மாநில அடையாளங்களை அழிப்பதால் உருவாகும் ஆபத்து – பிரேர்ணா சிங் –
மாநிலங்களின் தனித்துவத்தை அழித்து ஒற்றை தேசியமாக இந்தியாவை மாற்றத் துடிக்கிறது பா.ஜ.க.வின் நடுவண் ஆட்சி. மாநிலங்களுக்கான அடையாள உணர்வுதான் வளர்ச்சிக்கும் சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் ஆதார சுருதியாக இருக்கிறது என்பதை ஆய்வு நோக்கில் முன் வைக்கிறது, கட்டுரை.
நாம் வாழும் இடம்தான் நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. அருகருகே உள்ள வெவ்வேறு நாடுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் தொடங்கி கல்வி என்று பல்வேறு விஷயங்களில் மிகப் பெரிய வேறுபாடுகள் இருப்பதை உணர முடியும். அமெரிக்காவின் ஹெய்ட்டி மாநிலத்தில் பிறக்கும் குழந்தை, அங்கிருந்து 50 மைல்கள் தொலைவில் உள்ள கியூபாவில் பிறக்கும் குழந்தையை ஒப்பிட – தனது முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் வாய்ப்பை 12 மடங்கு அதிகம் பெற்றிருக்கிறது. அதேபோல், நீங்கள் மேற்கு ஆப்பிரிக்க நாடான
புர்கீனா பாஸோவில் பிறந்தவர் என்றால், அண்டை நாடான கானாவுடன் ஒப்பிடும்போது நீங்கள் கல்வியறிவு பெறாதவராக இருப்பதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.
ஒரே தேசத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையிலும் இதுபோன்ற வேறுபாடுகள் உண்டு. இந்தியாவின் சில மாநிலங்கள், வளர்ச்சியடைந்த நாடுகளைவிடச் சிறப்பான நிலையில் இருப்பதையும் பல மாநிலங்கள் வளர்ச்சி குன்றிய ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் அளவுக்கு இருப்பதையும் உதாரணமாகச் சொல்லலாம். ராஜஸ்தானில் ஜெய்ப்பூருக்கு வெளியே உள்ள பகுதிகளில் 1960-களில் பிறந்தவர்களின் கல்வியறிவை, அதே காலகட்டத்தில் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பிறந்தவர்களுடன் ஒப்பிடும்போது, ராஜஸ்தானில் பிறந்தவர்கள் மத்தியில் கல்வியறிவின்மை இரண்டு மடங்கு இருப்பது ஓர் உதாரணம். இன்றைய நிலவரத்தை எடுத்துக்கொண்டால்கூட, உத்தர பிரதேசத்தின் வடக்கு – மத்திய பகுதிகளில் பிறந்த பெண்களை விடவும், கேரளத்தைச் சேர்ந்த பெண்களின் ஆயுட்காலம் சராசரியாக 15 ஆண்டுகள் அதிகம்.
மாற்றங்கள் எங்கே நடக்கின்றன?
ஒரே சட்ட அமைப்பு, தேர்தல் முறை, நிதி அமைப்பின் கீழ் வரும் மாநிலங்கள், சமூக முன்னேற்றம் எனும் விஷயத்தில் மிகப் பெரிய வேறுபாடுகளைக் கொண்டிருப்பது ஏன்?
இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். இந்தப் போக்குகள் காலங்காலமாக ஒரே மாதிரியாகத் தொடர்வதில்லை. அதிகம் இல்லை, வெறும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உத்தர பிரதேச மாநிலம் (அப்போது மத்திய மாகாணம்), சிறப்பாக நிர்வகிக்கப் பட்ட மாநிலங்களில் ஒன்று என்று அறியப்பட்டிருந்தது. அம்மாநிலத்தில் பணியில் சேர்வதற்கு, கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் போட்டிபோடுவார்கள். அக்காலகட்டத்தில் இன்றைய தென்னிந்திய மாநிலமான கேரளப் பகுதி ஊழல், பஞ்சம் என்று பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்தது. சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டுவிடும் அபாயத்தை அது தொடர்ந்து எதிர்கொண்டு வந்தது.
