மந்திரி மார்கள்
சென்னை மாகாணப் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டபின் அமைக்கப் படவேண்டிய மந்திரிசபை அமைக்கப்பட்டாய் விட்டது.
அதாவது திவான் பகதூர் க்ஷ. முனுசாமி நாயுடு அவர்கள் முதல் மந்திரியாகவும், திரு. ஞ. கூ. இராஜன் பாரிஸ்டர் அவர்கள் இரண்டாவது மந்திரி யாகவும், திவான் பகதூர் ளு. குமாரசாமி ரெட்டியார் அவர்கள் மூன்றாவது மந்திரியாகவும் நியமனம் பெற்றிருக்கின்றார்கள்.
இவர்களைப் பாராட்டி வரவேற்கு முன்பாக பழைய மந்திரிகளை அவர்களது அருமையான தொண்டுக்காகப் பாராட்டி வழியனுப்ப வேண்டி யது அறிவும் நடுநிலைமையுமுள்ளோர் முறையாகும். அந்தப்படி பாராட்டி வழியனுப்புவதில் சிறிது கூட மிகைப்படுத்தாமல் உண்மையை உள்ளபடி சொல்லுவதானாலும் இதில் போதிய இடம் கிடைக்க மாட்டாது என்றே கருதுகின்றோம்.
முதலாவதாக, அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அதாவது இராஜிநாமா கொடுத்த மூன்று மந்திரிகளின் நாணய விஷயம் மிக பரிசுத்தமானது என்பது அவர்களுடைய எதிரிகள் கூட இதுவரை அதைப்பற்றி எவ்வித சந்தேகமும் கொள்ளாததாலேயே நன்றாய் விளங்கும்.
இரண்டாவது, பார்ப்பனரல்லாதார் நன்மையின் பொருட்டு தங்களால் கூடிய அளவுக்கும், சில சமயங்களில் மேலாகவும் நன்மை செய்திருக்கின் றார்கள். உதாரணமாக முதன் மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் பெண்களும், தீண்டப்படாதவர்கள் என்பவர்களும் சொற்பத்துகையுள்ள மதக்காரர்கள் என்பவர்களும் ஸ்தல ஸ்தாபனங்களில் தேர்தல் மூலம் இடம் பெறும்படி செய்திருப்பதும், நாமினேஷன்களே அடியோடு இல்லாமல் எல்லா ஸ்தானங்களையும் தேர்தல்களுக்கே விட்டுவிட்டதும், பெண்கள் கல்வி விஷயத்தில் தாராளமான அளவுக்கு அதாவது 3வது பாரம் வரை இலவசமாக கிடைக்கும்படி செய்தது ஆகிய மூன்று காரியங்களும் மூன்று இரத்தினங்கள் என்றே சொல்ல வேண்டியதாகும். இந்தக் காரியங்கள் இந்தியா முழுவதிற்கும் பார்த்தாலே இவர் மாத்திரமே தான் இப்படிச் செய்தவராயிருப்பார்.
மற்றும் இரண்டாவது மந்திரியான திரு. முத்தையா முதலியார் அவர்கள் சர்க்கார் உத்தியோகங்களில் எல்லா மக்களுக்கும் பங்கு கிடைக் கும் படியாக ஏற்பாடு செய்தவராவார். இதைப் பார்க்கும் போது வகுப்பு மதத் திட்டமானது, கடுகளவு மனித சுபாவமுள்ளவனும் போற்றித் தீர வேண்டிய தோடு எதுவரையில் இந்த நாட்டில் வகுப்பு உயர்வு தாழ்வு பிரிவுகளும் மத உணர்ச்சியும் இருக்கின்றதோ அதுவரை அவருக்கு நன்றி செலுத்தித் தீர வேண்டியதாகும்.
இது தவிர சர்க்காரைக் கொண்டே மதுவிலக்குப் பிரசாரம் நடக்கும் படி ஏற்பாடு செய்ததானது உலகமே போற்றக் கூடிய காரியமாகும். உலகத்தில் இப்போது அநேக தேசங்கள் இதைப் பாராட்டி பின்பற்றி வருகிறது.
