பதவிப் போட்டி சுயமரியாதை அளிக்காது
சமீபத்தில் சட்ட மெம்பர் வேலை காலியாகப் போகின்றது.
ஏனென்றால் சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்களின் 5 வருஷ காலா
வதி இனி 2 , 3 மாதத்தில் முடிவடையப் போகின்றபடியால் அந்த ஸ்தானம் காலியாக வேண்டியது கிரமமாகும். ஆனால் சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் சட்டமெம்பர் வேலைபார்த்த காலத்தில் தனது உத்தியோகம் இனியும் கொஞ்சகாலம் நீடிக்க வேண்டும் என்கின்ற உத்தேசம் கொண்டே வெள்ளைக்காரருக்கு அனேக உதவி செய்திருக்கின்றார். கையினால் செய்வதானால் பதினாயிரக்கணக்கான மனிதர்க்குக் கூலி கொடுக்கதக்க வேலைகளை ஒரு சிறிது தயவு தாக்ஷண்ணியம் பாராமலும் இந்தியாவில் மாதம் 1-க்கு லக்ஷக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் வேறு நாடுகளுக்குக் கூலிகளாகப் போகிறார்கள் என்பதைக் கருதாமலும் இந்திய நாட்டுப் பணம் இந்தியர்களால் வரியாகக் கொடுத்த பணம் ஒரு சிறிதும் இந்தியாவில் தங்காமல் வெளிநாட்டிற்குப் போகின்றதே என்கின்ற கவலையில்லாமலும் கையினால் செய்வதற்குப் பதிலாக பத்து லக்ஷம் இருபது லக்ஷம் என்பதாகப் பணம் கொடுத்து வெள்ளைக்காரர்கள் நாட்டுயந்திரங்களுக்காகப் பணம் கொடுத்ததும், நம்ம நாட்டில் உற்பத்தியாகும் சுண்ணாம்பு போட்டு வேலை செய்வதனால் கோடிக்கணக்கான ரூபாய் நமது நாட்டில் தங்குமே என்றாவது அதனால் லக்ஷக்கணக்கான குடும்பங்கள் பிழைக்குமே என்றாவது ஒரு சிறிதும் கவலையில்லாமலும் கல்மனப் பார்ப்பார் என்பது போல் கல் நெஞ்சத்துடன் பணங்களை வாரி வெளிநாட்டு சிமெண்டு சுண்ணாம்புக்குக் கொடுத்தும், இந்திய வரி கொடுப்போர்களின் பணத்தை சிக்கனமாகச் செலவு செய்யவேண்டுமே என்கின்ற பொறுப்பு ஒருசிறிதும் இல்லாமல் மேட்டூர் தேக்க வேலைக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 1000, 2000, 3000 சம்பளமுள்ள வேலைகளை தேவைக்கும் அளவுக்கும் மிஞ்சி சிருஷ்டித்ததுடன் அவைகளை இந்தியர்களுக்கு கொடுக்கலாம் என்கின்ற கவலையுமில்லாமல் வெள்ளைக்காரர்களுக்கே கொடுத்தும் அவர்கள் தயவு சம்பாதித்தும் சட்டசபைகளில் இதைப்பற்றி கேட்ட கேள்விகளுக்கு ஏறுமாறாய் பதில் சொல்லியும் கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்ட சமயங்களில் ஊமைபோல் பேசாமலிருந்தும் ஜனங்கள் இவரது நாணயப் பொறுப்பில் சந்தேகமும் தீர்மானமும் கொண்டதைப் பற்றிக் கூட லக்ஷியமில்லாமலும் இருந்து அரசாங்கத்திற்கு உதவி செய்து இன்னமும் கொஞ்சகாலம் அப்பதவியில் இருக்க பிரயத்தனப்பட்டு வருகிறார் – ஆதலால் அது காலியாவது சற்று கஷ்டமானாலும் ஆகலாம். அல்லது அவருக்கு இதை விட பெரிய உத்தியோகம் கொடுப்பதாலோ அல்லது இவ்வளவு கேவலமாக அவரது ஆட்சியானது பழிக்கப்பட்டு விட்டது என்கின்ற காரணத்தாலோ காலி ஆனாலும் ஆகலாம். அனேகமாய் காலியாகுமென்றே எண்ணுகின்றோம்.
அப்படி காலியாவதனால் அதற்கு இப்போதிருந்தே போட்டி வந்து நிற்கின்றது.
