“மதத்திற்கு வக்காலத்து”
நமது சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, மதத்தின் பேராலும், அரசியலின் பேராலும் பாமர மக்களை ஏமாற்றி வயிறு பிழைத்து வந்த பலருக்குக் கஷ்டமாகி விட்டது. பாமர மக்கள் கொஞ்சம் கண்விழித்துப் பகுத்தறிவு பெற்றுவிட்டமையால் அவர்களைச் சுலபமாக ஏமாற்ற முடியாமல் போய்விட்டது. ஆகையால், இவ்வியக்கத்தின் மூலம் தங்கள் பிழைப்பிற்குப் பாதகம் உண்டான கூட்டத்தார் அனைவரும் நமது இயக்கத்தை மறைமுக மாகவும், சில சமயங்களிலும் வெளிப்படையாகவும் எதிர்த்து வருகின்றனர். இவர்கள் எவ்வளவு தான் எதிர்த்தாலும் இவ்வெதிர்ப்பினால் நமது இயக்கத் தின் ஒரு உரோமங்கூட அசைக்கப் படவில்லை என்பதை நாம் பல தடவை களில் எடுத்துக்காட்டியிருக்கின்றோம். இதற்கு மாறாக இவ்வியக்கம் ஒவ் வொரு நாளும் தேச மக்களின் மனத்தைக் கவர்ந்து வேரூன்றி வருகிற தென்பதை நாம் எடுத்துக் கூறுவது மிகையேயாகும். மதத்திற்காக மிகவும் பரிந்து பேசி, நமது இயக்கத்தை எதிர்க்கும் கூட்டத்தார் யார்? அவர்கள் செய்கையென்ன? அவர்கள் நமது இயக்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பதன் நோக்கமென்ன...