பெரியார் – ஃபிரெட்ரிக் டக்ளஸ் அடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல்

1947, ஆகஸ்ட் 15 அன்று ‘சுதந்திரம்’ அறிவிக்கப்பட்டபோது அதைத் துக்க நாள் என்று அறிவித்தார் பெரியார். அதேபோல் அமெரிக்காவில் கறுப்பர் மக்களின் உரிமைக்குப் போராடிய ஃபிரடரிக் டக்ளஸ் 1776இல் அமெரிக்கா சுதந்திரம் பெற்றபோது அது கறுப்பர் இன மக்களுக்கு விடுதலை நாள் அல்ல என்று பேசினார். அவரது உரை பிற்காலத்தில் கறுப்பர் இன உரிமைப் போராட்டத்துக்கு வித்திட்டது. 1947ஆம் ஆண்டு பெரியார் விடுத்த அறிக்கையையும் பிரடரிக் டக்ளஸ் உரையையும் இளைய சமுதாயத்தின் வரலாற்றுப் புரிதலுக்காக ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது.

“பிரிட்டிஷ்-பனியா-பார்ப்பனர் ஒப்பந்த நாள் – பெரியார் அறிக்கை:

ஆகஸ்ட் 15-ந் தேதி சுயராஜ்யத்தைப் பற்றி ஏதேதோ கூறப்படுகிறது. பூரண சுயராஜ்யம் என்றும், அதற்காகக் கொண்டாட்டமென்றும் திட்டம் வகுக்கப்படுகிறது. இதைக் கண்டு யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை; வேண்டு மானால் தன்மானமுள்ள காங்கிரஸ் திராவிடர்கள் அன்று வெட்கித் தலைகுனிய வேண்டும்; ஏன்? 1929ஆம் ஆண்டிலே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் எந்த அர்த்தத்தில் தீர்மானிக் கப்பட்டதோ அந்த சுயராஜ்ந்தானா நாளை வரப்போவது? வெள்ளையர் உறவு சிறிதுகூட இல்லாத பூரண இந்தியா முழுவதையும் கொண்ட சுயராஜ்யம் – அதாவது, பூரண சுயேச்சை கேட்கப் பட்டது. அதற்காக அன்றுமுதல் இன்று வரை நமது மக்கள் எவ்வளவு தியாகங்கள் செய்தனர்? குறிப்பாகக் கூறவேண்டு மானால் காங்கிரஸ் திராவிடர் எவ்விதக் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளானோம்? என்னையும் சேர்த்து நம் இனத்துக் குள்ளாகவே எவ்வளவு போராட்டம்; எவ்வளவு பொருளை வாரிக்கொட்டி இருப்போம்! சுயராஜ்யத்தின் பேரால் அவ்விதமெல்லாம் செய்தும் கடைசியாகக் குடியேற்ற நாட்டு அந்தஸ்துதான் கிடைத்தது.

இந்தக் குடியேற்ற நாட்டு அந்தஸ்தை அன்று மிதவாதி கள் என்று கூறப்பட்டவர்களால் கேட்கப்பட்ட போது – அவர்களைப் பிற்போக்காளர், வெள்ளையர் தாசர்கள் என்று கூறி ஒத்துழையாமை செய்து, நாட்டில் பெரிய கலவரங்களி லிருந்து பல எதிர்ப்புகளை உண்டாக்கி, கடைசியாக அதே குடியேற்ற நாட்டு அந்தஸ்தை – அதுவும் முழு இந்தியாவுக்குமின்றி இந்திய உபகண்டத்தின் மூன்றிலொரு பாகமான இந்துஸ்தான் என்ற பகுதிக்கு மட்டும் பெற்று, அதை சுயராஜ்யம் என்று கொண்டாடுவது என்றால் இதைவிட வெட்கக் கேடான முறை வேறு இருக்க முடியுமா?

இந்துஸ்தான் சுயராஜ்யம் என்று நாளை கொண்டாடப் போகும் வட நாட்டு ஏகாதிபத்திய ஆட்சி, பிரிட்டி ஷாருக்கு ஏஜெண்டாக – கையாளாக யிருந்து வெள்ளையருடன் வடநாட்டு பிர்லா, பஜாஜ் கோஷ்டியினர் செய்துள்ள ஒப்பந்த ஆட்சியேயன்றி, சுய ஆட்சி என்று எந்தக் காங்கிரஸ் அரசியல் நிபுணராகிலும் கூற முடியுமா?

வேண்டுமானால், வடநாட்டுக்காரர் களுக்கு இன்னும் அதிகமாக நம் மாகாணத்தின் பொருளாதாரத்தைச் சுரண்ட அதிகாரம் இந்த சுயராஜ்யத்தின் மூலம் ஏற்பட்டிருக்கிறதற்கு அவர்களுக்குக் கொண்டாட்டம் ஏற்படலாமே தவிர, மான முள்ள திராவிடன் இனி திண்டாட வேண்டித்தானே இருக்கப் போகிறது? ஆகஸ்ட் சுயராஜ்யம் அநீதிக்கு அடிப்படையானதே தவிர, நம் நாட்டு மக்களின் நேர்மையான உண்மைச் சுதந்திர வாழ்வுக்கு ஏற்றதல்ல.

இந்த இந்திய உபகண்டத்தின் மற்ற மாகாணங்களை விட நம் மாகாணமே எல்லா வளப்பத்திலும், அறிவிலும் முதன்மையானதென்பது உலகறிந்த சரித்திரச் சான்றாகயிருக்கும். நமக்குள் இன ஒற்றுமையில்லாததாலேயே மற்ற மாகாணத்தவர்களுக்கு, குறிப்பாக வட நாட்டுக்காரர்களுக்கு நாம் தாசானு தாசனாய் இருந்து வருகிறோம்.

இந்துஸ்தான் சுயராஜ்ய மாகாணங்களில் இனி கவர்னராக இருப்பவர்கள் சாதாரண கலெக்டர் களுக்குள்ள அதிகாரங்கள்கூட இன்றி, வடநாட்டுத் தாக்கீதுக்கு அடிபணிந்து இருக்க வேண்டுவதோடல்லாமல், வேறு ஏதாவது உண்டா என்று கேட்கிறேன். கவர்னர்களின் கதியே இவ்வாறென்றால், மந்திரிகளைப் பற்றிக் கூறவேண்டுவ தில்லை. ‘அட்வைசரி’ சர்க்காரிலாவது மந்திரிகளுக்குச் சிறிது அதிகாரம் இருந்தது. ஆகஸ்டு சுயராஜ்யத்தில் -பஞ்சாயத்து போர்ட்டு மெம்பர்களுக் கிருக்கும் அந்தஸ்தைவிடக் குறைவான தென்றே கூறலாம் – மாகாண மந்திரி களுக்குக் கொடுத்துள்ள அந்தஸ்து.

