பெரியாரும் இந்தியப் பொதுவுடைமையாளர்களும்: உறவும் முரணும் – க. காமராசன்

பெரியார் கம்யூனிஸ்டுகளுடனான முரணுறவைப் பெரும்பாலும் நட்பானதாகப் பார்த்தார். எண்ணற்ற கம்யூனிஸ்ட்களுடன் மிக நெருக்கமான தனிப்பட்ட உறவைப் பேணினார் என்பதற்கு அக்கம்யூனிஸ்ட்கள் எழுதிய நினைவுக்குறிப்புகள் சான்றுகளாக உள்ளன.

தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி (1879-1973) நீண்ட நெடுவாழ்வு வாழ்ந்து மறைந்த தமிழகச் சிந்தனையாளர்; தத்துவவாதி; அரசியல் வாணர்; சாதிமுறை ஒழிப்புப் போராளி. அவர் இந்தியத் தேசிய காங்கிரசில் அரசியல் பொது வாழ்வைத் தொடங்கினார்; சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றை உருவாக்கி தமிழக அரசியல் உலகில் சுமார் அய்ம்பது ஆண்டுகள் (1925-1973) ஒளி குன்றா நட்சத்திரமாகத் திகழ்ந் தார். பெரியார் எப்போதும் தன்னை ‘சமதர்மி’ என்றே அழைத்துக் கொண்டார். பெரியாருடைய ‘சமதர்ம’த்தை ‘சுயமரியாதை சமதர்மம்’ என்று ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை சுட்டுவார்.

பெரியார் அரசியல் வானில் உலாவிய காலத்தில் தான் தமிழகத்தில் பொது வுடைமை இயக்கமும் உரு பெற்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோன்றி, வளர்ந்து, பிளவுபட்டது. 1938ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உருவாக் கப்பட்டது. இதற்கு முன்னர் தமிழகத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சிங்கார வேலர் தொடங்கிய லேபர் கிசான் கட்சி (1923); சிங்கார வேலர், பெரியார் முதலானோர் இணைந்து உருவாக்க முனைந்த சுயமரியாதை சமதருமக் கட்சி (1930-36); அமிர் ஹைதர் கான் உருவாக்கிய இளந்தொழிலாளர் சங்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி முதலானவை முன்னோடி யாக அமைந்தன.

பெரியார் தன்னைத் தானே சமதர்மக் கொள்கைக் காரர் என்று கூறிக் கொண் டார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவுக்கு முன்னோடியான தமிழகப் பொதுவுடைமை இயக்கங்களில் ஒன்றாகச் சுயமரியாதை சம தர்மக் கட்சி உருவாக்கி வழி நடத்த முயன்றவர். இவற்றால் பெரியாருக்கும் தமிழகத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக் காரர்களுக்கும் இடையே பெரியாரின் வாழ்நாள் முழுவ தும் மிக நெருக்கமான தொடர்பு நிலவியது. இந்தத் தொடர்பு பெரும் பகுதி பரஸ்பரம் விமர்சித்து கொள்ளும் முரணுற வாகவே அமைந்திருந்தது. ஆயினும் இரு சந்தர்பங்களில் கூட்டுறவாக மலர்ந்தது.