முதலாவது பார்ப்பனர் பார்ப்பனரால்லாதார் போட்டி. அதாவது பார்ப்பனர்களில் ஸ்ரீமான்கள் டி. ரங்காச்சாரியார், ஜட்ஜி வி.வி. சீனிவாசயங்கார், சர். தேசிகாச்சாரியார், டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரியார் ஆகிய நால்வர்கள். பார்ப்பனரல்லாதார்களில் சர். மு.ஏ. ரெட்டி நாயுடு, சர். ஹ.ஞ.பாத்றோ, டாக்டர் ஞ. சுப்பராயன், ஸ்ரீமான்கள் கூ.ஹ. ராமலிங்கம் செட்டியார், வெங்கிட்டபதி ராஜு ஆகியவர்கள் – இதில் பார்ப்பனர்களிலும் அய்யர், அய்யங்கார் என்கின்ற கக்ஷிகள் இருக்கின்றன. அதாவது அந்த வேலை ஏற்பட்டது முதல் ஒரு அய்யர் ஒரு அய்யங்கார் என்று மாறி மாறி வந்திருப்பதால் இப்போது அய்யருக்கடுத்தது அய்யங்காருக்குத்தான் கொடுக்க வேண்டுமென்றும் ஏற்கெனவே மூன்று அய்யர்கள் அதாவது ஸ்ரீமான்கள் ஏ. கிருஷ்ணசாமி அய்யர், ஞ.ளு. சிவசாமி அய்யர், ஊ.ஞ. ராமசாமி அய்யர் ஆகிய மூன்று அய்யர்கள் ஆகிவிட்டதாலும் அய்யங்கார்களில் ஞ. ராஜ கோபாலாச் சாரியார், மு. சீனிவாசய்யங்கார் ஆகிய இரண்டே அய்யங்கார்கள் மாத்திரம் ஆகி இருப்பதாலும இது சமயம் ஒரு அய்யங்காருக்கே கொடுக்கப்பட வேண்டுமென்கின்ற உரிமை பாராட்டப்படுகின்றது.
அதுபோலவே பார்ப்பனரல்லாதார்களாலும் அந்த உத்தியோகம் ஏற்பட்டு இதுவரை அதாவது சுமார் 18 வருஷ காலமாக அது பார்ப்பனர்களுக்கே கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. அதனால் நீதி இலாக்கா முழுவதும் பார்ப்பன மயமாகிவிட்டது. இந்தத் தடவை எப்படியாவது அதை ஒரு பார்ப்பனரல்லாதாருக்கே கொடுக்க வேண்டும் என்கின்றதாக உரிமை பாராட்டப்படுகின்றது.
இதில் சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் பார்ப்பனரல்லாதாரின் உண்மை பிரதிநிதி என்றும் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுத் தீர்மானத்திற்கு விரோதமாய் சர்க்காருக்கு அனுகூலம் செய்திருப்பதாகவும் உரிமை கொண்டாடுகின்றார்.
சர்.பாத்றோ அவர்கள் பார்ப்பனரல்லாதவர் பிரதிநிதி என்பதோடு மிதவாதி என்கின்ற முறையில் சுவற்றின் மேல் பூனையாய் இருந்தேன் என உரிமை கொண்டாடுகின்றார்.
டாக்டர் சுப்பராயன் – நான் ஜஸ்டிஸ் கட்சியில் இல்லை என்பதுடன் முதல் மந்திரியாயிருந்து சர்க்காருக்கு உதவி செய்து வருகின்றேன், சுயராஜ்ய கட்சியைக் கொன்று விட்டேன், காங்கிரசின் அயோக்கியத்
தனத்தை வெளியாக்கி விட்டேன், மந்திரி பதவியின் உபத்திரவம் பொறுக்க முடியவில்லை ஆதலால் அது எனக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று உரிமை பாராட்டுகிறார்.
