இந்திய சட்டசபை முடிவு
இந்திய மக்களுக்கு காங்கிரசு எவ்வளவு தூரம் பிரதிநிதித்துவம் உடையது என்பதைப் பற்றியும், சட்டசபைகள் எவ்வளவு தூரம் பிரதிநிதித்துவம் உடையது என்பதை பற்றியும், இவைகளில் உள்ள தலைவர்கள் என்போர்களும் அங்கத்தவர்கள் என்போர்களும் எவ்வளவு தூரம் பிரதி நிதித்துவம் உடையவர்கள் என்பதைப் பற்றியும் நாம் பொது மக்களுக்கு அதிகமாய் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. சாதாரணமாக காங்கிரசு என்பது பார்ப்பனர்களுடையவும் படித்த சிலருடையவும் நன்மைக்காக, அதாவது, உத்தியோகமும், பிழைப்பும் பெறுவதற்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சங்கம் என்பதாக நாம் பல நாளாக சொல்லிக் கொண்டே வந்திருக்கிறோம். அதுபோலவே சட்டசபை முதலியவைகளில் அங்கம் பெறவும் அது சம்மந்தமான தேர்தல்களில் ஏழைகளை, பாமர மக்களை நாணயக் குறைவான காரியங்களால் ஏமாற்றி சுயநலத்திற்காக ஸ்தானம் பெறவும் ஆன ஸ்தாபனங்கள் என்றும் சொல்லி வந்திருக்கின்றோம். இவற்றை இதுவரையில் எவரும் மறுத்ததில்லை. ஸ்ரீமான் காந்தியும் இவைகளை ஒப்புக் கொண்டு பாமர மக்களுக்கு அறிவுவரும்வரை இப்படித்தான் ஏமாற்றப்பட்டு வரக்கூடும் என்று சொன்னாரேயல்லாமல் பாமர மக்களுக்கு அறிவு...