நேர்மைக்கு ஓர் இலக்கணம் பெரியாரின் நேர்மையே அவரது கொள்கைக்கு வலிமையான ஆயுதமாக இருந்திருக்கிறது.
பெரியார் என்கிற மனிதர் சாதாரணமான மக்களுக்கு கடவுள் மறுப்பாளராகவும் பாசிசவாதிகளுக்கு எதிரியாகவும், ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு போற்றத்தக்க தலைவராகவும் விளங்குகிறார் என்று சொன்னால் அவருடைய பொது வாழ்வில் அவர் பின்பற்றிய நேர்மை முக்கிய பங்காற்றுகிறது. அவருடைய வாழ்வு நீண்டது. அவர் நடத்திய போராட்டங்களின் எண்ணிக்கையும் நீண்டது. அதன் மூலம் மக்கள் பெற்ற நன்மைகளின் பட்டியலும் நீண்டது. அவரது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது அவருடைய மனித நேயமும் பொது வாழ்க்கையில் அவர் கடைபிடித்த நேர்மையுமே ஆகும். தந்தை பெரியார் தன்னுடைய வாழ்க்கையில் எப்போதும் யாரிடமும் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்றோ அல்லது தன்னைக் குறித்து மற்றவர்கள் பெருமையாகப் பேசவேண்டும் என்றோ விரும்பியவரல்ல.
ஒருமுறை வ.உ.சி.யும் பெரியாரும் ஒரே மேடையில் பேச நேர்ந்தபோது வ.உ.சி பெரியாரை தன் தலைவர் என்று பேசினார். இறுதியாக பேசிய பெரியார், வ.உ.சி பேசும்போது என்னை அவருடைய தலைவர் என்று குறிப்பிட்டார். மன்னிக்க வேண்டும் அவருக்கு தலைவராக இருக்கக் கூடிய தகுதி எனக்கில்லை ஏனெனில் ஐயா அவர்கள் சுதந்திரத்திற்காக சொத்தை இழந்து சிறைக்குச் சென்று செக்கிழுத்த நேரத்தில் நான் மைனராய் திரிந்தவன். ஆகவே அவர் தான் எனக்கு தலைவரேயொழிய நான் அவருக்கு தலைவர் இல்லை என்று பேசினார். அவருடைய நேர்மைக்கும் துணிவிற்கும் இதைவிட வேறு சேதி தேவையில்லை என்பதற்கு அவரது வாழ்க்கைப் பாதை யிலிருந்து சில நிகழ்வுகளை சுட்டிக் காட்டலாம்.
இந்நிகழ்ச்சி 1903ஆம் ஆண்டு பெரியார் அவர்களின் 24ஆம் வயதில் நடந்த நிகழ்ச்சியாகும் அப்போது தந்தைக்கு உதவியாக வணிகத்துறையில் ஈடுபட்டிருந்தார் ஒருவரிடம் இருந்து வரவேண்டிய ஓராயிரம் ரூபாய்க்கான வழக்கிற்கு, வக்காலத்து நமூனாவில் தமது தந்தையார் பெயரை தாமே கையெழுத்துப் போட்டு ஒரு வழக்கறிஞரிடம் கொடுத்துவிட்டு, இவர் ஈரோடு திரும்பி விட்டார். வழக்கறிஞர் ஆத்திரப்பட்டுத், தந்தை கையெழுத்தை மகன் ஃபோர்ஜரி செய்து மோசடி செய்துவிட்டதாக ஒரு வழக்கு தொடுத்துவிட்டார். வெங்கட்ட நாயக்கர் பயந்து போய் தன்னுடைய பெயருக்கு களங்கம் விளையுமே என அஞ்சி, சேலம் விஜயராகவாச்சாரியார், சென்னை நார்ட்டன் துரை போன்ற மிகப் பிரபலமான வழக்கறிஞர்களின் உதவியை நாடினார். தான் இந்த கையெழுத்தைப் போடவில்லை என்று இராமசாமி சொல்லிவிட்டால், தப்பித்துக் கொள்ளலாம்; அது ஒன்றுதான் வழி என்று அவர்கள் ஆலோசனை கூறினர்!