முரணுறவும் கூட்டுறவும்

பெரியாருக்கும் பொது வுடைமையாளர்களுக்கும் கூட்டுறவு இரு சந்தர்ப்பங்களில் நிலவின. முதலாவது சந்தர்ப்பம், சுயமரியாதை சமதர்மக் கட்சி காலம் (1930-36). இந்தக் காலம் தான் தமிழகத்தில் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் உருவாக்க காலமும் ஆகும். சுயமரியாதை சமதர்மக் கட்சி சுயமரியாதை இயக்கத்திற்குள் ஒரு பிரிவாகத் தோன்றி வளர்ந்தது. இந்தப் பிரிவைத் தோற்றுவித்து வளர்த்தவர்கள் இந்தியப் பொதுவுடைமை யாளர்கள் ம. சிங்காரவேலு, ப. ஜீவானந்தம் என நம்பப்படு கிறது (கோ. கேசவன், 1990). ஆனால் இதை மறுத்து சுயமரி யாதை சமதர்மக் கட்சியை உருவாக்குவதில் பெரியாரும் பெரும் ஈடுபாடு கொண்டிருந் தார் என வாதிடப்பட்டுள்ளது (எஸ்.வி. ராஜதுரை – வ.கீதா, 1996). இது எவ்வாறாயினும் ம. சிங்காரவேலு, ப. ஜீவானந்தம் ஆகியோரின் கூட்டுறவால்தான் பெரியாருக்குச் சமதர்ம உணர்ச்சி ஏற்பட்டது என்ற வாதம் சரியாகப் படவில்லை. பெரியார் அவரே சொல்லிக் கொண்டது, ஜீவகாருணிய சன் மார்க்க மரபிலிருந்து சமதர்ம உணர்ச்சியைப் பெற்றார். இந்த உணர்ச்சித்தான் பெரியாரை மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் முதலானோரிடம் கொண்டு சேர்த்தது. அதனால் இவர் களுடைய எழுத்துகளையும் இவர்கள் பற்றியும் நூல்கள் கொண்டுவந்தார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (மார்க்ஸ்-எங்கெல்ஸ்), பொதுவுடைமைத் தத்துவங்கள் (எங்கெல்ஸ்), மதமும் லெனினும் (லெனின் கட்டுரைகள்) முதலானவை அவர் கொண்டுவந்த மிகமிக முக்கியமான நூல்கள் ஆகும். குடிஅரசு இதழில் பொது வுடைமை பற்றி எண்ணற்ற மொழி பெயர்ப்புக் கட்டுரை களையும் சொந்தமாக எழுதப்பட்ட கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். இந்த எழுத்துகளின் சிறப்புத்தன்மை, இங்குள்ள சூழ்நிலைமைக்கு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சிந்தனைகளை கையாளும் நோக்கத்தைத் தெள்ளத் தெளி வாக வெளிப்படுத்துவது ஆகும்.

பெரியாருக்கும் இந்தியப் பொதுவுடைமையாளர்களும் நிலவிய இந்த முதல் காலகட்ட கூட்டுறவு சுயமரியாதை சம தர்மக் கட்சியின் வேலைத் திட்டத்தை வரைவதில் பெரி யாருக்கும் ம.சிங்காரவேலு-ப.ஜீவானந்தம் ஆகியோருக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளால் முடிவுக்கு வந்தது. ப.ஜீவானந்தம் சுயமரியாதை சமதர்மக் கட்சியைக் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி கொண்டு கரைத்துவிட்டார்.

கூட்டுறவு நிலவிய இரண் டாவது சந்தர்ப்பம்1948-54. இந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது; காங்கிரஸ் கட்சிக்கு விரோதி ஆனது. ஆகவே, விரோதிக்கு விரோதி நண்பன் என்ற வகை யில் கூட்டுறவு தோன்றியது. ஆயினும் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை அளவிலும் நடைமுறை அளவிலும் காங் கிரஸ் விரோதத்தைக் கைவிட்டு, இந்தியத் தேசிய மைய நீரோட்டத்தில் கலந்து, தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு, காங்கிரசுடன் நெருக்கம் காட்டத் தொடங்கி யவுடன் இந்தக் கூட்டுறவு முடிவுக்கு வந்தது.

மீதமுள்ள காலம் முழுவதும் பெரியார் இந்தியக் கம்யூனிஸ்ட்களுடன் முரணுறவு கொண்டிருந்தார்.  இந்தியத் தேசியவாதச் சொல்லாடல், வகுப்புவாரி பிரதிநிதித்துவ எதிர்ப்பு முதலானவற்றுக்காக ‘பார்ப்பன கம்யூனிஸ்ட்கள்’ எனக் கம்யூனிஸ்ட்களைப் பெரியார் கடுமையாக விமர்சித் துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி, கூட்டுறவு நிலவிய காலங்களில் மட்டுமே பெரியாரை ஜனநாயக வாதியாக அதிகாரபூர்வமாக வருணித்தது; பிற காலங்களில் பிற் போக்குவாதி, வகுப்புவாதிய வாதி, ஏகாதிபத்திய ஆதர வாளர், முதலாளி-நிலவுடைமை நலன் பேணுநர் முதலான குற்றச் சாட்டுகளை முன்வைத்தது.

