இராமானுஜர் சீர்திருத்தம் – நாமத்தை பூணூலை காப்பாற்றியதே தவிர சமத்துவத்தை உண்டாக்கியதா? பெரியார்
நிதானமும், சாந்தமும், பொறுமையும், கட்டுப்பாடும் கொண்டு வெறுப்பில்லாமலும், துவேஷமில்லாமலும் நல்ல வார்த்தையும், கூட்டுறவிலும், நயமாகவும், கெஞ்சியும் நமது நாட்டில் எத்தனை காலமாக (சீர்திருத்தம்) செய்து வந்திருக்கிறது? இதுவரை செய்து வந்த சீர்திருத்தங்கள் என்ன ஆயிற்று? இன்னும் எத்தனை நாளைக்குப் பரீட்சைப் பார்ப்பது என்கிற விஷயங்களை யோசித்தால் மேற்கண்ட வார்த்தைகள் சீர்திருத்தத்திற்கு விரோதிகளா யுள்ளவர்களிடம் மரியாதை பெறுவதற்காகவும், தங்களது சொந்த புகழுக்காகவும், பெருமைக் காகவும் பேசப்பட்ட வார்த்தைகள் அல்லது பலவீனத்தின் தோற்றம் என்று ஏற்படுமே ஒழிய வேறொன்றுமே இருக்காது. சிலர் இம் மாதிரியான நமது அபிப்பிராயத்திற்கு விரோத மாய் சில பெரியோர்களான விவேகானந்தர், காந்தி முதலியோர்களுடைய வார்த்தைகளை எடுத்துக் காட்டுவார்கள். இம்மாதிரியான அப்பெரியோர்களுடைய வார்த்தைக்கு நான் முற்றும் முரண்பட்டவன் என்பதை நான் கண்ணியமாய் ஒப்புக் கொள்ளுகிறேன். காரணம், அவ்வார்த்தைகள் சொன்ன பெரியோர்களை சுவாமியாகவும், மகாத்மாவாகவும் மக்கள் கொண்டாடினார்கள்; கொண் டாடுகிறார்கள்; படம் வைத்து பூசிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவ்வார்த்தைகளால் சீர்திருத்தம் வேண்டிய மக்கள் அடைந்த கதியென்ன? எந்த ஒரு அபிப்பிராயத்தையும் அதனால் ஏற்படும் பலனைக் கொண்டுதான் மதிக்க வேண்டுமே ஒழிய வார்த்தை யினுடைய இனிப்பைக் கொண்டும், அழகைக் கொண்டுமே மதிப்பது அறிவுடைமை ஆகாது என்று சொல்லுவேன்.
சீர்திருத்தம் வேண்டியவர்கள் இதுவரை காட்டின பொறுமையும், கெஞ்சின கெஞ்சும் பேசின இனிமையான வார்த்தையும் போதாது என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேழ்க்கின்றேன்; அல்லது மக்கள் படும் கஷ்டம் அவர்கள் அறிவு அடைந்த தன்மை அதனால் நாடு கெட்ட நிலைமை ஆகியவைகள் இப்பொறுமை யினுடையவும், சாந்தத்தினுடையவும் கெஞ்சு வதனுடையவும் பரீட்சைக்குப் போதாது என்றாவது யாராவது சொல்ல முடியுமா? எனவே, பொறுமையும், சாந்தமும், சகிப்புத் தன்மையும், இவ்விஷயத்தில் காரியத்தின் அனுகூலத்தை உத்தேசித்துக் காட்டப்பட வேண்டியதே அல்லா மல், வெறும் பொறுமைக்கும், சாந்தத்திற்கும் உருவாம் என்கின்ற பெயர் பெறுவதற்கல்ல.
அன்றியும் சிலர் சீர்திருத்தம் செய்வதன் மூலம் பழைய சின்னங்களையும், ஓவியங்களையும், கலைகளையும் அழித்து விடாதீர்கள் என்கின் றார்கள். இந்தக் கூட்டத்தார்கள் எந்தப் பழைய சின்னம், ஓவியம், கலை முதலியவைகளை மனதில் நினைத்துக் கொண்டு சொல்லுகிறார்களென்று நான் கண்ணியமாய் நினைக்கின்றேனோ அந்தச் சின்னமும் ஓவியமும் கலைகளுமேதான் நம்மை யும் நம் மக்களையும் நமது நாட்டையும் பாழாக் கியதுடன், ஒவ்வொரு அறிவாளி மனதிலும் சமுதாய சீர்திருத்தம், செய்து தீரவேண்டும், இல்லாவிடில் வேறு எந்த விதத்திலும் நமக்கு கதி மோட்சம் இல்லை என்கின்ற நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டது.