ஆனால் ஈ.வெ.இராமசாமி, பிடிவாத மாக பொய் கூற மறுத்து, வருவது வரட்டுமெனச் சிறை வாழ்க்கைக்கு ஒத்திகை பார்க்கத் தொடங்கிவிட்டார். அதாவது தன் காப்பு, கொலுசு, கடுக்கன் முதலிய நகைகளைக் கழற்றி விட்டுச் சவரம் செய்து கொள்ளாமல் கேழ்வரகுக் களி சாப்பிட்டு தலையணை இல்லாமல் வெறும் பாயில் படுத்து பழகிவந்தார். இரண்டு மாதங்கள் கழித்து திருச்சி உதவி கலெக்டரான ஆங்கிலேய இளைஞர் ஒருவர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. பிரபல வியாபாரியானதால், வழக்கு விசாரணையை வேடிக்கை பார்க்க, நீதிமன்றத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அரசு வழக்கறிஞரான கணபதி ஐயர், கலெக்டரிடம் அனுமதி பெற்று ஈ.வெ.இராமசாமிக்காக வழக்காட வருகிறார். உதவி கலெக்டர் கணபதி ஐயரிடம் விவரம் கேட்கிறார்.
பின்னர் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இராமசாமியையும் கேட்கிறார். தகப்பனாருக் காகத் தானே வியாபார விஷயங்களை கவனிப்பதால் வயதான அவருக்காக தானே கையெழுத்து போட்டதாக ஒத்துக் கொள்கிறார். மகன் உண்மையைச் சொன்னவுடன் வெங்கட்ட நாயக்கரும் அச்சத்துடன் ஆமோதிக்கிறார். ஆனால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. காரணம் இவ்விஷயத்தில் இராமசாமி யாரையும் மோசடி செய்யும் நோக்கத்தோடு இந்த கையெழுத்தைப் போடவில்லை என்பதோடு தான் செய்ததை அவர் ஒப்புக் கொண்டார் என்பதால் இவ்வழக்கை தள்ளுபடி செய்வதாக கலெக்டர் அறிவித்தார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தான் தப்பிச் செல்ல வாய்ப்பு இருந்தும் செல்வாக்கு இருந்தும் தான் செய்த தவறை ஒத்துக் கொண்டு அதற்குரிய தண்டனை அனுபவிக்க தயாராக இருந்தாரேயொழிய ஒருபோதும் ஏமாற்ற அவர் தயாராக இல்லை. இது பெரியார் பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன்னால் நிகழ்ந்த சம்பவமாகும்.
ஒத்துழையாமை இயக்கத்தில்…
அரசியலுக்கு வருவது என்று சொன்னாலே பெரும்பாலானோர் தனக்கு என்ன பதவி கிடைக்கும். என்று கேட்டுத் தான் வருவார்கள் அல்லது வந்தபிறகு பதவிக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். தான் வகித்த 29 பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு பொது வாழ்க்கைக்கு வந்த ஒரே தலைவர் பெரியார் மட்டுமே ஆவார். காரணம் காங்கிரஸ் அப்போது ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தது.
கள்ளுக்கு குத்தகைவிட்ட தனக்கு சொந்தமான 500 தென்னைமரங்களை குத்தகை எடுத்தவருக்கு இழப்பீடு கொடுத்துவிட்டு வெட்டி சாய்த்தார். பட்டு போன்ற பகட்டான உடைகளையெல்லாம் உதறிவிட்டு கதர் அணிந்தார். தானே தெருவில் நடந்து கூவி கூவி கதர் விற்றதோடு தன் குடும்பத்தாரையும் கதர் அணியச் செய்தார். அப்போது தான் தன் குடும்பத்திற்கு வரவேண்டிய 50,000 ரூபாயையும் இழந்தார்.
நீதிமன்றங்களை விலக்க வேண்டும் என்று காந்தி கூறியதை செயலில் காட்டிய தலைவரும் அவர்தான். அவரிடம் 28 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு அடமானப் பத்திரம் இருந்தது. ஒத்துழையாமை இயக்கத்துக்காக பெரியார் அதை வசூலிக்க விரும்பவில்லை காங்கிரஸ் தலைவராக இருந்த சேலம் சி.விஜயராகவாச்சாரியார் இதையறிந் தார். இந்த பத்திரத் தொகைக்காக வசூல் செய்ய உனக்கு இஷ்டமில்லையானால் நீர் அதை எனக்கு மேட்ஓவர் செய்து கொடுத்தால் இனாமாகவே வாதாடி பணம் வசூலித்து தருகிறேன். அந்த பணத்தை அடைய உனக்கு இஷ்டமில்லையானால் அதை திலகர் சுயராஜ்ய நிதிக்காவது கொடுத்து விடும். என்று ஈ.வெ.ராவிடம் வலியுறுத்திக் கேட்டார். அவர் ஏற்கவில்லை அவ்வளவு பெரிய தொகையை மனதார இழந்தார்.
