காங்கிரசும் ராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டும்
ராயல் கமிஷனை பஹிஷ்கரிக்கும் விஷயமாய் அரசியல்வாதிகள் இடும் கூச்சல்கள் எல்லாம் புரட்டு என்றும் அது பெரிதும் வகுப்பு உரி மைக்கு விரோதமாய் போடும் கூச்சல்கள் என்றும் ஆதிமுதல் கொண்டே எழுதி வந்திருக்கின்றோம்.
உதாரணமாக, வகுப்பு உரிமை வேண்டுமென்று கேட்கப்படும் எந்தக் கூட்டத்தாராலாவது பஹிஷ்காரம் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்றதா என்பதைப் பார்த்தால் தெரியவரும். அத்துடன் கமிஷனை பஹிஷ்கரிக்கும் ஒவ்வொரு கூட்டமும் வகுப்புரிமை கூடாதென்பதையும் வற்புறுத்திக் கொண்டே வருகின்றது. எனவே கமீஷனை அடியோடு பஹிஷ்கரிக்க வேண்டும் என்று சொல்லும் தத்துவம் கமீஷனில் எல்லா வகுப்புகளுக்கும் சம உரிமை கிடைக்கும்படியான நிலைமை ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்கின்ற பயத்தாலேயே ஒழிய கமீஷனால் இந்திய அரசியல் சுதந்திரத்திற்கு ஏதாவது கெடுதி வந்து விடுமோ என்கின்ற காரணத்தாலல்லவென்றே சொல்லுவோம்.
மிதவாதிகள்கூட பஹிஷ்காரத்திற்கு ஆதரவளிக்கின்றார்கள் என்பது சிலருக்கு அதிசயமாகத் தோன்றலாம். மிதவாதிகள் பஹிஷ்கரிக்கும் காரணம் தியாக புத்தியுடனோ அல்லது அரசாங்கத்துடன் விரோதித்துக் கொள்ளத்தக்க வீரத்துடனோ அல்லவென்று உறுதியாய்ச் சொல்லுவோம்.
முக்கியமாக மிதவாதிகள் என்பவர்கள் பெரிதும் யார் என்று பார்த்தால் இந்த உண்மை விளங்கும். அதாவது,
ஸ்ரீமான்கள் சிவசாமி அய்யர், சிந்தாமணி பந்துலு, சாப்ரூ அய்யர், மாளவியா அய்யர், சீனிவாச சாஸ்திரி, ரங்காச்சாரி, நரசிம்ம சர்மா முதலிய அய்யர், சாஸ்திரி, சர்மா, பந்துலு, ஆச்சாரி ஆகிய பார்ப்பனர்களே அல்லாமல் வேறல்ல. இந்த கூட்டங்களில் ஒவ்வொருவரும் சர்க்காருடன் ஒத்துழைத்தவரும் சர்க்காரில் மாதம் ஒன்றுக்கு 5000, 7000 சம்பளம் வாங்கின
வரும் சர்க்காருக்கு விரோதமாக ஜனங்கள் கிளம்பிய காலத்திலெல்லாம் சர்க்காருக்கு ஆதரவளித்து கூலி பெற்றவருமேயல்லாமல் தேசத்திற்காக ஒரு காதொடிந்த ஊசியாவது நஷ்டப்பட்டவரல்லர். அப்படியிருக்க இந்த பார்ப்பனர்கள் இப்போது கமிஷனைப் பஹிக்ஷிஷ்கரிக்க ஒப்புக்கொண்ட காரணம் இதுவரை தாங்கள் ஏகபோகமாய் அனுபவித்துவந்த உத்தியோகங்கள் இனி ஏற்படப்போகும் சீர்திருத்தத்தின் பலனாய் எல்லோருக்கும் கிடைக்கும் படியாய் போய்விடுமோ என்கின்ற பயத்தால் அல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?
