பாரதியின் பார்ப்பனியம்: பெரியார் எழுப்பிய கேள்விகள் செ. கார்கி
‘இந்துத்துவா’ ஒற்றைப் பண்பாட்டைப் பார்ப்பனியம் இந்தியாவின் பண்பாடாக்க முயலுவதும் இந்தியாவின் தேசியக் கவி பாரதி என்ற ஒற்றை மனிதரை உயர்த்திப் பிடிப்பதும் சாராம்சத்தில் ஒன்று தான்.
பாரதியின் இரட்டை வேடத் துக்குள் பதுங்கி நின்ற பார்ப்பன மேலாண்மையை பெரியார் அம்பலப் படுத்தியதை பெரியார் மொழியிலேயே விளக்குகிறார், கட்டுரையாளர்.
வழக்கம் போல இந்தாண்டும் பார்ப்பன பாரதியின் பிறந்த தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வழக்கம் போல பாரதியின் அருமை பெருமைகளை எல்லாம் ஊருக்கு உபதேசம் செய்தனர். பள்ளிகளில் ஒட்டு மீசையும், முண்டாசும் அணிந்து பாரதியார் வேடமிட்ட குழந்தைகள் மனப்பாடம் செய்து வைத்திருந்த ஒரிரு பாரதியின் பாடல் வரிகளை ஒப்புவித்து பிற்போக்குவாதிகளை திருப்திப் படுத்தினர். இது எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சடங்கு போல தமிழ்ச்சமூகத்தில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் ஆகும். எப்படி என்ன காரணத் திற்காக பண்டிகைகள் கொண்டாடப்படு கின்றன என்பது தெரியாமலேயே கோடிக் கணக்கான மக்கள் அவர்களின் தன்மானத் திற்கும், சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்படுத்தும் பண்டிகைகளை கொண்டாடுகின்றார்களோ அதே போலத்தான் பாரதியின் பிறந்த தினமும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இப்போது பாரதியின் பிறந்த தினத்தை கொண்டாடுவது போன்றே பெரியாரின் காலத்திலும் பாரதி பிறந்த தினத்தை பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும் கொண்டாடிய போது அவர்களைப் பார்த்து பெரியார் கேட்டார் “நம் தமிழ்நாட்டில் சமீபத்தில் பாரதியின் தினத்தை பல இடங்களில் கொண்டாடினார்கள். அப்பொழுது அவரை ஒரு தெய்வமாக பாவித்து அவருடைய படத்துக்கு மாலை போட்டுத் தூபதீப நைவேத்தியங் கூடச் சிலர் செய்தார்கள். இப்படியெல்லாம் செய்வதற்குப் பார்ப்பனரின் சூழ்ச்சி பிரசாரமும் பொதுமக்களின் குருட்டுத் தனமான முட்டாள் நம்பிக்கையுமே காரண மென்றும் மற்றபடி இவர்கள் பாரதியைப் பற்றியோ அல்லது அவருடைய பாடல்களைப் பற்றியோ அறிந்து கொண்டாடப்பட்டதல்ல.” என்றார்.
பெரியார் கூறுகிறார்:
“…… அவரைப் பாமர மக்கள் புகழ்வதற்குக் காரணம் அவர்களுடைய மூடப்பழக்க வழக்கங்களை வளர்க்கத்தக்கதாகவும் மனு நீதியை உயிர்ப்பித்து நிலைநாட்டக் கூடியதாக வும் அவருடைய பாடல் இருப்பதே ஆகும். எப்படியென்றால் இதிகாசம், புராணம், வேதம், சாஸ்திரம் முதலியவைகளை அப்படியே தழுவி அவைகளில் அடங்கியிருக்கும் விஷயங்களை இக்காலத்து தேவைகளை அதில் கலக்கி அதற்குத் தகுந்தாற்போல வேஷம் மாற்றிக் காட்டி அவர் பாடல் செய்திருப்பதேயாகும். மனு ஆட்சி எப்படியாவது ஏற்படவேண்டும் என்று பார்ப்பனர்கள் இரவும் பகலும் கனவு கண்டு கொண்டிருக்கும் பொழுது அதற்கு உதவியாக எழுதப்பட்டிருக்கும் பாடல்களைப் பார்ப் பனர்கள் கைநழுவ விடுவார்களா?” என்றார்.
