பெரியார் கருத்தியலின் அய்ந்து முக்கியக் கூறுகள் – பேராசிரியர் ந. முத்துமோகன்

வரலாறு என்றால் என்ன? என்ற கேள்விக்கு, கார்ல் மார்க்ஸ், வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என்று பதில் கூறினார். வரலாறெங்கும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடு, மோதல் தொழில்படுகிறது என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். பெரியார் வருணங்கள், சாதிகள், இனங்கள் ஆகியவற்றுக்கிடையிலான முரண்பாடுகளும் மோதல்களும் போராட்டங்களும் தான் வரலாறு என்றார்.

பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் இருபதாம் நூற்றாண்டு முழுவதையும் தழுவி நிற்கும் அரசியல் செயல்பாட்டுப் பரப்பைக் கொண்டவர். இருபதாம் நூற்றாண்டில் மேற்கிலும் கிழக்கிலும் அறியப்பட்ட கொள்கைப் போக்குகளை சராசரித் தேவைகளுக்கு மேலான அளவுக்கு அவர் அறிந்திருந்தார். சனநாயகம், குடியரசுக் கொள்கை, சோசலிசம், மார்க்சியம், அராஜகம் போன்ற அரசியல் கொள்கைகளை அவர் அறிந்திருந்தார். மேற்கில் பிரஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி போன்ற மிகப் பெரும் சம்பவங்களின் கொள்கைப் பின்புலங்களை அவர் அறிந்திருந்தார். மேற்கு நாடுகளில் விஞ்ஞானத் தொழில் புரட்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது, அவற்றை அடிப்படையாகக் கொண்டு தத்துவங்களிலும் உலகப்பார்வைகளிலும் புரட்சி நடக்கத் தொடங்கி விட்டது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். மதங்களை ஓரங்கட்டி பகுத்தறிவுச் சிந்தனை முன்னுக்கு வருகிறது என்பதை அவர் தெரிந்திருந்தார். அறிவுக்கு ஒவ்வாதவை அனைத்தையும் தீக்கு இரையாக்குங்கள் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. ஒரு கல்வியாளர் போல அல்லது ஆராய்ச்சியாளர் போல அவர் அக்கோட்பாடுகளில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, மிக மிக அடிப் படையான அர்த்தத்தில் அவர் ஓர் நடை முறையாளராக ஐரோப்பாவில் நடப்பவற்றை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

மேற்கத்தியக் கொள்கைகளையெல்லாம் படித்துப் புலமை பெறவேண்டும் என்பது அவரது நோக்கமாக இருக்கவில்லை. அந்தக் கொள்கைகளை அச்சுக்கு அச்சு மாறாமல் இந்தியாவில், தமிழகத்தில் பரப்ப வேண்டும் என்பதும் அவரது நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, மேற்கத்தியச் சூழல்களில் முற்போக்கான முகம் காட்டும் கொள்கைகளை இந்தியச் சூழலுக்கு ஏற்பத் தகவமைக்க வேண்டும் என்பது அவரது அறிவிக்கப்படாத வேலைத்திட்டமாக இருந்தது. இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. இந்தியமயப்படுத்தல் அல்லது தமிழ்மயப்படுத்தல் அல்லது தன்வயப்படுத்தல் (ஐனேபைநnணையவiடிn) என்று இதனைக் குறிப்பிடலாம்.

