வரலாற்றுப் பக்கங்களிலிருந்து… மதுரை கருஞ்சட்டைப் படை மாநாட்டை எரித்த ‘பார்ப்பன தேசியங்கள்’ கருஞ்சட்டையை அடையாளமாக்க வேண்டும் என்ற கருத்து எங்கே முளைவிட்டது?

1945ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி திருச்சி புத்தூர் மைதானத்தில் 17ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக் கட்சி) மாநாடு பெரியார் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழகம் தொடங்கப்பட்டிருந்தாலும் இது நீதிக்கட்சியின் 17ஆவது மாநாடாக நடைபெற்றது. நீதிக் கட்சியின் ‘தராசுக் கொடியே’ மாநாட்டிலும் ஏற்றப்பட்டது. ‘தராசுக் கொடி’ சமநீதி தத்துவத்தைக் கொண் டிருந்தாலும் புரட்சிக்கான அடையாளமாக இல்லை என்ற கருத்து முன் வைக்கப்பட்டு, அதற்குப் பிறகு கொடி உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, திராவிடர் கழகக் கொடி உருவாக்கப்பட்டது. அடுத்த நாள் செப். 20ஆம் தேதி சுயமரியாதை இயக்கத்தின் 4ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. அண்ணா மாநாட்டு வரவேற்புக் குழுவின் தலைவர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி சிறப்புரையாற்றினார். எம்.ஆர். ராதாவின் நாடகம் நடந்தது. மாநாட்டையொட்டி திருச்சியில் நடந்த ஊர்வலத்தை திட்டமிட்ட பாதையில் செல்ல காவல்துறை அனுமதி மறுத்து, வேறு வழியில் போகுமாறு கூறியது. தோழர்கள் கொதித்தெழுந்தனர். பெரியார், தோழர்களிடம், ‘அரசு சொல்லும் வழியிலேயே போவோம்’ என்று சமாதானப்படுத்தினார்.

இதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு புதுவையில் 1947 ஜூலையில் புரட்சிக் கவிஞர் பாரதாசன் ஏற்பாடு செய்த திராவிடர் கழக தொடக்க விழாவிலும் பெரியார் உரை நிகழ்த்தியவுடன் காங்கிரசார் வன்முறையில் இறங்கி கழகக் கொடி மரங்களை வெட்டி வீழ்த்தி கலவரம் செய்தனர். பெரியாரை – ஒரு ரிக்ஷாவில் ஏற்றிப் பாதுகாப்பாக கழகத் தோழர் ராமலிங்கம் என்பவர் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர். கூட்டத்தினரிடம் சிக்கிக் கொண்ட கலைஞர் கருணாநிதி, காஞ்சி கல்யாணசுந்தரம் தாக்கப்பட்டனர்.

டிசம்பர் 23, 2018 திருச்சிப் பேரணிக்காக சில பாடல்கள் முகநூல்களில் பதிவிடப்பட்டது போல் 1945இல் நடந்த திருச்சி மாநாட்டுக்காக பென்னாகரம் நடேசேன் என்ற கழகத் தோழர் ஒரு பாடலை இயற்றிக் கொண்டு வந்திருந்தார். ‘குடிஅரசு’ ஏட்டில் மக்கள் மெட்டமைத்துப் பாடக் கூடிய பல பிரச்சாரப் பாடல்களை எழுதியவர் பென்னாகரம் நடேசன். “இன்னும் என்ன செய்யப் போறீங்க? சட்டசபையை எந்த முறையில் நடத்தப் போறீங்க? சொல்லுங்க நீங்க?” என்பதே இப்பாடல். அந்தப் பாடலின் சந்தம் பெரியாரை மிகவும் கவர்ந்துவிட்டது. பெரியாரே மெட்டமைத்துப் பாடிப் பார்த்தார். பாடல் நன்றாக வந்தவுடன் மகிழ்ச்சி அடைந்து, அந்தப் பாடலை 10,000 பிரதிகள் அச்சிட்டு திருச்சி மாநாட்டில் பரப்பினார். அதே திருச்சி மாநாடு திராவிடர் கழகத்துக்கு பெரியார் தான் இனி நிரந்தரத் தலைவர் என்று முடிவு செய்தது. அதைத் தீர்மானமாகவும் நிறைவேற்றியது. அதே திருச்சி மாநாட்டில் தான் திராவிடர் விடுதலைப் படை என்பதாக ஒரு தொண்டர் படை திராவிடர் கழகத்துக்குத் தேவை என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