மேலும் பாரதியின் கீழ்த்தரமான ஒழுக்கத்தை யும், போலி முற்போக்கு வேடத்தையும் அம்பலப் படுத்தினார். “பாரதி அநேக பாடல்களைக் குடிவெறியில் பாடியிருக்கிறாரே தவிர நிதான புத்தியோடு பாடவில்லை என்று சுலபத்தில் அறிந்து கொள்ளலாம். பெண்களைப் பற்றி வானமளாவப் புகழ்ந்து பல பாடல்கள் செய்திருக்கிறார். ஆனால் பெண்களைப் பற்றி அவருடைய அந்தரங்க சுத்தியான அபிப்பிராயம் மிகக் கேவலமானது என்பது அவரது கிளிக் கண்ணியில் “பெண்களின் கூட்டமடி” என்று தன்னை மறந்து உண்மையைக் கக்கியிருப்பதி லிருந்து தெரிகிறது.”
“பார்ப்பனரைப் பற்றி பாரதியின் உண்மையான அபிப்பிராயம் என்னவென்றால் பார்ப்பனரே உயர்ந்த வகுப்பினரென்றும் இந்தியா அவர்களுக்குச் சொந்த சொத்து என்றும் அவர்களுடைய ஆரிய பாஷையே உயர்ந்ததென்றும் கருதியே வந்திருக்கிறார் என்பதுதான். பார்ப்பனரின் நிலைமை உயர வேண்டுமென்பதே அவருடைய நோக்க மென்றும் தெரிகிறது. இதற்கு மாறாக அவரைப் பற்றி நினைத்துக் கொள்ள ‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே,’ ‘தமிழ் மொழி போல் எங்கும் காணோம்’ என்று சொல்லப் படுமானால், இப்பாட்டுகள் போல் எங்கோ அங்கொன்றும் இங்கொன்றும் எடுத்துக்காட்ட முடியுமே தவிர, அதிகமில்லையென்றும், அப்படி இரண்டொன்று பாடியிருப்பதும் கூடக் குடிவெறியென்றும் தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர் அபின், கஞ்சா, சாராயம் முதலியவைகளைச் சர்வ சாதாரணமாகவே உபயோகப்படுத்தி வந்திருக்கிறார்……”
எந்த ஒரு கருத்தையும் ஆதாரம் இன்றிப் பேசும் பழக்கம் பெரியாருக்கு கிடையாது. அவர் புராணங்களை அம்பலப்படுத்தும்போதுகூட எந்த நூலில் இது போன்று சொல்லப்பட்டிருக் கின்றது என்பதை தெளிவாக குறிப்பிட்டு பார்ப்பன அடிமைகளை விழிபிதுங்க செய்து விடுவார். அது போலவே தான் பாரதியைப் பற்றிய தன்னுடைய விமர்சனத்தையும் ஆதாரப் பூர்வமாகவே செய்தார். பாரதியின் பாடல் வரி களில் இருந்தே அவரை அம்பலப்படுத்தினார். அது எல்லாம் கீழே தரப்பட்டிருக்கின்றது.
வந்தேமாதரம்- ஆரிய பூமியில்.
பாரத நாடு-யாகத்திலே தவ வேகத்திலே.
நாட்டுவணக்கம்- துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்தது மிந்நாடே.
பாரத தேசம்- மந்திரங் கற்போம், வினைத் தந்திரங் கற்போம்.
தொழில்-பிரம்மதேவன் கலையிங்கு நீரே விண்ணனின்று எமை வானவர் காப்பார்.
