கமீஷன் பகிஷ்கார நாடகம் அகில இந்திய வேலை நிறுத்தம்
ராயல் கமிஷன் பஹிஷ்கார நாடகமானது இதுவரையில் தீர்மான ரூபங்களாகவும் தட்டிப்பேச ஆள் இல்லாத இடங்களில் மேடைப் பேச்சாகவும் இருந்து வந்ததானது இப்போது அதாவது பிப்பரவரி µ மூன்றாம் தேதியில் காரியத்தில் காட்டப்படப் போவதாக தெரிய வருகின்றது. அதாவது இம்மாதம் 15 தேதியில் காசியில் சர்வகக்ஷி பகிஷ்கார மகாநாடு என்பதாக ஒன்றுகூடி அகில இந்திய ஹர்ட்டால் (வேலை நிறுத்தம்) செய்வது என்பதாக தீர்மானங்கள் செய்திருப்பதாய் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது. அதை அனுசரித்து நாடெங்கும் வேலைநிறுத்தங்கள் செய்வதற்கு வேண்டிய பிரசாரங்களும் ஆங்காங்கு நடத்த முயற்சிகளும் செய்யப்படுவதாய் காணப்படுகின்றது.
பகிஷ்கார விஷயமாய் ஒவ்வொரு கக்ஷிக்காரர்களும் ஒவ்வொரு தலைவர்கள் என்பவர்களும் சொல்லிவந்த விஷயங்களை மறுத்து அதில் உள்ள புரட்டுகளை வெளியாக்கியும் எத்தனையோ கட்டுரைகள் எழுதியும் சொற்பெருக்குகள் பொழிந்தும் வந்திருந்தும் இதுவரை அவற்றில் ஒன்றுக்காவது சமாதானமோ பதிலோ இல்லாமல் தங்கள் வழக்கபடி புரட்டுகளையே பாமர மக்கள் ஏமாறும்படி எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் வருகிறார்களே ஒழிய மக்கள் உண்மையை அறிய இவர்கள் ஒரு சிறிதும் கவலை எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனாலும் பகிஷ்காரத்திற்கு அறிகுறியாக செய்யப்போகும் வேலை நிறுத்தத்தில் என்ன செய்யப்போகிறார்களென்று கவனிப்போம்.
பகிஷ்கார இயக்கங்களில் சேர்ந்த மந்திரி யாராவது அன்று சர்க்கார் வேலை பார்க்காமல் இருக்கப் போகிறார்களா? சட்டசபை மெம்பர்கள் சட்ட சபை நடந்தால் போகாமல் இருக்கப் போகிறார்களா? வக்கீல்கள் கோர்ட்டுக்குப் போகாமல் இருக்கப் போகிறார்களா? இதைப்பற்றி ஒரு தீர்மானத்தையும் காணோம். பின்னையோவென்றால் ஜட்கா வண்டிக்காரர்கள் வண்டிக் கட்டக் கூடாது என்பதும், வெற்றிலை பாக்கு பல சரக்குக் கடைக்காரர்கள் கடைதிறக்கக் கூடாது என்பதும் பலகார கடைக்காரர்கள் கடை வைக்கக்கூடாது என்பது போன்றவைகள்தான் பகிஷ்காரத்தை காட்ட வேலை நிறுத்தமாகப் போகின்றது. ஜட்கா வண்டிகள் நடைபெறாவிட்டால் ஜட்கா வண்டிக்காரனுக்கு நஷ்டமே யல்லாமல் தலைவர்களுக்கு என்ன நஷ்டம் ஏற்படக் கூடும்? தலைவர்கள் அவரவர்கள் வீட்டில் உள்ள மோட்டார் வண்டிகளில் உல்லாசமாய் ஊர் கோலம் வருவது தப்பாது. தவிர வெற்றிலை பாக்குக் கடை மூடப்பட்டால் தலைவர்களுக்கு என்ன நஷ்டம் வரக்கூடும்? நாளைக்கு கடை திறக்க மாட்டார்கள் என்று சொல்லி முதல் நாளே வாங்கிக் கொண்டு போய் வீட்டில் வைத்துக் கொள்ளுவார்களே ஒழிய அன்று முழுவதும் வெற்றிலை பாக்கு பொடி முதலியவைகளைப் போடாமலாவது இருப்பார்களா? அதுபோலவே ஒரு சமயம் கோர்ட்டுக்குப் போகா
விட்டாலும், ஒன்றா வாய்தா வாங்கிக் கொள்வார்கள் அல்லது வேறு ஒருவனை ஆஜராகச் சொல்வார்கள். ஒன்றுக்கும் முடியாவிட்டால் கக்ஷிக்காரர்கள் கேசு கெட்டுப்போகும். மற்றபடி இவர்களுக்கு அதனால் நஷ்ட
மென்ன ஏற்படக் கூடும் என்பதைக் கவனித்தால் வேலை நிறுத்தத்தில் இவர்களது தியாகம் விளங்காமல் போகாது.