நானே வழக்காடுவதும் ஒன்று தான். உங்களிடம் எழுதிக் கொடுத்து வழக்காடச் செய்வதும் ஒன்று தான். இது என் கொள்கைக்கு உடன்பாடானது அல்ல. கொள்கையைவிட பணம் பெரிதல்ல என்ற முடிவுக்கு வந்தார். பெரியார், 28,000 ரூபாயை வேண்டாம் என்று கூறிய காலத்தில் ஒரு பவுன் விலை 7 ரூபாய்.
பெரியாரின் பெண் விடுதலை :
எந்த சீர்திருத்தத்தையுமே தன்னிட மிருந்தும் தன் குடும்பத்தினரிடமிருந்தும் ஆரம்பித்தவர் பெரியார். அவருடைய பெண் விடுதலை கருத்துகளும் அப்படியே. விதவை மறுமணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று 1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார். அதற்கு பல வருடங்கள் முன்பே விதவையான தன் தங்கை மகளுக்கு வீட்டில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து வைத்தார்.
பொது வாழ்க்கையில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் தன் வீட்டில் உள்ள பெண்களை போராட்டங்களில் ஈடுபடுத்தினார். சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைக்கும் அளவுக்கு தயார் செய்தார்.
பிரிட்டிஷ் அரசு காந்தியிடம் கள்ளுக்கடை போராட்டத்தைக் கைவிட வலியுறுத்திய போது அது என்னிடம் இல்லை ஈரோட்டில் உள்ள இருபெண்களிடம் (நாகம்மை, கண்ணம்மா ) தான் இருக்கிறது என்று காந்தியே சொன்னார். பெண்கள் எப்படி இருக்கவேண்டும் என்று மேடைகளில் கர்ஜித்தாரோ அதே போல் தன் வீட்டுப் பெண்களை மாற்றிக் காட்டினார். தான் தொடங்கிய குடிஅரசு பத்திரிக்கையின் பதிப்பாளராக தங்கை கண்ணம்மாவையே நியமித்திருந்தார். அதனால் தான் ‘இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்’ என்கிற கட்டுரை வெளிவந்தபோது பதிப்பாளர் என்கிற முறையில் கண்ணம்மா அவர்கள் சிறை சென்றார். இன்னொரு முக்கிய சிறப்பு இந்தியாவின் முதல் பெண் பத்திரிகைப் பதிப்பாளர் தோழர் கண்ணம்மா தான் ஆனால் வரலாற்றில் அது எங்கும் பதிவாகவே இல்லை என்பது தனி சோகம்.
காந்திக்கு கொடுத்த வாக்கு :
1927ஆம் ஆண்டு காந்தியின் அழைப்பின் பேரில் பெரியார் எஸ்.ராமநாதன் அவர் களுடன் காந்தியை (பெங்களூரில் மகாராஜா வின் விருந்தினராய் தங்கியிருந்தபோது) சந்தித்தார். அங்கு காந்தியும் பெரியாரும் தீண்டாமை ஒழிப்பு குறித்தும் இந்துமதம் குறித்தும் வர்ணாசிரம் மற்றும் பார்ப்பன ஆதிக்கம் குறித்தும் காரசாரமாக உரையாடல் நிகழ்த்தி யுள்ளனர். இதன் ஒரு பகுதியை மட்டும் (6.3.1927) குடிஅரசு இதழில் பெரியார் வெளியிட்டார். இதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காந்தியை ஆதரித்தும் பெரியாரை எதிர்த்தும் எதிர்ப்புகள் கடிதங்களாக வந்து கொண்டே யிருந்தன. உண்மையில் அன்று நடைபெற்ற முழு உரையாடலையும் வெளியிட்டிருந்தால் நிச்சயம் பெரியாருக்கு அவ்வளவு எதிர்ப்புகள் வந்திருக்காது. தன்னுடைய ஒப்புதலின்றி முழு உரையாடலையும் வெளியிடக் கூடாது என்று காந்தியார் விதித்த நிபந்தனையை பெரியார் ஒப்புக் கொண்டதால், முழு உரையாடலையும் வெளியிடாமல் தவிர்த்து விட்டார்.