எங்கள் நாடு-என்னரு முபநிட நூல்கள் எங்கள் நூலே; உன்னத ஆரிய நாடெங்கள் நாடே.
வந்தே மாதர மொழிபெயர்ப்பு-காலமெல் லிதழ்களிற் களித்திடுங் காலை நீ.
எங்கள் தாய்-நாவினில் வேதமுடையவள், வெண்மை வளரிமையாசலந் தந்த விறன் மகளாமெங்கள் தாய்.
பாரதமாதா- முன்னையிலங்கை அரக்கர் அழிய, ஆரிய ராணியின் சொல், ஆரிய தேவியின் தோள், போர்க்களத்தே பரஞானமெய்க் கீதை.
திருப்பள்ளியெழுச்சி-தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன.
தசாங்கம்- ஆரிய நாடென்றே யறி
நவரத்தினமாலை- ஆணிமுத்துப் போன்ற மணி மொழிகளாலே(சமஸ்கிருதம்)
மகாத்மாவின் துவஜம்:- ஆரியக் காட்சி ஓர் ஆனந்தமன்றோ, செந்தமிழ்நாட்டுப் பொருநர்-கொடுந்தீக்கண் மறவர்கள், சேரன்றன் வீரர், சிந்தை துணிந்த தெலுங்கர்-தாயின் சேவடிக் கேயணி செய்திடு துளுவர். (ஆரியருக்கு அடிமைகள்)
லஜபதிராய்- ஆதிமறை தோன்றிய நல்லாரிய நாடெந்நாளும் நீதி மறைவின்றி நிலைத்த திருநாடு, ஆரியர்தம் தர்ம நிலை ஆதரிப்பான், ஆரியர் பாழாகா தருமறையின் உண்மைதந்த.
திலகர்:- அன்போடோதும் பெயருடைய ஆரியன்.
கிருஷ்ணன் துதி:- எண்ணரும் புகழ்க் கீதை யெனச் சொலும், எங்கள் ஆரிய பூமியெனும்.
கிருஷ்ணன் ஸ்தோத்திரம்:- ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே, ஆரிய நீயுநின் துறமறந்தாயோ, வெஞ்செயல் அரக்கரை வீட்டிடுவோனே வீரசிகாமணி, ஆரியர் கோனே.
ஆங்கிலப் பயிற்சி:- அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கிங் கருவருப் பாவதை, இயல்புணர்த்திய சங்கரனேற்றமும், பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள், நாட்டுக்கல்வி-மந்திர வேதத்தின் பேரொலி.
தமிழ்த்தாய்:- உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் (சமஸ்கிருதமே உலகில் சிறந்த பாஷை என்பது கருத்து).
புதுவருஷம்:- ஆரிய நாட்டினர் ஆண்மை யோடியற்றும். (பெரியார் எழுத்து பேச்சுத் தொகுப்பான ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்’- தொகுதி 3-ப எண்:
274-276).
இதற்கு மேல் யாரும் பாரதியின் உச்சிக் குடுமியை பிடித்து முச்சந்தியில் வைத்து அம்பலப்படுத்த முடியாது. இருந்தும் என்ன பயன்? மானமற்ற மனிதர்களிடம் ஆயிரம் பேர் பேசினாலும் அதனால் பயன் எதுவும் ஏற்படப் போவதில்லை என்பது போலத்தான் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சாதிய சனாதன தர்மத்தையும், பார்ப்பனியத்தையும் தூக்கிப் பிடிக்கும் இல.கணேசனுக்கும் பாரதியை பிடித்திருக் கின்றது, அடிப்படையில் மனிதகுல விரோதமான சாதியையும், மதத்தையும், இயக்கவியல் கண்ணோட்டத்தில் இருந்து அணுகி அதை ஒழித்துக்கட்ட களத்தில் போராட வேண்டிய சில பொதுவுடமை வாதிகளுக்கும் பாரதியை பிடித்திருக்கின்றது. பிற்போக்குவாதியும் முற்போக்குவாதியும் ஒரே நபரின் கருத்தால் பீடிக்கப்படுகின்றார்கள் என்றால் அடிப்படையில் முற்போக்குவாதி களின் சிந்தனையில் பிற்போக்குதனத்திற்கு ஆதரவான சமரச மனநிலை வேர்கொண்டு விட்டது என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.
