நகர பரிபாலன சபை அமைப்பு
தோழர்களே!
இன்று இந்நகர பரிபாலன சபை ஆண்டுவிழாவிற்கு நான் பேச வேண்டுமென்றோ பேசச் சந்தர்ப்பம் ஏற்படும் என்றோ சிறிதும் நினைக் கவே இல்லை. இவ்வூர் வாலிபர்கள் பலர் நான் பேசியாக வேண்டுமென்று ஆசைப்படுவ தாகவும், மற்றும் எனது மேல்நாட்டுப் பிரயாணத்திற்குப் பிறகு முதன் முதலாக இங்கு வந்திருப்பதால் எனது பழைய நண்பர்கள் பலர் நான் பேச வேண்டுமென்று விரும்புவதாகவும் முனிசிபல் மானேஜர் அவர்கள் சொல்லி விரும்புவதால் ஏதாவது பேசலாமென்று முன்வந்திருக் கிறேன். ஆனால் இவ்விழா பிரமுகர்களுக்கு நான் ஏதாவது விபரீதமாய் பேசி விடுவேனோ என்கின்ற பயம் அதிகமாய் இருப்பதாகத் தெரிகிறது கண்டு பரிதாபப்படுகிறேன். என்றாலும் நான் பேசுவதில் பலருக்கு அதிருப் தியும், அபிப்பிராயபேதமும் காணப்படுவது மிக சகஜமேயாகும். அபிப்பி ராய பேதங்களுக்கு முக்கிய காரணமென்னவென்றால் நம் நாட்டு மக்கள் பெரும்பாலும் பழக்கவழக்கங் களிலும், பழைமைகளிலும் பழங்கால நூல் களிலும் பழங்காலப் பெரியோர்கள் என்பவர்கள் வாக்குகளிலுமே முழு நம்பிக்கைவைத்து தண்டவாளத்தின்மீது ரயில் போவதுபோல் ஒரே போக் காய்ப் போய்க்கொண்டு அதையே மேன்மையாய்க் கருதிக் கொண்டிருப்ப தால் அவற்றிற்கு மாறுபட்ட எதினிடத்திலும் அதிருப்தி மாத்திரமல்ல, அபிப்பிராய பேத மாத்திரமல்லாமல் வெறுப்பும், துவேஷமும், பகைமை யும் கூடக் கொள்ளுவது சகஜமேயாகும். ஆனால் நான் அந்தப்படி மக்கள் நினைக்கவேண்டுமென்கின்ற எண்ணத்தின்மீது எதையும் பேசுவதில்லை. நான் ஒரு சுதந்திர மனிதன், எனக்கு சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன், நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனைசெய்து ஒப்பக் கூடியதை ஒப்பி, தள்ளக் கூடிய தைத் தள்ளி விடுங்கள் என்கின்ற நிபந்தனையின்பேரில் தான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழைமை விரும்பி களானாலும் இதற்கு இடம் கொடுக்கவில்லையானால் அது நியாயமும், ஒழுங்குமாகாது. ஆத லால் நடுநிலையில் இருந்து கேட்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.
இன்று என்னை “நகர பரிபாலன சபை அமைப்பும், வேலையும்” என்பது பற்றிப் பேச விழா பிரமுகர்கள் விழைவதாகத் தலைவரவர்கள் அறிவித்துள்ளார். இவ்விஷயம் பற்றிப் பேச எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே.
நகர பரிபாலன சபை என்பது நகரில் பாழும் மக்களின் நலனைக் குறித்துக் கவலைகொண்டு அவர்கட்கு வேண்டுவன செய்யும் கடமையை ஏற்ற சபை என்பது பொருள் என்றே கருதுகின்றேன். அச்சபையை நிர்வாகிப்பவர்கள் அந்நகர மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டு நகர மக்களின் பிரதிநிதிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளுகின்ற மக்கள் ஆவார்கள். இதுபோலவே ஜில்லா பரிபாலன சபை, தாலூக்கா பரிபாலன சபை, கிராமப் பரிபாலன சபை, மாகாண பரிபாலன சபை என்பது போன்றவைகளுமாகும். ஆனால் நாம் காணும் இப்பரிபாலன சபைகள் என்பவை எப்படி அமைக் கப் பட்டிருக்கின்றன வென்றால் நகர் முதலியவைகளில் வாழும் செல்வ வான் களது பரிபாலன சபைகளாகவே அமைக்கப் பெற்றிருக்கின்றன.