1880-களில், உத்தர பிரதேசத்துடன் ஒப்பிட, கேரளம் பல்வேறு வகைகளில் பின்தங்கிய நிலையில் இருந்தது. ஆனால், இன்றைய நிலை தலைகீழ். இவ்வளவு பெரிய மாற்றம் வெறும் நூறு ஆண்டுகளில் எப்படிச் சாத்தியமானது?
இவ்விஷயத்தில் எனக்கு முன்பாக, ஆய்வுகள் செய்த அறிஞர்கள் பலர், வெவ்வேறு காரணிகளை முன்வைத்தார்கள். உதாரணமாக, ஒரு மாநிலத்தின் வளம் ஒரு காரணியாகக் குறிப்பிடப்பட்டது. அதாவது, வளமான மாநிலம் என்றால் அதனிடம் நிறைய பணம் இருக்கும். எனவே, சமூக நலத்திட்டங்களுக்கு நிறைய நிதி வழங்க முடியும் என்பது அந்த வாதம். இன்னொரு வாதம் – வர்க்க அரசியல். மற்றொரு வாதம் – இன அடிப்படையிலான ஒற்றுமைத் தன்மை. ஆனால், இந்திய மாநிலங்களுக்கு இந்த வாதங்கள் எதுவுமே பொருந்துவதில்லை என்பதைப் பல உதாரணங்கள் வழியே என்னால் நிரூபிக்க முடியும். உண்மையான காரணம் எது என்றால், மாநிலங்களுக்கிடையிலான இணக்கத்தன்மை, ஒற்றுமைத்தன்மை. மிக முக்கியமாக, ஒரே மாநிலத்தவர் என்ற அடையாள உணர்வு, மாநிலத்துக்கே உரிய ஒற்றுமை உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலான சமூக நலக் கொள்கைகள். நான் இந்தப் பிராந்திய ஒற்றுமையைக் குறிக்கும் அடையாளச் சொல்லாக ‘துணை தேசியவாதம்’ என்பதைப் பயன்படுத்து கிறேன்.
பிராந்திய உணர்வற்ற உத்தர பிரதேசவாசிகள்
நாம் 1950-களுக்குச் செல்லலாம்; அங்கே நான் சொல்லும் வாதங்களுக்கான வேர்கள் இருக்கின்றன. அப்போதைய மாநில மறு சீரமைப்பு ஆணையத்தின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அந்த ஆணையத்துக்கு வந்த கோரிக்கைகளைப் பார்க்க முடிந்தது. “நான் இந்த மாநிலத்தில் வசிக்க விரும்புகிறேன் – எங்கள் மாநிலம் இப்படி இருக்க வேண்டும்” என்று யார் வேண்டுமானாலும் கோரிக்கை அனுப்ப முடியும். கேரளம் என்ற மாநிலத்தின் உருவாக்கத்துக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இரத்தத்தால் கையெழுத்திட்ட கோரிக்கைகளை நான் கண்டேன். அதாவது, கேரளம் என்பது ஒரு மாநிலமாக ஆவதற்கு வெகுகாலத்துக்கு முன்பிருந்தே மலையாளிகளின் பிராந்திய உணர்வு, கேரளம் எனும் அடையாளத்தை இயல்பாகவே உருவாக்கியிருந்தது.
சரி, அதேசமயத்தில் மத்திய மாகாணமா யிருந்த உத்தர பிரதேசம் எப்படி இருந்தது? புதிய மாநிலத்துக்கு என்ன பெயர் தேர்வுசெய்யப்படும் என்று டெல்லியில் இருந்தவர்கள் காத்திருந்த போது, உத்தர பிரதேசத்திலிருந்து வந்த தந்தியில் மாநிலத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது – அது, ‘இந்துஸ்தான்’. நேரு, “என்ன விளையாட்டு இது? இது ஒட்டுமொத்த இந்தியாவின் பெயரல்லவா” என்று கேட்க, அடுத்த தந்தி டெல்லிக்குப் போனது. அதில் குறிப்பிடப் பட்டிருந்த பெயர் ‘ஆரியவிரத்’. அதுவும் மறுதலிக்கப்படவே, ‘ராமராஜ்யம்’ என அனுப்பி வைத்தார்கள். கடைசியில் நேரு தலையிட்டு, ‘உத்தர பிரதேசம்’ எனும் பெயரை இறுதி செய்தார். அதாவது, அன்றைய உத்தர பிரதேசக்காரர்கள் தாங்கள்தான் முழு நாடும் என்று சிந்தித்தார்கள் அல்லது சாதி, மத அடிப்படையில் சிந்தித்தார்கள். பிராந்திய உணர்வு என்று ஒன்று வெளிப்படவில்லை. இன்று வரை ஒரு பிராந்திய உணர்வை அது பெற்றுவிட்டது என்று சொல்ல மாட்டேன்.