ஒரு மேற்கத்தியக் கருத்தை இந்திய மயப் படுத்தும் போது அல்லது தமிழ் மயப்படுத்தும் போது, முதலில் மிக முக்கியமாக, இந்தியச் சூழல், தமிழ்ச் சூழல், இந்திய சமூக அமைப்பு, பழக்க வழக்கங்கள், இந்தியத் தமிழ்ச் சமூக வரலாறு போன்ற விபரங்கள் சம்மந்தப்பட்டவருக்கு அத்துப்படியாகத் தெரிந்திருக்க வேண்டும். மிகப் பெரிய உயர் கல்வியை அவர் பெற்றிருக்க வேண்டும் என்று இதற்குப் பொருளல்ல, மாறாக, வாழ்வின் அனுபவத்தளங்களை அறிந்தவராக அவர் இருக்க வேண்டும். ஒரு மேற்கத்தியக் கொள்கையைக், கோட்பாட்டைத் தமிழாக்கம் செய்யும் போது, அந்தச் சொல் உச்சரிக்கப்பட்ட வுடன் தமிழருக்கு அது முழு அர்த்தத்தையும் அள்ளி வழங்குவதாக இருக்க வேண்டும். பெரியார், மேற்கத்தியக் கொள்கைகள் பலவற்றை, பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து ரஷ்யப் புரட்சி வரையில், தமிழாக்கம் செய்தார். அவற்றில் பலவற்றை அவர் விலக்கினார், சிலவற்றை ஏற்றுக் கொண்டார். வேண்டுதல் வேண்டாமை அவரிடம் இருந்தது. பெரியாரியத்தின் வெற்றிக்கு இவ்வகைத் தமிழாக்கமே மிக முக்கியமான காரணமாக அமைந்தது.

பெரியார் மேற்கில் பேசப்பட்ட சனநாயகம், குடியரசுக் கொள்கை ஆகியவற்றை ஏற்றுக் கொண்டார். ஆனால் பாராளுமன்ற சனநாயகம் அவரால் பாராட்டப்படவில்லை. அதுபோலவே, மேற்கில் பெரிதும் சிலாகிக்கப்பட்ட தனிமனித சுதந்திரத்தை பெரியார் பாராட்டவில்லை. இந்தியத் தமிழ்ச் சூழல்களுக்கு முதன்மை யானதாக அவருக்கு மக்கள் கூட்டங்களின் சுதந்திரம், அவர்களின் உரிமைகள் காட்சி யளித்தன. அவை சட்டபூர்வமாக நிறுவப்பட வேண்டும் என அவருக்குத் தோன்றியது. சனநாயகத்தை அவர் வலியுறுத்தியபோது தேர்தல் அரசியலை அவர் விலக்கினார். எமது கட்சி தேர்தலில் பங்கேற்காது என்று அவர் வெளிப் படையாக அறிவித்தார். அராஜகம் என்ற கோட்பாடு வரலாற்றில் காத்திரமாகத் தொழில்பட்ட இரண்டுவித அதிகாரங்களை மறுதலிக்கிறது. ஒன்று மத அதிகாரம், மற்றொன்று அரசியல் அதிகாரம். பெரியாரும் கிட்டத்தட்ட அது போலத்தான்.

பெரியார் ஆளும் வர்க்கம், ஒடுக்கப்பட்ட வர்க்கம் என்ற சொற்களை அதிகம் பயன்படுத்த வில்லை. அவை அவருக்கு மிக அருவமாகத் தென்பட்டன. இந்திய சமூகத்தில் கண்ணுக்கு நேராக இருந்த சாதி அமைப்பை பெரியார் கைநீட்டி அடையாளம் காட்டினார். சாதி அமைப்பின் உச்சத்தில் இருந்த “ஆளும் வர்க்கத்தையும்” அடிமட்டத்தில் கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களையும் பெயர் சொல்லி அவரால் “பளிச்” சென்று சுட்டிக்காட்ட முடிந்தது.

மோதல், முரண்பாடு ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்டு வரலாற்றை அளக்கும் முறையியலை அய்ரோப்பாவில் ஹெகல், மார்க்ஸ் போன்றோர் வழங்கினர். இந்தியாவில் பெரியாரும் அம்பேத்கரும் இந்த முறையியலை ஏற்றுக் கொண்டனர். சாதிகளும் இனங்களும் தத்தமக்கிடையே முட்டி மோதிப் போராடிக் கொண்ட வரலாறே இந்திய வரலாறு என்று பெரியார் கூறினார். ராமாயணம் வடக்கு, தெற்கு என்ற மோதலைக் குறித்தது. ஆரிய இனம் திராவிட இனத்தை அடிமை கொண்ட மோதல் அது என்று சித்தரித்துக் காட்டினார். காலனி ஆட்சி பற்றிப் பேசும்போது, உள்நாட்டிற்குள் வழக்கிலிருக்கும் சாதி அமைப்பு காலனி ஆதிக்கம் இல்லையா? என்று கேள்வி கேட்டார்.

