‘இந்தி-இந்துஸ்தானி’ உருவானது எப்போது? தேவ்தான் சௌதுரி – தமிழாக்கம்: எஸ்.வி. ராஜதுரை

ஆங்கிலம் அன்னிய மொழி; ‘இந்தி’ இந்தியாவின் மொழி என்று

பா.ஜ.க.வினர் பேசி வருவது உண்மையல்ல. ‘இந்துஸ்தானி’ என்ற மொழியை உருவாக்கியதே

ஒரு பிரிட்டிஷ்காரர்தான் என்பதை சான்றுகளுடன் நிறுவுகிறது கட்டுரை.

 

காலஞ்சென்ற எனது தாய்வழிப் பாட்டி – 1940களில் கொல்கத்தாவில் தத்துவ இயலும் உயிர் இயலும் படித்தவர் – நான் சிறுவனாக இருந்த போது ஒருமுறை என்னிடம் கூறினார்: “நவீன ஹிந்தி மொழியின் பிறப்பிடம் கொல்கத்தா, அங்குதான் அது கொல்கத்தா விலுள்ள வில்லியம் கோட்டையில் ஆங்கிலேயர்களால் புதிதாக உருவாக்கப்பட்டது.”

அண்மையில் நடத்தப்பட்ட ‘ஹிந்தி நாள்’ நிகழ்ச்சிகளில், ஹிந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று உரத்துச் சொல்லப் பட்டதை செய்தித்தாள்களில் படிக்கும்போது, என் பாட்டியின் சொற்கள் நினைவுக்கு வந்தன. அவர் சொன்னதைப் பரிசீலிக்கவும் உண்மையைக் கண்டறியவும் முனைந்தேன். ‘மறைக்கப்பட்ட உண்மை’களை அறிந்துகொள்ளவும் ஹிந்தியின் ‘இரகசிய வரலாற்றை’ப் புரிந்து கொள்ளவும் விரும்பினேன்.

நான் கண்டறிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்; இந்தியாவிலுள்ள மொழிகள் பற்றிய சில முக்கியமான உண்மைகளை நினைவுகூர்வதிலிருந்து இந்த வரலாற்றைத் தொடங்குகிறேன்.

மொழிப் பன்மைத்துவம்

எழுபது லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட பபுவா நியூகினியா நாட்டில்தான் உலகத்திலேயே அதிக எண்ணிக்கையுள்ள மொழிகள் உள்ளன. 852 மொழிகளில் 840 மொழிகள் இன்றும் பேசப்படு கின்றன. இரண்டு மொழிகள் இறந்து விட்டன. மொழிப் பன்மைத்துவப் புள்ளியைப் பொறுத்தவரை உலகில் பபுவா நியூகினியாதான் 0.990 புள்ளி களுடன் முதல் இடம் வகிக்கிறது (யுனெஸ்கோவின் 2009ஆம் ஆண்டு அறிக்கை). 0.930 புள்ளிகளுடைய இந்தியாவுக்கு ஒன்பதாம் இடம்.

ஆனால், ஒரு நாட்டின் மொத்த மக்கள் தொகையைக் கொண்டு அந்த நாட்டின் மொழிப் பன்மைத்துவத்தை அளவிடுவோமே யானால், 130 கோடி மக்கள் உள்ள (உலகில் அதிக மக்கள் தொகையுள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது; சீனா, அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேஸில் ஆகியன முறையே 1ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம் இடத்தில் உள்ளன) இந்தியாதான் மற்ற எல்லா நாடுகளையும்விட முன்னணியில் இருக்கிறது. ஆக இந்தியாவை, ‘உலகிலேயே மொழிப் பன்மைத் துவத்தையும் மக்கள் தொகையையும் மற்ற எல்லா நாடுகளையும் விட அதிகம் கொண்டுள்ள நாடு’ என்று கூறலாம்.