திரு. சேதுரத்தினமய்யர் அவர்களும் உத்தியோக வினியோக விஷயத்தில் பார்ப்பனர் அல்லாதார் விஷயத்தில் மிக்க மேன்மையாக நடந்து கொண்டதுடன் மற்ற மந்திரிகள் செய்யும் காரியங்களுக்கு யாதொரு இடையூறும் இல்லாமல் எதிர்பார்த்ததற்கு மேலாகவே ஒத்துழைத்து வந்தது பாராட்டத்தக்கதேயாகும்.
இவற்றையெல்லாம் விட ஸ்தல ஸ்தாபன மந்திரி இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு சுயமரியாதைச் சங்கத் தலைவர் திரு. சௌந்திரபாண்டியன் அவர்களை அநேக எதிர்ப்புக்கு இடையில் நியமனம் செய்ததும், கொடுமை செய்யப்பட்டுத் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திருவாளர்கள் சாமி சகஜானந்தம் அவர்களையும் முனுசாமி பிள்ளை அவர் களையும் தேவஸ்தானக் கமிட்டி அங்கத்தினர்களாக நியமனம் செய்ததை யும், தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளைச் சேர்க்க மறுக்கும் பள்ளிக் கூடங்களுக்கு கிராண்டு உதவித்தொகை கொடுப்பதை மறுப்பதன் மூலம் எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் சேர்க்கும்படி செய்த காரியத்தையும் அவசியம் பாராட்ட வேண்டியதாகும். மற்றபடி பொதுவாகவே மூன்று மந்திரிகளும் தங்களாலான அளவுக்கு மனப்பூர்த்தியாய் தயவு தாக்ஷண்யம் என்பதில்லாமல் சுயமரியாதை இயக்கத்திற்கும், கொள்கைக்கும் உதவி புரிந்து வந்திருப்பதும் சட்டசபை முதலிய இடங்களிலும் பார்ப்பனர்களும் அவர்களது ஆயுதங்களும் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் கொள்கைகளைப் பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் தைரிய மாய் பதில் சொல்லி இயக்கத்தை ஆதரித்து வந்ததற்கும் சுயமரியாதை இயக் கம் என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டதாகும்.
மற்றும் இவர்களில் பார்ப்பனரல்லாத மந்திரிகள் இருவரும் ஜஸ்டிஸ் கட்சியில் கலந்து அதற்குத் தங்களால் கூடிய உதவி பல வகையிலும் செய்து வந்ததும் குறிப்பிடாமல் விடக் கூடியவைகள் அல்லவென்றே சொல்லு வோம். கடைசியாக இம் மந்திரிகள் கட்சி காரணமாகவோ கொள்கை காரண மாகவோ அல்லாமல் தனிப்பட்ட முயற்சிகள் காரணமாகவே மறுபடியும் மந்திரிகளாய் வரக்கூடாமற்போய் விட்ட போதிலுங்கூட அவர்களுடைய முழு ஆதரவும் நமது இயக்கத்திற்கும், பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கும், சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லாமல் உறுதியாய் நம்பியிருக்கின்றோம்.
நிற்க, புதிய மந்திரிகளை வரவேற்பதிலும் மிகைப்படுத்திக் கூறாமலே உண்மையைச் சொல்ல வேண்டுமானால் மிகவும் பாராட்ட வேண்டியதே யாகும். மந்திரிகளையும் கட்சி காரணமாகவோ, கொள்கை காரணமாகவோ அல்லாமல் அதாவது வராமல் போனவர்களுக்கு சொல்லப்பட்ட காரணம் போலவே தனித்தனியான முயற்சி காரணமாகத் தான் வெற்றி பெற்றார்கள் என்பதை முதலில் சொல்லி விடுகின்றோம். ஏனெனில் இம்மந்திரிகளைக் கொள்கை காரணமாக பதவி பெற்றார்கள் என்று சொல்லுவோமேயானால் பழைய மந்திரிகள் கொள்கை காரணமாக பதவி இழந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டியதாகும். ஆகவே இந்த இரண்டையும் யாரும் ஒப்ப மாட்டார்கள். இன்றைய மந்திரிகளிலும் அதிகம் பெயர், யார் யார் எந்தக் கட்சி என்பது கூட அநேகமாய் தேர்தலின் போதும் மந்திரி நியமனத்தின் போதும் தான் பெரும்பாலோருக்கு அறிய முடிந்தது என்பது யாவருக்கும் தெரியும்.
