1. கும்பகோணம் போராட்டம்
உரிமைப் போராட்டத்தை நிறுத்தவேண்டுமென்று, தஞ்சையில் 28.12.1948ம் நாள் நிர்வாகக் கமிட்டி முடிவு செய்தது. அதையொட்டி 29-12-1948ல் தலைவர் பெரியாரவர்கள் கொடுத்த அறிக்கை:-
கும்பகோணத்தில் சர்க்காரால் திராவிட கழகப் பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக அநீதியாகப் போடப்பட்ட 144-அய் எதிர்த்து நடத்திய போராட்டத்தை 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை கடுமையான தடியடிப் பிரயோகத்தால் நிறுத்த சர்க்கார் முயற்சி செய்து பார்த்தும், அம்முயற்சி அவர்களுக்கும் பயன்படாமல் மேலும் மேலும் போராட்டம் மக்களுக்குள் வேகத்தையும் உணர்ச்சி யையும், ஊக்கத்தையும் கொடுத்துத் தொடர்ந்து நடந்து வந்ததால் 26-ந் தேதி முதல் சர்க்கார் தடியடியை நிறுத்திக் கொண்டதோடு உத்திரவை எதிர்த்தவர்களையும் எதிர்ப்புக்கு ஏற்பட்ட சட்ட நிபந்தனைப்படி அரஸ்டு செய்யாமலும் விட்டு விட்டதால். இனி அங்கு போராட்டம் தேவை இல்லை என்று கருதி போராட்டத்தை நிறுத்தி விடலாம் என்று 28-ந்தேதி கூடிய திராவிட கழக மத்திய நிர்வாகக் கமிட்டி முடிவு செய்திருக்கிறது. நாளையோடு நிறுத்தப்பட்டுவிடும். ஆகவே கும்பகோணத்துக்கு வெளியூரிலிருந்து வந்த தொண்டர்கள் அருள்கூர்ந்து அவரவர்கள் ஊருக்குச் சென்றுவிட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். – ஈ.வெ.ராமசாமி.
குடி அரசு, அறிக்கை : 01.01.1949