சிங்காரவேலர், ஜீவானந் தம், ப. ராமமூர்த்தி ஆகிய பொதுவுடைமையாளர்கள் பெரியாருடன் கூட்டுறவும் முரணுறவும் கொண்டிருந்தனர். ஏ.எஸ்.கே. மிக வித்தியாசமாக எப்போதும் பெரியாருடன் கூட்டுறவை வலியுறுத்தி வந்தார்.

இந்தக் கூட்டுறவு, முரணுறவு ஆகியவை குறித்து வரலாற்று விவரங்களுக்குள் யார் சரி, யார் தவறு என வாதிப் பது முடிவற்ற வாத பிரதிவாதம். இப்படிச் செய்வதைவிட பெரி யார்-கம்யூனிஸ்ட்களிடையே நடைபெற்ற உரையாடல்களில் இருந்த சிக்கல் மையங்களைக் கவனிப்பதும், அவை பற்றிய வாத எடுத்துரைப்புகளைத் தொகுத்து ஆராய்வது பயன் தருவதாக அமையும் எனக் கருதுகிறேன்.

சாதி ஒழிப்பு

சாதி ஒழிப்பில் பெரி யாரின் வாதங்கள் பண்பாட்டுத் தளத்தில் ஆனவை; கம்யூனிஸ்ட் களின் வாதங்கள் பொருளா தாரத் தளத்தில் ஆனவை என்கிற வாதம் முதல் தலை முறை கம்யூனிஸ்ட்களில் பெரும்பான்மையோருடைய வாதம். இதன் தொடர்ச்சியாக, பொருளாதாரத் தளத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்த வுடனேயே பண்பாட்டுத் தளத்தில் மாற்றம், அதாவது சாதி ஒழிப்பு நிகழ்ந்துவிடும் என வாதிட்டனர். பொருளாதாரத் தளத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு ‘இந்திய தேசிய’ விடுதலையை சாதிக்க வேண்டும், முழுமைபடுத்த வேண்டும்; இதற்கு தேசிய / மக்கள் / புதிய ஜனநாயகப் புரட்சியைச் செய்ய வேண்டும் என வாதிடுகின்றனர். இறுதி யாகத் தங்களது தேசிய ஜனநாயக / மக்கள் ஜனநாயக / புதிய ஜனநாயக முதலான சோசலிச வகை ‘புரட்சி’ ஒன்று மட்டுமே ‘சாதிமுறை’யை ஒழிக்க முடியும் என வாதிடு கின்றனர். ஆகவே எப்போதும் ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு’க்காக ‘இந்து / இந்திய தேசியவாதி’ களுடன் கூட்டுறவு கொண் டிருந்தனர். சாதி ஒழிப்பு, சமூகச் சீர்திருத்தப் போராட்டங்களை முன்னெடுத்த இயக்க மரபு வழி யில் வந்தவர்கள் என்பதைவிட, தேசிய விடுதலை போராட்ட இயக்க மரபில் அடையாளப் படுத்திக் கொள்வதில் கம்யூனிஸ் டுகளின் முனைப்பு பிரசித்தம். இந்தப் போக்கில் தேசியவாதச் சொல்லாடல்களைத் தம்முடை யதாகச் சுவிகரித்துக் கொண் டனர்.

சாதி ஒழிப்பு பற்றிய பெரியாரின் வாதம் பொருளா தாரம், பண்பாடு, அரசியல், சமயம், அன்றாட வாழ்க்கை முதலான எல்லாத் தளங்களை யும் தழுவியது; எல்லாத் தளங் களையும் ஊடுருவிச் செல்வது. பெரியாரின் சாதி ஒழிப்பு வாதத்தில் மையம், பார்ப்பனர் என்னும் சமூக வகைமையை ஒழித்துக் கட்டுவது. எப்படி பொதுவுடைமை சமூக அமைப்புக்கு, முதலாளி என்னும் சமூக வகைமை ஒழிக்கப்படுவது அவசியமோ, அப்படி சாதி ஒழிப்புக்கு பார்ப்பன சமூக வகைமை ஒழிக்கப்படுவதும் அவசியம் என்பது பெரியாரின் வாதம்.