எப்படியெனில் அச் சபைகளில் அமருகின்றவர்களுக்கென ஏற்படுத் தியுள்ள யோக்கியதாம்சை என்ன? அவர்களைத் தெரிந்தெடுப்பவர்களின் யோக்கியதாம்சை என்ன என்று யோசித்துப்பார்ப்போமேயானால் அப்படிப் பட்டவர்களுக்கு ஏதாவது ஒரு சொத்து உடைமையைப் பொறுத்தே அத் தகுதிகள் இருந்துவருவதைக் காணலாம். சொத்துடைமை இல்லாத எவருக் காவது தகுதி இருக்கக் காணுவோமேயானால் அத் தகுதியும் அந் நகர தாலூக்கா, ஜில்லா, மாகாண மக்களில் 1000-க்கு ஒருவருக்குக்கூட இருக்க முடியாததான படிப்பு உடைமையைப் பொறுத்தே ஏற்படுத்தப்பட்டுள்ள தகுதியேயாகும். அதாவது ஒன்றா, ஒரு குறிப்பிட்ட சொத்து இருக்க வேண்டும். அல்லது ஒரு குறிப்பிட்ட படிப்புப் பட்டம் இருக்கவேண்டும். இந்த இரண்டும் இல்லாதார் தகுதி இல்லாதாராகவே கருதப்பட்டிருக்கிறது. ஆதலால் மேற்கண்ட பரிபாலன சபைகளின் அமைப்புகளானது பொது மக்களது சபையாக அமைக்கப்படவில்லை என்பதே எனது அபிப்பிரா யம். பிரத்தியட்ச அனுபவத்தில் காணவேண்டுமென்றாலும் நீங்கள் காண லாம். எந்தப் பரிபாலன சபைகளை வேண்டுமானாலும் எடுத்துக் கொள் ளுங்கள். அவற்றில் வீற்றிருப்போர் யாவர் என்று நோக்குங்கள். அவற்றின் தலைவர்கள் யாவர் என்று நோக்குங்கள். மற்றும் அவர்கள் எல்லோரையும் தெரிந்தெடுப்பவர்களும், தெரிந்தெடுக்கப்படுபவர்களும் தங்கள் கடமை களை, பொறுப்புகளை உணர்ந்தவர்களாய் இருக்கின்றார்களா என்று பாருங் கள். சொத்துடைமையைத் தகுதியாகக் கொண்ட மக்களின் சபைப் பிரதிநிதி கள் தங்கள் தங்கள் சொத்துடைமையைப் பெருக்குவதைக் கடமையாகக் கொள்ளுவார்களா அல்லது சொத்தில்லாதவர்கள், படிப்பில்லாதவர்கள் ஆகிய ஏழை பாமர மக்களின் நலன் பெருக்கத்தைக் கடமையாகக் கொள் ளுவார்களா என்பதை இயற்கைத் தத்துவம் என்னும் கண்ணினால் பாருங் கள். ஆகவே நகரபரிபாலன சபைகளின் அமைப்பே பொது மக்களின் நலத்திற்கு ஏற்றதாய் இருக்கமுடியாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. அவை களில் ஒழுக்கத்தையோ நாணயத்தையோ காண்பதென்பது மிக மிக அரிதாகவே இருக்கத்தக்கதாய் இருக்கிறது. தெரிந்தெடுத்தல்கள் (எலக்ஷன் கள்) என்பவைகளைப்பற்றி யாவரும் வெளிப்படையாய் அறிந்த விஷயமே யாகும். தெரிந்தெடுப்பவன் எவருக்குமே ஏறக்குறைய 100-க்கு 99-பேருக் குமே தெரிந்தெடுப்பவனின் கடமை என்ன என்பதே தெரியாது. ஒவ்வொரு தெரிந்தெடுப்பவனும் அவனவன் சுயநலம், தாட்சண்யம் ஆகியவைகளைக் கவனித்தே வியாபார முறையில் தெரிந்தெடுக்கிறான். தெரிந்தெடுக்கப்படு பவனும் தனது சுயநலம், தற்பெருமை தற்காப்பு ஆகிய வைகளைக் கருத்தில் வைத்தே தெரிந்தெடுக்கப் பாடுபட்டு தெரிந்தெடுக் கப்பட்டவனா கிறான். ஆகவே தெரிந்தெடுப்பு முறை பெரிதும் சுயநலத் தையே அ°தி வாரமாய் கொண்டு உலவுகின்றது.
