எது துவேஷம்?
நவம்பர் 1-11-33ந்தேதி வெளியான சுதேசமித்திரன் பத்திரிகையில் கர்ப்பத்தடை ஆதரிப்புக்கூட்ட நடவடிக்கை வெளியாயிருப்பதில் பார்ப்பனர்கள் பேசியதை விபரமாய் பிரசுரித்துவிட்டு “வரதராஜலு நாயுடு தமிழில் பேசினார்” என்று ஒருவரியில் முடித்து விட்டது. ஆங்கிலத்தில் பேசிய பார்ப்பனர்களின் பேச்சை தமிழில் மொழிபெயர்த்து விரிவாகப் பிரசுரிப்பதும், தமிழில் பேசிய பார்ப்பனரல்லாதார் பேச்சை ஒரே வரியில் தமிழில் பேசினார் என்று பிரசுரித்திருப்பதையும் கவனித்தால் இந்த பார்ப்பன பத்திரிகையின் துவேஷ மனப்பான்மை நன்கு விளங்குகிறதல் லவா? இங்கிலீஷ் பேச்சுகளையெல்லாம் மொழி பெயர்த்து பிரசுரித்த இந்தப் பத்திரிகை தோழர் வரதராஜலுவின் தமிழ் பேச்சை பூராவாகப் போடாத தற்குக் காரணம் என்ன? தமிழ் மொழிமீதுள்ள வெறுப்பா? அல்லது பார்ப் பனரல்லாதார் மீதுள்ள பார்ப்பன துவேஷமா? என்றுதான் கேட்கிறோம். பார்ப்பனப் பத்திரிகைகளை ஆதரிக்கும் தமிழ் வாசகர்கள் இதைச் சிந்தனை செய்வார்களாக.
குடி அரசு – செய்திக் குறிப்பு – 05.11.1933