நிற்க, ஜஸ்டிஸ் கட்சி என்பதாக ஒன்று இன்று இருக்கின்றது என்றும், அதன் பேரால் இன்று மூன்று கனவான்கள் மந்திரி பதவி பெற்றார்கள் என்றும் சொல்லப்படுவதற்கு யாராவது பொறுப்பாளி என்று ஒருவரைச் சொல்ல வேண்டுமானால் அது பெரிதும் திருவாளர்கள் சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார், பி. டி. இராஜன் ஆகிய இருவர்களையே சேரும். இந்த இரு கனவான்களே இக்கட்சியை குலையாமல் பார்த்து உருவாக்கிய வராவார்கள். எப்படியெனில் அக்கட்சியின் மெஜாரிட்டி அங்கத்தினர் என்பவர்கள் “எந்தக் கை வலுக்கும்” என்கின்ற “ஜோசியத்திலே”யே இருந்தவர்களாவார்கள்.
மேலும் சொல்ல வேண்டுமானால், இந்த இரு கனவான்களின் இவ் வளவு முயற்சியிருந்தும் கூட ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் சில அங்கத்தி னர்களின் பெயரை வெளியிடுவதற்குக் கூட அக்கட்சியின் முக்கிய அதா வது ஜீவாதாரமான கொள்கையைப் பலிகொடுத்த பிறகே தான் முடிந்து ஜஸ்டிஸ் கட்சி என்று ஒரு கட்சி இருப்பதாக வெளியில் காட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. இதற்கு நெல்லூர் சம்பவம் காரணமாகிவிட்டது.
நிற்க, மந்திரி கட்சி அதாவது மந்திரிக்காக கொள்கையுடைய கட்சி வெற்றி பெற்றதா? ஜஸ்டிஸ் கட்சி அதாவது கொள்கைக்காக மந்திரியாகும் கட்சி வெற்றி பெற்றதா என்று பார்ப்போமானால் மந்திரி கட்சிதான் வெற்றி பெற்றதென்று சொல்லவேண்டும். அதாவது மந்திரிக்காக கொள்கையுடைய கட்சியாகத்தான் இன்று அது வெற்றிபெற்றது. ஏனெனில் நமது நாடு இன்று உள்ள நிலையில் நமது மக்களுக்குள்ள அறிவு உணர்ச்சியில் தேர்தலில் வெற்றி பெற்ற கனவான்கள் தன்மையில் இவ்வளவு தான் எதிர்பார்க்க முடியும். அன்றியும் இது இந்தியா முழுமைக்குமே அரசியல் என்னும் விஷயமும், தேசீயம் என்னும் விஷயமும் ஏற்பட்ட பிறகு அவைகளும், பார்ப்பனர்களும் காட்டிய வழியாகும். இதற்காக யாரையும் குற்றம் சொல்வதில் பயனில்லை. மக்களுக்கு அறிவுச் சுடர் கொளுத்தினால் கொள்கைக்காக என்னும் கட்சி வெற்றிபெறலாம்.