வேர்களைத் தேடி..

மேலே குறிப்பிட்ட தமிழ்மயமாக்குதல் அல்லது தன்வயப்படுத்தல் என்ற முறையியலைப் பெரியார் பயன்படுத்தும்போது, அவர் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக நின்று பேசுகிறார். இந்திய வரலாறு முழுவதிலுமே மேட்டுக்குடிகளுக்கும் அடித்தள மக்களுக்கும் இடையில் இடையறாத போராட்டங்கள் நடந்து வந்தன என்பதற்கு அவர் அடுத்தடுத்து பல எடுத்துக்காட்டுகளைச் சுட்டிக்காட்டுகிறார். அப்படி எடுத்துக்காட்டும்போது பெரியார் தன்னை அவ்வாறு போராடியவர்களுடன் இணைத்துக் காட்டுகிறார். நான் தனித்த மனிதனல்ல, எனக்கு ஒரு மரபு உண்டு, அது ஒரு போராட்ட மரபு என்று பெரியார் குறிப்பிடுகிறார். பண்டைய இந்தியாவில் சார்வாகர்கள், பௌத்தர்கள் ஆகியோரைச் சுட்டிக்காட்டுகிறார். பண்டைத் தமிழ் மரபில் திருவள்ளுவரை எடுத்துக் காட்டுகிறார், ஒளவையை முன்னெடுத்துப் பேசுகிறார், கபிலரைப் பற்றிப் பேசுகிறார், சித்தர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இப்படி அவர் பேசும்போது நாம் அவரை அடையாளம் கண்டு கொள்ளுகிறோம். நான் மரபில் வேர் கொண்டுள்ளேன், அது ஓர் எதிர்ப்பு மரபு, போராடிய மரபு என்று பெரியார் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுகிறார். தன்னை அவர் ஆண்ட பரம்பரையாக அடையாளப் படுத்தவில்லை. தெய்வீக அருள் பெற்ற பரம்பரையாகக் காட்டிக்கொள்ளவில்லை. அவற்றுக்கு எதிராகப் போராடிய ஒரு விமர்சன மரபாக முன்வைக்கிறார்.

தொடர்ந்து பெரியாரின் சித்தாந்தப் பயன்பாடுகள் என்று யோசிக்கும்போது, அல்லது பெரியாரின் வேர்களைத் தேடிப் பயணிக்கும் போது, குறைந்த பட்சம் ஐந்து முக்கியமான கூறுகள் (அம்சங்கள்) எனக்குக் கிடைக்கின்றன. அந்த ஐந்து விடயங்களைக் குறித்துப் பேசினால், பெரியாரிய சித்தாந்தத்தின் பயன்பாடுகளை, அவரது வேர்களைக் கண்டறியும் பணியில் நாம் மேலும் சில தெளிவுகளை அடைவோம் என்று கருதுகிறேன்.

  1. இந்து மதம் குறித்த பெரியாரின் கருத்துக்களை முன்வைத்து

பெரியார் இந்து மதத்திற்கும் சாதி அமைப்புக்கும் இடையில் மிக இறுக்கமான உறவுகள் இருப்பதாகக் கண்டறிகிறார். இது மதங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் சமூகவியல் அறிஞர்களே சொல்லாத ஒரு கருத்தாகும். சமூகவியல் அறிஞர்கள் (எமிலி டர்க்கெய்ம், மாக்ஸ் வேபர் போன்றோர்) எல்லா மதங்களுக்கும் பொதுவான சமூகவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்து சொல்லு கிறார்கள். ஆயின் இந்து மதம் குறித்த மதிப்பீடுகளை வழங்கும்போது அவர்களிடம் ஒரு தடுமாற்றம் தென்படுகிறது. பெரியாரைப் பொறுத்தமட்டில் சாதியை உருவாக்கியதில் அதனைப் பாதுகாத்துப் பேணியதில் இந்து மதத்திற்கு பத்திரம் உள்ளது. சாதியை இந்து மதத்திலிருந்து அப்புறப்படுத்தி விட்டால் அங்கு வேறு என்ன இருக்கிறது? என்றே அவர் கேட்பார்.

