கார்ப்பரேட் வரிக் குறைப்பு… பொருளாதார மந்த நிலையை சரி செய்யுமா? வரியைக் குறைத்திருக்க வேண்டியது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அல்ல… மக்கள் விரும்பி செலவு செய்யும் பொருள்களுக்குத்தான்.
“இந்தியப் பொருளாதாரத்தை சீர்செய்ய, மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் குளிர்காய்ந்து வருவது என்னவோ பெரு நிறுவனங்கள்தான். மோடி தலைமையிலான அரசு, இதை மறுபடியும் மறுபடியும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது’’ என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
கார்ப்பரேட் வரிக்குறைப்பு
சில தினங்களுக்கு முன்பு, ‘‘இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை உருவாகவில்லை. சிறப்பாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக் கிறது’’ என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன். பிறகு அவரே, ‘‘இந்தியப் பொருளா தாரத்தில் மந்தநிலை கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது’’ என்றும் தெரிவித்தார். அத்துடன், மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி, “பொருளாதார மந்தநிலையை சீர்செய்வதற்காகவும், ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கிலும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு கின்றன’’ என்றார்.
இந்த நிலையில், சமீபத்தில் கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சிலின் 37ஆவது கூட்டத்தில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அந்த அறிவிப்பின்படி, `‘உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கார்ப்பரேட் வரி, 30 சதவிகிதத்திலிருந்து 25.2 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. எந்த ஒரு வரிவிலக்கையும் எதிர்பார்க்காத நிறுவனங் களுக்கு, கார்ப்பரேட் வரி 22 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, வரும் அக்டோபர் 1 அல்லது அதற்குப் பிறகு பதிவாகும் புதிய உள்நாட்டு நிறுவனங்களுக்கு, கார்ப்பரேட் வரி 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், நிதிச் சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் பெற்றுவரும் நிறுவனங்களுக்கு, `குறைந்தபட்ச மாற்று வரி’ எனப்படும் `மேட் வரி’ தற்போதைய 18.5 சதவிகிதம் என்ற அளவிலிருந்து 15 சதவிகிதமாகக் குறைக்கப் பட்டுள்ளது’’ எனத் தெரிவித்திருக்கிறார்.
கார்ப்பரேட் வரிக்குறைப்பு… பொருளாதார மந்த நிலையை சரி செய்யுமா?
இந்த அறிவிப்பு, கார்ப்பரேட் நிறுவனங் களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஒட்டு மொத்த கார்ப்பரேட் வரிச் சலுகையால் அன்றைய தினம் மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது. இதனால், கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மதிப்பில் ஏழு லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த வரிச் சலுகை அறிவிப்பால், கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த இருந்த சுமார் 1.45 லட்சம் கோடி வரி அவர்களுக்கு மிச்சமாகியிருக்கிறது.
நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான ஐந்து சதவிகிதப் பொருளாதார வளர்ச்சி, இந்திய அரசாங்கம் சந்தித்திருக்கும் மிகப்பெரிய நிதி நெருக்கடி… என நாடே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண் டிருக்கும் இந்த வேளையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிக்குறைப்பு தேவைதானா? இது எதை நோக்கியது? இதன் பின்னணி என்ன?
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் க.ஜோதி சிவஞானம், ‘‘பொருளாதார வளர்ச்சிக்கு இரண்டு விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. ஒன்று, டிமாண்டு. இன்னொன்று, சப்ளை. சப்ளை சார்ந்த விஷயங்களில் பிரச்னை என்பது, முதலீடு இல்லை, போதுமான உற்பத்தி நடக்கவில்லை, உற்பத்திக் கான தடைகள் நிறைய இருக்கின்றன என்பதைக் குறிக்கும். இவற்றையெல்லாம் சரிசெய்தால் உற்பத்தி நடக்கும்; பிரச்னைகள் தீரும். அதனால், பொருளாதார வளர்ச்சி கிடைக்கும்.
இப்போது உருவாகியிருப்பது, சப்ளை சார்ந்த பிரச்னை கிடையாது. டிமாண்ட் சார்ந்த பிரச்னை. ஆனால், இந்த இரண்டு விஷயங்களின் மீது மத்திய அரசுக்கு சரியான புரிதல் இருக்கிறதா என்பது சந்தேகம்தான். டிமாண்டில்தான் பிரச்னை என்பதை, பல பொருளாதார நிபுணர்கள் மத்திய அரசுக்குச் சுட்டிக்காட்டி விட்டார்கள். ஆனால், அதையெல்லாம் மத்திய அரசாங்கம் உள்வாங்குவதேயில்லை.