பொதுஜனங்கள் பேரால், சில ஜனங்கள் புகழ்பெற்று செல்வம் பெருக்கி மகிழ்வது என்பதே நகரபரிபாலன சபையின் அமைப்பாகவும் வேலையாகவும் இருந்து வருகின்றது.
இதுபோல் தான் ஜில்லா, தாலூக்கா பரிபாலன சபைகளுமாகும். ஜில்லா தாலூக்கா சபைகள் என்பது நகரங்கள் தவிர்த்த கிராமங்களையே பொறுத்தது. கிராமங்களில் உள்ள பெரும்பான்மை மக்களான விவசாயக் கூலிகளுக்கு இந்தச் சபைகள் பிரதிநிதி சபையாகுமா? சின்ன குடியானவர் களுக்கு இது பிரதிநிதி சபையாகுமா? பூமி இல்லாதவனுக்கும் ஒரு ஏக்கரா, அரை ஏக்கரா பூமி உள்ளவனுக்கும் 1000-ஏக்கர் 10,000-ஏக்கர் பூமி உள்ளவர் கள் பிரதிநிதிகளானால் இது எதற்கு பயன்படும்? அந்த ஒரு ஏக்கரா அரை ஏக்கரா பூமியையும் பிடுங்கி 1000-ஏக்கர்காரன் 1500-ஏக்கர் காரனாகவும், 10,000-ஏக்கர் காரன் 15,000 ஏக்கர் காரனாகவும் மற்றவர்களை ஏழைகளா கவும், பாப்பர்களாகவும் ஆக்கத்தான் பயன்படும். மற்றும் தங்கள் அதிகார ஆணவங்களைக் கொண்டு விவசாயக் கூலிமக்களை அடக்கி ஒடுக்கி துஷ்ட மிருகங்கள் மாதிரியிருந்து நடத்தத்தான் பயன்படும்.
இந்தப்படி நாடுமுழுவதும் நடக்கிறதா இல்லையா பாருங்கள். நகர பரிபாலன சபைகளின் செல்வங்கள் அவற்றில் உள்ள உத்தியோக°தர் களும் கண்ட்ராக்டர்களும் சாப்பிடவும் இவற்றுள் பரிபாலன சபையார் களுக்கும் பங்கு இருக்கவுமே பெரிதும் பயன்படுகின்றன. ஒருபாகம் பொது ஜனங்களுக்கும் பயன்படுகின்றது என்று சொல்லப்பட்டாலும் அதுவும் பெரிதும் செல்வவான்களுக்கும், படித்தவர்கள் என்று சொல்லப்படும் சோம்பேரிகளுக்குமே போய்ச் சேருகின்றன.
மாகாண பரிபாலனசபைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவைகளில் ஜமீன்பேரால் மக்கள் ரத்தத்தை உரிஞ்சும் கொள்ளைக்காரர்கள், லேவா தேவியின் பேரால் மக்கள் ரத்தத்தையும் எலும்பில் உள்ள ஊன்களையும் உரிஞ்சும் கொள்ளைக்காரர்கள், மிராசுதாரர்கள் பெயரால் விவசாய கூலி களின் ரத்தத்தையும் எலும்பு ஊன்களையும் மனிதத் தன்மையையும் கொள்ளை கொண்ட துஷ்டமிருகங்களுக்கொப்பானவர்கள், வன்னெஞ்ச வியாபாரிகள், படித்தவர்கள் என்னும் ஈவு இரக்கமற்ற சோம்பேரிக் கூட்டங் கள் ஆகியவைகளே நிறையப் பெற்றிருக்கின்றன. இவர்களது எண்ண மென்ன? கடமை என்ன? செய்கை என்ன? என்பவைகளை நான் விவரிக்க வேண்டுமா? பிரத்தியக்ஷத்தில் நீங்கள் அறியாதது எதை நான் சொல்ல வேண்டும்?