பெரியார் திருச்சியி லிருந்து ஈரோடு திரும்பியதும் இது குறித்து தீவிரமாக சிந்தித்து, ‘கருப்புச் சட்டைப் படை அமைப்பு’ என்பதாக ஒரு அறிவிப்பை 1945 செப்டம்பர் 29ஆம் நாள் ‘குடிஅரசு’ இதழில் வெளியிட்டார். ஈ.வெ.கி. சம்பத், எஸ். கருணானந்தம் ஆகிய இருவரும் தற்காலிக அமைப்பாளர்கள் என்றும் அறிவித்தார். கருஞ்சட்டைப் படையின் முதல் தொண்டராக கலைஞர் கருணாநிதி தன்னை ஈரோட்டில் பதிவு செய்து கொண்டார்.

நாடெங்கும் கருஞ்சட்டை அணிவோர் எண்ணிக்கை அதிகரித்தது. மதுரையில் கருஞ் சட்டைப் படையின் முதலாவது மாநில மாநாடு 1946 மே மாதம் 11, 12 நாட்களில் மதுரையில் கூடியது. மாநாட்டின் தலைவர் பெரியார்; திறப்பாளர் அண்ணா; எம்.ஆர். ராதாவின் ‘போர்வாள்’ நாடகமும் அண்ணாவின் ‘அவன் பித்தனா’ நாடகமும் ஏற்பாடாகியிருந்தது.

மதுரை வைகை ஆற்று மணற்பரப்பில் வேயப்பட்டிருந்த மாநாட்டுப் பந்தலுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.  கழகத் தோழர்கள் இல்லங்கள், கழக அலுவலகங்கள் சோதனைக்கு உள்ளாயின. காலிகள் வன்முறை தாக்குதலில் இறங்கினர். தமிழகம் முழுதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு கழகக் கொடிகள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. மதுரை வைத்தியநாத அய்யர் என்ற தேசியப் பார்ப்பனர், இந்த வன்முறையைத் திட்டமிட்டு நடத்தினார்.

அப்போது ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்) முதல்வர். காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. பார்ப்பன ஏடுகள் கருஞ் சட்டைப் படைக்கும் பெரியார் இயக்கத்துக்கும் எதிராக எழுதி அரசை தூண்டி விட்டன. திராவிடர் கழகத்தின்மீது அரசு அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. கிரிமினல் சட்டத் திருத்தம் 15ஆவது விதியின் கீழ் கருப்புச் சட்டைப் படைக்கு 1948 மார்ச் 26ஆம் தேதி கருஞ் சட்டைப் படையை ஓமந்தூரார் ஆட்சியில் உள்துறை அமைச்ச ராக இருந்த சுப்பராயன் தடை செய்தார். “என்னை அழிக்க நினைத்தால் அது என் அழி வல்ல பிராமண அழிவேயாகும்” என்று பெரியார் அறிக்கை விடுத்தார் (27.3.1948 ‘குடிஅரசு’).

மதுரை மாநாட்டில் பந்தல் எரிக்கப்பட்ட அடுத்த வாரமே கும்பகோணத்தில் திராவிடர் மாநாடும் சுயமரியாதை மாநாடும் நடைபெற்றன. இரவில் அண்ணா எழுதிய ‘சந்திரோதயம்’, ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ நாடகங்கள் நடைபெற்றன. நடிகர் சிவாஜிகணேசன் சிவாஜியாக நடித்தார். நடிப்பைப் பாராட்டி ‘சிவாஜி என்ற பட்டத்தை பெரியார் சூட்டியதால் கணேசன் சிவாஜி கணேசன் ஆனார். அதுவரை பெண் வேடமிட்டு நடித்து வந்த கணேசன், இந்த நாடகத்தில்தான் ‘சிவாஜி’யாக ஆண் வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(தகவல்களுக்கு ஆதாரம்:

கவிஞர் கருணானந்தம் எழுதிய

தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு நூல்)

நிமிர்வோம் ஜனவரி 2019 மாத இதழ்

You may also like...