கர்ப்பத்தடையைப்பற்றி இந்நாட்டில் சுயமரியாதை இயக்கமும், குடிஅரசுப் பத்திரிகையும் சுமார் 7,8 வருஷங்களுக்கு முன்பிருந்தே மகாநாடுகள் கூட்டி தீர்மானங்கள் மூலமாகவும், பிரசங்கங்கள் மூலமாகவும், வியாசங்கள், தலையங்கங்கள் மூலமாகவும், பொதுஜனங்களுக்கு எடுத்துச் சொல்லிப் பிரசாரம் செய்து வந்திருக்கின்றன. மேல்நாடுகளிலும் கர்ப்பத்தடையைப்பற்றி சுமார் 70, 80 வருஷ மாகப் பிரசாரம் செய்துவரப்படுவதாகவும் தெரியவருகிறது. தோழர் பெசண்டம்மையார் சுமார் 50 வருஷங்களுக்கு முன்பாகவே கர்ப்பத்தடைப் பிரசாரத்தில் கலந்திருந்து பிரசாரம் புரிந்ததாகவும், மற்றும் கர்ப்பத்தடை பிரசாரமானது, சட்டவிரோதமானதல்ல என்று வாதாடி கர்ப்பத் தடை பிரசாரத்துக்கு அரசாங்கத்தை அனுமதிக்கும்படி செய்ததாகவும், அவ் வம்மையார் சரித்திரத்திலிருந்தும் விளங்குகின்றது. இவைகள் மாத்திரமல்லாமல் மேல்நாடுகளில் இன்றும் பல தேசங் களில் தனிப்பட்ட நபர்களாலும், சங்கங்களாலும் கர்ப்பத்தடை பிரசாரங் களும், அது சம்மந்தமான பத்திரிகைகளும், புத்தகங்களும் ஏராளமாய் இருந்துவருகின்றன. இவைகளையெல்லாம்விட மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கர்ப்பத்தடைப் பிரசாரம் செய்ய பல அரசாங் கங்கள் அதற்கென ஒரு இலாக்காவை ஏற்படுத்தி அதன்மூலம் பிரசாரங்கள் செய்தும் வருகின்றன....