நான் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஒருவரைப் பேட்டி கண்டபோது, அவரிடம், “தமிழ்நாட்டினர் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். கேரளத்தவர்கள் தங்களை மலையாளிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். நீங்கள் எப்படி உங்களைச் சொல்லிக் கொள்வீர்கள்?” என்று கேட்டேன். அவர் “பையா – அண்ணாச்சி” என்று சொல்லிக் கொள்வேன்” என்று சொன்னார். இந்தியாவின் மையப் பகுதியில் உள்ள மிகப் பெரிய மாநிலத்திலிருந்து வெளிப்படும் மனப்பான்மை இது. நீங்கள் அங்கே தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த காலங்களில் பேசப்பட்ட விஷயங்களை ஆய்வு செய்தால் இது புலப்படும், “தேசியப் பாதுகாப்பு, பாகிஸ்தான் அச்சுறுத்தல், இந்தியைத் தேசிய மொழியாக எப்படி முன்னெடுப்பது” இப்படித்தான் தேர்தல் பிரச்சாரங்கள் நடக்கும் அல்லது சாதி, மதம் சார்ந்த விஷயங்கள் செல்வாக்கு செலுத்தும். அங்குள்ள அரசுகளின் பட்ஜெட்களும்கூட, தேசிய அளவிலான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் அமைந்தன. எளிமையான தொனியில் நான் குறிப்பிடும் இந்த விஷயங்கள் எளிதானவை அல்ல. இந்த மாநிலங்களின் வளர்ச்சிகளின் தன்மை குறித்த முக்கியமான விஷயத்தை அடிப்படையாகக் கொண்டவை.
தமிழ்நாடு எனும் முன்னுதாரணம்
ஆக, நான் குறிப்பிடும் பிராந்திய உணர்வு – ‘துணை தேசியம்’ – இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தின் வளர்ச்சியில் மிகப் பெரிய செல்வாக்கைச் செலுத்துகிறது என்று சொல்வேன். அது தேசம் எனும் கருத்தாக்கத்துக்கு எதிரானது அல்ல; பிராந்திய உணர்வும் தேசிய உணர்வும் இரண்டும் ஒரே தளத்தில் இருக்க முடியும்; ஒன்றுக்கொன்று பகிர்ந்தளித்துக் கொள்ளவும் முடியும். இங்கே தமிழ்நாட்டைத் தான் முக்கியமான உதாரணமாக்குவேன். சுதந்திர இந்தியாவிலேயே முதன்முறையாகப் பிரிவினைக் குரல்கள் எழுந்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இன்றைக்கும் பிராந்திய உணர்வு கொண்டவர்கள், அதேசமயம், தங்களைப் பெருமைக்குரிய குடிமக்களாகவும் கருதுபவர்கள்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டின் பிற மாநிலங்களைப் போலவே தமிழ்நாடும் பின்தங்கியிருந்தது. 1900-களுக்கு முன் இருந்த ‘மதறாஸ் மாகாணம்’ எழுத்தறிவற்றவர் களையும் நோயாளிகளையும் அதிக எண்ணிக்கை யில் கொண்டது. தமிழர்கள் தங்களுடைய மதிப்பு மிக்க இலக்கியச் சொத்துகளைப் பற்றிய எண்ணமே இல்லாமல் சுணங்கியிருந்தனர். பழந்தமிழ் இலக்கியங்களும் ஏடுகளும் தனியாரிடம் தூங்கிக்கொண்டிருந்தன.