பார்ப்பன சமூக வகைமை யின் இருப்பு இந்து மதம், இந்திய தேசியம், இவற்றின் தொடர்ச்சியாக அமைந்த இந்திய அரசு ஆகியவற்றால் ஆதாரப்பட்டிருப்பதால், இவற்றை ஒழித்தால்தான் பார்ப்பன சமூக வகைமையை ஒழிக்க முடியும் என்றார். காலனிய காலத்தில் பார்ப் பனரல்லாதவர் அல்லது சூத்திரர் அல்லது திராவிடர், இந்து மதம் – தேசியம் முதலான பார்ப்பனச் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தங்கள் சமூக முன்னேற்றம் குறித்து அக்கறை கொள்ள வேண்டும்; பார்ப்பன ரல்லாதவர்-அல்லாதவர், அதாவது தாழ்த்தப்பட்டோர் சுயமாக அமைப்பாகத் திரட்டிக் கொண்டு தங்கள் சமூக முன்னேற்றத்தில் / சுயமாரியதை ஆக்கத்தில் அக்கறை கொள்ள வேண்டும் என்பது பெரியாரின் வாதம். பின் காலனிய காலத்தில் இந்து / இந்திய தேசியம் இந்திய ஒன்றிய அரசாக உருவெடுத்தப் பின்னர், இந்திய ஒன்றியத் திலிருந்து வெளியேறுவதன் மூலமாகவே சாதியை ஒழிக்க முடியும்என்றார். ஆகவே சாதி ஒழிப்புக்கு தமிழ்நாட்டு விடுதலை அவசியம் என வலி யுறுத்தினார்.இந்திய யூனியன் அரசின் உறுப்பான இந்திய ஜனநாயகத்தைப் பித்தலாட்டம் என்றார். இப்படியான இலட்சியவாத இலக்கை, அவர் சமகால அரசியல் நிலைமை களுக்கேற்ப முன்வைத்து அவரது போராட்ட இயக்கங் களை வழிநடத்திச் சென்றார்.

சாதி ஒழிப்பு குறித்து கம்யூனிஸ்ட்கள் தங்களது வாதத்தை இப்போதும் அப்படியே தொடர்கின்றனர் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் சாதி ஒழிப்பில் அம்பேத்கர், பெரியார் ஆகியோரை ஏற்றுக்கொண்டு விட்டதற்கு அடையாளமாக இந்த வாதங்களை இணைத்து, சாதி ஒழிப்பிற்குப் பண்பாட்டு, பொருளாதாரத் தளங்களில் இணையாக வேலை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். மற்றபடிக்கு, பெரியாரின் வாதம் பற்றிய தோழர்களின் புரிதலில் ஒரு முன்னேற்றமும் இல்லை.

பெரியார் பார்ப்பனச் சூழ்ச்சியான இந்து / இந்திய தேசியத்தைக் கம்யூனிஸ்ட்கள் ஏற்றுக் கொண்டதைக் கடுமையாக விமர்சித்தார். சாதி ஒழிப்பு குறித்து கம்யூனிஸ்ட்கள் அக்கறை கொள்ளவில்லை எனக் குறைப்பட்டுக் கொண் டார். பார்ப்பன எதிர்ப்பையும் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையும் வகுப்புவாதம் என்று முத்திரை குத்திய மார்க்சிஸ்ட் கட்சியை ‘பார்ப்பனக் கட்சிகளில் ஒன்று’ எனக் கடுமையாக விமர்சித்தார்.

பார்ப்பன வகுப்பு எதிர்ப்பும் பார்ப்பனிய எதிர்ப்பும்

கம்யூனிஸ்ட்கள் எப்போ தும் பெரியாரின் பர்ப்பன எதிர்ப்பு தவறு; அது கூடாது; பார்ப்பனிய எதிர்ப்புதான் சரி என வாதிட்டு வருகின்றனர். இதுபற்றிய ஒரு உரையாடல்.

