மந்திரிகள்
அக்டோபர் மாதம் 23 தேதி வரை இப்போதைய மந்திரிகளே ஆட்சி நடத்துவார்கள். பிறகு டாக்டர் சுப்பராயன் அவர்களே மந்திரிசபை அமைத் தாலும் அமைக்கக்கூடும். அல்லது ஜஸ்டிஸ் கட்சியார் என்பவர்கள் சார்பாக என்று திரு. பி. முனுசாமி நாயுடு அவர்கள் அமைத்தாலும் அமைக்கக்கூடும்.
யார் யார் “தலையில் பிரம்மா நீ மந்திரியாய் இரு என்று எழுதியிருக் கிறாரோ” என்பது இப்போது தெரியவில்லை. ஆனால் நியமனம் ஆனவுடன் தெரிந்துவிடும், அதோடு நியமனமான பிறகு மத்தியில் ஒரு சமயம் அது போய் விடுவதாயிருந்தாலும் அதுவும் “பிரம்மா எழுதின சங்கதி” உத்தியோகம் போன பிறகுதான் தெரியும்.
எனவே பிரம்மா இந்த விஷயங்களை இவ்வளவு இரகசியமாய் யாரும் அறிய முடியாமல் எழுதி வைத்திருப்பதிலிருந்து, இரகசியத்தைக் காப்பாற்றுவதில் பிரம்மாவானவர் நமது கவர்னர் பிரபுவை விட கெட்டிக் காரர் என்று தான் சொல்ல வேண்டும்.
இது ஒரு புறமிருக்க, நியமனமாகும் மந்திரிகளும் எதிர்பார்க்கும் நபர்களும் கூட தாங்கள் நியமனம் ஆன பிறகுதான் தங்களுக்கு இல்லை என்று முடிந்த பிறகும்தான் கவர்னரையும் பிரமாவையும் போற்றவோ, தூற்ற வோ போகிறார்கள்.
இந்த மாதிரி மந்திரிகள் நியமனமாவதும் ஏமாற்றமடைவதும், வெறும் மந்திரி உத்தியோகத்திற்கு வருகிறவர்களுடையவும், ஏமாற்றமடைகிறவர் களுடையவும் “தலையெழுத்துக்களை” மாத்திரம் பொறுத்ததாய் இல்லா மல் இவர்கள் வரவேண்டுமென்று எதிர்பார்ப்பவர்களுடையவும் வரக் கூடாது என்று எதிர்பார்ப்பவர்களுடையவும், இவர்களால் பிழைக்கலாம், இவர்களால் கெட்டுப் போகக்கூடும் என்று கருதிக் கொண்டிருப்பவர்களு டையவும் “தலையெழுத்துக்களையும்” பொறுத்திருப்பதால் இந்த தலை யெழுத்துக்கள் எப்போதும் பலருக்கு மிக்க குழப்பத்தையே தந்து கொண்டே வருகின்றன.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 05.10.1930