்பர்கூடச் சொன்னார். அதாவது ஒரு பொறுப்புள்ள பத்திரிகை ஆசிரியர் தன்னை இவ்விதமே கேட்டதாகவும், அதற்குத் தாம் விசாரித்துத் தெரிவிப்பதாகப் பதில் சொன்னதாகவும், இவ்வளவு சந்தேகம் எழுந்துவிட்டது அக்கிரகாரத்திற்கு இன்றைய ஆட்சியின் மீது! ஓர் ஆரியப் பத்திரிகையே எழுதுகிறது, ‘ஈரோட்டு ராமசாமியாவது நாஸ்திகம் பேசித் தொல்லைக் கொடுகிறான்; ஆனால் ஓமந்தூர் ராமசாமியோ விபூதி பூசிக் கொண்டே தொல்லை கொடுக்கிறான்’ என்று; அவர் களுக்குள் அவ்வளவு பற்றி எரிகிறது. அதைத் தணிக்க, பார்ப்பனரிடம் நல்ல பேர் வாங்க, ஆட்சியாளர்கள் ஏதோ நம்மீது அடக்கு முறையை ஏவி இருக்கின்றனர்; இதுதான் இன்றைய நிலை. ஆகவே, நாம் கொடுத்த தொல்லை அல்ல இன்றைய தடையுத்தரவுக்குக் காரணம். அக்கிரகாரம், அரசியலாருக்குக் கொடுத்த தொல்லைதான் இன்றைய இந்த விபரீத விளைவுக்குக் காரணம். இதற்கு இனி நீங்கள்தான் பதில் கூறவேண்டும்.
இழிவுக்கு வெட்கப்படும் மக்களுக்கு இங்கு இடமில்லை; காட்டுக்கு ஓடிப் போங்கள் என்று கூறினாலும் ஓடத்தான் நாங்கள் தயாரா யிருப்போமே யொழிய, இழிவைப் பொறுத்துக் கொண்டு இனியும் இன்னல் வாழ்வு வாழச் சம்மதியோம். ஏன் இந்த பட்டேல் தர்பார்? எந்த நாட்டில் எந்த சர்க்கார் ஆட்சிக்கு வந்த போதிலும், அந்த சர்க்கார் தன் சொந்த நன்மைக்காகவேனும் ஒரு எதிர்க்கட்சியை வைத்திருப்பது, அதற்கு மரியாதை காட்டி வருவது இயற்கை. அந்த எதிர்க்கட்சி எங்கு தம் கட்சியை அழித்து விடுமோ என்று கருதும்படியான அளவுக்குச் செல்வாக்குப் பெறுமானால், அதை ஆட்சியில் உள்ள கட்சி அழிக்கப் பார்ப்பதும் இயற்கை.
ஆனால், ‘நாமோ ஒரு அரசியல் கட்சி அல்ல’ என்று தெளிவாகக் கூறியிருக்கிறோம். ‘தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ என்றுகூடக் கூறி வந்திருக்கிறோம். அதன்படியே தேர்தல்களில் கலந்து கொள்ளாமலும் இருந்து வந்திருக்கிறோம். அப்படியிருந்தும், ஆட்சி யாளர்கள் நம்மை அழிக்கப் பார்க்கின்றனர்; அதுவும் அக்கிரமமான முறையில் நம்மை அடக்கப் பார்க்கின்றனர் என்றால், இந்நாட்டில் பார்ப்பனர் மனம் கோணும்படி எவனும் மூச்சுவிடக் கூடாது என்கின்றது ஆரியக் கட்சி. நாங்கள் என்ன உங்களிடமிருந்து பிரிந்திருக்கவா விரும்புகிறோம்? பிரிந்து நிற்கும் காங்கிரஸ் திராவிடத் தோழர்களை, கம்யூனிஸ்ட் திராவிடத் தோழர்களை, சமதர்மத் திராவிடத் தோழர்களை எல்லாவற்றிலும் உள்ள திராவிடரையும் தான் அழைக்கிறேன். நீங்கள் அனைவரும் தானே 4-ம் சாதிக் கீழ்மக்கள்? உங்களுக்கு ஆசையில்லையா, இந்த இழிவு நீங்க வேண்டும் என்று? உங்களுக்கு அவமான மில்லையா, இப்படித் தாழ்த்தப்பட்ட மக்களாய் இருப்பது? நீங்கள் அவைரும் எங்களோடு சேர்ந்து இந்தப் பிறவி இழிவு நீங்க ஒத்துழைத்தால் அதிக நாள் இருக்க முடியுமா இந்த சாதி உயர்வு, தாழ்வுகள்? உங்கள் கொள்கைகளாவது ஒப்புக் கொள்கின்றனவா – இப்படிப்பட்ட பேதா பேதத்தை? அப்படியிருக்க ஏன் உங்களுக்குத் தயக்கம், இந்த ஒரு காரியத் திலாவது எங்களோடு சேர்ந்து பணியாற்ற?
எங்கள் கருத்துப்படிதான் நீங்கள் நடக்க வேண்டுமென்பதில்லையே; நீங்கள் ஒரு மார்க்கம் கூறுங்களேன். இந்த இழிவு நீங்குவதற்கு? அதை நாம் எல்லோருமாகச் சேர்ந்து பின்பற்றுவோமே! ‘இழிவு நீங்க வேண்டும்; இழிவு நீங்க வேண்டும்’ என்று வாயால் கூறி வருவது மட்டும் போதுமானதாகி விடுமா? பேசிக் கொண்டே இருந்தால் காரியம் எப்போது முடிவது?