டிமாண்ட் சார்ந்த பிரச்னை என்பது, மக்கள் எந்தப் பொருளையும் வாங்கவில்லை, அவர் களிடம் பணப்புழக்கமில்லை, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதை உணர்த்து கிறது. இதிலிருக்கும் பிரச்னைகளைச் சரி செய்வதை விட்டுவிட்டு முதலீடுகளை ஈர்ப்பது, பொருள்களின் உற்பத்தியை அதிகப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளைத்தான் மத்திய அரசாங்கம் தற்போது கையாண்டுவருகிறது.
கார்ப்பரேட் வரிக்குறைப்பு… பொருளாதார மந்தநிலையை சரி செய்யுமா?
தனியார் முதலீட்டை ஊக்குவித்து, பொருளாதார வளர்ச்சியை உயர்த்த எடுக்கப்பட்ட இந்த கார்ப்பரேட் வட்டிக் குறைப்பு முயற்சிகள், எந்தப் பலனையும் தரப்போவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. சொல்லப்போனால், தனியார் முதலீடும் பொருளாதார வளர்ச்சியும் மேலும் தொடர்ந்து சரிந்துகொண்டேதான் வருகின்றன. வரும் காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகவே இருக்கும் என்றே ரிசர்வ் வங்கி மற்றும் உள்நாட்டு/வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கணிப்புகள் சொல்கின்றன’’ என்றார்.
ஆடிட்டர் கோபாலகிருஷ்ண ராஜுவிடம் பேசியபோது, ‘‘வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில், புரொக்ரஸிவ் வரி முறைகளைத்தான் பின்பற்றுவார்கள். அதாவது, குறைவான வருமானம் கொண்டவர்களுக்கு குறைவான வரிவிதிப்பும், அதிக வருமானம் கொண்டவர் களுக்கு அதிக வரி விதிப்பும் செய்வார்கள். இதைத்தான் தற்போதைய மத்திய அரசாங்கம் கார்ப்பரேட் வரி விதிப்பில் கையாள்கிறது. அதனால் இந்தியப் பொருளாதாரம் பாசிட்டிவ் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இதனால், மத்திய அரசுக்கு வரி வருமானத்தில் இழப்பு ஏற்படும் என்று சிலர் சொல்கின்றனர். முந்தைய காலகட்டத்தில், வரிவிகிதத்தைக் குறைத்தபோது, புதியவர்கள் பலரும் வரி நடைமுறைக்குள் நுழைவதன் காரணமாக, வரி வருமானம் அதிகமாகியிருப்பதைத் தான் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
பல பாசிட்டிவ் விஷயங்கள் இந்த வரிக் குறைப்பு அறிவிப்புகளில் இருந்தாலும், ஒரு சில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ‘பொருளாதார மந்தநிலையை சரி செய்வதற்காகத் தான் இந்த நடவடிக்கை’ என்கிறார்கள். உண்மையிலேயே அந்த நோக்கம் இருந்திருந்தால், வரியைக் குறைத்திருக்க வேண்டியது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அல்ல… மக்கள் விரும்பி செலவுசெய்யும் பொருள்களுக்குத்தான். அப்படிச் செய்திருந்தால், பெரும்பாலான பொருள்களின் விலையும் குறைந்திருக்கும்; தேவையும் பணப் புழக்கமும் அதிகரித்திருக்கும்; புதிய புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கும். இது, பொருளாதார மந்தநிலையை சீர்ப்படுத்த உதவி யிருக்கும். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைத்திருப்பது, வேலை வாய்ப்பின்மைக்கோ விலைவாசிப் பிரச்னைக்கோ உடனடி தீர்வாக இருக்காது’’ என்றார்.
ஆக, தற்போதைய இந்த கார்ப்பரேட் வரிக் குறைப்பானது சாதகமானதுதான். ஆனால், அது பெருநிறுவனங்களுக்கானதாக மட்டுமே இருக்கிறது. இந்தியப் பொருளாதார மந்த நிலையையோ, சாமானியர்களின் பிரச்னையையோ சரிசெய்ய, இந்த கார்ப்பரேட் வரிக் குறைப்பு சாதகமாக இல்லை என்பதுதான் உண்மை!
– வணிக வீதி
நிமிர்வோம் அக்டோபர் 2019 மாத இதழ்