நிற்க, திரு பனகால் அரசர் காலமான உடனேயே திரு. முனுசாமி நாயுடு அவர்கள் தலைவராக வருவார் என்றும், வரவேண்டுமென்றும் எல்லோரும் எதிர்பார்த்ததுண்டு. பல காரணங்களால் அவருக்கு அன்று தைரியமும் சவுகரியமும் இல்லாமல் போய்விட்டது. அதுபோலவே திரு பி. டி. இராஜன் அவர்கள் தலைவராய் வரவேண்டுமென்று தமிழ் நாட்டு மக்கள் பெரிதும் விரும்பினதும் எதிர்பார்த்ததுமுண்டு. தவிரவும் ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் மந்திரி பதவி அடைய ஒருவருக்கு உரிமையுண்டு என்று சொல்லப்படுமானால் அது திரு. பி. டி. ராஜன் அவர்களுக்கே கிடைக்க வேண்டியதாகும். ஆந்திரநாட்டுப் பொதுமக்களில் இன்னமும் அநேகருக்கு ஜஸ்டிஸ் கட்சி என்றால் என்ன என்று கூட தெரியாதிருக்கும் நிலையில் எத்தனையோ எதிர்ப்புக்கும் பார்ப்பன சூட்சிக்கும் தலை கொடுத்துக் கொண்டு தமிழ் நாட்டுப் பொது மக்கள் பலத்தைக் கொண்டே கட்சியை நிலைநிறுத்தி அதற்காக வெகு பணமும் செலவும் செய்து வந்த குடும்பம் திரு. பி. டி. ராஜன் அவர்களுடைய குடும்பமேயாகும். ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் இதுவரை யாதொரு பதவியும், பட்டமும், அரைப் பைசா லாபமும் இல்லாமல் நஷ்டமும் அடைந்து கொண்டு வந்ததுடன் சென்ற மந்திரி நியமனத்தின் போதே தனக்கு வலுவில் தானாகவே வந்த மந்திரி பதவியை கட்சியின் சுய மரியாதையை உத்தேசித்து தனக்கு வேண்டியதில்லை என்று சொல்லி மறுத்துத் தள்ளி விட்டவர் திரு. ராஜனேயாவார். ஆதலால் அவருக் குக் கிடைத்ததில் அதிசயமோ, அதிக லாபமோ ஒன்றும் இல்லையென்றே சொல்லுவோம்.
அன்றியும் அவரும் அவரது குடும்பமும் சுயமரியாதை இயக்க விஷயத்தில் எவ்வளவோ அபிமானமும், உதவியும், ஆதரிப்பும் செய்து வந்தவர்களானதினால், இயக்கத்தின் பேராலும் முதலில் திரு. ராஜன் அவர்கள் வரவேற்கப்படவேண்டியவரேயாவர். ஏனெனில் முதல் முதலாக சுயமரியாதை இயக்கம் தமிழ் நாட்டில் பரவவும் ஆங்காங்கு கிளை ஸ்தாபனங்கள் ஏற்படுத்தவும், அவரது குடும்பத்தில் காலஞ்சென்ற பெரியார் திரு. எம். டி. சுப்பிரமணிய முதலியாரவர்களும், மற்றொரு பெரியார் திரு. டி. சோமசுந்திர முதலியாரவர்களும் ஊர் ஊராயும், கிராமம் கிராமமாயும் அலைந்தவர்களாவார்கள். மேலும் பார்ப்பனர்களும் தேசியப் பிழைப்புக் காரரும் “ஜஸ்டிஸ் கட்சியை வெகு ஆழத்தில் வெட்டிப் புதைத்து ஆய்விட்டது” என்று ஆரவாரம் செய்த காலத்தில் “இல்லை, இல்லை அது முன்னிலும் அதிகமாக வலுவுடன் விளங்கப் போகின்றது” என்று காட்டு வதற்காக மதுரையில் சுயமரியாதை மகாநாட்டையே, ஜஸ்டிஸ் மகாநாடு என்னும் பெயரால் நடத்தி தமிழ்நாட்டு மக்கள் எல்லோரையும் தருவித்து தைரியமூட்டி அக்கட்சிக்கு புத்துயிர் அளித்தவர்கள் திரு. ராஜன் குடும்பத் தார்களேயாகும். ஆகவே புத்துயிர் அளித்தும், வளர்த்தும், காப்பாற்றியும் வந்த திரு. ராஜன் அவர்களே முதலில் அக்கக்ஷி சார்பாக மந்திரி பதவி அடையவேண்டியவராவார் என்பது யாவரும் ஒப்ப முடிந்ததாகும். நிற்க,