தோழர் 1 : பார்ப்பனி யத்தைத்தான் எதிர்க்க வேண் டுமே ஒழிய, பார்ப்பனர்களை எதிர்க்கக் கூடாது.

தோழர் 2 : ஏன் தோழர் …?

தோழர் 1 : பார்ப்பனியம் வேறு; பார்ப்பனர் வேறு. பார்ப் பனியச் சிந்தனைக்குப் பார்ப் பனர் பொறுப்பு அல்ல; இந்திய நிலவுடைமை சமூக அமைப்பு அல்லது அதன் மிச்ச சொச் சங்கள்தான் காரணம். ஆகவே பார்ப்பனிய எதிர்ப்புதான் சரி.

தோழர் 2 : ஓ அப்படியா தோழர். அப்படியானால் இது போலவே, நிலப் பிரபுத்து வத்தைத் தான் எதிர்க்கனும் நிலப் பிரபுகளை எதிர்க்கக் கூடாது; முதலாளியத்தைத்தான் எதிர்க்கனும், முதலாளிகளை எதிர்க்கக் கூடாது; ஏகாதிபத்தி யவாதத்தைத் தான் எதிர்க்கனும் அமெரிக்காவை எதிர்க்கக் கூடாது; இல்லையா தோழர்…?

தோழர் 1 : இல்லை… இல்லை… நீங்கள் விதண்டா வாதம் பண்றீங்க… சரியில்லை.

‘வகுப்பு’ பற்றிய பெரியா ரின் கருத்தாக்கம் மிகவும் சிரத்தையானது; மிக எதார்த்த மானது. இதில் ஏழை-பணக் காரன், தொழிலாளி-முதலாளி, உழைப்பாளி-சோம்பேறி ஆகிய எல்லா சமூக முரண்களையும் உள்ளடக்கி நோக்குவார். பார்ப்பனத் தன்மைக்கும் பணக்காரத் தன்மைக்கும் உள்ள உறவை வலியுறுத்துவார். பெரியார் ‘ளுடிஉயைட ஊடயளள’ என்ற சொல்லுக்கு ஈடாக ‘வகுப்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்தி னார். பார்ப்பனர், பார்ப்பனரல் லாதார்/ திராவிடர், பார்ப்பன ரல்லாதார்-அல்லாதார்/தாழ்த்தப்பட்டோர்ஆகிய மூன்று வகுப்புகள் சமகால இந்திய/தமிழகச் சமுதாய அமைப்பில் இருக்கின்றன; நடப்பில் பார்ப்பன வகுப்பு சமுதாயத்தின் அனைத்து வளங் களையும் அபகரித்துக் கொண்டு, மீதமுள்ள இரண்டு வகுப்புகளை மிகுந்த சூழ்ச்சித் திறத்தோடு எல்லா நிலைகளி லும் ஒடுக்கி வருகின்றது. இந்தப் பார்ப்பன வகுப்பு கொடுங் கோன்மையிலிருந்து விடுபட பார்ப்பனரல்லாதாருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் உரிமை உண்டு.

தாழ்த்தப்பட்ட வகுப்பை அடிமைப்படுத்துவதில் பார்ப் பனரல்லாத வகுப்பு பெருமிதம் கொள்வதைக் கைவிட்டு, தாம் பார்ப்பன வகுப்புக்கு அடிமை யாய் இருப்பதை உணர்ந்து, தாழ்த்தப்பட்ட வகுப்புடன் ஒன்றுபட்டுப் போராடி, வகுப்புரிமை பெறுவதின் வழி ‘சூத்திர’ இழிவைப் போக்கிக் கொள்ள வேண்டும். இதுதான் ‘சூத்திர’ இழிவைப் போக்கிக் கொள்வதற்கு ஒரே வழி.

பார்ப்பன வகுப்புக்கும் மற்ற இரண்டு வகுப்புகளுக்கும் உள்ள அசமத்துவம் கண்கூடு. இந்த அசமத்துவத்தை ஒழிக்க வகுப்புரிமை சகல மட்டங்களி லும் நிலைநிறுத்தப்பட வேண் டும். கல்வி, அரசுப் பணிகள் முதல் சமூக நிறுவனங்களான கோயில் வரை வகுப்புரிமை/ வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தேவை. இது சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கான வழி முறைகளில் ஒன்று. ஆகவே தான், வகுப்புரிமை சமதர்மக் கொள்கை வகைப்பட்டது என்றார் பெரியார்.