ஸ்ரீமான் டி.எ. ராமலிங்கம் செட்டியார் – ஆதிமுதல் கொண்டு சர்க்காருக்கு நல்ல பிள்ளையாயிருப்பதுடன் ஜஸ்டிஸ் கட்சி அதிக பலம் பெற்றுச் சர்க்காருக்கு உபத்திரவம் விளைவிக்காமல் இருக்கத்தக்கப்படி அதில் கட்சியை உண்டாக்கி அதை தோற்றுப்போகும்படிச் செய்தேன், அதோடு பார்ப்பனர்களுக்கு தாசனாகவும் இருந்து வந்திருக்கின்றேன், சர்.சி.பி. அய்யர் சொன்னபடி எல்லாம் ஆடினேன். அதனால் பார்ப்பனரல்லாத சமூகத்தில் உள்ள செல்வாக்கையும் இழந்தேன். கோயமுத்தூர் மகாநாட்டில் சர்க்காரையும் கவர்னர் பிரபுவையும், சர்.சி.பி. அய்யரையும் கண்டித்தும் வைதும் செய்யப்பட்ட தீர்மானங்களுக்கு விரோதமாய் வேறு ஒரு மகாநாடு கூட்டி அவைகளை மறுத்து தீர்மானம் செய்யச் செய்தேன். அதோடு இனியும் பார்ப்பனரல்லாத கட்சி அழிய என்ன என்ன வேலை செய்யவேண்டுமோ அதெல்லாம் செய்து வருகிறேன். ஆதலால் எனக்குத்
தான் அவ்வுத்தியோகம் கொடுக்கப்பட வேண்டும் – என்று உரிமை பாராட்டுகிறார்.
ஸ்ரீ நரசிம்மராஜுலு அவர்களோ – சுயராஜ்யக் கட்சி செத்துப் போய்விட்டது. காங்கிரசும் வேரற்றுவிட்டது, வேறு உத்தியோகம் கிடைத்தால் இதை விட்டுவிடுவதில் தடையில்லை. அன்றியும் ஜஸ்டிஸ் கட்சியில் பிளவுண்டாக்கினதற்கு ஒரு காரணஸ்தன், ஆகையால் எனக்கே கொடுக்க உரிமை உண்டு என்கின்றார்.
இவற்றை அனுசரித்து பார்ப்பனரல்லாதார்களுக்குள்ளும் ஸ்ரீமான்கள் சர். ரெட்டி நாயுடுகாரும் டி.எ. செட்டியாரும் இன்னும் பலரும் சேர்ந்து ஒரு கட்சி ஏற்படுத்த வேலை செய்து வருகின்றார்கள். அதாவது (நான்
பிராமின் கான்ஸ்ட்டியூஷனலிஷ்டு) பார்ப்பனரல்லாத ஒழுங்கு முறைக்காரர்கள் என்கின்ற பெயருடன் ஒரு கட்சி முயற்சித்து வருகின்றார்கள்.
இதற்காக ஒரு ஆங்கில பத்திரிகையும் ஏற்படுத்த கருதியிருப்பதோடு ஆட்களை சேர்க்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றது. பிரசாரம் செய்ய சில பிரசாரகர்களையும் உத்தேசித்தாய் விட்டது. இதற்கு பணம் பெரும் பகுதியும் சூணாம்பேட்டை ஜமீன்தார் தலையில் கை வைப்பதாகவும் தீர்மானித்தாய் விட்டது. ஸ்ரீ டி.எ.ரா. செட்டியார் கையிலிருந்தும் கொஞ்சம் செலவாகித்தான் தீரும்.
இந்த நிலையில் உத்தியோகப் போட்டி காரணமாய் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாக இப்படி ஒரு பிரசாரமும் நடக்கப் போகின்றது. ஆனால் இது அநேகமாய் 2 மாதத்திற்குள் வேகம் குறைந்துவிடும். ஏனெனில் 2,3 மாதத்தில் இந்த உத்தியோகம் யாருக்கு ஆகும் என்பது முடிந்துவிடும். இது நிற்க,
ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள தலைவர்களின் பொறுப்பும் நாளுக்கு நாள் தளர்ந்து கொண்டுதான் வருகின்றது. ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகை ஆசிரியரான ஸ்ரீமான் ராமசாமி முதலியாருக்கு காங்கிரஸ் ஆசை அதாவது தேசீய ஆசை பிடித்துவிட்டது. அந்த மேடையில் எப்படியாவது இடம் கிடைத்துவிட்டால் பார்ப்பனர்களின் யோக்கியதையை வெளியாக்கி இந்தியாவில் உள்ள பேச்சுக்காரர்கள் எல்லோரையும்விட நன்றாய் தனக்கும் தனது கட்சியாருக்கும் பேசி விளம்பரம் சம்பாதிக்கலாமே என்கின்ற ஆசையே முக்கியமானதாக இருக்கின்றது. இது