உதாரணமாக இராமானுஜர் நாமத்தையும், பூணூலையும் பழைய சின்னம் என்பதாகக் கருதி அதை வைத்துக் கொண்டு ‘பறையன்’ என்பவர்களை யெல்லாம் பிடித்து நாமமும், பூணூலும் போட்டு மக்களைச் சமத்துவம் அடையச் செய்வது என்பதான சீர்திருத்தம் செய்தார் என்பதாகச் சொல்லப் படுகின்றது. இதனால் பழைய சின்னம் காப்பாற்றப்பட்டதே தவிர, மக்களுக்கு சமத்துவம் கிடைத்ததா? சமத்துவ உணர்ச்சி உண்டாயிற்றா? நாமமும் பூணூலும் உடையவர்களுக்குள்ளாகவே உயர்வு தாழ்வும், அதுகள் இல்லாத வர்களை தாழ்மையாய்க் கருதுவதும் இன்று சூரியன் போல் துலங்குகிறது. மற்றும் பழைய சின்னங்கள் என்பதான கோயில்களை எடுத்துக் கொள்வோம். கோயில் என்றால் சர்வ சக்தியும், சர்வ வல்லமையும், சர்வ தயாபரத் தன்மையும் கொண்ட கடவுள் என்பவர் இருக்குமிடம் என்றும், அவரை வணங்க வேண்டிய இடம் என்றும் சொல்லப்படுகின்றது.
அதை மக்கள் உணர்ந்து உய்வதற்கே உண்டாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இப்படிச் சொல்லப்படும் கோயில்களின் நிலைமை என்ன? அதனால் மக்களுக்கு ஏற்படும் பலன் என்ன? தற்காலம் என்ன காரியங்களின் கொடுமைகள் சகிக்கமாட்டாமல் சீர்திருத்தம் வேண்டும் என்று மக்கள் கருத இடம் கொடுத்ததோ அந்தக் காரியங்களுக்கு எல்லாம் இந்த சர்வ சக்தியும், சர்வ வல்லமையும், சர்வ தயாபரத் தன்மையும் கொண்டதாக கடவுள் என்பது குடி இருப்பதாகச் சொல்லும் கோயில்களே காரணமாயிருக்கின்றது என்பதை யாராவது மறுக்க முடியுமா? பழைய ஒவியங்கள் என்பதுகளை எடுத்துக் கொண்டால் அதுவும் உண்மையான சீர்திருத்தத்திற்கு எவ்வளவு தடையாய் இருக்கின்றது என்பது விளங்காமல் போகாது. அது போலவே பழைய கலைகள் என்பதுகளை எடுத்துக் கொண்டால் அதுவே ஒரு மலையாக இருக்கும்.
உதாரணமாக வேதம் என்றும், சாஸ்திரம் என்றும் புராணம் என்றும் சொல்லப்படு வனவாகிய மனித வர்க்கத்தின் வாழ்க்கை நலத்திற்கு இலக்காக உண்டாக்கப்பட்டது என்று சொல்லும் படியான ஆதாரங்களும், அவைகளுள் முக்கியக் கலைகளாகக் கொண்டாடப்படும் பல புராணங்களும் இது வரை மக்களுக்கு என்ன நன்மையைக் கொடுத்து வந்திருக்கின்றது என்று யோசித்துப் பாருங்கள். அதிலும் தென் இந்திய வாசிகளும், அவர்களுள் சிறந்த பண்டிதர்கள் என்பவர்களும் பக்தி விசுவாசத்துடனும், கலா ஞானத் துடன் கொண்டாடும் புராணங்கள், இதிகாசங்களாகிய பாரதம், இராமாயணம், சிவபுராணம், விஷ்ணு புராணம், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் என்பவைகள் போன்ற கலைகளால் இதுவரை மக்களுக்கு ஏற்பட்ட பலன் என்ன? அவைகளில் காணப்படாத மனித தத்துவத்திற்கும், ஒழுக்கத்திற்கும் விரோதமான காரியங்கள் வேறு எந்தக் கலைகளிலாவது, கலைகள் அல்லாத வெறுக்கப்பட்ட புஸ்தகங் களிலாவது, வெகு கீழ்த்தர மக்கள் கூட்டத்தின் நடவடிக்கையிலாவது காண்கின்றோமோ என்பதைச் சற்று கவனித்துப் பாருங்கள்.