இந்தியக் கம்யூனிஸ்ட்கள் ‘வகுப்பு’, ‘வகுப்புரிமை’ என்ற பெரியாரின் கருத்தாக்கங்களை ‘வகுப்புவாதம்’, ‘சாதிவாதம்’ என்ற விமர்சித்துள்ளனர்; விமர் சனம் செய்து வருகின்றனர். ‘வகுப்பு’ என்பது வெறும் சாதிகள் தொகுப்பு என்று வாதிட்டனர். ‘வர்க்கம்’தான் மெய்யானது. அசமத்துவம் முற்று முழுக்க பொருளாதார ரீதியானது மட்டுமே. மற்றவையெல்லாம் இரண்டாம் தரமானது. இதுவும் தோழர் களின் வாதம். தொழிலாளி, ஏழை விவசாயி, பணக்கார விவசாயி, விவசாயத் தொழி லாளர், நிலப்பிரபு, சிறு முதலாளி, பெரு முதலாளி, தரகு முதலாளி என தோழர்களின் வர்க்கப் பகுப்பாய்வு முடிவுக்கு வராமல் போய்க்கொண்டே இருக்கின்றது. இதில் சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவையும் தோழர்களால் தீர்மானிக்க முடியவில்லை. ஒரு சாதியில் பல வர்க்கங்களும் பல சாதிகளுக்குள் ஒரு வர்க்கமும் இருக்கின்றது என்ற வெற்றி கரமான சூத்திரத்தை இறுதியில் உருவாக்கிக் கொண்டுள்ளனர். ஆயினும் சமூக எதார்த்தம் இந்தக் கலைச் சொற்களில் அடங்காமல் திமிறிக்கொண்டு நிற்கிறது.

பொதுவாக, கம்யூனிஸ்ட் கள் பார்ப்பனரை ஒரு சமூக வகுப்பாகக் கொள்ளாமல், பிற சாதிக் குழுமங்களைப் போன்ற ஒரு சாதிக் குழுமமாகக் கருது கின்றனர். அதனால் அப் பார்ப்பன சாதிக் குழுமத்தில் தொழிலாளி முதல் முதலாளி வரை சகல வர்க்கங்களும் நிலவு கின்றன என்றும், பார்ப்பன எதிர்ப்பு பேசி அக்குழுமத்தில் உள்ள தொழிலாளி வர்க்க ஒற்றுமையைச் சீர்குலைத்து விடக் கூடாது என்றும் வலி யுறுத்துகின்றனர். எவ்வாறாயி னும் நடப்பு இந்திய சமுதாய அமைப்பில் ‘பார்ப்பன மேலாண்மை’யை / அசமத்து வத்தைப் பேணும் பார்ப்பனி யத்தை  எல்லா வகை கம்யூனிஸ்ட்கள் அரைகுறை மனதோடோ/முழு மனதோ டோ ஏற்றுக் கொள்கின்றனர் (ஏற்றுக் கொள்ளாத அரிய வகை கம்யூனிஸ்ட்களும் உண்டு). ஆயினும் பார்ப்பன எதிர்ப்பு கூடாது, பார்ப்பனி யத்தை / பிராமணிய எதிர்ப்பு தான் சரி. மேலும் இந்து மதம், இந்து / இந்திய தேசிய வாதம் ஆகியவை ‘வரலாற்று’ப் பூர்வ மானவை. இவை பற்றிய பெரியாரின் வாதம் தவறானவை என்பவை கம்யூனிஸ்ட் வாதங்கள்.

இந்திய வரலாறு முழு வதும், புத்தர் முதல் பெரியார் வரை பார்ப்பன எதிர்ப்பு பேசப் பட்டுள்ளது. ஆயினும் இந்திய வரலாற்றில் பார்ப்பன எதிர்ப்பை ‘வகுப்புவாதம்’/ ‘சாதிவாதம்’ / ‘இனவாதம்’ / ‘ஜனநாயக விரோதம்’ என முதன்முறையாக மார்க்சியம் என்னும் தலைசிறந்த அறிவி யலைக் கைகொண்டு கம் யூனிஸ்ட்கள்தாம் ‘விஞ்ஞானப் பூர்வமாக’ வரையறை செய் தனர். இதுதான் உலகிலே சிறந்த அறிவியலைக் கைகொண்ட பெறுபேறு.

