21. மஞ்சள் கரைகிறது, கரைந்து கொண்டே வருகிறது
இந்தியாவில் கம்யூனிஸம் பரவிவருகிறதா? கம்யூனிஸம் என்றால் இரு விஷயங்களைக் குறிக்கும். ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி; மற்றொன்று வறுமை காரணமாக ஏற்படும் அதிருப்தி. முன்னையதை இந்தியா சட்டை செய்யவில்லை. ஏனென்றால் பொதுத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட்கள் வெற்றிபெற முடியாது. இது ஒரு கேள்வியும் பதிலும். கேள்வி கேட்டவர், லண்டன் டெயிலி மெயில் என்ற பத்திரிகையின் நிருபர். பதில் கூறியவர் இந்துஸ்தான் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு அவர்கள். இங்கு, நாம் இதை எடுத்துக்காட்ட எண்ணியது, இந்தியா என்ற பெரிய நிலப்பரப்பில் – உபகண்டத்தில், கம்யூனிஸம் எந்த அளவில் பரவியிருக்கிறது என்பதை எடை போட்டு நிறுத்த, எடுத்துக் காட்டவேண்டுமென்கிற எண்ணத்தோடல்ல. கேள்விக்குப்பதிலாக இந்துஸ்தானத்தின் முதல் மந்திரி கூறியிருக்கும் பதிலில், எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது; இந்த மஞ்சள் குளிக்கும் நிலைமை இன்னும் நீடிக்குமென்கிற ஒரு நினைப்புக்கு இடமுண்டா? என்பதை எடுத்துக்காட்ட வேண்டுமென்பதற்காகத்தான். கம்யூனிஸ்ட் கட்சியால், நாட்டில் பரப்பப்படும் கருத்துக்களால் உண்டாகும் கம்யூனிஸம்; சுரணடல்காரர்களின் ஆதிக்கம் நீடிப்பதால், தொடர்ந்து...