அன்றியும் எவ்வித சீர்திருத்தத்தையும் தடைசெய்யும் படியான முட்டுக்கட்டைகள் அக்கலைகள் என்பதற்குள் மலிந்து கிடக்கின்றதா இல்லையா என்பதைச் சற்று பொது நோக்குடன் யோசித்துப் பாருங்கள்.
இன்றைய தினம் அறிவாளிகள் வெகு கவலையுடன் செய்ய ஆசைப்படும் சீர்திருத்தங் களுக்கு எதிரிகளாயிருப்பவர்கள் தங்களுடைய அதிக பலம் பொருந்திய ஆயுதங்களாக இந்தப் பழைய சின்னங்கள், ஒவியங்கள், கலைகள் என்பதையே உபயோகித்துக் கொண்டு அதாவது அவைகளிலிருந்தே ஆதாரங்கள் எடுத்துக்காட்டி சீர்திருத்தக்காரர்களை எதிர்த்து தடையுத்தம் செய்கின்றார்களா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
ஆனால், அச்சின்னங்களுக்கும் கலை களுக்கும் வக்காலத்து பேசுபவர்களால் சீர்திருத்தக்காரர்களுக்கும் அனுகூலமான ஆதாரங்கள் அவைகளில் எங்கேயோ இருப்பதாக சொல்லப் படுகின்றது. அது வெறும் மயக்கம் என்பதும் நம்மை ஏமாற்றுவதற்கு உபயோகப் படுத்தக் கூடியது என்பதும் எனது அபிப்பிராயம்.
ஏனெனில், அவைகள் எல்லாம் கடவுள் வந்து நேரில் செய்ததாகவும், மற்றும் நம்மால் தாங்க முடியாத நிபந்தனைகள் கொண்டதும் மனிதன் நம்பமுடியாததும், மனிதத் தன்மைக்கு மீறினதுமான சம்பவங்கள் கொண்டது மாக இருக்கின்றனவேயன்றி, அனுபோகத்தில் இருக் கின்றதாகவோ அனு போகத்திற்கேற்றதாகவோ எடுத்துக் கையாளக் கூடியது அதில் ஒன்றும் காணக் கூடுவதில்லை. அப்படி காணக்கூடியது என்பதாக எதையாவது எடுத்து வியாக்கியானம் செய்யக் கூடியதாகயிருந்தாலும் அதை யாரும் ஒப்புக் கொண்டாக வேண்டும் என்று நிர்பந்திக்கவோ அமுலில் கொண்டுவரச் செய்யவோ அது உபயோகப்படுவது மில்லை.
உதாரணமாக, பறையன், பள்ளன் என்பவர்கள் (கொடுமை செய்யப்பட்டவர்கள்) எல்லோரும் கோயிலுக்குள் போனதாகவும் கடவுள் ஏற்றுக் கொண்டு தனக்குள் ஐக்கியப் படுத்திக் கொண்ட தாகவும் சொல்லப்படுவதை பழைய கலைகளாக உபயோகிக்கின்றார்கள். ஆனால், அவை இப்போது ஏன் அனுபோகத்தில் இல்லையென்றால் அந்தப் பறையன் வேறு, இந்தப் பறையன் வேறு என்று சொல்லி வெளியே தள்ளி விடுகின்றார்கள். இந்த கலையை எதற்காகக் காப்பாற்ற வேண்டும்? மனிதருக்குத்தான் பறையனில் வித்தியாசமிருக்குமே ஒழிய சாமிக்குக் கூடவா வித்தியாசம் என்றால், கலைகளுக்கு ஆபத்து வந்து விட்டது என்கிறார்கள்.
ஆகவே இந்நாட்டிலுள்ள பழைய சின்னங் களையும், ஓவியங்களையும், கலைகளையும் காப்பாற்றிக் கொண்டு சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லுகின்றவர்கள் என்றைக்குமே வெற்றி பெறமாட்டார்கள் என்று உறுதியாய்ச் சொல்லுவேன். இதுவரை நமது நாடு சீர்திருத்தப் பலன் அடையாததற்கு இந்த உணர்வுக்காரர்களேதான் முக்கிய காரண கர்த்தர்கள் என்றும் சொல்லுவேன். எனவே இந்த சில உரைகளால் சீர்திருத்தக்காரர்கள் நிலைமையைப் பற்றிப் பேசினேன்.