இந்த இலட்சணத்தில் கொண் டாட்டமாம்! காங்கிரஸ் ஆரியன்தான் கொண்டாடுகிறான் என்றால் காங்கிரஸ் திராவிடனுக்கு ரோஷம் இருக்க வேண்டாமா? ஏன், நமது தோழர்கள் அவினாசியோ, பக்தவத்சலமோ, சிவ சண்முகமோ, ஆகஸ்டு சுயராஜ்ய ஜனாதிபதியாக, பிரதமராக இருக்க இலாயக்கில்லையா? வடநாட்டான் தேசபக்திதான் அசல் தேசபக்தி; மற்றவர் களுடையது போலியா? இவ்விதப் பித்த லாட்டங்களையெல்லாம் தகர்த்தெறி யாமல் வெத்துவேட்டு சுயராஜ்யத்தில் எத்தனை நாளைக்கு மானத்துடன் வாழ முடியும்?

எனவே, தோழர்களே! வடநாட்டுப் பாசிச ஆட்சியை அறவே அழித்த, நம் மாகாணத்துக்கு – திராவிட நாட்டுக்குப் பூரண சுதந்தரம் கொண்ட விடுதலை யடைய வேண்டுமென்ற போராட்டம் எளிதில் கைகூடுமென்று நாம் நம்ப முடிய வில்லை. காங்கிரசின் போக்கே குண்டாந்தடி ஆட்சியாக இருந்து வருகிறது. மக்களைத்துன்புறுத்துவதே அகிம்சா மூர்த்தியின் அருளைப் பெற்ற சீடர்களின் சுயராஜ்யத்தின் அடிப் படையாக இருந்து வருகிறது. தொழிலாளர்களைத் துன்புறுத்துவதே இன்றைய பட்டேலின் பாசிச வெறியாகக் காட்சியளிக்கிறது. நம் நாட்டை நாம் ஆள வேண்டும். மற்ற நாட்டினரின் பொதுவான விவகாரங்களில் நட்புக் கொண்டு வாழ்வதே மானமுள்ள வாழ்வு என்றால், அதை எதிர்க்கும் துரோகிகளின்-பட்டம், பதவிக்காக இனத்தைக் காட்டிக் கொடுக்கும், வடநாட்டவர்களின் ஆதிக்கச் சுரண்டலுக்குத் துதிபாடும் நமது விபீஷணர்களின் போக்கு ஆகியவற்றிற் கிடையே நாம் போராட வேண்டியிருக் கிறது.

எதிர்காலத்தில் இந்துஸ்தானத்தில், குறிப்பாக நம் நாட்டில் ‘நவகாளி’கள் தோன்றுவதில் ஆச்சரியப்படுவதற் கில்லை. நம்மை அவ்வளவு நாசப் படுத்தவே வடநாட்டு ஏகாதிபத்தியம் தயார் செய்து கொண்டிருக்கிறது, சுயராஜ்யம் என்ற பேரால்.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இவ்வளவு எதிர்ப்புகளையும் அநீதி களையும் சகித்து வென்று, நம் திராவிடத்தின் சுதந்தரத்தை நிலை நாட்டியே தீருவோம். எனவே, அதற் கேற்ப, இளைஞர்களே! திராவிட இனத்தவர்களான தொழிலாளர்களே! விவசாயிகளே! மாணவர்களே! அறிஞர்களே! உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். திராவிடத்திலும் ‘நவகாளி’கள் தோன்றினால் அதற்கு நாம் அல்ல பொறுப்பு; இந்நாட்டு ஆரியர்கள் தாம் என்பதை எதிர்காலம் கூறும். அந்த நிலையிலிருந்து பழிச்சொல் ஏற்படா வண்ணம், இனியாவது, ஆரியம் வட நாட்டு ஆதிக்கத்துக்குத் தரகராயிருந்து நமது திராவிடத்திற்குத் துரோகம் செய்ய வேண்டாமென்று எச்சரிக்கை செய் கிறேன்.

நாட்டை ஆண்டதாக சரித்திரச் சான்றுகளில் தனது இனத்தைப் பற்றி இதுவரை பொறிக்கப்படும்படியான நிலையில்லாதிருந்து வரும் ஆரியம் – நாட்டைப் பிறர்க்குக் காட்டிக் கொடுக்கும் இனம் என்பதையாவது திராவிட நாடு பிரிவினை விஷயத்திலாகிலும், பிற்காலத்தில் எழுதும்படியான நிலை யைத் தேடிக் கொள்ள வேண்டாமென்று எச்சரிக்கை செய்கிறேன். இதனால் – திராவிடத்தால் ஆரியத்துக்குத்தான் முழுதும் அழிவு ஏற்படும் என்பதை ஆரியம் உணரட்டும்.

எனவே, காந்தியாரல்லர், அவர்தம் சீட கோடிகளல்லர், அல்லது அந்தராத்மா அல்ல, யார் எதிர்த்தாலும், திராவிட நாட்டை அடைந்தே தீருவோம் நாம்! அதற்குப் பல தொல்லைகளைத் தாண்ட வேண்டியிருக்கும் – சலிப்படையாதீர்! மானமில்லாது வாழ்வது வாழ்வல்ல. திராவிடன் மானமுள்ளவன் என்பது சரித்திரச் சான்று. அதற்கேற்ப அவன் இனி எந்த நாட்டவனுக்கும், எக்காரணத்தை முன்னிட்டும் அடிமையாயிரான் என்பது உறுதி.

(விடுதலை, 27.7.1947: ஈ,வெ.ரா.சிந்தனைகள், 684-686, முதல் பதிப்பு 1974)

டக்ளசின் முழக்கம்

முறையான கல்வி பெறாத போதிலும் அமெரிக்கா முழுவதும் பயணித்துத் தன்னுடைய உரைவீச்சுகளால் அமெரிக்காவில் நிலவிவந்த அடிமை முறைக்கு எதிராக வலுவான குரல் எழுப்பியவர் ஃபிரெட்ரிக் டக்ளஸ் (குசநனநசiஉம னுடிரபடயள).