இந்து மதத்தை பிற மதங்களோடு பெரியார் ஒப்பிட்டுப் பேசுவார். கிறித்தவமும் இஸ்லாமும் அம்மதத்தின் பின்பற்றாளர்களை ஒன்றுபடுத்தும் நோக்கம் கொண்டவை. ஆயின் வர்ண வரிசையில் அல்லது சாதிப் படிநிலையில் மக்கள் கூட்டங்களைப் பிரித்துக் காட்டுவதையே இந்து மதம் அதன் பணியாகச் செய்கிறது. “இந்து சமூக ஒழுங்கு” என்ற சொல்லை அம்பேத்கர் பயன்படுத்துவார். சாதிகள், வர்ணங்கள் கலந்து விடக் கூடாது என்பதனை இந்து மதத்தின் பல புனித நூல்கள் உச்சக்கட்ட லட்சியமாக, தாண்டக்கூடாத எல்லைக்கோடாக (ஊயவநபடிசiஉயட ஐஅயீநசயவiஎந) அறிவிக்கின்றன. மகாபாரதப் போர் நடக்காவிட்டால் வர்ணக்கலப்பு நிகழ்ந்து விடும், உலக ஒழுங்கு அழிந்து விடும் என்று பகவத் கீதை கூறுகிறது. வர்ணக்கலப்பு எப்படி நிகழும், ஒழுங்கு எப்படி அழிந்து விடும் என்பது போன்ற கேள்விகளுக்கு பகவத் கீதையில் பதில் இல்லை. (ளுயஅயீரமயn) ஆனால் அது ஒரு பேரழிவு குறித்த குறியீட்டு வாக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய வரலாறு முழுவதிலும் மேட்டுக் குடிச் சாதிகளுக்கும் அடித்தளச் சாதிகளுக்கும் இடையில் நிரந்தரமான போராட்டம் நடந்து வந்திருக்கிறது என்பதிலும் பெரியார் உறுதியாக உள்ளார். தேவர்கள்/அசுரர்கள் என்ற பெயரில், வைதீகம்/அவைதீகம் என்ற பெயரில், இந்துக்கள்/பௌத்தர்கள் என்ற பெயரில், ஆரியர்/திராவிடர், சமஸ்கிருதம்/நீச மொழிகள் என்ற பெயரில், ராமன்/ராவணன் என்ற பெயரில் இன்னும் பல்வேறு பெயர்களில் நிரந்தரமாக அந்தப் போர்கள் நடந்து வந்திருக்கின்றன. வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என்று மார்க்ஸ் குறிப்பிட்டது போலவே இந்திய வரலாறு என்பது வர்ணங்களுக்கு இடையில், சாதிகளுக்கு இடையிலான போராட்டம் என்பது பெரியாரின் (அம்பேத்கரின்) முடிவு. இன்றும் அதே போராட்டம் அதன் மிக உக்கிரமான வடிவத்தை எட்டியுள்ளது என்பதே அவரது கருத்து.