இது தவிர கமிஷன் மெம்பர்களை மற்றவர்கள் பார்க்கவிடாமல் அதாவது இளவரசர் வரவை பகிஷ்கரித்தது போல் சில காலிகளைவிட்டு மறியல் செய்யக்கூடும். இதனால் இப்பெரிய மனிதர்கள் அதாவது சர். தியாகராயர் வீட்டில் ஜன்னல் கதவுகளை உடைத்தது போலும் அவரை அடிக்க வந்தது போலும் உபத்திரவப்படலாம். மற்றபடி இவர்களுக்கு ஏற்படும் கஷ்டமென்ன? ஆதலால் இந்த வேலை நிறுத்தமென்பது ஏழைகளை நஷ்டப்படுத்தும் மற்றொரு கெடுதியே அல்லாமல் வேறல்ல.
அல்லாமலும் இவ்வேலை நிறுத்தம் வெற்றி பெற்று கமீஷனும் இத்தலைவர்களுக்கு வணங்கி இந்தியர்கள் யாரையாவது கமீஷனில் சேர்த்துக் கொள்ளவோ அல்லது இந்திய சுயராஜ்ஜிய நிர்ணயம் செய்ய இவர்
களுக்கு பூரண அதிகாரமும் கொடுக்கவோ வசப்பட்டால் அதன் மூலம் இந்த வேலை நிறுத்தம் செய்த ஏழை மக்களுக்கு என்ன நன்மையுண்டாகும்படி இத்தலைவர்கள் திட்டம் போடக் கூடும் என்பதை யோசித்தால் இதன் புரட்டு வெளியாகாமல் போகாது.
இந்த நாட்டின் பாமர மக்களின் உண்மையான பாமரத் தன்மையை விளக்கவும் இப்பாமர மக்களின் பேரால் வயிறு பிழைக்கக் கருதியிருக்கும் அரசியல் வாழ்வுக்காரர்களின் வன்நெஞ்சத்தை விளக்கவும் இந்த பகிஷ் காரப் புரட்டு ஒன்றே போதுமானது என்பது நமது முடிவு.
இதுவரையில் பகிஷ்காரத்திற்குக் காரணம் எல்லாம் மூன்று விஷயங் கள்தான் முக்கிய தலைவர்கள் என்பவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதை முன்னும் எழுதியிருக்கிறோம்.
1. இந்தியர்களை கமிஷனில் சேர்க்கவில்லை என்பது.
2. இந்தியாவின் சுதந்திரத்தை நிர்ணயிக்க இந்தியர்களுக்கு அதிகாரமேயொழிய பார்லிமெண்டுக்கு இல்லை என்பது.
3. ஆகையினால் இக் கமிஷன் நியமித்தது இந்தியாவின் சுய
மரியாதைக்குப் பங்கம் என்பது.
இம்மூன்றையும் கூர்ந்து பார்த்தால் ஒன்றுக்கொன்று முரண்படக்
கூடியது என்பது விளங்கும்.
தவிர இந்தியர்களில் யாரை நியமிப்பது என்பதும் பார்லிமெண்டாரால் இதுவரை இந்தியாவுக்கு நிர்ணயித்து வந்த சுதந்திரங்களை நாம் பகிஷ்கரித் தோமா? அல்லது இந்த சமயத்திலாவது பகிஷ்கரிக்க தயாராயிருக்கின் றோமா? என்பதும் முதல் இரண்டு விஷயங்களுக்குத் தக்க சமாதானமாகும்.
