திருக்குறளை வெறுத்த பார்ப்பனர்: அயோத்திதாசர் தரும் தகவல்
திருக்குறள் தாழ்ந்த வருணத்தாரால் இயற்றப்பட்ட நூல் ஆதலால் பிராமணர்கள் அதை வெறுத்தனர். இந்தக் கருத்தினை அயோத்திதாசர், எல்லீஸ் துரையுடன் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் மூலம் விளக்குகிறார்.
1796இல் சென்னைக்கு வந்த எல்லீஸ் துரை தமிழ் கற்க விருப்பம் கொண்டு சில தேர்ந்த ஆசிரியர்கள் மூலம் அதனை நிறைவேற்றிக் கொண்டார். அயோத்திதாசரின் பாட்டனார் எல்லீஸ் துரைக்குத் திருக்குறள் நூல் ஒன்றினைக் கொடுத்து அனுப்பினார். இதைப் படித்த எல்லீஸ் துரை இதற்கு விளக்கமளிக்குமாறு ஆசிரியர்களைக் கேட்க, அப்பிராமணர்கள் அது தீண்டத்தகாத நூல், திருவள்ளுவர் தீண்டத்தகாதவர் என்று கூற எல்லீஸ் அவர்களுக்குத் திருக்குறள் மீது அதிக ஆர்வம் உண்டானது. நூல் கொடுத்தனுப்பியவரை வரவழைத்துப் பிராமணர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்களே ஏன் என்று கேட்க அவர் கூறிய பதில் வருமாறு: “எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம். எங்கள் வீதிக்குள் பிராமணர் வந்தால் உங்கள் பாதம் இட்ட இடம் பழுதாகிவிடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும் சென்ற வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்துச் சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள் என்று கூறினாராம்” உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல்லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1819ஆம் ஆண்டு எல்லீஸ் இயற்கை எய்தியதால் அப்பணி முழுமையடையாமல் போயிற்று. – மேற்குறிப்பிட்ட நூலிலிருந்து
நிமிர்வோம் ஆகஸ்ட் 2019 மாத இதழ்