கறுப்பின மக்கள் வரலாற்றில், அடிமை முறை ஒழிப்பில் ஃபிரெட்ரிக் டக்ளஸின் பங்களிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் அங்கீகரித்தார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து 1776இல் அமெரிக்கா விடுதலை பெற்றது. அதன் பின்னர் ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திரத் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், கறுப்பின அமெரிக்கர் களுக்கு அது விடுதலை நாள் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டி 1852 ஜூலை 5ஆம் தேதியன்று, நியூயார்க் நகரத்தில் ‘கூhந ஆநயniபே டிக துரடல குடிரசவா கடிச வாந சூநபசடி’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை வெள்ளை அமெரிக்கர்களின் மன சாட்சியை உலுக்கியது. கறுப்பினத்தவரின் அடிமைத்தளை நொறுங்கி ஒரு புதிய அமெரிக்கா பிறக்க வழிகோலியது. அந்த உரையின் சுருக்கம் இதோ…

எனது சக குடிமக்களே! எதற்காக என்னை இன்று பேசுவதற்காக அழைத்தீர்கள் என்ற கேள்வியை எழுப்பிக்கொள்வதற்கு என்னை அனுமதியுங்கள். உங்களுடைய தேச சுதந்திரத் துக்கும் எனக்கும் அல்லது நான் பிரதிநிதிப் படுத்துபவர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? சுதந்திரப் பிரகடனத்தின் அங்கங் களாக இருக்கும் மகத்தான கொள்கைகளான அரசியல் விடுதலையும் இயற்கை நீதியும் எங்களுக்கும் நீட்டிக்கப்பட் டிருக்கிறதா?

மகத்தான இந்த விடுதலை நாளின் நிழலில் கூட நான் இல்லை. உங்களது உச்சபட்சமான சுதந்திரம் நமக்கிடையில் இருக்கும் கணக்கிட முடியாத தூரத்தைத்தான் காட்டுகிறது. உங்களுடைய தந்தைமார்களின் பரம்பரைச் சொத்தான நீதி, சுதந்திரம், வளம், விடுதலை ஆகியவற்றை நீங்களே பங்கு போட்டுக் கொள்கிறீர்கள். அது எங்களுடையதாகவே யில்லை. இந்த ஜூலை நான்கு உங்களுடையது, என்னுடையது அல்ல. நான் பேசிக் கொண் டிருப்பது அமெரிக்க அடிமைமுறையைப் பற்றித்தான் அன்பர்களே! இது அமெரிக்கா சுமந்துகொண்டிருக்கும் பாவமாகும்; அவமான மாகும். நான் சுற்றி வளைத்துப் பேசப் போவதில்லை.

வெர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த கறுப்பின மக்கள் அறிந்தோ அறியாமலோ) இழைக்கக்கூடிய 72 விதமான குற்றங்களுக்கு இங்கே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதுவே வெள்ளைக்காரராக இருந்தால் இரண்டு விதமான குற்றங்களுக்குத்தான் அதே தண்டனை என்ற சட்டம் பிறப்பிக்கப்பட் டிருக்கிறது. ஒரு அடிமைதான் ஒழுக்கம், அறிவு, பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றுச் சொல்ல வருகிறீர்களா? தெற்கு மாகாணச் சட்டங்களில், அடிமைகளுக்குப் படிப்பு, எழுத்து கற்பிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அபராதங்களும் தண்டனைகளும் இதை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

உங்கள் தெருவில் உள்ள நாய்கள், வானில் பறக்கும் பறவைகள், மலைகளில் உள்ள கால்நடைகள், கடலில் உள்ள மீன்கள் ஆகியவை எப்போது விலங்குகளும் மனிதர்களுக்குச் சமமாக நடத்தப்படுவதாக உணரத் தொடங்கு கின்றனவோ, அப்போதுதான் அடிமை என்பவனும் மனிதனாகவே இங்குக் கருதப்படு கிறான் என்று நான் வாதிடுவேன்.

நாங்கள் நிலத்தை உழும்போது, பயிரிடும் போது, மகசூல் காணும்போது, இயந்திரங் களைப் பயன்படுத்தி வீடு கட்டும்போது, கட்டிடங்களைக் கட்டியெழுப்பும்போது, கப்பல்களைத் தயாரிக்கும்போது, படிக்க, எழுத, மதிநுட்பமான வேலைகளைக் கற்றுக்கொண்டு குமாஸ்தாவாக, வியாபாரியாக, அலுவலகத்தில் உதவியாளராகச் செயல்படும் நிலையில், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அமைச்சர்கள், கவிஞர்கள், இதழாசிரியர்கள், பேச்சாளர்கள், ஆசிரியர்களாக எங்கள் மக்கள் உருவாகி வருவதைப் பார்த்த பிறகும் உங்களுக்கு நாங்கள் சம மனிதர்கள்தான் என்று நிரூபிக்க வேண்டுமா என்ன?

சுதந்திரமாக இருக்க மனிதனுக்கு உரிமை உள்ளது. தன்னுடைய உடலின் மீது அவனுக்கு உடைமை உள்ளது என்றெல்லாம் நான் வாதாட வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? ஆனால், அவற்றை நீங்கள்தான் ஏற்கெனவே பிரகடனப்படுத்திவிட்டீர்களே! அடிமை முறை கொடுமையானது என்று நான் வாதாட வேண்டுமா என்ன? குடியரசு பெற்றவர்களுக்கா இந்தக் கேள்வி? அப்படி நான் விளக்க நேரிட்டால், அது என்னை நானே கேலி செய்வதாகிவிடும். உங்களையும் அவமானப் படுத்தும். அடிமைத்தளை தவறு என்று அறியாத மனிதன் இருக்க வாய்ப்பில்லை.

அப்படியிருக்க, மனிதர்களை மூர்க்கமாக நடத்துவதற்கோ, அவர்களுடைய சுதந்திரத்தைப் பறிப்பதற்கோ, உழைப்புக்கான கூலியைத் தர மறுப்பதோ, அடித்துத் துன்புறுத்துவதோ, இரும்புச் சங்கிலியால் கை, கால்களைக் கட்டி இழுப்பதோ, பட்டினிபோட்டு அவர்களுடைய எஜமானருக்கும் முன்பாக மண்டியிட நிர்ப்பந்திப்பதோ தவறென்று நான் வாதாட வேண்டுமா என்ன? நான் அதைச் செய்யப் போவதில்லை. அதைவிடவும் முக்கியமான பணிகளும் அதற்கும் அதிகமான தர்க்கத் திறனும் எனக்கு இருக்கிறது.