ஆதலால் இச்சபைகளின் அமைப்பையும், வேலைத்திட்டத்தையும் நடவடிக்கைகளையும் கண்ட ஒருவன் யோக்கியனாய் இருப்பானாயில் இவைகளைக் கலைக்க வேண்டுமென்றுதான் சொல்லுவானே ஒழிய சீர்திருத்த வேண்டுமென்று சொல்வதுகூட மிகக்கஷ்டமாய்தான் இருக்கும். ஆனால் சிறிது காலமாகவே நான் கொண்ட அபிப்பிராயப்படிக்குதான் நகரபரிபாலனங்களின் ஆதிக்கங்கள் நாளாவட்டத்தில் குறைந்துவருவது பற்றி மகிழ்ச்சியடைகின்றேன். என்னவெனில் நகரபரிபாலன சபைக்கு இருந்துவந்த அதிகாரங்கள் இந்த 20-வருட காலத்தில் அதாவது பாமர மக்களுக்கு “சுயாட்க்ஷி” உணர்ச்சி ஊட்டி செல்வவான்களும், படித்த சோம்பேறிகளும் ஏமாற்ற ஆரம்பித்த காலம்முதல், நாளுக்குநாள் ஏற் கனவே இருந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டே வருகின்றன. இனி ஜில்லா தாலூக்கா சபைகளின் அதிகாரங்களும் பறிக்கப்படவேண்டுமென்ற விருப் பங்களும் செல்வாக்குப் பெற்றுவருகின்றன. இதிலிருந்தே பரிபாலன சபை களின் அமைப்பும் வேலையும் ஒழுங்காக இல்லை என்பது யாவரும் அறிந்ததாகும். நம் நாட்டில் நகரபரிபாலனசபைகள் ஏற்பட்டு 50-வருஷங் களுக்கு மேலாகியும் இன்னமும் மக்களுக்கு அவற்றின் கடமையும் பொறுப்பும் தெரியவில்லை என்றால் நாம் நம் சமூகத்தின் பேரால் வெட்கப் பட வேண்டாமா என்று யோசித்துப்பாருங்கள்.
எப்படிப்பட்ட நகரத்திலும் ஒரு வீட்டுக்காரன் பொது இடத்தில் ஒரு அடி நிலமாவது சேர்த்துக்கட்டிக் கொள்ளவே பார்க்கிறான். அதில் அவன் வெட்கப்படுவதில்லை. பொது சொத்து என்றால் கொள்ளை அடிக்கத்தகுந் தது என்பதே ஒவ்வொருவனுடையவும் எண்ணமாய் இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட எண்ணமுடையவர்கள் ஒருநாளும் பொது நிர்வாகத்துக்கு அருகதையுடையவர்களாகமாட்டார்கள். இப்படிப்பட்ட ஜனங்களின் பிரதி நிதிகளும் நம்பிக்கைக்கும் கடமைக்கும் உரியவர்களாகமாட்டார்கள் என்று வலியுறுத்தி கூறுவேன். எந்தப் பெண்ணும் தன் வீட்டுக் குப்பைகூளம் அசிங்கம் ஆகியவற்றை பக்கத்துவீட்டுப்புரம் கொட்டுவதிலும் தன் வீட்டுப் பிள்ளையை எதிர்வீட்டுப்புரமோ அல்லது பக்கத்துவீட்டுப்புரமோ இருத்தி மலஜலம் கழிக்கச்செய்வதையுமே கடமையாகவும், நீதியாகவும் கொண்டி ருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை 50-வருஷமாய் திருத்த முடியாத பரிபாலனசபை அமைப்பும் வேலையும் இனி எப்பொழுது திருந்தப் போகின்றது?
