ஆதிதிராவிட மகாநாடு
சென்னையில் சமீபத்தில் கூடிய ஆதிதிராவிட மகாநாட்டைப்பற்றி பார்ப்பன பத்திரிகைகளும் அவற்றைப் பின்பற்றி வாழும் பார்ப்பனரல்லாத சில பத்திரிகைகளும் அம்மகாநாட்டையும் மகாநாட்டு தீர்மானங்
களையும் நசுக்க எண்ணங்கொண்டு அதைப் பற்றி வெகுகேவலமாக எழுதியும் பேசியும் வருகின்றார்கள். இதைப்போன்ற ஒரு கொடுமையான காரியம் வேறு ஒன்று இருப்பதாகச் சொல்லமுடியாது.
ஆதிதிராவிட சகோதரர்கள் இந்தியாவின் ஜனத்தொகையில் சுமார் நாலில் ஒன்று அல்லது ஐந்தில் ஒன்று என்பதாக 6, 7 கோடி மக்கள் இருந்தாலும் அதைப்பற்றி ஒரு சிறிதும் லட்சியம் இல்லாமல் அப்படி ஒரு கூட்டம் இருப்பதாகக் கூட வெளியார்கள் அறிவதற்கும் இல்லாமல் சூழ்ச்சி செய்து மறைத்து வைத்து விட்டு அவர்களது சுதந்திரத்திற்காக இப்பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளான பார்ப்பனரல்லாதாரும் அவர்களது பத்திரிகைகளும் எவ்வித உதவியும் செய்யாமலிருப்பதோடு ஆதிதிராவிடர்களாக ஏதாவது முயற்சித்தாலும் அதையும் கொலை செய்யப் பார்க்கின்றார்கள். என்ன கொடுமை! என்ன கொடுமை!! அதாவது சமீபத்தில் சென்னையில் கூடிய ஆதிதிராவிட மகாநாட்டு நடவடிக்கைகளையும் தீர்மானங்களையும் பற்றி ஒரு சிறிதும் அனுதாபம் கொள்ளாமல் அது “சர்க்
கார் தாசர்கள் மகாநாடு” என்றும் “சுயநலக்காரர்கள் மகாநாடு” என்றும் ‘முப்பது பேர்களே’ அம்மகாநாட்டில் கூடி இருந்தார்கள் என்றும் எழுதி அதன் மதிப்பைக் கெடுத்துப் பொதுமக்களுக்கு அதனிடம் துவேஷமும் வெறுப்பும் வரும்படி பிரசாரங்கள் செய்து வருகின்றன.
எனவே காங்கிரசுக்கும் இந்திய அரசியல் தலைவர்கள் என்போருக்கும் ஆதிதிராவிடர்களிடம் இருக்கும் அபிமானத்திற்கும் முன்னேற்றக் கவலைக்கும் இதுதான் அடையாளம் போலும்.
காங்கிரஸ் ஏற்பட்டு 42 வருடங்களாகி, சீர்திருத்தம் ஏற்பட்டு 20 வருடங்களாகியும், ஏழு கோடி ஆதிதிராவிடர்களில் ஏதாவது ஒரு ஆதி திராவிடர் ஸ்டேட் கவுன்சில் முதல் கிராம பஞ்சாயத்து வரையில் ஏதாவ தொன்றில் பொதுப் பிரதிநிதியாய் சர்க்கார் தயவில்லாமல் உட்கார இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றதா? என்று கேட்கின்றோம்.
இனிமேல் வரப்போகும் சீர்திருத்தங்கள் என்பதிலாவது ஸ்ரீமதி பெசண்ட் முதல் மற்றும் அநேக தலைவர்கள் என்போர்கள் ஏற்படுத்திய சுயராஜ்ய திட்டத்திலாவது ஏதாவது ஏற்பாடு செய்தார்களா? என்று கேட்கின் றோம். நமது கொடுமையால் வண்ணான் இல்லாமல் நாவிதன் இல்லாமல் அழுக்கு உடைகளுடனும் வளர்ந்து கவிந்த மயிருடனும் பிசாசுகள் என்பவைகளைப்போல் திரியும் ஏழை பாவங்களுக்கு ஏதாவது ஒரு வழி காட்டினார்களா? என்று கேட்கின்றோம்.
