புரட்சி

“குடி அரசை” ஒழிக்கச் செய்த முயற்சியால் “புரட்சி” தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும் பான்மையான மக்களின் ஆக்ஷியாகிய குடி அரசுக்கு உலகில் இடமில்லை யானால் கண்டிப்பாகப் புரட்சி தோன்றியே தான் ஆக வேண்டும்.

அந்த ஐதீகப்படியே புரட்சி தோன்றி இருப்பதால் “புரட்சி”யை புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் வரவேற்பார்கள் என்பதில் நமக்குச் சிறிதும் ஐயமில்லை.

நமது முதலாளிவர்க்க ஆக்ஷியானது தனது காவலாளிகளாகிய பாதிரி வர்க்கத்திற்கு  அடிமையாக இருக்க வேண்டியிருப்பதால் “குடி அரசை” அதன் முதுகுப்புறத்தில் குத்திவிட்டது. இந்தக் குத்தானது “பாதிரி வர்க்கத்தை ஒழித்தால்தான் முதலாளி வர்க்கத்தை அழிக்க முடியும்” என்ற ஞான போதத்தை உறுதிப்படுத்திவிட்டது.

ஆதலால் நமது “புரட்சி”யானது “குடி அரசை”க்காட்டிலும் பதின் மடங்கு அதிகமாய் பாதிரி வர்க்கத்தை அதாவது மதப்பிரசார வர்க்கத்தை அடியோடு அழிப்பதையே கங்கணமாய்க் கொண்டு வெளிவரவேண்டி யதாகிவிட்டது.

இதன் காரணமாய் “புரட்சி” எந்த நிமிஷத்தில் குத்துப்பட்டாலும் படலாம். எந்த வினாடியில் கொலையுண்டாலும் உண்டாகலாம். ஆனால் சுயமரியாதை புரட்சியானது இனி ஒரு நாளும் மறையாது. அது வெற்றி பெரும் வரை ஒரு க்ஷணமும் ஓய்வு கொள்ளாது என்பது மாத்திரம் உறுதி.

காங்கிர° காரியதரிசியான தோழர் ஜவஹர்லால் அவர்கள், தான் இதுவரை மத விஷயமாய் புரட்சி செய்யாமல் ஏமாந்து விட்டதைப்பற்றி மனமார வருந்தியும் மதவிஷயத்தில் தான் அலட்சியமாய் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கம் பலப்பட்டு வருவதற்கு இடம் கொடுத்தாகி விட்டது என்று வியக்தமாக எடுத்துச் சொல்லியும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டார்.

மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி.

மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி.

மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி.

மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி.

மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை.

மதமே முதலாளி வர்க்கத்துக்கு காவல்.

மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு.

மதமே உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி என்கின்ற முடிவின்பேரிலேயே “புரட்சி” தோன்றியிருக்கிறது என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்.

ஆதலால் மனித சமூகத்தில் சமதர்ம வாழ்க்கையை ஏற்படுத்த மதங்களை முதலில் அழித்தாக வேண்டும் என்று காங்கிர° காரியதரிசி தோழர் ஜவஹர்லால் அவர்கள் இப்போதாவது கண்டுபிடித்ததற்கோ அல்லது தைரியமாய் வெளியிட்டதற்கோ நாம் உண்மையிலேயே மகிழ்ச்சி யடைகின்றோம்.

சோம்பேறித்தனமாய் வாழ நினைத்து சுயமரியாதை இயக்க நிழலில் திரிந்தவர்களுடையவும், பட்டம், பதவி, அதிகாரம், செல்வம் ஆகியவைகள் அடையக் கருதி சுயமரியாதை இயக்கப் போர்வை போட்டுக் கொண்டி ருந்தவர்களுடையவும் ஆதரவு நம் “புரட்சி”க்கு இனி சிறிதும் எதிர்பார்க்க முடியாது என்பதை நன்றாய் உணர்ந்தே “புரட்சி” தோன்றியிருக்கிறது.

ஆதலால் பாடுபட்டு உழைத்து ஊரானுக்குப் போட்டு விட்டு பட்டினி யாயும் சமூக வாழ்வில் தாழ்மையாயும் வாழும் மக்களின் ஆதரவையே “புரட்சி” எதிர்பார்த்து நிற்கிறது.

வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்கு இன்று “புரட்சி” வெளிவரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த “புரட்சி” தோன்றவில்லை. அதுபோலவே இந்து மதத்தை ஒழித்து, இ°லாம், கிறி°து மதத்தைப் பரப்ப “புரட்சி” தோன்றியதல்ல.

அதுபோலவே, இ°லாம், கிறி°து மதத்தை ஒழித்து இந்து மதத்தை நிலைநிறுத்த புரட்சி வெளிவரவில்லை.

 

சகல முதலாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்யவேண்டும் என்பதற்காக புரட்சி செய்யவே “புரட்சி” தோன்றியிருக்கிறது.

அது உயிருள்ளவரையும் அதன் கடமையைச் செய்து கொண்டு இருக்கும்.

ஆதலால் “புரட்சி”யில், ஆர்வமுள்ள மக்கள் “புரட்சியை” ஆதரிக்க வேண்டுகிறோம்.

புரட்சி – தலையங்கம் – 26.11.1933

 

 

 

 

You may also like...