பட்டேல் பட்டுவிட்டார்
தோழர் வித்தல்பாய்பட்டேல் அவர்கள் 22-10-33-ந்தேதி ஜினிவா வில் காலமாய்விட்டார் என்ற செய்தியைக்கேட்ட இந்தியமக்கள் மிகுதியும் வருத்தமடைவார்கள்.
பட்டேல் அவர்கள் அரசியல் உலகத்தில் மிக்க புகழப்பெற்றவர் வாக்குவல்லவர், யாவரும் பிரமிக்கத்தக்கபடி விஷயங்களுக்கு வியாக்கி யானம் செய்யும் கூர்மையான புத்திசாதுரியமுமுள்ளவர். பம்பாய் நகரசபைத் தலைவராகவும் இந்திய சட்டசபைத் தலைவராகவும் இருந்து அவற்றுள் மிக்க கியாதி பெற்றவர். இந்தியாவில் மாத்திரமல்லாமல், ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளிலும் இந்திய அரசியலின் மூலம் புகழ்பெற்ற வர். எப்படிப்பட்ட அரசியல் வாதியும் பட்டேலை எதிர்ப்பதென்றால் மிகவும் பயப்படுவார்கள். தோழர் காந்தியாருக்கு பட்டேலிடம் எப்பொழுதும் சிறிது பயம் உண்டு. ஒரு காலத்தில் பட்டேலின் துடையின்மீது தன் தலை இருக்கும் போது தனது உயிர் போக நேரிட்டால் அதுவே தனக்கு ஒரு பெரிய பாக்கிய மாகும் என்று தோழர் காந்தி பேசி பட்டேலை புகழ்ந்திருக்கிறார். உப்பு சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு முதலிய காரியங்கள் பட்டேலுக்கு இஷ்ட மில்லாத காரியங்களாகும். அதனாலேயே அவர் கடைசிகாலத்தில் பெரிதும் மேல் நாட்டில் இருக்கவேண்டியதாயிற்று என்று சொல்லவேண்டும்.
கடைசியாக அவர் இந்தியாவுக்கு அனுப்பிய செய்தியில் தோழர் காந்தியவர்களின் அரசியல் தலைமைப்பதவி இந்தியாவுக்கு சிறிதும் பயன்படாதென்றும் வேறு தலைவரைக்கொண்டு தான் வேறுவழியில் கிளர்ச்சி செய்யப்படவேண்டுமென்றும் சொன்னவர். அவரது தர்க்கங் களிலும் மற்றும் எவ்வளவோ கவனமான சம்பாஷணைகளிலும் தமாஷ் கலந்தே இருக்கும். இப்படிப்பட்ட பெரியார் 62 வயதில் காலமாகிவிட்டார் என்பது இந்திய அரசியலில் கலந்த மக்களுக்கு பெரிதும் விசனத்தைக் கொடுக்கக்கூடிய சம்பவமாகும் என்பதில் ஆட்சேபணையில்லை.
குடி அரசு – இரங்கலுரை – 29.10.1933