ஒரு அமெரிக்க அடிமைக்கு ஜூலை 4 என்பது என்ன? நான் சொல்கிறேன்: அநீதி, குரூரங்களுக்குதான் தொடர் பலியாடு என்ற கொடுமையை நினைவுகூரும் நாள் இது. இத்தனை காலம் இழைக்கப்பட்ட கொடூரங் களையும் மெல்லிய முக்காடு போட்டு மூடி மறைக்கும் தினம். (பிரெட்ரிக் டக்ளஸ்)

இத்தனை கறை படிந்துபோன நிலையை விவரித்தாலும் இந்தத் தேசத்தினால் நான் விரக்தி அடையவில்லை. அடிமைத்தளையை முறியடிக்கக்கூடிய சக்திகள் ஒன்றிணைந்தால் விடுதலை சாத்தியமே. ஆக, நான் எங்குத் தொடங்கினேனோ அங்கிருந்தே நம்பிக்கை யோடு விடைபெறுகிறேன். அமெரிக்காவின் விடுதலைப் பிரகடனத்தில் இருந்தே எனக்கான நம்பிக்கை ஒளிக் கீற்றைக் கண்டெடுத்துக் கொள்கிறேன்.

1845-ல் ‘சூயசசயவiஎந டிக வாந டுகைந டிக குசநனநசiஉம னுடிரபடயளள, யn ஹஅநசiஉயn ளுடயஎந’ என்ற தலைப்பில் தன்னுடைய முதல் சுயசரிதையை எழுதினார் டக்ளஸ். இதில் அமெரிக்காவின் அடிமைகளின் மாகாணமாக நிந்திக்கப்பட்ட மேரிலாண்டில் தான் அனுபவித்த கொடுமைகளைச் சித்தரித்தார். இந்தப் புத்தகம் உட்பட மொத்தம்

5 சுயசரிதைகளை அவர் எழுதி இருக்கிறார்.

பெண்களின் வாக்குரிமைக்கு உரிமைக் குரல் எழுப்பிய குடியுரிமைப் போராளி அவர்.

டக்ளஸிடம் இருந்து உத்வேகம் பெற்றுத் தான் 1960களில் அமெரிக்காவில் சிவில் உரிமைகள் இயக்கம் பிறந்தது.                 ட

 

வைதீகத்தைத் துளைத்தெடுத்த அண்ணாவின் அறிவாயுதம்

அண்ணாவின் பகுத்தறிவு – பார்ப்பனிய எதிர்ப்பு சிந்தனைகளின் தொகுப்பு இது. ஆழமான கேள்விக் கணைகளால் வைதீகத்தை அண்ணா எப்படி துளைத்தெடுத்திருக்கிறார் என்பதற்கு இந்த எழுத்துகளே சாட்சியங்கள்.

இலட்சார்ச்சனை : நம் தேசத்திற்கு இதர தேசத்தவர்களால் ஆபத்துகள் ஏற்படுமோ என்கிற பீதி உண்டாகியிருக்கிறது. நம் தேசத்திலுள்ள எல்லாச் சேத்திரங்களையும், நம்மையும் எந்தவிதமான ஆபத்துகளும் வரவொட்டாமல் தடுத்துக் காப்பாற்றும் பொருட்டு, சிறீரங்க சேத்திரத்தில் சிறீரங்க நாதனுக்கு இலட்சார்ச்சனை, மாசி மாதம் 29 ஆம் தேதி ஆரம்பித்து, பங்குனி 2 ஆம் தேதி 15.3.1942 முடிவடையும்படி நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது (இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்) என்று அறிக்கை வெளிவந்தது. அதன்படி இலட்சார்ச்சனை நடக்கிறது. இந்த இலட்சார்ச்சனை மூலம் ரங்கநாதர் ஆலயத்து ஊழியர்களுக்கும், புரோகிதக் கூட்டத்துக்கும் இலாபம்தான்! ஆனால், நாட்டுக்கு என்ன இலாபம்? ஆபத்தைப் போக்க இதுவா வழி?

இராபர்ட் கிளைவ் வந்த காலத்திலே இலட்சார்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தினோமே கண்டதென்ன? கிளைவின் கல்லறை மீது இந்தியாவை வென்ற வீரன் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது! இந்தப் பிரிட்டிஷ் வல்லரசை இன்று ஜப்பான் சில இடங்களிலே தோற்கடித்தது. அர்ச்சனைகளின் பலனா? யாகம், யோகம் செய்தா? அவை ஆத்மார்த்தத் துறையின் பணிகள்; பரலோக யாத்திரைக்குப் பிறகு பலன் வேண்டிச் செய்யப்படும் பழைமைகள்!

…பொன்னும், பொருளும், நேரமும், நினைப்பும் போருக்குச் செலவிட வேண்டிய இந்தப் பயங்கரமான வேளையிலே வெண் பொங்கலும், சித்ரான்னமும் உண்ண, ஒரு சாக்குக்காக இலட்சார்ச்சனை செய்யுங்கள், ரங்கநாதர் இரட்சிப்பார் என்று புரோகிதக் கூட்டம் கூறி மக்களின் பணத்தையும், நேரத்தை யும் பாழாக்குகிறதே, இதை என்னென்பது?

‘திராவிட நாடு’ 5.3.1942

இந்து இட்லரிசம் :  …கேள் இதைப் பரதா! இந்திரன் முதலான தேவர்கள் நம் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களிடம் தோழமையுடன் இருக்கக் கண்டேன். நம் தோழர்களின் ஆடையைக் கண்டீரோ, ஆயிரம் பொத்தல், கண்ணாயிரமுடைய இந்திரனின் கடாட்சம் அன்றோ அது! ஏழை மக்களின் வயிற்றிலே சதா மூண்டிருக்கும் பசித் தீயை என்னென்று கூறுவது? அது அக்னியின் அன்புப் பெருக்கன்றோ! பெரும்பாலான பஞ்சை மக்களின் உணவு, காற்று தானே பரதா! வாயுவின் வாஞ்சனை அல்லவோ அது! தரித்திரத்தில் புரளும் மக்களைக் கண்டிருப்பீர், வருணன் பிரத்தியட்சம் அல்லவோ அது! இதுபோல அந்த தேவாதிகள் காட்சி தருவதால்தான் நான் அந்தத் தேவாதிகளைக் குறை கூறாதீர் என்று உரைத்தேன் என்று முடித்தான் நக்கீரன்.