திரு. முனுசாமி நாயுடு அவர்கள் ஆந்திர நாட்டு அங்கத்தினர்கள் ஆதரவைப் பெரிதும் கொண்டவரானதினாலும் ஜஸ்டிஸ் கட்சிக்குத் தலைவராக ஏற்பட்டதினாலும், அவரும் கூட சென்ற தடவை மந்திரி நியமனத்தின் போது ஒரு ஸ்தானம் வலிய வந்ததை கட்சிக் காரணமாக மறுத்து விட்டவரானதினாலும், அவரும் ஒரு ஸ்தானம் அடையத் தக்கவ ரேயாவர். ஆனால் அவரது கொள்கைகள் நாட்டு நன்மைக்கு ஏற்றவைகள் அல்ல வென்பதை இங்கு நாம் மறைக்க முடியவில்லை. காங்கிரசின் செல்வாக்குக்கு மிகவும் பயந்தவர் பயப்பட வேண்டியவர் அதனாலேயே ஜஸ்டிஸ் கக்ஷியில் பார்ப்பனரைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், அடிக்கடி சொல்லுபவர். அதனாலேயே தேசியப் புரட்டை ஆதரிப்பவர். “ சீர்திருத்த விஷயம் வேறு, அரசியல் விஷயம் வேறு” என்று கூட சொல்ல வேண்டிய அவசியமுடையவர். ஆனபோதிலும் இந்த அபிப்பிராயங்கள் எல்லாம் அவருக்கு ஏற்படக் காரணமென்ன என்போமானால் ஆந்திர நாட்டில் பார்ப்பனரல்லாத பிரசாரம் சரிவர செய்யாததாலே ஒழிய வேறல்ல. ஆகையால் நமது பிரசாரம் ஆந்திர நாட்டுக்கும், அங்குள்ள மக்களுக்கும் தேசியப் புரட்டு விளங்கி காங்கிரஸ் செல்வாக்கும் தமிழ் நாட்டைப் போல் குறைத்து விடுமானால் தானாகவே மாறிவிடக்கூடும் என்று உறுதியாய்ச் சொல்லுவோம். ஆகையால் அதற்காக சிறிது மார்ஜன் விடவேண்டிய தேயாகும்.
தவிர, திரு. எஸ். குமாரசாமி ரெட்டியார் அவர்கள் ஒரு மந்திரியாக வந்ததும் பாராட்டத்தக்கதேயாகும். உலகப் பிரசித்தியான கோயமுத்தூர் மகாநாட்டுக்குத் தலைமை வகித்த முதலே அவருக்கு உரிமை ஏற்பட்டு விட்டது. நன்றாய் பேசக் கூடியவர். இந்த ஸ்தானத்திற்கு ஜமின்தாரர்கள் ராஜாக்கள் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் திரு. ரெட்டி யாரவர்கள் வர நேர்ந்ததானது எவ்வளவோ மேலானதாகும். அவர்கள் நமது சுயமரியாதை இயக்கத்திற்கு எவ்வளவோ ஆதரவளித்தவர்களாவார்கள். சட்டசபையில் தைரியமாய் எந்தவித எதிர்ப்பையும் மறுப்பையும் சமாளித்து பேசத் திறமையுடையவர் இவர் என்றே சொல்லலாம். மற்ற இரு மந்திரிகளையும் கூட நடத்தக் கூடிய அளவு சக்தியுடையவர். ஆகவே நியமன மந்திரிகள் மூவரும் பொதுவில் பாராட்டத்தக்கவர் என்பதில் ஆnக்ஷபமில்லை. ஆனால் இதிலிருந்தே வரவேண்டியவர்கள் எல்லாம் வந்து விட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது. இன்றைய தினம் இந்தப்படியாவது ஒரு கட்சியிருப்பதற்கு முக்கிய ஆதரவாயிருந்தவரான திரு சி. எஸ். ரத்தினசபாபதி முதலியாரவர்கள் ஒரு பதவி அடையாமல் போனதற்கு காரணம் அக்கட்சியின் பலக்குறைவேயாகும். பொது நல சேவைக்கு வந்ததன் மூலம் தனது கிரமமான வருவாயும் கெட்டு, கை முதலிலும் செலவு ஏற்பட்டு லக்ஷக்கணக்காய் பொருள் நஷ்டமடைந்த வரும் நாணய விஷயத்தில் எதிரிகளும் குற்றம் சொல்ல முடியாத மிக்க பரிசுத்தமுள்ளவருமானவர்கள் யாராவது தமிழ் நாட்டில் இருப்பார் களானால் அதில் முதன்மையானவர் திரு. சி.எஸ். ரத்தினசபாபதி முதலியா ரவர்களே ஆவார்கள். அவரே இன்றைய கட்சி அமைப்புக்கு பெரும் பொறுப்பாளியாவர். அவரில்லாதிருந்திருக்குமானால் இன்று மந்திரியா யிருக்கும் கனவான்களில் இரண்டொருவர் மந்திரியாக வந்திருக்கக் கூடுமென்று வைத்துக் கொண்டாலும் ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் மந்திரிகளாய் இருந்திருக்க முடியாது என்று தைரியமாய்ச் சொல்லுவோம். ஆகவே அப்படிப்பட்ட ஒருவர் மந்திரியாக இல்லா விட்டாலும் சட்டசபை பிரசிடெண்ட் ஆகவாவது இருக்கும் படியாக ஜஸ்டிஸ் கட்சியார் என்பவர் கள் பார்ப்பார்களேயானால் தங்கள் கடமையை சிறிதாவது உணர்ந்தவர்கள் ஆவார்கள். ஆனால் அரசியல் துறையில் பிரவேசித்து விட்டால் நன்றியும், நாணயமும், விசுவாசமும் தேய்வுபடுவது இயற்கை. ஆகையால் என்ன நடக்கும் என்று உறுதி கூற முடிவதில்லை.