சீர்திருத்தப்பட வேண்டிய விஷயங்கள்
முதலாவது கடவுளும், மதமுமே முக்கியமாய்க் கவனிக்கப்பட வேண்டியிருக் கின்றது. ஏனெனில், முன்பு நான் சொன்னது போல நம்முடைய சீர்திருத்தத்திற்கு இவ் விரண்டுமே விரோதமாய் உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றது.
கடவுளைப் பற்றி இங்கு நான் அதிகமாகப் பேசவரவில்லை. அதைப்பற்றி எவ்வளவு குறைவாகப் பேசுகிறோமோ அவ்வளவும் நல்லதென்றே சொல்லுவேன். ஏனெனில் அது ஓட்டைக் குடத்தில் தண்ணீர் சேந்துகின்ற மாதிரி இழுக்கும்போது குடம் நிறைய தண்ணீர் மொண்டு பாரமாய் வரும் – மேலே வந்து சேரும்போது வெறுங் குடமாயிருக்கும். எத்தனை நாளைக்கு இதை வேலையில் இருந்தாலும் தண்ணீர் வந்து கரை சேராது. அதைப் போலவே கடவுள் என்பது வீண் தர்க்கத்திற்கேற்ற பேச்சே ஒழிய காரியத்திற்கேற்ற பேச்சல்ல. இதுவரையில் வாதம் செய்தவர்கள் கண்ட முடிவுகளில் மிகவும் முக்கியமானது நமது கண்ணுக்கும், மனதிற்கும், அறிவின் உணர்ச்சிக்கும் எட்டாத ஏதோவொன்று இருக்கின்றது என்றும், அதிலும் தேர்ந்த முடிவாக நம்பினால்தான் உண்டு என்றும் சொல்லும் படியானதுகளே ஆகும். இதற்காக மனத்திற்கும், கண்ணுக்கும், அறிவுக்கும் எட்டாத ஒன்றை ஏற்றுக் கொண்டு தக்க ஆதாரம் இல்லா விட்டாலும் நம்பித்தான் ஆக வேண்டும். நாம் யாரைத் தொந்திரவு செய்வது? அல்லது அம்மாதிரியான தொந்தரவினால் யாருக்குத்தான் என்ன லாபம்?
அடுத்தாற்போல் மதம் என்பதைப் பற்றியோவென்றால் அது ஒரு பொருளற்ற தன்மையது. என்னவெனில், இது வரை மதமானது உலகத்திற்கு எவ்விதமான பலனையும் கொடுத் திருப்பதாய் விளங்கவில்லை. எந்த மதக்காரனுக் காவது ஒரு சாந்தி ஏற்பட்டிருப்பதாய்த் தெரியவில்லை ஆனால் மதச்சண்டைக்கும் மதப் பிரசாரத்திற்கும் குறைவில்லை.
ஒவ்வொரு மதக்காரனும் தன் மத மூலமாகத் தான் மக்கள் முழுவதும் மோட்சத்திற்குப் போக முடியுமென்றும், தன்தன் மதத் தலைவன்தான் கடவுள் மகனென்றும், கடவுள் தூதன் என்றும், கடவுள் அவதாரம் என்றும், அவரவர்கள் சொன்னதுகள் எல்லாம் கடவுளால் சொல்லப் பட்டதுதான் என்றும் சொல்லுகின்றார்கள். இவர்களுக்குள்ளும் கிளைகள் பல இருக் கின்றன. இதில் யார் மெய்யர்களாகயிருக்க முடியும் என்று கண்டுபிடிக்க முடிவதில்லை. ஒவ்வொரு மதக் காரனும் அவனவன் மதத்தை நம்பாதவனுக்குப் பாவம் என்றும் நரகம் என்றும் சொல்லுகிறான். மனிதனாகப் பிறந்தவன் இந்த மதத்திற்காக எத்தனை நரகத்திற்குத்தான் போய் வருவது? பொதுவாக மனிதர்களை கடவுளிடத்தில் அனுப்புவதற்கு இத்தனை ஏஜண்டுகள் வேண்டுமா? இவர்களுக்குள் இத்தனைப் போட்டிகள் வேண்டுமா? இந்த மனிதர்கள் கடவுளை அடைய இந்த மதத் தலைவர்களுக்கு இவ்வளவு கவலையா என்பவைகளை நிதானமாய் நடுநிலையிலிருந்து யோசித்துப் பார்ப்பீர் களானால் மதத்தின் அசம்பாவிதமும ஆபாசமும் விளங்காமற் போகாது.