பெரியார் பாரதியை தீவிரமாக எதிர்த்தார், அவரைவிட எல்லாவகையிலும் எழுத்தாற்றலும், சிந்தனையாற்றலும் கொண்ட தமிழர்கள் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டு அதற்காக உழைத்தாலும்கூட அவர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கவில்லை என்பதை ஆதங்கத்தோடு வெளிப்படுத்தினார். “தமிழ் மொழிக்களஞ்சியங்களான ’மாணிக்க வாசகர் காலம்’ எழுதிய காலஞ்சென்ற மறைமலை அடிகள், பெரிய புராணத்திற்குப் புது உரை எழுதிய திரு.வி.கல்யாணசுந்தரம் முதலியார் வாழ்வில், முக்கியத்துவத்தில் என்ன தரத்தில் இருந்து சென்றார்கள்? சைவத்தை நிலை நிறுத்திய மூட நம்பிக்கைக் களஞ்சியங்களாகத் தானே முடிவெய்தினார்கள்!.
காலம் செல்லாத (உயிர் வாழ்ந்து கொண் டிருக்கும்) இன்றைய தமிழ்க் களஞ்சியங்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், டாக்டர்கள் சிதம்பரநாதன் செட்டியார், மு.வரதராசனார், இராஜமாணிக்கனார் மற்றும் ஒரு டஜன் உருப்படிகளின் இன்றைய நிலை என்ன? அவர்களால் அவர்கள் ஒரு அளவுக்கு நன்றாய்ப் பிழைக்கின்றார்கள் என்பதைத் தவிர நாட்டிற்கோ, மனித சமுதாயத்திற்கோ என்ன பயன்? அன்னக்காவடி பஞ்சாங்கப் பார்ப்பான் மகன் ஆங்கிலம் படித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகிறான்!
பார்ப்பனரல்லாதார் என்கின்ற உணர்ச்சிப் போராட்டம் இல்லாதிருந்தால் இந்த மேதாவி டாக்டர்கள் ‘மகான்’ கள் நிலை இன்று எப்படி இருக்கும்? கிறுக்கன் பாரதிக்கு இருக்கிற மதிப் பில் நூற்றில் ஒன்று கூட இவர்களில் எவருக்கும் இன்று இல்லையே!” என்றார் பெரியார். (நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்-தொகுதி 1-ப எண்:590, 686).
பாரதிக்கு பார்ப்பன எதிர்ப்பு முகமூடி அணிவிக்க முயலுபவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் வரிகளான ‘பார்ப்பனரை அய்யரென்ற காலமும் போச்சே’ என்ற வரிகள் கூட பாரதியின் மனதில் உதிப்பதற்கு அன்றைக்கு இருந்த சுயமரியாதை இயக்கத்தின் செல்வாக்கே காரணம் என்பதை பெரியார் சுட்டிக்காட்டு கின்றார் (மேற்படி நூல் பக்கம்:337).
பாரதி உண்மையில் தமிழ் மக்களை எவ்வளவு இழிவாக நினைத்துக்கொண்டிருந்தார் என்பதை “…… தோழர் பாரதியார் சொல்வது போல் பழந் திராவிடத்தில் “ஆரியர் வரும்போது மனிதரு மல்லாத, குரங்குகளுமல்லாத இடைப்பட்ட காட்டுமிராண்டி ஜாதி ஒன்று இருந்தது. அதைத்தான் வால்மீகி குரங்கு என்றார்” என்று பாரதி சொன்னதை பெரியார் எடுத்துக் காட்டுகின்றார். (நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்-தொகுதி 2-ப எண்:305 ).