  1. பெரியாரின் சுயமரியாதை எனும் கருத்தாக்கம்

காங்கிரஸ் இயக்கம் நாட்டு விடுதலையை முன்வைத்து சுயராஜ்யம் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது, பெரியார் சுயமரியாதை என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி அதனைத் தன் அடிப்படையான கோட்பாடுகளில் ஒன்றாக ஆக்கினார் என்பதனை ஆய்வாளர்கள் அறிவர். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கங்களில் முதலாவதான சுதந்திரம் என்பதை சுயமரியாதை என்பதன் மூலம் மாற்றிப் பயன்படுத்தினார் என்றும் குறிப்பிடுவார்கள். எது எப்படியாயினும் சுயமரியாதை என்ற முழக்கத்தில் பெரியார் பிடிவாதமாக இருந்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. சுயமரியாதை என்ற முழக்கத்திற்கு வேறு முன்னுதாரணம் எதையும் நம்மால் கண்டறிய முடியவில்லை. தமிழ்நாட்டிலோ, வெளிநாடுகளிலோ அம்முழக்கத்தை முன் வைத்தவர் எவரையும் நாம் கண்டடைய முடியவில்லை. இக்கருத்தாக்கம் பெரியாருக்கே தனித்துவமானது என்றே கொள்ள வேண்டி யுள்ளது. சுயமரியாதை என்பதன் மூலம் பெரியார் எதை விரும்பியிருக்கிறார்? அம்முழக்கத்தை அவர் வலியுறுத்துவதன் நோக்கம் என்ன?

உற்றுப் பார்த்தால், அடிமைத்தனம் என்ற கருத்தாக்கத்திற்கு எதிர்நிலையிலான ஒர் கருத்தாக சுயமரியாதை பெரியாரில் பயன்பட்டிருக்கிறது. இது ஒருவகையில் அகவயமான ஒரு கருத்து அல்லது ஒரு மனநிலை. சுயமரியாதை கொள்ளுதல் என்பது ஒரு விடுதலை பெற்ற மனநிலையை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று தன்னுணர்வினை அடைந்து விட்ட நிலையைக் குறிப்பதாக ஆகிறது. இது ஓரு தன்னுணர்வு என்றும் பொருள்படும். ஆங்கிலத் தில் ளுநடக ஊடிளேஉiடிரளநேளள என்ற பொருளையும் இது குறிக்கலாம். பெரியாரின் சுயமரியாதை என்ற சொல் திடீரென ஒரு மிகப்பெரிய பொருண்மையை ஈட்டிவிட்டதாகத் தெரிகிறது. ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கம் அல்லது கூட்டம் விடுதலை பெற சுயமரியாதை என்ற தன்னுணர்வு மிக அடிப்படையானது. விடுதலைக்கான முன் நிபந்தனையாக பெரியார் சுயமரியாதை கொள்ளுதலைக் கருதியிருக்க வேண்டும். மார்க்சியர்களுக்கிடையில் ஜார்ஜ் லுக்காச் என்ற ஜெர்மானிய அறிஞர் வர்க்க உணர்வு என்ற கருத்தாக்கத்தின் முக்கியத்துவம் பற்றி ஏராளமாக எழுதினார். அதற்காக அவர் பாராட்டவும் படுகிறார்.

பொதுவாக, மேடையின் முன்னால் தலைவரின் பேச்சைக் கேட்கக் கூடியிருக்கும் மக்களை சந்தாஷப்படுத்துவது போல, அவர்களைப் பெரிதும் குளிரவைத்துப் பாராட்டிப் பேசுவதே பேச்சாளர்களின் வழக்கம். பெரியாரிடம் இதற்கு எதிர்மறையான அணுகுமுறையைக் காணமுடிகிறது. அவர் முன்னால் இருப்பவர்களைக் குளிரவைக்க மாட்டார். மாறாக, பெரியாருடைய பேச்சு முன்னால் இருப்பவர்களைத் தொந்தரவு செய்யும். அவர்களது மனதைத் தொட்டு குற்ற உணர்ச்சியைத் தூண்டி விடும். நீ ஏன் இப்படி அவனுக்கு அடிமையாக இருக்கிறாய்? என்ற கேள்வியை பெரியார் எழுப்புவார். அவன் உன் தாயை இழிவு படுத்துகிறான்! என்று சுட்டிக் காட்டுவார். பெரியாரின் இதுபோன்ற பேச்சுகள் தாம் என்னை தொந்தரவு செய்யும். என் சுயமரியாதையை உசுப்பி விடும். உன் சுயமரியாதை விழித்து விட்டால், உன் விடுதலை வசப்பட்டு விடும். பெரியார் உன்னைத் திட்டுவார், மனதைக் காயப்படுத்துவார், உன் வலியை அதிகப்படுத்து வார். தமிழ்நாட்டில் வேறு எந்தத் தலைவரும் எந்தப் பேச்சாளரும் கேட்பவர்களைக் காயப்படுத்த மாட்டார்கள். வர்க்க உணர்வு என்ற கருத்தை பிரக்ஞை, ஓர்மை போன்ற சொற்களின் வழியாக, காத்திரமான ஒரு கருத்தாக்கமாகப் பெரியார் செய்கிறார்.