….பசிக்குதே பசிக்குதே என்று உரைத்தால், செய்த பாபத்தைக் காரணம் காட்டுவார்…

…வினை, எழுத்து விதி, சோதனை இவை தூளாயின தெரியுமோ? சம்மட்டியும், அரிவாளும், ஆளும் ரஷ்ய நாட்டிலே, அன்று எழுதியதை இலெனின் அழித்து எழுதிக் காட்டினார். அவதியுற்றோரை வாழச் செய்தார், அருள்மொழியாலல்ல, தேவாலயம் சுற்றியல்ல, தம் தீரத்தால், வீரத்தால் நெஞ்சு உறுதியால்!

பாதிக்குதே பசி என்று உரைப் போரும் அது உன் பாபம் என்று பதிலுரைப்போரும் அங்கு இல்லை! மத ஓடத்தில் ஏறிய மாந்தரே பலி பீடத்தில் சாய்ந்தீரே? ஆம்! வைதிகப் பீடத்திற்கு நீங்கள் இங்குப் பலியானீர்கள்! வாழ்வெனும் கடலைக் கடக்க மதமெனும் ஓடம் ஏறினீர்! பார்ப்பனியம் எனும் சண்ட மாருதம் அந்த ஓடத்தை வைதிகம் எனும் பாறை மீது மோதச் செய்து, இந்தப் பலி பீடத்தில் சாய்ந்தீர். அந்த இரத்தம் தோய்ந்த பலி பீடத்தை மனக்கண் படைத்தோர் காண முடியும்!

அந்தப் பலி பீடத்திலே சாய்ந்தவரின் தொகை கணக்கில் அடங்காது.

‘திராவிட நாடு’ , 29.3.1942

சங்கராச்சாரி பதவித் தற்கொலை: ஈட்டிய பொருளில் வாழ்க்கைக்குத் தேவையானது போக மீதியைச் சொத்தாகவும், சுகபோகக் கருவியாகவும் மாற்றாமல், ஏழைகள் உய்யச் செலவிட வேண்டும் என்ற உருக்கமான இந்த உபதேசம், துறவு நிலை பூண்டு உள்ளவரால், இல்லறவாசிகளுக்கு எடுத்து ஓதப்படுகிறது. மிகச் சரி! ஆனால், சுவாமிகளின் நிலைமை என்ன? அவர் வாழ்க்கை இருக்கும் விதம் எப்படி? மேனி வாடாது, பாடுபடாது, பல்லக்குத் தூக்கிகள் வேகமாகச் செல்ல வில்லையே, பக்த கோடிகள், மேலும் மேலும் பணம் தரவில்லையே, சூடிய பூ வாடிற்றே, பட்டாடையின் பளபளப்பு மங்குகிறதே, மணியின் மெருகு குலைகிறதே, பஞ்சணையில் மல்லிகையின் காம்பு உறுத்துகிறதே என்ற கவலைகள் தவிர, வேறு கவலையற்றுப் பாதத்தைப் பலர் தடவிக் கண்களில் ஒற்றிக் கொள்ள பகவானின் பிரதிநிதி நான் என்று கூறிக்கொண்டு கரி, பரி, காவலருடன் காடு உலவி வரும் ராஜபோகமன்றோ சங்கராச்சாரி யாருடையது! முதல் இல்லா வியாபாரம்! சோகமில்லா வாழ்வு! உழைப்பு கிடையாது! உல்லாசத்திற்குக் குறைவு கிடையாது! இங்ஙனம் இவர் வாழ்ந்து கொண்டு மிராசுதார், வியாபாரி, மற்றவர் ஆகியோருக்குக் கீதை உபதேசம் புரிவது, ஏதேனும் பொருளுடையதாகுமா? கன்னக்கோலன் – கள்வன் கேடு பற்றியும், காமவண்ணத்தான் ஒழுக்க போதனையும், கசடன் கற்றதனால் ஆன பயனையும் எடுத்துக் கூறுவது எள்ளி நகையாடக் கூடியதன்றோ!

சாமரம் வீச, சல்லாபிக்க, சோபித வாழ்வுக்குச் சொத்து தர, பரிவாரம் பெற்றுள்ள சங்கராச்சாரியார் வாழ்க்கைக்கு நியாயமான செலவு போக, மீதியை ஏழைக்கு அளிக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்த ஏட்டுச் சுரைக்காயை எவரே போற்றுவார்! யாரை ஏய்த்துவிட முடியுமென்று இவர் கனவு காண்கிறார் என்று கேட்கிறோம்.

இல்லறவாசிகள் நியாயமான செலவு போக, மீந்த பணத்தை (விஷம்) நஞ்சு எனக் கருதவேண்டும் என்கிறார் வேத விற்பன்னர். வெகு நன்கு. நாம் இல்லறவாசிகள் இன்ன இன்னவற்றையே நியாயமான செலவாகக் கொள்ளவேண்டும் என்று குறிப்பிடத் தயார்! விஷம் அவர்களிடம் கூடாது என்று விளம்பத் தயார்!

ஆனால், சுவாமிகள்! தங்கள் விஷயம் என்ன? தங்களுக்கு உலகமே மாயை என்ற தத்துவ ஆசிரியருக்கு, துறவிக்கு மடம் ஏன்? சொத்து சுகம் எதுக்கு? பணம் பரிவாரம் ஆகுமா? விஷமென்று எந்தப் பணத்தைக் குறிப்பிடு கிறீரோ அதனைத் தாங்கள் பருகியபடி தானே இருக்கிறீர்! மற்றவர்களாவது ஓரளவுக்கேனும் உழைத்து தமது திறமையைக் காட்டிப் பொருள் ஈட்டுகின்றனர். தாங்கள் உழைப்பது உண்டா? உடலில் உழைப்பு தரும் ஒய்ச்சல் என்ற அனுபவம் தங்களுக்குத் தெரியுமா? உழைத்துப் பயனில்லை என்ற நிலையில் உண்டாகும் சலிப்பு என்ற அனுபவம் தங்களுக்கு உண்டா? பசியை நீர் அறிவீரா? பஞ்சத்தில் அடிபட்டது உண்டா? இல்லையே! உழைக்காமல், ஊரார் உழைப்பில் உபாதானம் பெறுகிறீர். தங்கள் வாழ்க்கையின் வசீகரம் தங்கள் திறமையால் கிடைத்ததும் இல்லை! பிறரின் மடத்தனத்தால் தங்களுக்குக் கிடைப்பது, இத்தகைய வாழ்விலே இருப்பது நியாயமா? பிறருக்கு நீதி புகட்டும் பெரியோய், உமது வாழ்க்கையின் நியாயம் யாது என்று உரைக்க முடியுமா? என்று சங்கராச்சாரியாரை நாம் அறைகூவி அழைத்துக் கேட்கிறோம். அவரோ, அவரது அதிகாரம் பெற்ற வேறு யாரேனுமோ விடை கூறட்டும்; கேட்போம். வாழ்க்கைக்கு நியாயமான செலவு போக மிகுவதை ஏழைகளுக்குத் தரவேண்டும் என்று இவர் மொழிகிறார். இவர் துறவியினுடைய நியாயமான செலவு போக, மேலும் பணம் குவிப்பானேன்! இவரது இன்றைய வாழ்க்கை நியாயமான செலவினங்கள் கொண்டதுதானா?