சில இடங்களில் தெருவில் நடக்கக்கூட உரிமையில்லாமலும் சில இடங்களில் மனிதன் கண்களில் தென்படக் கூட உரிமை இல்லாமலும் நரிபோலவும், முயல் போலவும் வெளியில் பதுங்கித் திரிகின்றார்கள். இவற்றை நீக்க ஏதாவது ஏற்பாடு செய்தார்களா? என்று கேட்கின்றோம். கோவில்களில் உள்ள தெய்வங்கள் என்பவைகளைப் பார்க்கவோ வணங்கவோ ஏதாவது வழி செய்தார்களா? என்று கேட்கின்றோம். குடிக்கவோ பல் விளக்கவோ தண்ணீர் இல்லாமல் திண்டாடுகின்றார்களே இதற்கு ஏதாவது வழி செய்திருக் கின்றார்களா என்று கேட்கின்றோம். அன்னிய நாட்டிலிருந்து வயிற்றுப் பிழைப்புக்காக பிச்சைக்காரர்களாய் நமது நாட்டுக்கு வந்தவர்களான ஆரியர்களின் சந்ததியார்கள், பஞ்சாங்கம் சொல்லி பிச்சையெடுத்து புஸ்தகம் வாங்கி முனிசிபல் விளக்கு வெளிச்சத்தில் படித்துவிட்டு, இந்தியாவை காட்டிக் கொடுத்து இந்திய மக்களுக்கு துரோகம் செய்து மாதம் 1-க்கு 5000, 10000 ரூபாய் வீதம் சம்பளமுள்ள உத்தியோகமும் சம்பாதனையும் ஏற்படும் படியாக காங்கிரசின் மூலம் சீர்திருத்தம் சம்பாதித்துக் கொண்ட இவர்கள், இந்த ஏழை ஆதிதிராவிடர்கள் தெருவில் நடந்து மூட்டை தூக்கிப் பிழைக்க வாவது வழிசெய்தார்களா என்று கேட்கின்றோம்.
இந்நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் சர்க்கார் தாசர்களாய் இருக்காமல் வேறு அய்யங்கார் தாசர்களாய் இருக்க முடியுமா? மற்றும் அய்யர்கள் தாசர்களாய் இருக்க முடியுமா? அவர்களது அடிமைகள் தாசர்களாய் இருக்க முடியுமா? அல்லது யார் தாசர்களாய் இருக்க வேண்டுமென்றுதான் இந்த அரசியல் வாழ்வுக்காரர்கள் விரும்புகின்றார்கள்? அல்லது எந்த இயக்கத்தின் தாசர்களாய் இருக்கும்படி விரும்புகின்றார்கள்? அந்த இயக்கம் இவர்களுக்கு இதுவரை செய்த நன்மை இன்னது என்றாவது சொல்லட்டும் என்று கேட்கின்றோம்.