இனி ஏற்படப் போகும் சீர்திருத்தத்தின் பலனாயும் பாமர மக்களுக்கு ஒரு பலனும் உண்டாகாது என்பது உறுதியேயானாலும் இதனால் ஏற்படும் உத்தியோகங்களாவது எல்லா சமூகத்தாருக்கும் சற்றேறக் குறைய சமமாகக் கிடைக்கும்படியாக இருக்கும் என்பதற்கு சில அடையாளங்கள் காணப் படுகின்றன. என்னவெனில் கமிஷனில் இந்தியர்களில் யாரையும் நியமிக்கா ததே ஒரு அடையாளம் என்று கொள்ள வேண்டும். நியமிப்பதானால் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரையும் நியமித்திருக்க முடியாது. அப்படி மீறி நியமித்திருந்தாலும் இப்பார்ப்பனர்கள் இதே மாதிரி கூச்சல்தான் போடுவார்கள். இரண்டாவதான அடையாளம் என்னவென்றால், செக்ரிடெரி ஆப் ஸ்டேட் என்னும் இந்தியா மந்திரியாகிய லார்ட் பர்க்கன் ஹேட் பேசியிருக்கும் பேச்சில், இந்தியாவிலுள்ள வகுப்புப் பிரிவுகளையும் வகுப்புக் கொடுமைகளையும் உணர்ந்திருப்பதாகக் காட்டிக்கொண்டார். இது பார்ப்பனர்களுக்கு வயிற்றில் இடி விழுந்ததுபோல் தோன்றியிருக்கும். ஏனெனில் ஒரு பொறுப்புள்ள அதிகாரியாகிய இந்தியா மந்திரி இந்தியாவில் பல வகுப்பும் வகுப்புக் கொடுமையும் இருக்கின்றதாக ஒப்புக் கொண்ட பிறகு அதற்கு பரிகாரம் செய்யாமல் இருப்பாரானால் அவரைப் பற்றிப் பொது ஜனங்கள் குற்றமாய் நினைப்பார்கள். அதாவது சாக்குச் சொல்லி சுதந்திரம் கொடுக்காமல் தப்பித்துக் கொள்வதற்கு மாத்திரம் இம்மாதிரி வகுப்புப் பிரிவினைகளை காட்டிக் கொண்டாரேயொழிய அதற்குப் பரிகாரம் செய்ய முன் வரவில்லை. ஆதலால், இது கெட்ட எண்ணத்தின் பேரில் சொல்லப்பட்ட வார்த்தை என்று சுலபத்தில் சொல்லி விடுவார்கள் என்பது அவருக்கு தெரிந்த காரியமாதலால் அதற்கு தகுந்த பரிகாரம் கொஞ்சமாவது செய்யத் தீர்மானித்துக் கொண்டுதான் இப்படி சொல்லியிருப்பார் என்பது பார்ப்பவர் களுக்குத் தெரியும். அன்றியும் சதா காலமும் இந்து முஸ்லீம் கலவரங்களும், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் தகரார்களும் நடைபெற்று வருவதும் அவர் கள் அறிந்ததே. தவிரவும் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை அதிகமான பதவிகள் கொடுக்க அரசாங்கத்தார் கட்டுப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் எவ்வளவோ சூழ்ச்சிகளுக்கு இடையில் எவ்வளவோ கஷ்டங்களை பொறுத்துக் கொண்டு சீர்திருத்தத்தை நடத்திக்காட்டி இருக்கின்றார்கள். அப்படி ஏதாவது அதிக மான சுதந்திரம் என்பது கொடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் உத்தியோக முதலிய பலன் முழுதும் பார்ப்பனர்களே அனுபவிக்க முடியாமல் போகுமோ என்கின்ற பயம் பார்ப்பனர்களுக்கு ஏற்படுவது இயற்கைதான்.
உதாரணமாக, காங்கிரசின் காரியதரிசியாய் ஹோம்ரூல் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராய், பெரிய தேசாபிமானியாய் இருந்த சர்.சி.பி. ராமசாமி அய்யர் இனி அதிகமான சீர்திருத்தங்கள் வேண்டியதில்லை என்று அரசாங்கத்தாருக்குச் சொன்னதும், பனகால் ராஜா இனியும் அதிகமான சீர்திருத்தம் வேண்டுமென்று சொன்னதுமே இந்த பயத்திற்கு போதுமான சாக்ஷியாகும்.