மற்றொன்று கூறுகிறார்: ஆஸ்திகமும், அறியாமையும் ஒன்றே என்று கூறுவது போன்றுள்ளது அஃது. யுத்தம் முடியும் வரையிலாவது (இரண்டாவது உலகப் போர்) பகவான் நாமாக்களைச் சொல்ல வேண்டும் என்கிறார்.

இதிலிருந்து இரண்டு எண்ணங்கள் எழும். ஒன்று இதுவரை பகவானைத் தொழவில்லை என்பது. மற்றொன்று இடருற்ற போது ஈசனைத் தொழுதால் போதும் என்பது. இரண்டும் எத்துணை மடமையின் சிகரம் என்பதை நாம் விவரிக்கத் தேவையில்லை. மக்கள் இன்றுவரை பகவானை மட்டுமல்ல, அவரது பிரதிநிதி என்றுரைக்கும் பரபிரம்ம சொரூபிகளையும் தொழுது வந்தனர். வருகின்றனர். கண்ட பலன் என்ன? இதோ குண்டுவீச்சு! கடலில் கொந்தளிப்பு! உள்ளத்திலே பதைபதைப்பு! இதுவரை தொழாதவர் போலவும், இன்றேனும் தொழுது பாருங்கள் என்று கெஞ்சும் முறையிலும் சங்கராச்சாரியார் பேசுவதன் சூதை என்னவென்பது? சண்டை நேரத்திலே மக்கள் உயிரையும், உடைமைகளையும், ஊரையும், உற்றாரையும் காப்பாற்றும் வேலையில் இருந்து விட்டுக் கோயில் பெருச்சாளிக்குக் கொழுப் பேற்றும் வேலையைச் செய்ய மறந்துவிட்டால், ஆரிய இனம் இளைக்குமே என்றெண்ணி போர் முடியுமட்டேனும் ஆண்டவனைத் தொழுவீராக என்று கூறினார்.

இத்தகைய பேச்சு பாமரரை மேலும் மடத்தனத்தில் ஆழ்த்தும் சூது என்று நாம் கூறு கிறோம். இவரது உபதேசத்தின்படி முதலிலே இவர் தமது சொத்து, சுகத்தைத் துறந்து, பாடுபட்டு உழைத்து, பசித்தால் புசித்து, வியர்த்தால் குளித்து வாழும் வாழ்க்கையை மேற் கொள்ளட்டும். பார்ப்போம். சங்கராச்சாரியார் என்ற பதவியைத் துறக்கத் தயாரா? என்று கேட்கிறோம். உண்டா பதில்? ஊரார் கேட்பாரா? சங்கராச்சாரி பதவித் தற்கொலை!

‘திராவிட நாடு’ 19.4.1942

இந்து மதமும், தமிழரும் : மலடி மைந்தன், முயல் கொம்பை ஏணியாக அமைத்து வான்வெளியிலுள்ள மலரைப் பறித்து வந்தான் என்று ஒருவன் கூறும் கதையைப் போல, தொடக்கமோ, முடிவோ அற்ற ஒரு முழு முதல்பொருளை மத நூல்கள் கூறும் வழியே சென்று அப்பெரும் பொருள் அளிக்கும் இன்பத்தைப் பெறலாம் என்று கூறுவது போன்ற அறியாமை பிறிதொன்று இல்லை. மலடி மைந்தன் போன்றது கடவுள்; முயல்கொம்பு போன்றது மத நூல்கள் கூறும் நெறி; வான் மலர் போன்றது கடவுள் அளிக்கும் பேரின்பம். இதுகாறும் கூறியவை கடவுளைப் பற்றிய சுருக்கமான விளக்கமாகும். இதிலும் தெளிவடைய மாட்டார்க்கு விரும்பினால், பின்னும் தெளிவாக விளக்கப்படும்.

‘திராவிட நாடு’ – (17.5.1942)

சோதிடப் பரீட்சை : தியாகராசனும், வேணுவும் பச்சையப்பன் கல்லூரிச் சிநேகிதர்கள். வெகு நாள் பழக்கம் இல்லா விட்டாலும் இருவரும் மிகுந்த நட்புக் கொண் டிருந்தனர். வகுப்பில் இருவரும் சேர்ந்து வாசித்து வந்தனர். அதிகம் வளர்த்து வானேன்? இருவரும் மனமொத்த நண்பர்களாய் இருந்தார்கள்.

ஆனால், ஒரு விஷயத்தில் மாத்திரம் தியாகுவிற்கும், வேணுவுக்கும் அபிப்ராய பேத மிருந்தது. நாரதபுரம் நவீன சோதிட சாத்திரிகள் பேரில் வேணு அபாரமான அபிமானம் கொண்டிருந்தான். ஆனால், சோதிடத்தின் மேல் நம்பிக்கையற்றிருந்த தியாகுவுக்கு வேணுவின் வார்த்தைகள் வேப்பங்காய்களாய் இருந்தன. அடிக்கடி இருவருக்குள் தர்க்கம் நடக்கும்.

வார்த்தைகள் வலுத்தால் சண்டையில் முடியும் என்றறிந்த தியாகராசன் இறுதியில் சோதிட சாத்திரியாரையே பரீட்சிக்க நினைத்தான். அன்றைய தினசரியில் கண்ட விளம்பரம் அவன் கண்ணைப் பறித்தது.

நாரதபுரம்

நவீன சோதிட சாத்திரியார்

எதிர்காலக் கேள்வி நான்கிற்கு அணா எட்டு.