தோழர்களின் இந்த வாதம்பற்றி ஒன்றும் சொல் வதற்கில்லை. ஆனால் தொண்ணூறு சதம் உழைப் பாளி மக்களாக இருக்கும் பிற் படுத்தப்பட்டோர் / தாழ்த்தப் பட்டோர் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகளின் பொறுப்பு களில் உள்ள பிரதிநிதித்துவம் என்ன? ‘பத்து’ சதம் உள்ள பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதி உழைப்பாளிகளின் பிரதிநிதித்துவம் என்ன? இந்தக் கேள்வி தோழர்களிடம் அளவில்லாத சீற்றத்தை மட்டுமே உற்பத்தி செய்கிறது. தலைமைப் பொறுப்புகளுக்கு மார்க்சிய அறிவு, தகுதி, அனுபவம் உள்ள ஊழியர்கள், பிற்படுத்தப்பட்டோர் / தாழ்த் தப்பட்டோர் உழைப்பாளி மக்களிடமிருந்து இன்னும் உருவாகவில்லை; உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த சமதானத்தை நூறு ஆண்டுகள் கழித்தும் தோழர்கள் கூறு கின்றனர். என்னதான் இருந்தா லும் வகுப்புவாரி பிரதிநிதித் துவம் பார்ப்பன மேலாண்மை யை ஒழிக்காது; புரட்சி தானே ஒழிக்கும். அதுவரையிலும் உழைக்கும் ‘பார்ப்பன’வர்க்க மேலாண்மை நிலவத்தானே செய்யும்.

இந்து மத / தேசிய எதிர்ப்பு

கம்யூனிஸ்ட்கள் இன்றும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விசயம் பெரி யாரின் இந்து மத / இந்திய தேசிய எதிர்ப்பு. இந்து மதத்தை யும் இந்தியத் தேசியத்தையும் பார்ப்பன வகுப்பின் நலன் பேணும் சூழ்ச்சியாகப் பெரியார் நோக்கினார். ஆனால் கம்யூனி ஸ்ட்கள் இந்து மதம், இந்திய தேசியம் வரலாற்றுப் பூர்வ மானவை என வாதிட்டனர்.

இந்து மதம், இந்து / இந்திய தேசியவாதம் பார்ப்பன நலன் பேணும் சூழ்ச்சி. இவற்றுக்கு எந்த வரலாற்றுப் பூர்வமும் இல்லை. இவை ஏமாற்று என்பது பெரியாரின் வாதம்.

இந்து மதத்தையும் இந்தியத் தேசியத்தையும் எதிர்த்ததற்கு மிக முக்கியமான காரணம் சுயமரியாதை என்னும் கருத்தாக்கமும் நடைமுறையும் ஆகும். பெரியாருடைய இலட்சிய சமுதாயம் சுயமரியாதை சமதர்ம சமுதாயம் ஆகும். இதுதொடர்பான சிந்திப்பின் மீது முதலில் எனது கவனத்தை ஈர்த்தவர் வீ.எம்.எஸ். சுப குண ராஜன் என்ற பெரியார் ஆய் வாளர்.பெரியாரின் “குடி”அரசு என்னும் கருத்தாக்கம் மிக முக்கியத்துவம் மிக்கது. ஆழ மாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியது. நவீன தேச அரசுகளின் இறையாண்மை, குடியுரிமை என்னும் முரணில் பெரியார் ‘குடி’யை மையப் படுத்தினார். தேசியம், தேசம் என்பதிலிருந்து சுயமாக இறையாண்மையைப் பெறும் நவீன அரசுகளை நிராகரித்து, குடிமையை மையப்படுத்தி, அதிலிருந்து மட்டுமே இறைமை (அதிகாரத்தை) பெறும் அரசைப் பற்றி பேசினார். அதே போல அரசு என்பதையும் அரசாங்கம் (கவர்ன்மெண்ட்) என்பதையும் பெரியார் வேறு படுத்தி நோக்கினார். அரசு நிரந்தரமானது, அரசாங்கம் தற்காலிகமானது. இந்திய தேச அரசை பெரியார் நிராகரித்தார். ஆனால் கர்வன்மெண்ட்களை / கவர்னன்ஸை முக்கியப்படுத் தினார். ஆயினும் அவர் குடிமை மையப்படுத்திய/ கவர்னன்ஸை மையப்படுத்திய தமிழ்நாடு ‘குடிஅரசை’ முன்மொழிந்தார்.

