இதுவா ராஜிக்கு சமயம்
10-01-28 தேதி சென்னை கோகலே ஹாலில் ராயன் கமிஷன் பகிஷ்கார விஷயமாய் பெசண்டம்மை, ஸ்ரீமான்கள் பி.சிவராவ், எல்.கோவிந் தராகவய் யர், எம். ராமச்சந்திர ராவ். சி. விஜயராகவாச்சாரியார், கே.ஆர். வெங் கிடராமய்யர் ஆகிய பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத கட்சித் தலைவர்களில் ஸ்ரீமான் கள் பணகால் ராஜா, சர் பாத்ரோ, கிருஷ்ண நாயர் ஆகியவர்களைக் கூப்பிட்டு ராஜி பேச ஏற்பாடு செய்ததாகத் தெரிகின்றது.
இக்கூட்டத்தில் பெரிதும் அரசியல் திட்டத்தைக் குறித்தும், கமிஷன் பகிஷ்காரத்தைக் குறித்தும் பேசினார்களாம். நமது சுயமரியாதையையும் சமத்துவத்தையும், இப்பார்ப்பனர்கள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கும் வரை அவர்களுடன் கலந்து ராஜீயத்திட்டம் போடுவதோ அல்லது அவர் களுடன் கலந்து அரசியல் கிளர்ச்சி நடத்துவதோ பகிஷ்காரத்தில் இறங்கு வதோ போன்ற அறியாமை வேறில்லை என்பதே நமது அபிப்பிராயம்.
சுயராஜ்யமும், அரசியல் கிளர்ச்சியும், பகிஷ்கார கூச்சலும் படித்த வர்கள் உத்தியோகம் பெறுவதற்காகவா? அல்லது ஏழைக் குடிகளைக் காப்பாற் றுவதற்காகவா? என்பதை ஒவ்வொருவரும் நெஞ்சில் கையை வைத்துப் பார்க்கட்டும். அவ்வுத்தியோகம் எல்லா வகுப்பாருக்கும் சரிசமான மாய் கிடைப்பதற்கு ஒப்புக் கொள்ளாதவர்களிடம் ராஜிப் பேச்சு பேசுவதில் என்ன பலன் கிடைக்கும்? அவ்வுத்தியோகத்தின் மூலமோ அதனால் ஏற்படும் பிரதிநிதித்துவத்தின் மூலமோ சகல ஜனங்களுக்கும் சமத்துவமும், சமூக விஷயத்தில் சம உரிமையும் கிடைக்கும்படி செய்வதற்கு உபயோகிக்க சம்மதிக்காதவர்களிடத்தில் ராஜிப் பேச்சு பேசுவதில் என்ன பலன்? ஆகவே ஒரு பெரிய சமூகமாகிய பார்ப்பனரல்லாத சமூகத்திற்கே பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளுபவர்கள் இவ்விஷயங்களைக் கவனிக்காமல் தங்களுக்கு மாத்திரமோ தங்கள் கோஷ்டிக்கு மாத்திரமோ ஏதோ சில சிறு சிறு பலன்கள் கிடைக்கக்கூடும் என்கின்ற எண்ணத்தின் பேரிலோ அல்லது கிடைக்க செய்வதாய் சில பார்ப்பனர்கள் வாக்களிக்கின்றார்கள் என்கின்ற நம்பிக்கை யின் பேரிலோ ராஜிப் பேச்சு பேச உட்காருவதால் மற்ற பொது ஜனங்கள் எல்லோரும் கண்மூடித்தனமாய் ஒப்புக் கொள்ளுவார்கள் என்று எதிர்பார்ப் பது ஏமாற்றமாய் முடியும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
தவிரவும் பார்ப்பனர்கள் போட்ட பகிஷ்கார கூச்சல்களுக்கும் அவர் களது போலித் தீர்மானங்களுக்கும் நாட்டில் மதிப்பு இல்லாமல் போனதை கண்ட வாலறுந்த நரிகள் மற்ற எல்லா நரிகளின் வாலும் அறுந்து போகும்படி செய்து விட்டால் தமக்கு மாத்திரம் தனி அவமானம் இருக்காது என்பது போன்ற எண்ணத்துடன் ஜ°டி° கட்சியாரின் ஆதரவைப் பெற வந்திருக் கிறார்கள் என்பதை உணர்ந்து அப்பார்ப்பனர்களின் சூழ்ச்சியில் சிக்கி தாங்களும் வாலறுந்த கூட்டத்தில் சேராமல் இருக்கவேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு – கட்டுரை – 15.01.1928