மேலும் பாரதியை பெரிய தேசிய கவியாக மக்களிடம் நம்பவைத்து அவரின் பாடல்களை புத்தகமாகப் போட்டு எப்படி பார்ப்பனர்கள் கொள்ளையடித்தார்கள் என்பதையும் அன்றே பெரியார் அம்பலப்படுத்தினார். “பாரதிப் பாடல் என்பதாக சில பாட்டுகள் காலம் சென்ற திரு. சுப்ரமணிய பாரதி என்கின்ற ஒரு பார்ப்பனரால் பாடப்பட்டிருந்தது. அவர் இறந்தவுடன் அவர் குடும்பத்தாருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு ஆதாரமாக அந்தப் பாடல்களைப் பற்றி பிரமாதமாக விளம்பரப்படுத்தி பொதுப் பணமாகிய காங்கிரஸ் பணத்திலிருந்து சுமார் ஆயிரம் ரூபாய் பாரதியின் பெண்ஜாதிக்கு தர்மமாகக் கொடுத்து அந்தப் புத்தகத்தை அச்சுப் போடும்படி சொல்லி ஒத்துழையாமை இயக்கத் தின் மூலம் அந்தப் பாட்டுகளை விளம்பரப் படுத்தி ஒவ்வொருவரையும் அதை வாங்கும்படி செய்யப்பட்டது.அந்தப் புத்தகம் சாதாரணமாய் இரண்டரையணா அல்லது மூன்று அணாவுக் குள் அடங்கக் கூடியதாயிருந்தும் புஸ்தகம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் விலை போட்டு ஏழைகள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. அது மாத்திரமல்லாமல் முதல் பாகம் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்பதாக அவர்கள் பணத்தாசைக்குத் தக்கபடியும் நம்மவர்கள் மூடத்தனத்திற்குத் தக்கபடியும் புதுப்புது பாகங்கள் வெளியாகிக் கொண்டே வந்தன. இவ்வளவு கொள்ளையை யும் சகித்துக் கொண்டே வந்தும் கடைசியில் அது தன் ஜாதிப் புத்தியை காட்டியேவிட்டது.
எப்படியென்றால்:- சாதாரணமாக அப் புத்தகத்தின் பேரால் சில பார்ப்பன குடும்பம் கொள்ளை அடித்ததை சிலர் பொறுத்துக் கொண்டு இருந்ததற்கு காரணமே அப்புத்தகத் தில் அவர் பார்ப்பனர்களை உயர்வாக சில இடத் தில் சொல்லியிருந்தாலும் சில இடத்திலாவது உண்மை பேசி இருக்கின்றார் என்ற எண்ணமே யாகும்.
மேலும் பாரதியின் பாடல்வரிகளில் பார்ப்பனர்கள் திருத்தம் செய்து மோசடி செய்ததையும் அம்பலப்படுத்துகின்றார் பெரியார். “ஆனால் இப்போது அதையும் கொஞ்சம் கொஞ்சமாய் திருத்த ஆரம்பித்து விட்டார்கள் எனத் தெரிய வருகின்றது. அதாவது பாரதி பாடல் முதற் பாகத்திலுள்ள பாட்டுகளில் ஒன்றான “மண்ணும் இமயமலை எங்கள் மலையே” என்னும் பாட்டின் அடிகள் “ உன்னத பாரத நாடெங்கள் நாடே” என்னும் வாக்கியம் ஒரு அடியாக இருந்து வந்தது. இது யாவருக்கும் தெரிந்ததேயாகும். இப்போதைய பதிப்புகளில் பாரத நாடு என்பதை எடுத்துவிட்டு “உன்னத ஆரிய நாடெங்கள் நாடே” என்று திருத்தி பதிக்கப்பட்டிருக்கின்றதாம். இம்மதிரியாகவே அதில் வேறு பல விஷயங்களும் சந்தேகிக்க வேண்டியதாகவே இருக்கின்றன (நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்-தொகுதி 3 -ப எண்:117).