தவிர, பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் இரட்டை ஆட்சி ஒழிந்து மாகாண சுயாக்ஷி ஏற்பட்டால்தான் உத்தியோகங்களை ஏற்றுக் கொள்ள அதாவது சர்க்காருடன் ஒத்துழைக்க முடியும் என்று சொன்னதும் காங்கிரஸ் மகாசபை என்பது அரசாங்கத்தாரின் மனப்பான்மை மாற்றமடைந்ததாக ஜாடை காட்டினால் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறோம் என்று சொன்னதும் இவ்வருஷக் காங்கிரசில் அதைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாமல் சமயம் போல் நடந்து கொள்ள சவுகரியமிருக்கும்படி இடம் ஏற்படுத்தி வைத்துக் கொண்டதும் மற்றொரு சாக்ஷியாகும்.
தவிர, ராயல் கமிஷன் பகிஷ்காரத்திற்கும் எவ்வளவு தூரம் தயாராயிருக்கிறார்கள் என்பதற்கும் அதில் எவ்வளவு தூரம் நாணயம் இருக்கின்றது என்பதற்கும் தலைவர்கள் என்பவர்களின் நடவடிக்கைகளையும் தீர்மானங்களையும் கவனித்தால் விளங்காமல் போகாது.
ராயல் கமிஷன் என்பது இந்தியர்களுக்கு என்ன வேண்டும் என்பதையும் எவ்வளவு தூரம் அதை அனுபவிக்க யோக்கியதை உடையவர்களாயிருக்கின்றார்கள் என்பதையும் கொடுத்தவைகளை எப்படி உபயோகித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் அறிவதற்காக பார்லி மெண்டாரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு விசாரணை கமிட்டி என்பது தான் தார்ப் பரியம். இதை பகிஷ்கரிப்பது என்பது என்னவென்று பார்ப்போமானால் இந்த விசாரணைக்கு எந்த விதமான உண்மைகளும் போய்ச் சேர வொட்டாமல் செய்வது என்பதுதான் கருத்தாயிருக்க வேண்டும்.
இன்னிலையில் பகிஷ்காரத் தீர்மானத்தினுடையவும் பகிஷ்காரக்காரருடையவும் யோக்கியதையைப் பார்ப்போம்.
பகிஷ்காரகாரர்கள் இதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் “யாரும் போய் சாக்ஷி சொல்லக்கூடாது, சட்ட சபையில் ஏற்படுத்தும் கமிட்டியில் யாரும் மெம்பராயிருக்கக் கூடாது, கமிட்டி மெம்பர்களுக்கு மரியாதை செய்யக் கூடாது”என்று மாத்திரம் தீர்மானங்கள் செய்துவிட்டார்களே ஒழிய அவர்கள் கோரிவரும் காரியம் தடைப்படுவதற்கு எவ்வித முயற்சியும் செய்யாமல் இருப்பதுடன் உதவியும் செய்ய ஆள் மேல் ஆள் முந்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதாவது பகிஷ்காரத்தில் தீவிர முயற்சி உடைய பெசண் டம்மையார் இந்தியாவுக்கு வேண்டியது இன்னது என்பதாக ஒரு திட்டம் போட்டு பார்லிமெண்டில் முன்னமேயே ஒப்புவித்து விட்டதோடு அல்லா மல் இப்போதும் ஊர் ஊராய் மாகாணம் மாகாணமாய் போய் கூட்டம் கூட்டி அதை பொது ஜனங்கள் ஒப்புக் கொண்டதாகப் பெயர் செய்து கொண்டு அதை சீமைக்கு தந்தி அடிக்கச் செய்து கொண்டு வருகின்றார். மாஜி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஸ்ரீமான் சி. விஜயராகவாச்சாரி தான் ஒரு திட்டம் போட்டு பார்லிமெண்டிலுள்ள தனது சிநேகிதருக்கும் மற்றும் பத்திரிகைகளுக்கும் அனுப்பி தெரியப்படுத்தி விட்டார்.
