தலையங்கம் சமூக நீதி தலைநகரம் வீழ்ந்துகிடக்கிறது
தமிழ்நாட்டின் தனித்துவமான சமூகநீதி தத்துவத்துக்கு சாவுமணி அடித்துவிட்டது நடுவண் பா.ஜ.க. ஆட்சி. ஓராண்டுக்கு தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு தருவதாகக் கூறி முன் வந்து, தமிழக அரசிடம் அவசரச் சட்டத்தை தயாரிக்கச் சொல்லி விட்டு, உச்சநீதிமன்றத்தில் ஒரு மாநிலத்துக்கு மட்டும் விதி விலக்கு தர முடியாது என்று கூறும் துணிச்சல் மோடியின் பா.ஜ.க. ஆட்சிக்கு எப்படி வந்தது? தமிழர்கள் அவ்வளவு ஏமாளிகள் என்று கருதி விட்டார்கள். மாநில அரசு பாடத் திட்டத்தில் படித்த 85 சதவீத மாணவர்களில் மருத்துவப் படிப்புக்கு தேர்வு பெற்றவர்கள் 2224 பேர். 15 சதவீதம் பேர் மட்டுமே படித்த சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் தேர்வு பெற்றிருப்பவர்கள் 1310 பேர். நீட் தேர்வு நடத்தாமல் கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு தேர்வு பெற்ற சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் எண்ணிக்கை 30 மட்டும்தான். சுமார் 45 சதவீதம் இப்போது அதிகரித்திருக்கிறது. இந்த அநீதியை முறைப்படுத்துவதற்கு மாநில அரசு பிறப்பித்த 85...