அன்று பாரதியை தூக்கி வைத்துக் கொண் டாடிய ஒருவருமே இதற்கு எதிராக குரல் கொடுக்காமல் கள்ளமௌனம் காத்ததையும் பெரியார் சுட்டிக்காட்டுகின்றார் “……இந்த புஸ்தகம் அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்ட பொழுது வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்ட ‘யோக்கியர்’களின் கண்ணுக்கு இந்த மாதிரி அயோக்கியத்தனங்கள் சற்றும் தென்படாமலிருப்பது நமக்கு ஆச்சரிய மல்ல என்றாலும் நாட்டின் ‘தேச பக்தர்கள்’ யோக்கியதைக்கும் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்திற்கும் இதுவரை அவர்கள் இந்த மாதிரி எத்தனை புரட்டுகள் செய்து நம்மவர்களை கண்மூடி முட்டாள்களாக அடிமை கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும் முழு மூடர்களுக்கும் கூட உதராணம் வேண்டு மானால் இந்த ‘பாரதிப்பாடல் புரட்டே’ போதுமென்று நினைக்கின்றோம். (நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்-தொகுதி 3-ப எண்:118).
பாரதியின் பாடல்களில் திருத்தம் செய்தவர்களைக் கண்டிக்க துப்பில்லாதவர்கள் இறுதியில் பாரதியின் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு ஜஸ்டிஸ் கட்சியே காரணம் என்று பழியை தூக்கிப் போட தமிழ்நாடு பத்திரிகை முயன்றபோது “பறிமுதல் செய்யப்பட்ட ஸ்ரீசுப்பிரமண்ய பாரதியின் நூல்களில் ராஜீயத்தைவிட (அரசியலைவிட) பார்ப்பனீயமே மிகக் கடுமையாகக் கண்டிக்கப் பட்டிருப்பதால் அவை பறிமுதல் செய்யப்பட்ட தற்கு யார் காரணமா யிருந்திருக்கலாம் என்பதை அறிந்தும் அறியாதது போல ஜஸ்டிஸ் கட்சி யாரை “தமிழ்நாடு” (பத்திரிகை) தாக்குவதைப் பார்த்தால் அதைக் “கோடாரிக்காம்பு” என்று சொல்லுவதா அல்லது பழியோரிடம் இருக்க பாவத்தையோரிடம் சுமத்துகிறதென்பதா? (நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்-தொகுதி 3-ப எண்:99).
தமிழர்களின் பெருமைமிக அடையாளமாக விளங்கிய வள்ளுவர், தொல்காப்பியர், அவ்வையார் போன்றவர்களை பார்ப்பனியம் கொச்சைப்படுத்தியதையும், பார்ப்பனியத்துக்கு சேவை செய்த பாரதிக்கு மண்டபம் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்ததையும் பெரியார் மட்டுமே அன்று தமிழ்நாட்டில் கண்டித்தார். “தமிழ்நாட்டின் பெரும் புலவர்களாகிய தொல்காப்பியர், திருவள்ளுவர், அவ்வையார் போன்றவர்களை ஆரியக் கலப்பு என்று கூறி, இந்நாட்டு மக்களை ஆரியர்கள் இழிவு செய்து தன்னினத்திற்குப் பெருமை தேடிக் கொண் டதும், தமிழ்நாட்டின் பெருமையைச் சிதைத்து வந்த தமிழைக் கற்ற உ.வே.சாமிநாதய்யர், ராகவய்யங்கார் போன்ற ஆரியர்க்கு உயர்வு தந்து தன்னினப் பெருமையை நிலைநாட்டிக் கொண்டதும், தமிழ் வரலாற்றை அறிந்தோர் உணர முடியும். ஆரியர்கள் கையாண்டு வரும் பரம்பரை வித்தைக் கிணங்கவே சமீபத்தில் சுப்பிரமணிய பாரதியார் என்ற பார்ப்பனர்க்கு மண்டபம் எழுப்பிக் கும்பாபிஷேகம் செய்தது மாகும். (மேற்படி நூல் பக்கம், 421).
