திராவிட இயக்க வரலாற்றில் கருஞ்சட்டைப் படை
திராவிடர் இயக்கத்தின் மூத்த இதழியலாளர் 92ஆம் வயதை எட்டியுள்ள கவிக்கொண்டல்
மா. செங்குட்டுவன், திருச்சி கருஞ்சட்டைப் பேரணி அணி வகுப்பைத் தொடர்ந்து இயக்க வரலாற்றை நினைவுகூர்ந்து ‘நிமிர்வோம்’ இதழுக்கு அனுப்பிய கட்டுரை.
சென்ற 23.12.2018 அன்று திருச்சி மாநகரமே குலுங்கும் அளவுக்கு மாபெரும் கருஞ் சட்டைப் பேரணி நடை பெற்றுப் புதிய ஒரு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியைப் ‘புரட்சிக் பெரியார் முழக்கம்’ ஏட்டில் படித்தவுடன் பழைய நிகழ்ச்சி களெல்லாம் எனது நினைவில் நிழலாடின. என்போன்ற பெரியாரின் கொள்கை யுடைய மூத்த தோழர்களெல் லாம் மகிழ்ந்து பெருமைப் படக்கூடிய நிகழ்ச்சி இது.
இதேபோல் கருஞ் சட்டைப் படை மாநாடு 1946இல் மதுரையில் நடந்த போது வைத்தியநாத அய்யர் கும்பல் பந்தலுக்கு தீ வைத்தது.
வைத்தியநாத அய்யர் காங்கிரசுப் பிரமுகர். அவர்தான் காங்கிரசின் தரம் தாழ்ந்த பேச்சாளரான அணுக்குண்டு அய்யாவு மற்றும் சில அடியாட்களை ஏவிவிட்டு மாநாட்டுப் பந்தலைக் கொளுத்தச் செய்தார். மாநாட்டில் கூடி யிருந்த ஆயிரக்கணக்கான வர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியில் வந்தனர்.
நடிகவேள் எம்.ஆர். இராதாவும் அவர் குழு வினரும் தங்கியிருந்த வீட்டின் முன் கூடி அவர்களையெல் லாம் தாக்க முற்பட்டபோது, எம்.ஆர். இராதா அவர்கள் கைத் துப்பாக்கியோடு வீட்டின் முன் நின்றார். அவர் களெல்லாம் அஞ்சி ஓடினர்.
மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த கருஞ் சட்டைத் தோழர்களைக் கண்ட இடங்களிலெல்லாம் காங்கிரசு அடியாட்கள் தாக்கினர்.
1945ஆம் ஆண்டு திருச்சி யில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் தான், கழகச் சார்பில் கருஞ் சட்டைப் படை அமைப்ப தென்று முடிவு செய்யப் பட்டது. அந்தப் படையின் அமைப்பாளர்களாக ஈ.வெ.கி. சம்பத்தும் கவிஞர் கருணானந் தமும் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு தான் மதுரையில் கருஞ்சட்டை மாநாடு நடைபெற்றது. பல்லாயிரம் பேர் கருஞ்சட்டையுடன் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழக வளர்ச் சியையும் கருஞ்சட்டைப் படையையும் கண்டு அன்றைய காங்கிரசு ஆட்சி அஞ்சியது. அன்றைய உள் துறை (போலீசு) அமைச்சராக இருந்த டாக்டர் சுப்பராயன், கருஞ்சட்டைப் படைக்குத் தடை விதித்தார். கருஞ் சட்டைத் தோழர்கள் பொங்கி எழுந்தனர்.
தந்தை பெரியார் அவர்கள் அப்போது விடுத்த அறிக்கை யில் கருஞ்சட்டைப் படை என்பது தொண்டர் படையே தவிர, போர்ப் படையல்ல; இந்தத் தொண்டர் படைக்குத் தடை விதித்தது கண்டிக்கத் தக்கது என்று தெரிவித் திருந்தார். கருஞ்சட்டைப் படையினரை மட்டுமன்றி, இனிக் கழகத்தவர் எல்லோரும் கருப்புடை அணிய வேண்டும் என்று அறிவித்தார். அதன்படி அய்யா பெரியாரே கருஞ் சட்டை அணியத் தொடங் கினர். கழகத்தவர் எல்லோ ருமே கருஞ்சட்டையுடன் காட்சியளித்தனர். “முடிந்தால் கருஞ்சட்டை அணிந்தவர்கள் எல்லோரையும் கைது செய்து பார்” என்று அரசுக்கு அறைகூவல் விடுத்தார் அய்யா.
கருஞ்சட்டைத் தடையைக் கண்டித்து சென்னையில் ஒரு மண்டபத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. எல்லோரும் கருஞ்சட்டை அணிந்து கலந்து கொண்டனர். அரசினால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அந்தக் கூட்டத்துக்கு அண்ணா அவர்கள் கருஞ்சட்டை அணிந்து வந்தார்.
