சங்கீதமும் பார்ப்பனீயமும்
சென்னை சங்கீத மகாநாட்டில் பார்ப்பனரல்லாத சங்கீத வித்வான் ஸ்ரீமான் காஞ்சீபுரம் சி. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் விஷயத்தில் பார்ப்பனர்கள் எவ்வளவு நாணயக் குறைவாயும் குற்றமாயும் நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை மற்றொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கும் நிரூபத்தால் அறியலாம். இவற்றை நமது பார்ப்பனரல்லாத பிரபுக்கள் சற்றும் லக்ஷியம் செய்யாமல் பார்ப்பனரல்லாத வித்வான்கள் எவ்வளவு பாண்டித்யமுடையவர்களாயிருந்தாலும் அதை லக்ஷியம் செய்யாமல் பார்ப்பனர்கள் என்கின்றதற்காகவே அவர்களை ஆதரிக்க முற்படுகிறார்கள். நமது நாட்டுப்பிரபுக்களின் முட்டாள்தனத்திற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம். அன்றியும் பார்ப்பனரல்லாத வித்வான்களும் தங்கள் சுயமரியாதையைப் பற்றி ஒரு சிறிதும் கவலையில்லாமல் பார்ப்பன வித்வான்கள் என்பவர்கள் எவ்வளவு குறைவுபடுத்தினாலும் லக்ஷியம் செய்யாமல் சுவாமிகளே ! என்று வாயைப் பொத்தி முதுகை வளைத்துக் காட்டிக் கொண்டு அவர்கள் பின் தொடருகின்றார்களே யொழிய மானத்துடன் வாழ ஒருப்படுவது அருமையாய் இருக்கின்றது. இவைகளை அனுசரித்தே ஒவ்வொரு ஊரிலும் பார்ப்பனரல்லாத சங்கீத சமாஜம் ஏற்படவேண்டும் என்றும் அங்கெல்லாம் பார்ப்பனரல்லாத வித்வான்களை ஆதரிக்க வேண்டுமென்றும் பலதடவைகள் சொல்லியும் எழுதியும் வந்திருக்கின்றோம். பெரும்பாலும் இதை உத்தேசித்தே கோவை யிலும் முதல் முதலாக ஒரு சங்கீதசபை ஏற்படுத்தியும் இருக்கின்றார்கள். மற்ற இடங்களும் இதை கவனித்து நடக்குமா?
குடி அரசு – கட்டுரை – 19.02.1928