உள்ளபடியே அன்று பாரதியின் முகத் திரையை கிழித்த ஒருவர் பெரியார் மட்டுமே. பாரதியின் பாடல்வரிகளில் பயணம் செய்து அதை அக்குவேறு ஆணிவேராக பிரித்து உள்ளே ஒளிந்து கொண்டிருந்த பார்ப்பனியத்தை வெளியே இழுத்துவந்து போட்டார். பாரதிக்கு உண்மையில் தமிழ்ப் பற்றும் இல்லை, சாதி ஒழிப்பு சிந்தனையும் இல்லை. பெண் உரிமைக் கான பார்வையும் இல்லை என்பதை ஆதாரத் தோடு அம்பலப்படுத்தினார். “பாரதியாரே, பார்ப்பான், சூத்திரன், பறையன் என்பதாகப் பேதம் இருக்கிறதைப் பற்றி ஒத்துக் கொண் டிருக்கிறார். பாடுகிறாரே பாட்டில்” ஆயிரமுண் டிங்கு சாதி; எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி” என்று; அதாவது “எங்கள் நாட்டில் ஆயிரம் ஜாதிகள் இருக்கும்; அதற்கு ஆக அந்நியன் மற்றவன் வந்து கேட்கக்கூடாது. அவனுக்கென்ன இங்கு வேலை என்கிறார்! என்று பாரதியின் உள்ளே ஒளிந்து கொண்டிருந்த பூனைக் குட்டியை வெளியே எடுத்துவந்தார் பெரியார். (மேற்படி நூல்-ப.எண்.572).
ஆயிரம் ஜாதிகளை வைத்துக் கொண்டு சமுதாயத்தை சிதைந்து பிளவு செய்து வைத்திருந் தால் – அன்னியன் வந்து புகத்தானே செய்வான், என்று கூட்டங்களிலும் பெரியார் கேள்வி எழுப்பினார்.
“பாரதியார் தமிழைப் பற்றி பற்றோடு கூறி இருப்பதாக கூறுகின்றார்கள். என்ன கூறி இருக்கின்றார்? தமிழ்மொழியை அல்லவா இழித்து கூறியுள்ளார். ஆரியமொழிக்கு சமமாக வாழ்ந்ததாக தமிழ்த் தாய் கூறுவது போலப் பாடியுள்ளார். செத்துப் போன மொழியுடனா உயிருள்ள மொழியை ஒப்பிடுவது? பாரதி பார்ப்பான் ஆனபடியால் அவ்வளவு மரியாதை பண்ணப்படுகிறது.” (மேற்படி நூல்-ப.எண்.
680).
இதற்குமேல் பாரதியை அம்பலப்படுத்த எதுவுமில்லை என்ற அளவிற்கு பெரியாரே அன்று அம்பலப்படுத்தி சென்றுவிட்டார். ஆனால் அதை எல்லாம் ஆதாரப்பூர்வமாக மறுக்க முடியாதவர்கள். ‘கும்பலோடு கோவிந்தா’ என்பதுபோல் பாரதி புகழ் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவ சக்திகளும் பொதுவுடைமை பேசும் சிலரும் இணையும் புள்ளியாக ‘பாரதி’யால் எப்படி பரிணமிக்க முடிந்தது? இத்நக் கேள்விக்கான விடை தேடிப் போனால் பார்ப்பனியம் கட்டமைக்கும் பிரச்சார யுத்தியின் சூட்சமத்தைப் புரிந்து கொள்ள முடியும்! ட
நிமிர்வோம் ஜனவரி 2019 மாத இதழ்