மேல்நாடுகளில் இவ்விஷயங்கள் ஓரளவு கவனிக்கப்படுகின்றன என்றாலும் அங்கும் போதிய வேலைகள் செய்திருப்பதாய் கனப்பட வில்லை.
உண்மையான நகரபரிபாலன சபைகள் என்பவைகள் ஒரு அரசாங்கம் என்பதின் வேலைகள் எல்லாவற்றையுமே மேற்போட்டுக் கொண்டு வேலை செய்து வரத்தக்கதாய் இருக்க வேண்டும். அவைகள் நகரின் பெரும் பான்மையான மக்களான தொழில் செய்துவாழும் மக்களு டைய முழு பிரதிநிதிகளாகவே இருந்து அவர்களது நன்மையையே பெரி தும் கவனிக்கத் தக்கதாய் இருக்கவேண்டும். பொதுஜனங்களை உத்தேசித்து பொதுஜனங்களுக்காக நடைபெறும் எந்தக் காரியத்தையும் வியாபாரத்தை யும் தனிப்பட்ட மனிதன் நடத்திப்பயன்பெற இடமே இருக்கக்கூடாது. உதாரணமாக வியாபாரங்கள் தொழில்சாலைகள் மற்றும் மக்களுக்கு வேண்டிய ஆகாரசாமான் போகபோக்கிய சாமான் போக்குவரவு வசதி, கல்வி முதலிய எல்லா நிர்வாகங் களும் நகர பரிபாலன சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு அதன் லாபங்கள் முழுமையும் நகர மக்களின் வாழ்க்கைக் கும் கல்விக்கும் சுகபோகத்துக்கும் சரிசமமாய் பயன்படத்தக்கதாகவே இருக்கவேண்டும். உற்பத்தி செய்பவனுக்கும் அனுபவிப்பவனுக்கும் மத்தி யில் மிடில் மேன் கூடவே கூடாது. நகர சிவில் கிரிமினல் போலீசு முதலிய காரியங்களும் நகர பரிபாலனத்துக்குள்ளாகவே அடங்கியதாய் இருக்க வேண்டும். ஜட்ஜிகள், போலீசு அதிகாரிகள் சிறைக்கூடத் தலைவர்கள் முதலிய எல்லா அதிகாரிகளும் நகரபரிபாலன சபையின் அதிகாரிக ளாகவே இருக்க வேண்டும்.
இந்த முறையில்தான் ரஷியதேசத்தில் நகர்சபைகள் நடப்பதை பார்த்தேன். ஓட்டர்கள் சங்ககூட்டத்தில் ஜட்ஜியை நிருத்தி கேள்விகள் கேட்கப் பட்டதை நேரில் பார்த்தேன். ஜட்ஜி நகரஜனங்களால் தெரிந்தெடுக் கப்பட்டவராவார். அவரும் ஒரு தொழிலாளியேயாவார். ஒவ்வொரு தெரிந் தெடுக்கப்பட வேண்டிய °த்தானத்திற்கும் தெரிந்தெடுக்கப்பட்டவரிடம் இருந்து வேலைவாங்கவும் அவர் கடமையை சரியாய் உணர்ந்து பொருப்பு டன் நடக்கின்றாரா என்பதைக் கவனிக்கவும் ஒரு தனிக்கமிட்டி உண்டு. அக்கமிட்டிக்கு அவர்கள் என்றும் பொறுப்பாளிகளாய் இருக்க வேண்டும் என்கின்ற முறையிலேயே எல்லா °தல °தாபனங்களும், வேலை முறை களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. நிற்க,