  1. பெரியார்: உள்ளிருந்து உருவாக்கும் சமத்துவம்

சமத்துவம் என்ற கருத்தைப் பெரியார் பிரெஞ்சுப் புரட்சியிலிருந்தோ ரஷ்யப் புரட்சி யிலிருந்தோ அறிந்திருக்கலாம். ஆயின் அதன் உள்ளடக்கத்தை அவர் தமிழ்ச் சூழல்களிலிருந்தே, இந்தியச் சூழல்களிலிருந்தே உருவாக்கினார். இங்குள்ள சூழல்களில் சமத்துவத்திற்குத் தடையாகவுள்ள சக்திகளை அவர் இங்கிருந்தே அடையாளப்படுத்தினார். சமத்துவமின்மையை பெரியார் இங்கிருந்தே கண்டடைந்தார். போராட்ட முறைகளையும் கூட இங்குள்ள சூழல்களிலிருந்தே தயாரித்தார். பெரியாரின் தனித்த முத்திரை இங்கு தான் உள்ளது.

சமத்துவமின்மைக்கு இந்திய வரலாறு எண்ணிலடங்கா எடுத்துக்காட்டுகளை பெரியாருக்கு வழங்கியது. அவற்றுக்கு இங்கே பஞ்சமேயில்லை. இவ்வாறாக, பெரியாரின் முறையியல், அணுகுமுறை உள்ளுக்குள்ளிருந்தே தொடங்குகிறது. பெரியாரைத் தூண்டிவிட்ட சக்திகள், கருத்துக்கள் வெளிநாட்டனவாக இருக்கலாம். ஆயின் பெரியார் வெளிநாட்டவர் அல்ல. அவரது சொந்த நாடே, சொந்தப் பிரச்சினைகளே அவரை வருத்தின. சொந்த வலிகளே அவரை இரவும் பகலுமாகச் சிந்திக்க வைத்தன. வலிக்காமல் பிள்ளை பெறமுடியாது என்று நம்மூரில் சொல்லுவார்கள் (நோகாமல் நொங்கு தின்னமுடியாது என்று இன்னொரு பழமொழியும் உண்டு). பெரியாருக்கு வலித்தது. அந்த வலிகளிலிருந்தே அவர் இந்த மக்களுக்குத் தேவையான சமத்துவத்தை முன்மொழிந்தார்.  பெரியார் முன்வைத்த சமத்துவத்தின் கூறுகள் உள்ளுக்குள்ளிருந்தே உருவாக்கப்பட்டவை.

  1. பார்ப்பனியம் என்ற பெரியாரின் கருத்தாக்கம்

பெரியாரின் பார்ப்பனியம் என்ற கருத்தாக்கம் அவர் பார்ப்பனர்கள் மீது கொண்ட தனிப்பட்ட விரோதத்தினால் உண்டாக்கப்பட்ட தல்ல. அது இந்தியச் சமூக அமைப்பினை விளக்குவதற்கான ஒரு சமூகவியல் கருத்தாக்கம். இந்திய வரலாற்றின் மிகப்பழைய ஒரு சமூக நிறுவனத்தை அது சுட்டிக்காட்டுகிறது. அது ஒரு புரோகித நிறுவனம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சியான வரலாற்றை அது கொண்டது. தத்துவம், மதம், புனித நூல்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை அது மிக முன்னதாகவே கைப்பற்றிக் கொண்டது. இந்திய வரலாற்றில், ஆதிக்கத்தின், அதிகாரத்தின் முதல் வடிவமாக அது உருவாகிற்று. தன்னளவில் அது அதிகாரத்தின் வடிவமாக ஆகியது மட்டுமல்ல, சமூகம் முழுவதிலும் அதிகாரத்தின் படிநிலை அமைப்பை அது கட்டமைத்தது. மிக விரைவில் அரசியலின் அதிகார வடிவங்களுக்கும் அது பழகிக் கொண்டது. புரோகிதச் சமயமும் அரசியலும் ஒன்றிணைந்த அதிகார வடிவங்களை அது சிறிதும் பெரிதுமாக நாடெங்கும் உண்டாக்கியது. குடும்பத்திலும் ஆண் பெண் உறவுகளிலும் கிராமீய அமைப்புகளிலும் தினசரி வாழ்விலும் அங்கிங்கெனாதபடி பார்ப்பனிய அதிகார வடிவங்கள் பரவின.