நிற்க ஆதிதிராவிடர் மகாநாடானது இந்த மாகாண ஆதிதிராவிட சமூகத்திற்கு சரியான பிரதிநிதித்துவம் கொண்டதல்லவென்றும், முப்பது பெயர்களே இந்த மகாநாட்டுக்கு வந்திருக்கின்றார்கள் என்றும், அரசியல் பிழைப்புக்காரர்கள் எழுதி அம்மகாநாட்டை கேவலப்படுத்தி இருக்கின்றார்கள். இதைவிட அயோக்கியத்தனமான காரியம் வேறொன்றும் இல்லை என்றே சொல்லலாம். இந்த மகாநாடு ஆதிதிராவிடர் மகாநாடு அல்ல என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன சுதந்திரமுண்டு என்று கேட்கின்றோம். ‘மித்திரன்’ கூட்டத்தாரும் ‘தமிழ்நாடு’ பத்திரிகை கூட்டத்தாரும் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தவர்களா? அல்லது வேறு ஆதிதிராவிடர்கள்: மகாநாட்டை நடத்தியவர்களைவிட அதிகமான எண்ணிக்கைப் பிரதிநிதிகள் இவர்களுக்கு எழுதினார்களா? அல்லது ஆதி திராவிட சகோதரர்களுக்குள் ஏதாவது இம்மகாநாடு விஷயத்தில் தகராறு ஏற்பட்டதா? அப்படிக்கில்லாமல் அந்த சமூகத்திற்கு சம்மந்தப்படாத ஒருவர் அதுசரியான பிரதிநிதித்துவம் அல்ல என்று சொல்லுவது குறும்புத்தனமா? அல்லவா? என்று கேட்கின்றோம். சுமார் 500 பிரதிநிதிகளுக்கு மேல் இவ்வாதித்திராவிட மகாநாட்டுக்கு வந்திருந்ததாக ஸ்ரீமான் சின்னையா தமது மறுப்பில் எழுதியிருக்கிறார். அதை இதுவரை யாரும் மறுக்கவில்லை. இவர்கள் சொல்லுகிறபடியே 30 பெயர்கள்தான் என்பது உண்மையாயிருந்தாலும் இவர்கள் கூட்டங்களைவிட ஆதிதிராவிடக் கூட்டம் எந்த விதத்தில் குறைவுபட்டுவிட்டது? எல்லா இந்திய மிதவாதிகள் மகாநாட்டுக்கு 33 கோடி மக்களுக்கு பிரதிநிதிகளாய் வந்தவர்கள் எத்தனை பேர் என்று கேட் கின்றோம். எல்லா இந்தியர் அல்லது சென்னை மாகாண பத்திராதிபர்கள் மகாநாட்டிற்கு வந்த பெயர் வழிகள் எத்தனை பெயர்கள் என்று கேட்கின் றோம். 8 கோடி முஸ்லீம்களுக்கு பிரதிநிதிகளாக காங்கிரசுக்கு வந்த முஸ்லீம்கள் எத்தனை பேர்கள் என்று கேட்கின்றோம். 7 கோடி தீண்டாதார் எனப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக காங்கிரசுக்கு வந்த எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்கின்றோம். அகில இந்திய வருணாசிரம மகாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகள் எவ்வளவு என்று கேட்கின்றோம்? வேலை நிறுத்தம் செய்யக்கூடிய அகில இந்திய எல்லா கட்சி மகாநாடு கூட்டத்திற்கு வந்தவர்கள் எத்தனை பெயர் என்று கேட்கின்றோம்? ‘தமிழ்நாடு’ பத்திரிகை ஆபீசின் அறையில் அடிக்கடி கூடும் மாகாண தேசீய மகாநாட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பிரதிநிதிகள் எத்தனைபேர் என்று கேட்கின்றோம். பார்ப்பனரல்லாதாருக்குள் ஒழுங்கு முறைக்கட்சி என்று ஸ்ரீமான்கள் டி.எ. ராமலிங்கம் செட்டியார் கே.வி. ரெட்டியார் முதலியோர் கூட்டின மகாநாடு களுக்கு அவ்வப்போது வந்த பிரதிநிதிகள் எத்தனை பேர் என்று கேட் கின்றோம். இவைகளின் பிரதிநிதித்துவங்களைப் பற்றி ஒரு சிறிதும் எண்ணிக்கைகளைக் குறிப்பிடாமல் ஆதிதிராவிடர்கள் மகாநாட்டைப்பற்றி மாத்திரம் இந்தத் தலைவர்களுக்கும் தேசப்பக்தர்களுக்கும் எண்ணிக்கை யைக் குறைத்து கேவலப்படுத்த வேண்டிய கட்டாயம் என்ன வந்து விட்டது என்பதை யோசித்துப் பார்ப்பதோடு இதிலிருந்தே ஆதிதிராவிடர்கள் விஷயத்தில் இத்தேசபக்தர், தேசிய பக்தர், தலைவர் முதலானவர்களின் கவலை என்ன என்பதையும் ஆதி திராவிடர்களுக்கு இவர்கள் பிரதிநிதிகள் ஆவார்களா? என்பதையும் பொதுமக்கள் உணர்ந்து பார்க்கும்படிவேண்டிக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு – கட்டுரை – 22.01.1928