நமது நாட்டு °தாபனங்களில் °தாபன சிப்பந்திகளின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். சிப்பந்திகளுக்கு சர்க்கார் சிப்பந்திகள் போல பென்ஷன் இல்லை. அவர்கள் ஒரு எஜமான ருக்குத் திருப்தியாய் நடக்க முடியாவிட்டால் வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளவோ, மாற்றப்படவோ மார்க்கமில்லை. இந்தக் காரணங்களால் மனச்சாட்சிப்படி நடக்கமுடியாமலும் சுதந்திரத்துடன் இருக்க முடியாமலும் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நகர பரிபாலன சபை அங்கத்தினர்களும், தலைவர்களும் எப்படிப் பட்ட யோக்கியதை உடையவர்கள் என்று மேலேயே சொன்னேன். அப்படிப் பட்டவர்களிடம் இருந்து காலந்தள்ள வேண்டிய அவசியத்தில் மனிதன் வாழ்வது மிகவும் கொடுமையான வாழ்வேயாகும். ஒரு எஜமானன் காலா வதியாகி அவனது மறுதேர்தலுக்கு ஏதாவது அபிமானம் காட்டினால் அடுத்து வருகிற எஜமானன் கல்நெஞ்சுடன் நசுக்கிவிடுகிறான். அபிமானம் காட்டவில்லையானால் அதே எஜமானன் திரும்பவும் வந்தால் அப்படியே செய்து விடுகிறான். மற்றும் சிப்பந்திகள் தங்கள் கடைமையை நிர்தாட்சண் ணியமாய் ஒருநிலையாய் செலுத்துவதானால் எஜமானாய் இருப்பவன் பொது ஜனங்களின் சாடியைக் கேட்டுக்கொண்டு கொடுமைப் படுத்தி விடுகிறான்.
ஆதலால் சிப்பந்திகள் சமயத்துக்குத் தகுந்தபடி நடந்து தங்கள் பணத்தை பெருக்கிக் கொள்வதிலேயே கருத்துள்ளவர்களாகிவிடுகிறார்கள்.
°தல °தாபனங்கள் நகர பரிபாலன சபைகள் ஒழுங்குபட வேண்டு மானால் சிப்பந்திகள் எல்லாம் சர்க்கார் சிப்பந்திகள் ஆகவேண்டும். சிப்பந்தி கள் விஷயத்தில் நகரபரிபாலன சபைத் தலைவர்களுக்கு சிறிதும் அதிகாரம் இருக்கக்கூடாது. இதுபோல் இத்துறையிலும் பல மாறுதல்கள் ஏற்பட வேண்டியிருக்கிறபடியால் பொதுவில் இன்றைய நிலையில் °தல °தாப னங்களை எடுத்துவிட்டு, சர்க்கார் மேல்பார்வையில் பொது ஜனங்களுக்கு ஜவாப்தாரித்தனமுள்ள முறையில் நடத்தப்படுவதே கூடியவரை மேலான தென்று சொல்லலாம். தோழர்களே நான் இன்று எடுத்துக்கொண்ட விஷயத்தில் சரியாய் பேசியதாக எனக்குத் திருப்திப்படவில்லை. எவ்வ ளவோ நிர்பந்தங்களுக்கிடையில் பேசியிருக்கிறேன்.
ஆனால் தோழர் கலியாணசுந்திர முதலியாருடன் வந்து உங்கள் முன்னிலையில் பேச நேர்ந்ததைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கூட்டங்களில் கெட்ட பேர் உண்டு. அதை மாற்றிக்கொள்ள வேண்டு மென்கின்ற ஆசையே முதலியாருடன் வந்துபேசினேன். பூவுடன் சேர்ந்து நாறும் மணம்பெற்றது என்பது போல் அவரோடுவந்து பேசியதில் நான் சரியாய் என் அபிப்பிராயங்கள் முழுவதும் சொல்ல முடியவில்லை. ஆனாலும் ஒரு அளவுக்கு எனக்கு மிகவும் சந்தோஷமே. இவ்வளவு நேரம் நீங்கள் பொறுமையாய்க் கேட்டதற்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு:- 10.12.1933 இல் திருப்பூர் யுனிவர்சல் எலக்ட்ரிக் திரையரங்கில் நடைபெற்ற திருப்பூர் முனிசிபல் உத்தியோக°தர் முதலாவது ஆண்டுவிழாவில் ஆற்றிய உரை.
புரட்சி – சொற்பொழிவு – 17.12.1933