மூன்றாவதான சுயமரியாதை விஷயம் நித்திய அரசு முறை
வாழ்க்கையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நமக்கு சுயமரியாதை வழங்கப்
பட்டு வருகின்றதா? என்பதையும் பஞ்சாப் அட்டூழியத்தைவிட கமிஷனால் நமக்கு அதிகமான சுயமரியாதை பங்கம் வந்துவிட்டதாவென்பதையும் வங்காளத் தலைவர்களை காரணமில்லாமல் சிறையில் அடைத்து வைக்கிறார் களே அதைவிட இந்த கமிஷன் நியமனத்தால் அதிகமான சுயமரியாதைப் பங்கம் வந்துவிட்டதா? என்பதையும் யோசித்துப் பார்த்தால் மூன்றாவதான நமது சுயமரியாதையின் தத்துவம் விளங்காமல் போகாது. அன்றியும் சமூக வாழ்க்கையில் 100-க்கு 3 வீதம் உள்ள பார்ப்பனர்கள் நம்மை நித்திய வாழ்க்கையில் இகபர சாதனம் என்பவைகளில் நம்மை நடத்திவரும் – நாமும் ஏற்று நடந்து வரும் தத்துவங்களைவிட இந்த கமிஷன் நியமனம் சுய மரியாதைப் பங்கமானதா? என்பதை யோசித்தால் இந்த கூச்சல் யோக்கிய மானதா? என்பது விளங்கி விடும். ஆதலால் சமூக முன்னேற்றத்திற்கும் உண்மையான சுயமரியாதை தத்துவத்திற்கும் அனுகூலமான இந்த சந்தர்ப்பத்தை வேறு வழியில் திருப்பி விடுவதற்காகவும் கமிஷன் மூலமாய் நமது எதிரிகள் ஒன்று சேர்ந்து கட்டுப்பாடாய் செய்யும் இச் சூழ்ச்சிக்கு நமது மக்கள் இணங்கி ஏமாறக் கூடாது என்றே சொல்லுகின்றோம்.
பகிஷ்கார தினத்தன்று தொண்டர்கள் கடமை
வேலைநிறுத்தம் காரியத்தில் நடைபெற ஏதாவது ஏற்பாடுகள் செய்வார்களானால் உத்தியோகப் பார்ப்பனர்கள் ஒவ்வொருவரும் இந்த வேலை நிறுத்தத்திற்கு அனுகூலமாக ஆங்காங்குள்ள பாமர மக்களை மிரட்டி வேலை நிறுத்தத்திற்கு உதவி செய்யக் கூடும் என்பதும் நமக்குத் தெரியும்.
ஆனாலும் ஆங்காங்குள்ள சுயமரியாதைத் தொண்டர்கள் இவ்வதிகாரிகளுக்குப் பயப்படாமல் ஒன்று சேர்ந்து முதல் நாளே ஒவ்வொரு கடைக்காரரிடமும், வண்டிக் காரரிடமும் போய் உண்மையைச் சொல்லி ஏமாறாமலிருக்கச் செய்ய வேண்டும். ‘குடி அரசு’ ‘நவசக்தி’ ‘திராவிடன்’ ‘குமரன்’ முதலிய பத்திரிகையிலும் இது விஷயமாய் வந்த வியாசங்களைப் பெயர்த்து துண்டு விளம்பரங்கள் அச்சிட்டு வழங்க வேண்டும். ஆங்காங் குள்ள முக்கிய தொண்டர்கள் தங்களது விலாசத்தை உடனே தெரிவித்தால் துண்டு விளம்பரங்கள் அனுப்பிக் கொடுக்கப்படும்.
தவிர ‘திராவிடன்’ ‘குடிஅரசு’ ‘குமரன்’ ‘நவசக்தி’ போன்ற பத்திரி கைகளுக்கு சந்தா சேர்க்க வேண்டும், பார்ப்பனப் பத்திரிகைகளையும் பார்ப்பனர்களுக்கு உள் உளவாயோ அல்லது அவர்களுக்கு பயந்து கொண்டோ பகிஷ்காரக் கூச்சலில் கலந்து கூட்டத்தில் கூப்பாடு போடும் பகிஷ்காரப் புரட்டுப் பத்திரிகைகளையும் பகிஷ்கரிக்கும்படி அறி வுறுத்த வேண்டும்.
குடி அரசு – தலையங்கம் – 22.01.1928