இந்திய சமூகத்தின் ஆளும் வர்க்கங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நுண்ணுணர்வு கொண்ட பெரியார் இந்திய சமூகத்தின் ஆகப்பெரிய, நீண்டநெடிய அதிகார வடிவம் பார்ப்பனியம் என்று கண்டறிந்தார். அது உள்நாட்டுக் காலனியத்தை உருவாக்கும் மாபெரும் ஏகாதிபத்தியச் சக்தி என்பதைப் புலப்படுத்தினார். படிநிலை நிர்வாக அதிகாரம் பார்ப்பனியத்தின் மிகப்பெரிய கருவி என்பது குறித்து அவர் நாள் தவறாமல் பேசினார்.

  1. பெரியாரின் எதிர்ப்பு-அடையாள (Resistance Identity) உருவாக்கம்

பார்ப்பனியம், பார்ப்பனிய ஆணாதிக்கக் கூட்டணி, பார்ப்பனிய சத்திரியக் கூட்டணி, பார்ப்பனிய மூலதனக் கூட்டணி என்பவை இந்தியாவில் பார்ப்பனிய படிநிலை அமைப்பின் வரலாற்று வடிவங்கள். புரோகிதம், ஆணாதிக்கம், அரசியல், மூலதனம் ஆகியவை ஒவ்வொரு வரலாற்றுக் கட்டத்திலும் அதனுடன் சேர்ந்து கொண்டன. இவை இந்தியாவை ஆட்சி செய்தன என்பது உண்மைதான். ஆயின் அவை தோற்றம் பெற்றக் காலம் தொட்டே அவற்றுக்கான எதிர்ப்புகளும் முளைத்தன. ஆரியம்/திராவிடம், வைதீகம்/அவைதீகம், லோகாயதம்/வேதாந்தம், சமஸ்கிருதம்/திராவிடம், வைதீகம்/பௌத்தம், வேதாந்தம்/தாந்திரிகம், சித்தாந்தம்/வேதாந்தம், செம்மொழிப் பண்பாடு/நாட்டார் பண்பாடு என்ற எத்தனையோ எதிர்வுகள் இந்திய மரபில் தோன்றின, போராடின, வென்றன, தோற்றன, நின்று நிலைத்தன. பெரியார் இவை அத்தனையின் ஊடாகவும் கொஞ்சமாகவும் அதிகமாகவும் தேடித்தேடிப் பயணித்தார். இவற்றின் ஊடாக விரிந்த ஓர் எதிர்ப்பு மரபை, எதிர்ப்பு அடையாளத்தை (Resistance Identity) பெரியாரால் கண்டறிய முடிந்தது. இந்த எதிர்ப்பு மரபின் தொடர்ச்சியாக, எதிர்ப்பு அடையாளத்தின் வளர்ச்சி நிலையாக அவர் இன்றைய தமிழ் மரபை உருவகித்தார். இதன் கூட்டாளிகள் இந்தியத் துணைக்கண்டத்தின் விரிந்த பரப்பெங்கும் உள்ளனர் என்பதை அவர் அறிந்திருந்தார்.

கட்டுரையாளர்:

மார்க்சிய ஆய்வாளர், முதுநிலை பேராசிரியர்

 

நிமிர்வோம் நவம்பர் 2019 மாத இதழ்

You may also like...