மற்றொருவர் அதாவது சமீபத்தில் மாஜீயான காங்கிரஸ் தலைவராகிய ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் ஒரு திட்டம் போட்டு புஸ்தக ரூபமாக்கி ஆயிரக்கணக்கான பிரதிகளை எல்லாருக்கும் வினியோகித்துக் கொண்டு வருகின்றார். காங்கிரஸ் தீர்மானத்திலும் ‘வகுப்பு உரிமை கூடாது; தனித் தொகுதி கூடாது’ என்பது போன்ற விஷயங்களை தீர்மான ரூபமாகச் செய்து வெள்ளைக்காரர்களும் கமிட்டி மெம்பர்களும் அறியும்படியும் செய்தாய்விட்டது. அதில் இந்தியத் தேசியத் தலைவர் என்ற பண்டிதர் நேரு அவர்களும் சமீபத்தில் பிரான்சில் பேசியபோது இந்தியாவின் கோரிக்கைகளை கமிட்டி முன்னால் சமர்ப்பித்து விடுவதைத்தவிர மற்றவைகளை பகிஷ்கரித்து விடவேண்டும் என்று சொல்லிவிட்டார். காங்கிரஸ் மகாசபை தலைவரான டாக்டர் அன்சாரி அவர்களும் ‘எல்லா வகுப்பார்களும் எல்லாவித அரசியல் கட்சிக்காரரும் ஒன்று சேர்ந்து ஒரு திட்டம் தயாரிக்க வேண்டும்’ என்று சொல்லி இருக்கின்றார்.
மிதவாதிகள் என்பவர்களும் ஒரு திட்டம் போட்டும் சிலர் பெசண்ட் அம்மையின் திட்டத்தை ஆதரித்தும் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை காட்டியாகி விட்டது.
இவ்வளவும் அல்லாமல் பகிஷ்காரத்தின் அறிகுறியாய் சட்டசபையை விட்டு விலகவோ கமிஷன் வந்து போகும் வரையிலாவது சட்டசபைக்கு போகாமலிருக்கவோ கூட முடியாது என்று தீர்மானித்தாய்விட்டது. ஆகவே பகிஷ்காரம் என்பதை எந்த முறையில் மீதி வைத்திருக்கின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. ஆகவே கூலிப் பிழைப்புக்காரரான ஜட்கா வண்டிக்காரரும் ஒற்றைமாட்டு வண்டிக்காரரும் ரிக்ஷா வண்டிக்காரரும் வேலை நிறுத்தம் செய்வதிலும் வெற்றிலை பாக்கு சிகரெட் பீடி கடைக்காரர் கடைகளை மூடுவதிலும் கமிஷனில் வரப்பட்ட கமிட்டி மெம்பர்களுக்கு நடத்தப்படும் தேயிலைப் பானத்திற்கு போகாமலும் காலிகளுக்கு கூலி கொடுத்து தெருவில் போகின்றவர்கள் மீது கல்லெறிவதிலும் மாத்திரம் பகிஷ்காரம் இருப்பதானால் யோக்கியர்கள் இதை ஒப்புக் கொள்ள முடியுமா என்றுதான் கேட்கின்றோம்.
மற்ற கூட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு வேண்டியதை கமிஷ னுக்கோ வெள்ளைக்காரருக்கோ தெரியப்படுத்த வேண்டுமானால் அவர் களும் இந்தமாதிரி திட்டம் போட்டு கமிஷன் முன்னால் சமர்ப்பிப்பதை விட நேரில் போய் சொல்லி விடுவதால் ஏற்படும் நஷ்டம் என்ன என்று தான் கேட்கின்றோம். அவராடி இவராடி எப்படி பாமர மக்களை ஏமாற்றி ஒரு வகுப்பாரே ஆதிக்கம் பெறுவதெப்படி? உயர்ந்த பதவிகளையும் உத்தியோ கங்களையும் அடைவதெப்படி? பெரும் பெரும் சம்பளம் பெறுவதெப்படி? என்பதல்லாமல் இந்தப் புரட்டுகளால் தேசத்துக்கோ, பாமரமக்களுக்கோ ஏற்படும் பயன் என்ன என்று கேட்கின்றோம்.
பகிஷ்கார பிரசாரம் செய்யும் ‘தமிழ்நாடு’ கமிஷன் மெம்பர்களின் படத்தை விளம்பரம் செய்திருப்பது என்னே !
குடி அரசு – கட்டுரை – 08.01.1928