இரண்டு கேஸ் விடுதலை
ஈரோடு ஆலயப் பிரவேச வழக்கில் 3 பேர் தண்டனை அடைந்து அவ் வழக்குகள் ஹைக்கோர்ட்டு அப்பீலில் இருந்தது நேயர்களுக்கு ஞாபக மிருக்கும். அதுபோலவே சுசீந்திரம் தெருப் பிரவேச வழக்கிலும் 12 பேர்கள் தண்டனை அடைந்து அவ்வழக்கும் திருவாங்கூர் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டிருந்ததும் நேயர்களுக்கு ஞாபகமிருக்கும்.
இவ்வாரம் மேற்படி இரண்டு வழக்குகளும் அப்பீலில் விசாரிக்கப் பட்டு தண்டனைகள் முழுவதும் தள்ளப்பட்டு கேஸ்கள் விடுதலையாகி விட்டன.
முதல் கேசு. அதாவது ஈரோடு கோவில் பிரவேச வழக்கு போலீசாரு டைய அக்கிரமத்தினாலேயே கொண்டு வரப்பட்டதாகும். அவர்களுக்குச் சலுகை காட்டினது ஜில்லா பெரிய அதிகாரியாகும். இவ்வழக்கை அதிகாரி கள் நியாயம் தெரியாமலோ, சட்டம் தெரியாமலோ நடத்தினார்கள் என்ப தாக யாரும் சொல்ல முடியாது. அவர்கள் வேண்டுமென்றே சிலரைத் திருப்தி செய்யத்தான் இப்படிச் செய்தார்கள் என்றே நாம் சொல்லவேண்டி யிருக்கிறது.
இரண்டாவது கேசாகிய சுசீந்திரம் வழக்கும் அக்கிரமாகவே நடத்தப் பட்டது என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்காது. அதன் ஜட்ஜுமெண்ட் கீழே குறிப்பிட்டிருக்கிறோம். திருவாங்கூர் போலீசு கமிஷனர் திரு. பிட் துரை இருந்திருந்தால் இன்றைய தினம் திருவாங்கூரில் ஒரு ரோட்டு கூட ஒரு நபருக்கும் உரிமை இல்லாததாக இருக்காது. கோவில் பிரவேசம் கூட அனுமதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அங்குள்ள பார்ப்பன ஆதிக்க மானது இவ்வளவு தொல்லையை கொடுத்துவிட்டது. இம்மாதிரி சந்தர்ப்பங் களில் ஒவ்வொரு வழக்கு முடிவும் ஐகோர்ட்டுக்குச் சென்றே நியாயம் பெறவேண்டுமானால் சாதாரண ஜனங்களுக்கு சாத்தியப்படக் கூடியதா குமா என்பதை யோசித்தால் இம்மாதிரி விஷயங்களுக்கு வெளிப்படையா யும் தெளிவாயும் ஒரு சட்டம் ஏற்பட்டுவிட வேண்டியது அவசியமாகும். பொதுவாகவே இந்துக்கள் என்பவர்களுக்குள் ஜாதி வித்தியாசமும், உயர்வு தாழ்வும் ஒழிவதற்குப் பார்ப்பனர்கள் எப்படி சம்மதிக்க மாட்டார்களோ அது போலவே மகமதியர்கள், வெள்ளைக்காரர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். ஆதலால் ‘இந்துக்கள்’ ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு ஆகியவைகளை ஒழிக்கப் பாடுபடுகின்றவர்கள் மேல் கண்டவர் களின் விரோதத்தையும், அவர்களால் செய்யப்படும் தொல்லைகளையும் சமாளிக்க தயாராயிருந்து கொண்டுதான் பிரவேசிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.
நிற்க, இவ்விஷயங்களில் இனி மேல் நடக்க வேண்டிய விஷயங் களைப்பற்றி யோசித்து பின்னால் வெளியிடுவோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 09.11.1930