எழுதும் நேரத்தையாவது எந்தப் பூவின்

பெயரையாவது குறிக்கவும்

இதைக் கண்ட தியாகு எடுத்தான் காகிதத்தை; எழுதினான் பின்வருமாறு;

அய்யா, கீழ்க்கண்ட கேள்விகளுக்குத் தயவு செய்து விடைகளைத் தெரிவிக்கவும்.

  1. என் தாயார் உடம்பு சீக்கிரம் குண மாகுமா?
  2. என் நண்பர் வேணுவுக்கும், அவர் மனைவிக்கும் எப்பொழுது ஒற்றுமை ஏற்படும்?
  3. அவருக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா?

புஷ்பம் – கனகாம்பரம்

தங்களன்புள்ள,

தியாகராசன்

இதை உடனே தபாலில் சேர்த்து விட் டான். அவசரத்தில் ஸ்டாம்பு (அஞ்சல் தலை) ஒட்ட மறந்து விட்டதால், சாத்திரியார் இரண்டணா அதிகம் கொடுக்க வேண்டியது ஆயிற்று. தியாகு தன் நண்பன் விலாசத்தையே எழுதியிருந்தான்.

ஒரு வாரம் கழிந்தது. வேணுவுக்கு சாத்திரி யாரிடமிருந்து வந்த கடிதத்தில் கண்டிருந்த தாவது:

உங்கள் தாயாரின் உடம்பு இன்னும் ஒரு

வாரத்தில் குணமாகும். தங்கள் நண்பருக்கு

ஆண் குழந்தை பிறக்கும். அது பிறந்தவுடன்

அவர் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

வேணு ஒன்றும் புரியாமல் விழித்தான். அருகிலிருந்து தியாகு வயிறு வெடிக்கச் சிரிக்காமல் இருக்க முடியுமா? தியாகுவின் தாயார் இறந்து அனேக வருடங்களாயின. வேணுவின் துரதிர்ஷ்டமோ, சாஸ்திரியாரின் துரதிர்ஷ்டமோ வேணுவுக்கு இன்னும் விவாகம் ஆகவில்லை!

திராவிட நாடு 5.7.1942

களிமண்ணும் கையுமாக: “வீரர் வாளும் கையுமாக இருந்து நாட்டையும், வீட்டையும், மானத்தையும் காப்பாற்றுகின்றனர்.”

“தர்ப்பையும் கையுமாக இருந்துகொண்டு வஞ்சகர்கள் மன உறுதியற்றவர்களை மயக்கியும், மிரட்டியும், அடக்கி வருகின்றனர்.”

“பேனாவும் கையுமாக நீ இருக்கிறாய் பரதா! பயன் என்ன?” என்று வீரன் சலித்துக் கொண்டு கேட்டான்.

“திடீரென்று உனக்கு ஏனப்பா, கைகளின் நிலை பற்றிய ஆராய்ச்சியிலே ஆர்வம் பிறந்து விட்டது?” என்று வீரனை நான் கேட்டேன்.

“கை செய்யும் வேலை கருத்தைக் காட்டுவதுதான்” என்றான் வீரன்.

“உண்மைதான்! கருத்து இருக்கும் விதத்திற்கு ஏற்றபடிதான் கையின் நிலையும் இருக்கும். ஆனால், இன்று என்ன விசேஷம்? இந்த ஆராய்ச்சியிலே இறங்கிவிட்டாய்?” என்று மேலும் கேட்டேன்.

“அந்தக் கரங்கள், விமான விசையைப் பிடித்துச் செலுத்துகின்றன; டாங்கிகளை ஓட்டுகின்றன; பீரங்கிகளைப் பேச வைக்கின்றன. துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டுள்ளன; எதிரியின் பிடரியிலே பாய்கின்றன; சுதந்திரக் கொடியைத் தாங்குகின்றன; ஆராய்ச்சி வாளைப் பிடிக்கின்றன; அறிவுச் சுடரை ஏந்தி உள்ளன; ஆர்ப்பாட்டக்காரரை அடக்குகின்றன; அரசுகள் நடத்துகின்றன; அந்தக் கரங்களே கரங்கள், மற்றவை மரங்கள்!” என்றான் வீரன் ஆர்வத் தோடு.

“வெளிநாட்டவரின் கரங்களைப் புகழ்வதே உன் வேலையா வீரா? நம்நாட்டுக் கரங்கள் இலேசா?” என்றேன் நான்.

“கூப்பிய கரம்! தலையிலே மோதும் கரம்! வயிற்றைப் பிசையும் கரம்!” என்று வருணித்தான் வீரன் வெறுப்புக் கலந்த குரலுடன்.

“அதற்கு என்ன செய்யலாம்?” என்று நான் கூறினேன். வீரன் திருப்தி அடையவில்லை.

“பரதா! கப்பல் ஓட்டும் கரம், கோட்டை எதிரே நின்று கொடி தாங்கும் கரம்; பாட்டு மொழி ஏட்டைத் தாங்கும் கரம் இல்லை என்பதற்கு, வெளிநாட்டான் மீது மட்டும் பழி சுமத்தினால் போதாது. களிமண்ணும் கையுமாக நம்மவரை இருக்குமாறு அவனா சட்டம் இயற்றி இருக்கிறான்? வெட்டி வேலைக்குக் கரங்களைப் பயன்படுத்தும்படி வெள்ளையனா பணித்தான்? வீணருக்கு உழைக்கும்படி அவனா ஏவுகிறான்?” என்று வீரன் கேட்க,

“எனக்கு ஒன்றும் புரியவில்லையே. களி மண்ணும் கையுமாக நாம் ஏன் இருக்கிறோம்?” என்று நான் வீரனைக் கேட்டேன்.

“கைவண்ணம் காணத்தானே போகிறாய்! திங்கட்கிழமை நமது தீராதி தீரர்களின் வேலை என்னவாக இருக்கும் தெரியுமோ! களி மண்ணும் கையுமாக இருப்பர், வினாயக சதுர்த்தி அப்பா – அன்று வீட்டுக்கு வீடு களிமண்ணும் கையுமாக இருப்பர். யானை முகத்தானை, மத்தள வயிற்றானை, மகேஸ்வரன் மைந்தனை ஈரக்களி மண்ணால் செய்து எள் உருண்டையும், அப்பமும், கொழுக்கட்டையும், அவல், பொரியும் படைத்து குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போட்டு விநாயக சதுர்த்தி பூஜை செய்வர்” என்று வீரன் விளக்கிய பிறகே,

“அடடே! அதையா சொன்னாய்? வேடிக்கைதான்! களிமண்ணும், கையுமாகத்தான் இருப்பர்” என்று கூறிக்கொண்டே நான் சிரித்தேன்.