எப்படி ஒரு மனிதன் மக்களின் நலத்திற் காகவும் பாதுகாப்புக்காகவும் தான் அரசனாக வேண்டும் என்று கருதி ஒரு அரசாங்கத்தை ஸ்தாபித்து, பிறகு மக்கள் நலம் மறைந்து தான் அரசாட்சியை விஸ்தரிப்பதில் கவலைகொண்டு, கொலை முதலியவைகளைச் செய்து, அயல் நாடுகளைப் பிடிக்கும் கவலையில் மூழ்கியிருக் கின்றானோ அதுபோலவே மக்கள் நலத்திற்கு மதம் என்று சொல்லி மதத் தலைவனாகி, கடவுள் மகனாகி, தூதனாகி, அவதாரக் காரனாகி, உலகத்திலுள்ள மக்களை எல்லாம் தன் மதத்தில் சேர்க்கும் ஆசைகொண்டு, ஆள் பிடிக்கும் கவலையில் மூழ்கி இறக்கின்றான் என்பதே மத சம்பந்தமான எனது அபிப்பிராயமே யொழிய மதத் தலைவர்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் என்றாவது, அவர்கள் சொன்ன தெல்லாம் கடவுளால் சொல்லப் பட்டவைகள் என்றாவது அவர்களி டத்தில் கடவுள் தன்மைகள் இருந்தது என்றாவது ஒப்புக்கொள்வது முடியாத காரியமாயிருக்கின்றது. ஏனெனில் இவைகளை யெல்லாம் ஒப்புக் கொள்வ தானால் பல கடவுள்களையும், பல ஏஜண்டுகளையும் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஒரு கடவுள் பாடே திண்டாட்டத்தில் இருக்கும் போது பல கடவுள்கள் சங்கதி எப்படி நிலை நிற்க முடியும்? ஆதலால் மதம் என்பதை கடவுள் என்பவனிடத்தில் சம்பந்தப்படுத்துவது பொருத்த மற்றதாகும்.
மற்றபபடி மதம் என்பது மனித வாழ்க்கைக்கான கொள்கைகளை வகுத்து அந்தந்த நாட்டு நிலைமைக்குத் தக்கபடி ஏற்படுத்தப் பட்டது அல்லது வகுக்கப்பட்டது என்று சொல்வதானால் ஒருவாறு அதைப்பற்றி யோசிக்கலாம். அதுவும் அந்தந்த கால நிலைமைக்குத் தக்கபடி கொள்கைகளை மாற்றிக் கொள்ளக்கூடிய தன்மையை உடையது என்பதானால் மாத்திரம் தான் மதத்தைப் பற்றி யோசிக்கலாம். அப்படிக்கில்லாமல் மாற்ற முடியாதது, கடவுளின் மகனோ, தூதனோ, அவதாரமோ சொன்னது, கடவுள் தன்மை பொருந்தியது, அதனருகில் வேறுயாரும் நெருங்ககூடாதென்று சொல்வார்களானால் அந்த மதங்களை மதங்களாகவே (ஆணவம்) கருதி அவற்றை ஒழிக்க முயற்சிக்க வேண்டியது சமுதாய சீர்திருத்தக்காரர்களின் முக்கிய கடமைகளில் முதன்மையான கடமையாகும்.
ஏனெனில், சமுதாயச் சீர்திருத்தம் என்பது காலத்திற்கு ஏற்ற வண்ணம் அறிவுக்கு ஏற்ற வண்ணம் மாறுபாடுகளைச் செய்ய ஒப்புக் கொள்ளுவதே யாகும். எனவே அத்தகையவர்கள் முன்னால் “எக்காலத்திலும் எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது” என்கின்றதான மதத்தடைகள் வந்து குறுக்கிடுமானால் எந்த விதத்தில் அவற்றை வலம் வந்து வணங்கிக் கொண்டிருக்க முடியும்?
கொஞ்சமும் கலங்காது உறுதியுடனும் தைரியத்துடனும் தகர்த்தெறிய எவன் முன்னுக்கு வருகின்றானோ அவன்தான் சமுதாய சீர்திருத்தத் துறையை அணுக முடியும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். சமுதாய சீர்திருத்தக்காரர்கள் அடுத்தபடி கவனம் செலுத்த வேண்டியது.
‘குடிஅரசு’ 2.12.1928
நிமிர்வோம் அக்டோபர் 2019 மாத இதழ்