மதங்கள் எல்லாம் செத்துப் போனவைகளே சித்திரபுத்திரன்

இன்று உலகில் எந்த மதத்திற்கும் உயிர் கிடையாது, எல்லா மதங்களும் செத்துப் போய் விட்டன. செத்தப் பிணங்களே சடங்கு ரூபமாகவும், வேஷ ரூபமாகவும் நாற்றமெடுத்து அதனால் மனித சமூகத்திற்கு பிற்போக்கு என்னும் வியாதியை கொடுத்துக் கொண்டு வருகின்றன.

உண்மையில் எந்த மதஸ்தனும் அந்தந்த மதக் கட்டளைப்படி நடந்து கொள்ளுவதில்லை, நடந்து கொள்ள முடிவதுமில்லை. உதாரணமாக பௌத்தர்கள், கிறிஸ்த்தவர்கள், இஸ்லாமானவர்கள், இந்துக்கள் என்பவர்கள் சமூகங்களில் எந்த ஒரு மனிதனையாவது மதக் கட்டளைப்படி கண்டிப்பாய் நடக்கின்றவனை காண முடிகின்றதா? முதலாவதாக வேஷத்திலும், சடங்கி லுமே சரியாக நடந்து கொள்ள முடிவதில்லை. மற்ற மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்திலும் வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டிய நிபந்தனையிலும் 100க்கு ஒன்று வீதம் கூட நிர்ணயமாய் நடக்கவோ, ஆசைப் படவோ கூட முடிகின்றவர் காணப்படுவதில்லை. இந்த நிலையில் உள்ள மக்களேதான் இன்று தன், தன் “மதத்தைக் காப்பாற்ற வேண்டும்” “ மதத்திற்கு ஆபத்து ”  என்று சொல்லிக் கொண்டு செத்த பிணத்தை எடுத்துப் போட்டு குழி தோண்டிப் புதைக்காமல் நாற்றத்தில் அழுந்திக் கொண்டு இருக்கிறார்கள். மலத்தில் இருக்கின்ற புழுக்கள் எப்படி மல நாற்றத்தை வெறுக்க முடியாமலும் மற்ற புழுவை இழிவாய்க் கருத முடியாமலும் இருக்கின்றனவோ அது போல் எல்லாம் மனிதர்களுமே மதப் பிண நாற்றத்தில் புரளுவதால் உண்மை உணர முடியாமல் அழுந்துகின்றனர்.

குடி அரசு – கட்டுரை – 21.12.1930

You may also like...