தேர்தல் ஜனநாயக மைய நீரோட்டத்தில் பங்கேற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், கொஞ் சம் கொஞ்சமாக இந்தியத் தேசியவாத நீரோட்டத்தில் கரைந்துபோய் விட்டனர். அதே நேரத்தில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்திய தேசிய வாதத்தையும் தேச/நாட்டுப் பற்றையும் கைவிடமுடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையி லிருந்தே இந்திய-இந்து தேசிய வாதம் நடப்பு சமூக அமைப்பைப் பேணும் இந்தியத் தேசிய அரசுப் பொறிமுறையின் கருத்துநிலைக் கருவி என்னும் உண்மையை மறுதலிக்கும் நிலை வருகின்றது. அதனால் அவர்களால் கடும்போக்கு இந்திய-இந்து தேசியவாதத்தை மதவாதமாகப் பார்க்க முடி கின்றதே தவிர, பாசிசப் போக் காகக் காணமுடியவில்லை. பார்ப்பனிய இந்து பாசிசம் என அடையாளம் கண்டாலும் தங்களது சோசலிச வகைப் பட்ட ‘தேசிய / மக்கள் / புதிய ஜனநாயகப் புரட்சி’யே அதற்கு தீர்வு என வாதிடவும் செயல் படவும் முடிகின்றது. ஆனால் இந்து தேசியவாதத்தால் ஆதாரப்பட்டிருக்கும் இந்திய அரசு பொறிமுறை வீழ்த்தி இந்தப் புரட்சியை நிகழ்த்த கம்யூனிஸ்ட்களிடம் வலு இல்லை என்பது மட்டுமில்லை. அவர்கள் ‘இந்திய அரசு’ போன்ற ஒரு புரட்சி அல்லது ஜன்தன் ‘இந்திய’ சர்காரை அமைக்க கனவு காண்கின்றனர்.

பெரியார் பொறுத்தவரை பார்ப்பன வகுப்பையும் அதன் நலன் பேணும் இந்து மதம், இந்திய தேசியவாதம் ஆகிய வற்றைப் பார்ப்பன வகுப்பு கொடுங்கோன்மை என எடுத் துரைத்தார். பார்ப்பன வகுப் பின் கொடுங்கோன்மையை எதிர்ப்பதிலும் முறியடிப்பதி லும் பார்ப்பனரல்லாத வகுப்புகள் ‘வகுப்பு உணர்ச்சி’ பெறுவதும் ஒற்றுமையுமே முன்தேவை என வாதிட்டார். இதுகுறித்த பெரியாரின் வாதங்கள் எவ்வளவுதூரம் மெய்யானவை என நமது சமகால இந்துத்துவ அரசியலின் ‘திக்விஜயம்’ உணர்த்துகிறது.

மேற்கண்டவைதாம் பெரியாரும் இந்தியக் கம்யூனிஸ்ட்களும் விவாதிக்கும் தத்துவச் சிக்கல்கள் என நினைக் கிறேன். இது தொடர்பான தத்துவ விசாரணைகள் மேலும் மேலும் ஆழமாக நடக்கும் போதுதான் பெரியார் சிந்தனையும் இந்தியக் கம்யூனிஸ்ட்களின் சிந்தனையும் மெய்யாகவே நெருக்கமான கூட்டுறவைச் சாதிக்க இயலும்.

கட்டுரையாளர் : பத்திரிகையாளர்

 

நிமிர்வோம் நவம்பர் 2019 மாத இதழ்

You may also like...