“கையில் மட்டுமல்ல களிமண்! மண்டை யிலும் அதுவேதான்” என்றான் நண்பன் கோபத்தோடு.

“திட்டாதே! தேவ நிந்தனை செய்யாதே! ஏதோ பழைய வழக்கம் நடக்கிறது” என்று நான் அடக்கினேன். அவனா அடங்குபவன்?

“வினாயகருடைய உருவத்தைக் கவனி! மனித உடல், யானை முகம், மத்தள வயிறு, ஒற்றைத் தந்தம் – நமது கடவுளின் உருவம் இதுவென்று கூறிப்பார்! நாகரிக மக்களிடம். வயிறு குலுங்க நகைப்பர். அவருக்கு வாகனம் பெருச்சாளி! இது கேட்டால் எவன்தான் இந்த மக்கள் தன்னாட்சிக்கு இலாயக்குள்ளவரென்று கூறத் துணிவான்? உலக மக்களின் பிரதிநிதிகள் கூட்டம் ஒன்று நடந்தால் அதற்கு உச்சியில் குடுமியுடையோனும், கழுத்திலே மண்டை யோட்டு மாலையுடையோனும், காட்டெருமை முகத்தோனுமாகப் பலர் சென்றால், மற்ற நாகரிக உருவங்கள் நகைக்காவா? நீயே கூறு சுந்தரிகள் பலர் சொகுசாக ஆடிப்பாடும் வேளையிலே மந்தி முகவதி வந்தால் கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா? உண்மையிலே கூறு. ஏசுவின் உருவம் எத்தகைய கருணைபொழியுங் கண்களைக் காட்டக் காண்கிறோம். புத்தர் உருவின் முகப்பொலிவையும், சாந்தியையும் நோக்கு. பக்கத்தில் பெருச்சாளி வாகனனின் உருவத்தை நிறுத்திப்பார்! கடவுளின் காட்சி எனும் கூத்திலே கணபதி ஒரு விதூஷகரராகவே பாவிக்கப்படுவார்” என்று வீரன் உரைத்தான்.

இவையும் இவை போன்றவையும் வெறும் ஆரிய மதச்சேறு! தமிழர்கள் இந்த உளைச் சேற்றிலே உழலுமட்டும், முன்னேற்றம் ஏது? வாழ்வு ஏது? களிமண்ணும் கையுமாக இருக்கும் தோழர்களே, கசடர் புனைந்துரைகளைக் கடவுள் கதையென்று நம்பி ஏமாளிகளாக இருக்குமட்டும், அறிவு உலகில் நம் நாட்டுக்குக் கோமாளிப் பட்டமே சூட்டப்படும். இவற்றை விட்டுவிடும் நாளே, சுயமரியாதை பிறக்கும் வேளையே, மக்களின் விடுதலை நாள்! அந்த நாள் என்று வரும் என்ற ஏக்கமே எனக்குப் பிறந்தது. வீரனின் பேச்சுக்கேட்டு, இதனைத் தான் உங்கட்கும் உரைத்தேன்/ உள்ளத்தில் கோபமின்றி. யோசித்துணர்க!

‘திராவிட நாடு’, 12.9.1942

அடுத்த வீட்டு அகிலாண்டம் :

அடுத்த வீட்டு அகிலாண்டம் கட்டிக் கொண்ட தாலி, எட்டாம் மாதம் அறுக்கப்பட்டது. அவளை மணந்த வருக்கு இருமல் நோய் என்று ஊராருக்குத் தெரியும். ஆசாமி மெத்த இளைத்து, மேனி கருத்துத் தள்ளாடி நடந்து, தடி தூக்கி நின்றான் என்பது கண்ணால் கண்ட காட்சி. ஆனால் சாதகம் பார்த்த அய்யர், ஜாம் ஜாமென முடிக்கலாம் முகூர்த்தத்தை. ஜாதகப் பொருத்தம் பேஷாக இருக்கு. பெயர் ராசிக்கும் பார்த்தேன், பூ வைத்தும் கேட்டேன்! என்று கூறினார்.

கலியாணம் முடிந்தது. களிப்புக் கொஞ்சம் ஆடிற்று, அதனால் களைத்தார், நோயாளி மாப்பிள்ளை! சனிக் குற்றம் என்றார் அய்யர், விளக்கேற்றிப் பார்த்தார்கள். வீண் சிரமமே கண்ட பலன்! விண்ணுலகம் சென்றார் வயோதிகர். விம்மி விம்மி அழுகிறாள் விதவை.

இதைக் கண்டீர்கள் கண்ணால்? எத்தனையோ பொருத்தம் பார்த்தாரே சோதிடர், எல்லாம் என்னாயிற்று என்று கருத்துக்குச் சிறிது வேலை கொடுத்தீர்களா? இல்லை! வீட்டிலே மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் பிறந்ததும் சோதிடரை நாடுகிறீர்கள். அவர் வந்ததும் கண்ணால் கண்டு பேசுகிறீர்கள் முன்பு பார்த்தது என்ன ஆயிற்று என்று கேட்டீர்களா? கண்ணால் கண்டீர்கள். கருத்திலே தெளிவு கொண்டால்தானே கேட்பீர்கள், அதுதானே இல்லை. அய்யோ தோழரே!

அய்யர் பார்த்த சோதிடம் அவருக்குத் தட்சணை தந்ததேயன்றி, சோதிடம் கேட்பவருக்குப் பலன் தரவில்லையே என்று யோசிக்கிறீர்களா? இல்லையே! வழியிலே குடியிருப்பது தெரிந்தும், அவ்வழி நடப்பவர் விழியற்றவர் என்று உரைப்பர். உங்களின் கருத்து குருடானதைக் கூறினாலோ கடுங்கோபம் கொள்கிறீர்; தெரிந்தும் தெளிவு கொள்ள மறுக்கிறீர்!

‘திராவிட நாடு’ 10.1.1943

(டாக்டர் அண்ணா பரிமளம் தொகுத்த ‘அண்ணாவின் பகுத்தறிவுக் களஞ்சியம்’ நூலிலிருந்து)

(சிந்தனைகள் தொடரும்)

நிமிர்வோம் பிப்ரவரி 2019 மாத இதழ்

You may also like...