நிற்க, ஜஸ்டிஸ் கக்ஷியாரின் இன்றைய நிலைமைக்கு அளவுக்கு மேல் பாடுபட்டதின் மூலம் தனது சட்டசபை அங்கத்தினர் பதவியையும் மனமார தியாகம் செய்தவரும் திரு. ராஜன் அவர்கள் கக்ஷி அமைப்பு இவ்வளவு வெற்றி பெறுவதற்கும் மிக்க உதவியாயிருந்தவரும் திருவாளர் று.ஞ.ஹ. சௌந்திரபாண்டியன் அவர்களேயாவார். ஆகவே அவரும் எப்படியாவது மறுபடியும் நியமன மூலமாவது ஸ்தானம் பெறும்படி பார்த்துக் கொள்ள வேண்டிய கடமையும் நன்றியறிதல் குணம் காட்டிக் கொள்வதும் அக் கட்சியின் முக்கியமான கடமையாகும். மற்றபடி கடைசியாக ஒரு விஷயம் சொல்லி இதை முடிக்கின்றோம். அதாவது இன்றையதினம் நமது நாட்டில் ஜஸ்டிஸ் கட்சியையும் அதன் கொள்கைகளையும், இன்று பதவி பெற்ற அதன் மந்திரிகளையும் பாராட்டாமல் யாராலும், எக்கட்சியாலும் இருக்க முடிய வில்லை என்பதானது வெள்ளைக்காரப் பத்திரிகைகளும், பார்ப்பனப் பத்திரிகைகளும், தேசீய வேஷப் பத்திரிகைகளும் எழுதுவதைப் பார்த்தாலே தெரியவரும். இதன் உண்மை என்ன வென்றால் நாட்டில் பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிநிலை மிக்க மேன்மை அடைந்திருக்கின்றது என்பதுவேயாகும். சென்ற தேர்தலில் பதவியடைந்த மந்திரிகளின் கட்சியைவிட, அவர்களது எண்ணிக்கையைவிட, ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் வந்த அங்கத்தினர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்ததும், அவர்கள் இந்தத் தடவை போலவே ஒரு கொள்கையை வெளியிட்டிருந் ததும் யாவருக்கும் தெரியும். அப்படியிருக்கப் பார்ப்பனப் பத்திரிகைகளும், தேசீயப் பிழைப்புக்காரர்களும், ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்காகக் காங்கிரஸ் கட்டளையை மீறியாவது தங்கள் வாக்குறுதிகளைத் தவிர்த்தாவது வேறு கட்சியை அதாவது கொள்கை இல்லையென்றும் எண்ணிக்கையில் குறைந்ததென்றும் இன்றைய தினம் அவர்களாலேயே சொல்லும் கட்சியை “இதை விட மோசமான” நிலையில் இருக்கும் போது ஆதரித்து அப்படிப் பட்ட கட்சியிலிருந்து மந்திரிகளை நியமிக்கச் செய்து அவர்களையும் மனமார, வாயார, கையாரப் பாராட்டிய காரணம் என்ன என்பதையும் இன்று அதை விட்டுவிட்டு முன்பு தாங்கள் ஒழிக்கப் பாடுபட்ட ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கும் காரணம் என்ன என்பதையும் கூர்ந்த அறிவுடன் யோசித்துப் பார்த்தால் அதில் ஒரு உண்மை ரகசியம் விளங்காமல் போகாது. ஒருசமயம் “ ஜஸ்டிஸ் கட்சிக் காரர்கள் கொள்கையை மாற்றிக் கொண்டால் அதனால் நாங்கள் ஆதரிக்கின்றோம்” என்று அக்கூட்டம் சொல்ல வருமானால் அது சிறிதும் பொருந்தாது. ஏனெனில் இவர்கள் என்ன