அண்ணா அவர்களுக்கு கருஞ்சட்டை அணி வதில் உடன்பாடு இல்லை என்றும், அவர் கருஞ் சட்டை அணியாமலே கும்பகோணத்தில் நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார் என்றும் மற்றக் கூட்டங்களிலும் அவர் கருஞ்சட்டை அணியாமலே பேசி வருகிறார் என்றும், அய்யாவிடம் சிலர் கோள் மூட்டினர். அய்யா அவர்கட்கும் அண்ணா அவர்கட்கும் இடையில் சிறிது காலம் நெருக்கம் இல்லாமல் இருந்து வந்தது. அண்ணா அவர்கள் மனந் தளரும் படியான காரியங்கள் நடைபெற்றன. அப்போது அண்ணா அவர்கள் தமது ‘திராவிட நாடு’ ஏட்டில் ‘நான் இப்போது ‘தளபதியல்ல ‘தளர்பதி’ ஆகிவிட்டேன்’ என்று எழுதினார். அய்யாவிடம் போய் அண்ணாவை மறை முகமாக விமர்சித்து ‘வத்தி’ வைப்பவர்கள் எல்லாம் யார் யார் என்பது அண்ணாவுக்கும் தெரியும்.
அப்படிப்பட்டவர்களை ‘விஷ விவசாயிகள்’ என்று குறிப்பிட்டு எழுதினார் அண்ணா. பின்னர் தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில மாநாட்டுக்கு அண்ணா அவர்கள் மாநாட்டுக்கு வராததைக் குறித்து, நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்கள் தமது நாடகத்திலேயே அண்ணாவை மறைமுகமாக விமர்சித்து வசனம் பேசினார்.
அப்போது திருவாரூரில் ‘முரசொலி’ வார இதழ் நடத்திக் கொண்டிருந்தார் கலைஞர். அவர் தமது ‘முரசொலி’ இதழிலேயே ‘நாடகத்தில் நஞ்சு கலந்தார் இராதா’ என்று எழுதினார்.
இந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அண்ணா. சென்னையில் நடைபெற்ற கருஞ்சட்டைத் தடை எதிர்ப்புக் கண்டனக் கூட்டத்தில் அண்ணா கருப்புச் சட்டையுடன் வந்து கலந்து கொண்டார்.
அண்ணாவிடம் கருஞ்சட்டை இல்லாததால் சென்னை வந்து நாவலர் நெடுஞ்செழியனிடம் ஒரு கருஞ்சட்டையைப் பெற்று அணிந்து கொண்டு வந்தார். நெடுஞ்செழியனின் சட்டை அண்ணாவுக்குச் சரியாக இல்லை தொள தொளவென்று இருந்தது.
அண்ணா அவர்கள் கருஞ்சட்டையுடன் மேடை நோக்கி வந்தபோது அய்யா பெரியார் அவர்களே எழுந்து, அண்ணாவைக் கட்டி தழுவி வரவேற்றார் என்பது வரலாற்றுச் செய்தி.
அப்பொழுது கருஞ்சட்டை அணியாத திராவிடர் கழகத் தோழரைக் காண முடியாது.
“கருஞ்சட்டை அணிவதை மாற்றுக் கட்சியினர் கிண்டல் செய்தும் கீழ்த்தரமாகப் பேசியும் வந்தார்கள். திருடன்தான் கருஞ்சட்டை அணிவான் என்பார்கள். அதற்கு மேடையிலே சரியான சூடு கொடுத்தார்கள் கழகப் பேச்சாளர்கள். கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் என்ற பழமொழி இருப்பதைச் சுட்டிக் காட்டினார்கள்.
திருடன் நுழைய முடியாமல் வீட்டுக்குப் போடப்படும் பூட்டு சரியான காவல்காரன் அல்லவா? பூட்டு கருப்பாகத்தானே இருக்கும். அதனால்தான் இந்தப் பழமொழி வழங்கி வந்தது.
கருப்புச் சட்டை அணிந்தவர்கள் எல்லாரும் திருடர்கள் என்றால் நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் கருப்புடை அணிகிறார்களே அவர்களை என்ன என்று சொல்வது என்று நமது பேச்சாளர்கள் கேட்டனர்.
வாயடைத்துப் போனார்கள் வாய்க் கொழுத்துப் பேசிய மாற்றுக் கட்சியினர்.
அப்போது கருஞ்சட்டை அணிவதைக் கேலி செய்தவர்கள், இப்போது அய்யப்பன் கோவிலுக்குப் போகும் பக்தர்கள் கருப்புடை அணிகிறார்களே. இவர்களைப் பார்த்துத் திருடர்கள் என்று சொல்லுவார்களா?
‘கருப்புக்கு மறுப்பு’ என்று ‘விபூதி வீரமுத்து சுவாமிகள்’ என்ற பெயரில் அப்போது வலம் வந்து கொண்டிருந்த பேர்வழியை எழுத வைத்தார்கள். அந்த ஆள் காங்கிரசுக்காரர்களின் ஆதரவோடு மேடைக்கு மேடை திராவிடர் கழகத்தைக் கீழ்த்தரமாகத் தாக்கிப் பேசுவார். அந்த ஆளுக்கு நல்ல கூலி கொடுப்பார்கள். கடைசியில் அந்த ஆள் இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டார்.
மதுரைக் கருஞ்சட்டை மாநாட்டைக் கொளுத்திய அணுக்குண்டு அய்யாவு கடைசிக் காலத்தில் சென்னையில் உள்ள காங்கிரசுக்காரர்களிடமெல்லாம் சென்று பிச்சையெடுத்துப் பிழைக்க வேண்டி வந்தது.
இந்தச் செய்திகள் எல்லாம் இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கட்டுரையை எழுதினேன். மீண்டும் தேவைப்படும் போதெல்லாம் இதே போன்ற பழைய செய்திகளைக் கட்டுரை வழியாகத் தெரிவிப்பேன்.
நிமிர்வோம் ஜனவரி 2019 மாத இதழ்