பார்ப்பனர்களுக்குத் தெரிந்துதான் பார்ப்பனரல்லதாரைக் கொண்டே இவருக்கு இடம் கிடைக்காமல் செய்து விட்டார்கள். ஆனாலும் எப்பொழுது ஒரு தடவை காங்கிரசு ஆசை வந்து விட்டதோ இனி அவரும் அவரைப்போல் காங்கிரஸ் ஆசை பிடித்த ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களும் சரியானபடி பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு உதவ மாட்டார்கள் என்பதே நமது அபிப்பிராயம். ஆகவே ஜஸ்டிஸ் கட்சிக்குள் ( பார்ப்னரல்லாதாருக்குள் ) இப்படி ஒரு கூட்டம் சீக்கிரத்தில் வலுப்படக்கூடும் என்றே நினைக்கின்றோம். பனக்கால் ராஜாவுக்கு இன்னது செய்வதென்பது விளங்காமல் விழிக்கிறார் என்று தான் தெரிய வேண்டியிருக்கிறது. எப்படி யாவது இதை விட்டுவிட்டு ஓடிப் போனால் தேவலாம் என்று அவருக்குத் தோன்றுவதாகக் காணப்படுகிறது. தலைவர் என்கிற முறையில் எல்லோருக் கும் நல்ல பிள்ளையாக நடக்க முயல்கிறார். இக் கொள்கை பெரும்பாலும் தோல்வியைத்தான் கொடுக்கின்றது வழக்கம் என அஞ்சுகின்றோம். ஆகவே இதைப்பார்த்து யாரும் பயப்பட வேண்டியதில்லை. இப்பொழுது பார்ப் போமானாலும் சரி யார் மாறினாலும் சரி நமக்கு அதைப்பற்றி கவலையில்லை.
எப்போதும் ஆங்கிலம் படித்தவன் உத்தியோகம் பெறுவதிலும் பணக்காரன் பதவியும் பெருமையும் பெறுவதிலும் கண்ணாயிருப்பார்களே தவிர பாமர மக்களையும், ஏழை மக்களையும் கவனிக்க மாட்டார்கள் என்பது சத்தியம்.
ஆகவே, அவர்கள் நம்முடன் இருந்தாலும் ஒன்றுதான் நம்மை விட்டு போனாலும் ஒன்றுதான். கூர்மையாய் பார்த்தால் இவர்கள் நம்மை விட்டு ஒழிந்து போவதே நல்லது. ஏனெனில் இவர்கள் நமக்குள்ளாக இருந்தே இவர்கள் தங்களது சுய நலத்திற்காக ஏமாற்றி நம்மை உபயோகித்து கொள்வ தைவிட அவர்களும் வெளிப்படையான எதிரிகளாகிவிடுவதே. மேலானது. பார்ப்பனனின் உயர்ந்த ஜாதித் தன்மையும் ஆங்கிலம் படித்த உத்யோ கஸ்தனின் அதிகாரத் தன்மையும், பணக்காரனின் செல்வச்செருக்குத் தன்மை யும் ஒரே தத்துவம் கொண்டதுதான். உண்மை விடுதலைக்கு இம்மூன்றும் சமமான எதிரியேயாகும். ஆதலால் இவற்றையெல்லாம் சேர்த்து எதிர்த்து நிற்கும் நிலை எவ்வளவு சீக்கிரத்தில் நமக்கு ஏற்படுகின்றதோ அவ்வளவுக் கவ்வளவு நமக்கு பல விதத்திலும் விடுதலைப் போர் சீக்கிரமாக முடியு மென்பதே நமது அபிப்பிராயம். ஆதலால் இவ்வருடத்திய உழைப்பில் யாரும் மனம் தளர்ந்துவிடவேண்டியதில்லை. ஒற்றுமையாய் முனைந்து நின்று வேலை செய்தால் நமது முடிவான லட்சியம் கைகூடும் என்று தைரிய மாய்ச் சொல்லுவோம். நமது லட்சியம் நியாயமானதும், சத்தியமானது மாயிருந்தால் எதிர்ப்புகள் ஏற்படுவதெல்லாம் நன்மைக்கனுகூலமாகவே இருக்கும் என்கின்ற விஷயத்தில் யாவருக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும். உத்தியோக சண்டையை விடுதலைப் போராக நினைத்து ஏமாந்ததில் வெகுகாலம் வீணாய்விட்டது. ஆதலால் பொதுஜனங்கள் தேச நன்மைக்கும் மக்கள் சுய மரியாதைக்கும் சமத்துவத்திற்கும் உத்தியோக சண்டையையே பிரதானமாய் கருதாமல் சுயமரியாதைச் சண்டை என்பதாகவே தனிச்சண்டை நடத்தத் தயாராயிருக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – கட்டுரை – 15.01.1928