இறுதியாக விடுதலையில் (18.2.1948) குத்தூசி குருசாமி அவர்கள் காந்தியாருடன் பெரியார் ஈ.வெ.ரா., எஸ். இராமநாதன் சந்திப்பு என்கிற தலைப்பில் அந்த முழு உரையாடலையும் காந்தி மரணத்துக்குப் பிறகு வெளியிட்டார்.
பெரியார் தான் கொடுத்த வாக்கை மீறாமல் நேர்மையாக காந்தியார் சாகும் வரை அந்த உரையாடலை வெளியிடவேயில்லை.
பெரியாரும் – ராஜாஜியும்
தன் வாழ்நாள் அரசியல் எதிரி ராஜாஜிக்கு கூட அவர் உண்மையாக இருந்தார். மணியம்மையாரை பெரியார் இரண்டாவது திருமணம் செய்வதைக் காரணமாகக் கூறி திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா விலகினார். அதில் முக்கியமாக ராஜாஜியின் ஆலோசனையின் படி தான் அவர் திருமணம் செய்து கொண்டார் என்றும் பெரியார் – ராஜாஜி சந்திப்பை அதற்கு ஆதாரமாகவும் சொன்னார்கள். உண்மையில் அப்போது என்ன நடந்தது என்றால் கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜகோபாலாச்சாரியார் திருவண்ணாமலைக்கு தனி இரயிலில் வந்தபோது தந்தை பெரியார் அவரை சந்தித்துப் பேசினார். ராஜாஜி – பெரியார் என்ன பேசினார்கள் என்பது பற்றி பெரிய சர்ச்சை கிளப்பப்பட்டது. மணியம்மையாரை திருமணம் செய்யும்படி இராஜாஜி தான் யோசனை சொன்னார் என்று பேசப்பட்டது.
ஆனால் உண்மை அதுவல்ல. மணியம்மையார் திருமணத்தை ராஜாஜி எதிர்த்து பெரியாருக்கு கடிதம் எழுதினார் என்பதுதான் உண்மை. இயக்கத்தை உடைப்பதற்கு ராஜாஜி திட்டமிட்டு பெரியாருக்கு தவறான யோசனை கூறி விட்டார் என்றும் ஆரியத்தின் ஆலோசனை கேட்டு பெரியார் நடக்க ஆரம்பித்து விட்டார் என்றும் அவதூறு சேறு வீசப்பட்டது.
பெரியார் நினைத்திருந்தால் இராஜாஜி தனக்கு எழுதிய கடிதம் மூலம் அவர் அப்படி கூறவில்லை என்று அன்றே நிரூபித்திருக்க முடியும். ஆனாலும் ராஜாஜி அந்தரங்கம் என்று எழுதிய அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததால் தன் மூச்சு அடங்கும் வரை மதித்து அதை அந்தரங்கமாகவே வைத்திருந்த தலைவர் பெரியார். அவர் இறந்தபிறகு மணியம்மையார் கைக்கு அந்த கடிதம் கிடைக்கும் வரை யாருக்குமே தெரியாது. இந்தத் திருமணம் செய்வதை வேண்டாம் என்று கூறியே இராஜாஜி அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்.
வீட்டில் ராமனாக இருந்தபோதும் சரி தொழிலில் இராமசாமி நாயக்கராக இருந்த போதும் சரி பொது வாழ்வில் தந்தை பெரியாராக இருந்தபோதும் சரி நேர்மை என்ற சொல்லுக்கு இலக்கணமாய் வாழ்ந்த தலைவர் அவர்.
– பெரியார் யுவராஜ்
ஆதார நூல்கள்:
‘விடுதலை’ (18.2.1948), ‘குடிஅரசு’
தமிழர் தலைவர்
கவிஞர் கருணானந்தம் எழுதிய
‘தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு’
தோழர் வளர்மதி எழுதிய
‘சுயமரியாதைப் போராட்ட வரலாறு’
நிமிர்வோம் நவம்பர் 2018 இதழ்