பெ. சி. சிதம்பர நாடார் தேவஸ்தானக் கமிட்டி மெம்பர்
றாமநாதபுரம் தேவஸ்தானக் கமிட்டிக்குக் காலியான ஒரு ஸ்தானத் திற்கு நாடார் கனவான் ஒருவரை நியமிக்க வேண்டுமென்று பொது ஜனங்கள் விரும்பியதும், மேற்படி தேவஸ்தானக் கமிட்டி தலைவர் சுயமரியாதை வீரர் திரு. எஸ். ராமசந்திரன் அவர்கள் கண்டிப்பாய் ஒரு நாடார் கனவானையே நியமிக்க வேண்டுமென்று தேவஸ்தானப் போர்டை வற்புறுத்தி நாடார் குல மித்திரன் பத்திராதிபர் திரு. சு. ஆ. முத்து நாடார் அவர்கள் பெயரை எடுத்துக் காட்டி இருந்ததும் நேயர்கள் அறிவார்கள். ஆனால் திரு. முத்து நாடார் அவர்கள் பெயர் ஓட்டர் லிஸ்டில் இல்லாததால் போர்ட் இலாக்கா மந்திரி அவர்கள் வேறு ஒரு நாடார் கனவான் பெயரை சிபார்சு செய்யும்படி கமிட்டித் தலைவர் திரு. ராமச்சந்திரன் அவர்களை கேட்டிருந்ததற்கு ஒப்ப அவர் விருதுநகர் பாத்திர வியாபாரம் திரு. பெ. சி. சிதம்பர நாடார் பெயரை தெரிவிக்கவே இலாக்கா மந்திரி அவர்கள் திரு. சிதம்பர நாடார் அவர்களை நியமித்திருப்பதாய் தெரிய நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
திரு. சிதம்பர நாடார் அவர்கள் ஒரு சுயமரியாதை வீரர். விருதுநகர் நாடார் சமூகத்திற்கே முதல் முதல் சுயமரியாதைக் கொள்கைகளை அனுஷ் டிக்க வழி காட்டியவர். 15, 20 ´ காலமாகவே பொதுக்காரியங்களிலும் சமூக முன்னேற்ற விஷயங்களில் மிகவும் ஊக்கமாய் உழைத்து வருபவர். முனிசி பாலிட்டியிலும் மற்றும் சமூக விஷயங்களிலும் அறிய வேலை செய்தவர். ஆகவே இப்படிப்பட்ட கனவான் தேவஸ்தானக் கமிட்டிக்கு நியமிக்கப் பட்டதில் அதுவும் இராமநாதபுரம் ஜில்லா தேவஸ்தானக் கமிட்டிக்கு நியமனம் பெற்றதில் நமக்கு மிகவும் மகிழ்ச்சியேயாகும். எதை உத்தே சித்து? என்றால் இன்று நம் நாட்டில் உள்ள தேவாலயங்கள் எல்லாம் ஜாதி பிரிவையும், உயர்வு தாழ்வையும் நிலைநிறுத்தி அவற்றிற்கு ஆக்க மளிப்பதற்கு உரைவிட மாயிருப்பதால் அவ்வித ஜாதி வித்தியாசத்தையும், உயர்வு தாழ்வையும் அடியோடு அழிப்பதற்கு திரு. பெ. சி. சி. அவர்கள் இவ் வேலையை உபயோகித்து சுயமரியாதை வீரர் திரு. எஸ். ராமச்சந்திரன் அவர்களுக்கு பூரண உதவியாய் இருப்பார் என்பதை உத்தேசித்தேயாகும். இவரை நியமிக்க உறுதி கொண்ட முன்னைய இப்போதைய இரண்டு மந்திரிகளையும் பாராட்டுகின்றோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 21.12.1930