கொள்கை மாற்றிக் கொண்டார்கள் என்பதாக அவர்கள் சொல்லக்கூடும் என்று கவனித்துப் பார்த்தால் அதன் புரட்டும் வெளியாகி விடும். அதாவது “பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண்டார்களே அந்தக் கொள்கைதான்” என்று ஒரு சமயம் சொல்ல வருவார்களேயானால் அக்கட்சியில் இதுவரை ஒரு பார்ப்பன ரையும் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதும், சேர்த்துக் கொள்ளும் படியாக தங்களால் விதிகளைக் கிரமப்படி மாற்றிக் கொள்ளவுமில்லை என்பதும், அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டவுடன் விட்டுவிட்டார்கள் என்பதும் அவர் களுக்கே தெரியும். அன்றியும் அதிலிருந்து சமயத்திற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளுகிறார்கள் என்று குறை கூறக் கூடுமே தவிர அதைத் தங்களுக்கு அனுகூலமாய் எடுத்துக் கொள்ளமுடியாது. அன்றியும் ஏற்கனவே மந்திரி களாய் இருந்தவர்கள் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண்டும் இருக்கிறார் கள். அதில் ஒருவர் மந்திரியாயுமிருந்தார்.
ஆகவே அந்தச் சமாதானம் புரட்டு என்பதும், அதற்காகப் பார்ப்ப னர்கள், இந்த மந்திரிகளையோ, ஜஸ்டிஸ் கட்சியையோ பாராட்டவில்லை என்பதும் விளங்கும். மற்றென்னவென்றால் பழைய மந்திரிகள் சுய மரியாதை இயக்கத்தைப் பலமாய் ஆதரிப்பவர்களென்பதும், இவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அவர்களைவிட இவர்கள் தங்களுக்கு அதிக ஆபத் துக் காரர்கள் அல்லவென்றும் அவர்கள் நம்பியிருப்பதுமாகும். ஆனால் இந்த நம்பிக்கையிலும், இந்தக் கூட்டத்தார்கள் போன மந்திரிகளை நம்பினது போலவே வந்த மந்திரிகளையும் நம்பி ஏமாந்து போவார்கள் என்பது நமது “ஜோசியமாகும்.”
நிற்க, திரு. சுப்பராயன் அவர்கள் மந்திரி பதவி கிடைக்காததி னாலேயே எதிர் கட்சியாய் இருந்து எதையும் ஆnக்ஷபிப்பது என்கின்ற அரசியல் (சிறுமை) குணத்தைப் பின்பற்றாமல் நல்ல காரியங்களுக்கு ஒத்துழைத்து தன்னாலான உதவி செய்வதும், தீய காரியங்களுக்கு தாக்ஷண்யப்படாமல் தைரியமாய் எதிர்ப்பதுமான சுயமரியாதைக் கொள் கையைக் கடைபிடித்து இந்த மந்திரி சபையால் நாட்டுக்கும், பார்ப்பன ரல்லாத சமூகத்திற்கும், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புக்கும் நன்மை உண்டாக்கும்படி பார்க்க வேணுமாய் ஆசைப்படுகின்றோம்.
ஆகவே மேற்கண்ட கொள்கைகளையே உத்தேசித்து ராஜினாமாக் கொடுத்த மந்திரிகளைப் பாராட்டி வழியனுப்பி – புதிதாய் வந்த மந்திரிகளை வரவேற்கின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 02.11.1930