தமிழ்த்தாயும் திருவள்ளுவரும் வரலாற்றின் பழைய ஏடுகளில் பதுங்கியிருந்தனர். செம்மொழி தமிழ் என்பதும் உலகிலேயே மிகவும் மூத்த நாகரிகங்களுள் ஒன்று திராவிடர்களுடையது என்பதும் தெரியாமல் ஒருவித அறியாமை நிலவியது. கல்வி, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சியிலும் இதே நிலைதான்.
அந்நாட்களில் மதறாஸ் மாகாண மக்களின் சராசரி ஆயுட்காலம் 23 வயது. கல்வி, வேலை வாய்ப்பில் மேல்சாதிக்காரர்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி, பிற்படுத்தப்பட்டோரையும் தாழ்த்தப்பட்டோரையும் அதிகாரப்படுத்தும் பணிக்கு பார்ப்பனரல்லாதோர் இயக்கமான நீதிக் கட்சி வித்திட்டது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வளர்ந்து, நீதிக் கட்சியையும் உள்ளடக்கி அது ‘திராவிடர் கழக’மானபோது, கலாச்சார ரீதியாகத் தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. 1967 வரை தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியும் கூட இந்தத் தமிழ் தேசிய – சமூக நீதி அலையி லிருந்து தப்ப முடியவில்லை. காங்கிரஸின் கொள்கைகள் தேசிய அளவில் வேறாகவும் தமிழக அளவில் வேறாகவும் இருந்தன.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
அண்ணாவின் அரசியல் ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ அலையை உருவாக்கியது. அரசியல் மேடைகளில் பழந்தமிழ் இலக்கியங்கள் ஏறின. குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதலில் தொடங்கி, அரசியல் மேடைகளில் பழந்தமிழ் இலக்கியங்களை ஏற்றியது வரை ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது.
திமுகவின் எழுச்சி, தமிழ் தேசிய இயக்கத் தலைவராக அண்ணாவை உயர்த்தியதோடு, தமிழ் தேசிய இயக்கம் பரவுவதிலும் முக்கியப் பங்கு வகித்தது. பிராந்திய உணர்வை மீட்டிய அண்ணா, பிராந்தியங்களின் அதிகாரத்துக்காகவும் சுயாட்சிக்காகவும் குரல் கொடுப்பவராகவும் இருந்தார். இன்றைக்கு நாட்டிலேயே துணை தேசியவாதத்துக்கு முன்னுதாரண மாநிலங்களில் ஒன்றாகச் சுட்டப்படும் தமிழ்நாட்டில், பிராந்திய உணர்வுடன் சமூக நலத்திட்டங்கள் பிணைக்கப்பட்டதற்கான மிகச் சிறந்த குறியீடாக அண்ணாவின், ‘ரூபாய்க்கு ஒரு படி அரிசி’ திட்டத்தை நாம் குறிப்பிடலாம்.
பிராந்திய அடையாள அரசியல் – துணை தேசியவாதம் எப்படி முதன்மையாகிறது? சக்தி வாய்ந்த மக்கள் இயக்கத்தின் அடிப்படையில் உருவாகும் சிவில் சமூகமே இதன் அடிப்படையாக இருக்கிறது. எங்கோ ஓரிடத்தில் ஒட்டுமொத்த சமூக நலனை அது பேசுகிறது. அனைவருக்கும் நலத்திட்டங்கள் சென்று சேர்வதை அது உறுதி செய்கிறது. மேட்டுக் குடியினரால் தீர்மானிக்கப் படும் விஷயங்களை அது எதிர்க்கிறது. இந்த உணர்வுடன்கூடிய சமூக நலக் கொள்கைகளை ஒரு அரசு முன்னெடுக்கும் போது, அது வளர்ச்சியை நோக்கி வேகமாக மக்களைச் செலுத்துகிறது. இந்திய வரலாற்றில் அண்ணா வின் முக்கியத்துவம் இங்கேதான் நிலை கொள்கிறது!
– கட்டுரையாளர் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக ஆய்வாளர் ‘மாபெரும் தமிழ் கனவு’ நூலிலிருந்து
நிமிர்வோம் செப்டம்பர் 2019 மாத இதழ்