கிடைத்துள்ள சுயராஜ்யம் என்பதை நம் மக்கள் ஒவ்வொருவருக்கும் பயன்படும்படி நாம் செய்ய வேண்டாமா? ஆகவேதான் நான் கேட்டுக் கொள்கிறேன், திராவிடர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் இனியாகிலும் அனைவரும் ஒன்று சேர்ந்து – ‘நாங்கள் இனி இழி மக்களல்லர்’ என்று கூற வேண்டுமென்று. ஏற்கனவே கறுப்பு அறிகுறியாக ஆக்கப்பட் டிருப்பதால் இழிவுக்காகக் கறுப்புடை அணிந்துள்ள மக்கள் மற்றவர்களையும் அணியச் செய்யுங்கள். இதுவரை கறுப்புடை அணியாத மக்களும் தயவுசெய்து விரும்பி அணியுங்கள். யாரோ ஒரு சிலர் அணிந்திருந்தால் தானே சர்க்கார் பயமுறுத்தும்? அனைவரும் அணிய ஆரம்பித்து விட்டால் அப்புறம் சர்க்கார் யாரைப் பயமுறுத்த முடியும்?
நான் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்வது ஆங்காங்குள்ள சட்டசபை மெம்பர்களின் யோக்கியதையை அம்பலப் படுத்தி விடுகிறது. அதற்குப் பதில் கூற முடியா மல் சங்கடப்படுகிறார்கள்; அந்த மெம்பர்கள் தாம் என்மீது ரிப்போர்ட் அனுப்புகிறார்கள். இவன் வந்து இப்படியெல்லாம் பேசிவிட்டுப் போகிறானே; நாங்கள் எப்படி மானமின்றிச் சட்டசபையில் கைதூக்குவது என்று. காங்கிரஸ் வண்டவாளத்தை எல்லாம் இவன் வெளுத்து விட்டபின், நாங்களெப்படி மறு எலக்ஷனில் நிற்பது என்று கவலைகொண்டு, இதைத் தடுக்கும்படி ஆட்சியாளரைக் கேட்டுக் கொள்கிறார்கள். இச் சட்டசபை மெம்பர்கள் தொல்லைக்காவது அரசியலார் ஏதாவது செய்தே தீர்வார்கள். என்ன செய்வார்கள் பாவம்? நாம் கூட்டங்கள் நடத்த முடியாமல் இருக்க ஏதாவது செய்வார்கள்; விரைவில் என்னைக் கைது செய்தாலும் செய்வார்கள். செய்தால் நீங்களென்ன செய்யப் போகிறீர்கள்? ஜெயிலை இடித்துச் சிறை மீட்கப் போகிறீர்களா? அதெல்லாம் மகா மகா முட்டாள்தனம். என்னைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றால் நீங்கள் அந்தப்பக்கம் கூட, ஒருவர் கூட வரக் கூடாது. பின் என்ன செய்ய வேண்டும்? அதற்காக வருந்தும் ஒவ்வொருவரும் கறுப்புச் சட்டை அணிந்து கொள்ள வேண்டும்; உங்கள் தோழர்களையும் கறுப்புச் சட்டை அணிந்து கொள்ளும்படிச் செய்ய வேண்டும்; வீதியில் போகிறவர்களில் 100க்கு 10 பேராவது கறுப்புச்சட்டை அணியுமாறு செய்ய வேண்டும். இப்போதே இப்படிச் செய்தால்கூட அரசியலார் மேலால் நடவடிக்கை எடுக்கப் பயப்படுவார்கள்; உடனே இழிவு நீக்க அவசியம் ஏதாவது செய்வார்கள். கிராமந்தோறும் கறுஞ்சட்டை பரவ வேண்டும். இன்னும் பல கருத்துகள் அதில் அடங்கி இருக்கின்றன. எல்லோரும் கறுப்புச் சட்டை அணிய ஆரம்பித்தால், மற்றவை தாமாகவே நடக்கும்.
ஒவ்வொருவரும் கிராமப்புறத்திற்குப் போக வேண்டும். சாதி மத பேதங்கள் இருப்பது நியாயமா? பிராமணன் என்றும் பஞ்சமன் என்றும் உயர்வு தாழ்வு இருப்பது நியாயமா? இவ்வுயர்வு தாழ்வு நீக்க முயற்சியின் அறி குறியாகக் கறுஞ்சட்டையணியும் தோழர்களைச் சிறை செய்வது நியாயமா? தனக்குள்ள குறைபாட்டின் அறிகுறியாகக் கறுஞ்சட்டை அணிந்து கொள்ளக்கூடவா இன்றைய சர்க்காரில் உரிமையில்லை? தோழர்களே சிந்தித்துப் பாருங்கள். இழிவுக்கு அவமானப் படும் நீங்களும், இழிவினால் துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் நீங்களும் கறுப்புச்சட்டை அணிந்து கொள்ளுங்கள்! என்று சாந்தமாய், சமாதானமாய் எடுத்துச் சொல்லுங்கள். அமைதியையும், பொறுமையை யும் பரப்புங்கள்; பட்டிதொட்டிதோறும் கறுப்புச் சட்டையைப் பரப்புங்கள்; கறுப்புத் துணியும், கறுப்புச் சட்டையும் எடுத்துச் சென்று விற்பனை செய்யுங்கள். அப்போதுதான் தெரியும், நம் கொள்கைகளுக்கு மரியாதை செய்கிறவர்கள் எவ்வளவு பேர் என்பது. இதுவே நமது தோழர்களின் முக்கிய வேலையாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
‘விடுதலை’ 11.03.1948
நிமிர்வோம் ஜனவரி 2019 மாத இதழ்