2001ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 122 முக்கிய மொழிகளும் 1,599 இதர மொழிகளும் பேசப்படு கின்றன. 10 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மக்கள் பேசும் மொழிகள் 30 என்றும் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பேசும் மொழிகள் 122 என்றும் அந்தப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அஸ்ஸாமியம், வங்காளி, போடோ, டோக்ரி, குஜராத்தி, கன்னடம், காஷ்மிரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மராத்தி, மெய்தி (மணிப்புரி), நேப்பாளி, ஒதியா, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகியன இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட மொழிகள் (எட்டாம் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள மொழிகள் – மொழிபெயர்ப்பாளர்). இவற்றின் கூடவே மத்திய அரசாங்கத்தின் இரு ஆட்சி மொழிகளான ஹிந்தியும் ஆங்கிலமும் உள்ளன.

இவைதவிர, “செழுமையான மரபும் தனித் தன்மையும் கொண்ட” ஆறு மொழிகளுக்கு (கன்னடம், மலையாளம், ஒதியா, சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு) செவ்வியல் மொழிகள் என்ற அங்கீகாரம் தரப்பட்டுள்ளது. உலகில் இன்னும் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கும் மொழிகளில் தமிழ் மிகத் தொன்மையான மொழிகளி லொன்றாகும். இந்த திராவிட மொழி இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தின் ஒரு பகுதியான சம்ஸ்கிருதத்தைவிடப் பழைமையானது.

ஹிந்தியின் முன்னோடி கடிபோலி

பெரும் ஆரவாரத்துடன் செய்யப்படும் பொய்த்தகவல் பரப்புரைகள் உருவாக்கும் கருத்துகளுக்கு மாறாக, ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி அல்ல. இந்தியாவுக்கு தேசிய மொழி ஏதும் இல்லை. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய மக்களில் 26.6 விழுக்காட்டினர் மட்டுமே ஹிந்தியைத் தங்கள் தாய்மொழி என அடையாளப் படுத்தியுள்ளனர்.

இந்தியாவின் மிக இளமையான மொழிகளி லொன்றான ஹிந்தி, டெல்லியிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் பேசப்பட்டு வந்த கடிபோலி என்னும் வட்டார மொழியை அடிப்படையாகக் கொண்டது. அதன் இலக்கிய மரபு 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வளரத் தொடங்கியது. கடிபோலியுமே, முன்னாளில் இருந்த அவதி போன்ற வட்டார மொழிகளை அகற்றிவிட்டுத் தான் வளர்ந்தது. சாமானிய மக்களால் பேசப் பட்டு வந்த இனிய மொழியான அவதியில்தான் துளசிதாசரின் ‘இராமசரிதமானாஸ்’ 17ஆம் நூற்றாண்டில் இறுதியில் எழுதப்பட்டது. அவதி மொழி பேசியவர்களிடையே தோன்றிய பக்தி இயக்கம்தான் வடஇந்தியா முழுவதிலும் ராமரை பிரபல்யப்படுத்தியது. அத்தகைய பரப்புரை, நவீன இந்தியாவின் அரசியல் மீது செல்வாக்குச் செலுத்தியது. 2018இல் எனது கட்டுரையொன்றில் ராமர் இந்துக் கடவுளாக ஆக்கப்பட்ட சுவாரஸ்யமான வரலாற்றை எழுதியுள்ளேன்.

உருதுவும் ஹிந்தியும்

ஹிந்துஸ்தானியின் இன்னொரு வடிவமான உருது 1800களில் கணிசமான அளவுக்கு பாரசிக மொழியின் தாக்கத்துக்குட்பட்டு மொழிரீதியான கௌரவத்தைப் பெறத் தொடங்கியபோதுதான் ஹிந்தியும் வளர்ச்சியடையத் தொடங்கியது.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின் கீழ் ஹிந்துஸ்தானி மொழி ஹிந்தி, உருது என்ற இரண்டு வெவ்வேறு மொழிகளாகத் தரப்படுத்தப்பட்டது. இது, இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு மத சமுதாயத் தினரை மொழிரீதியாகப் பிரித்து, அவர்களுக் கிடையே பிளவை ஏற்படுத்தி, அவர்களின் ஒற்றுமையைப் பலகீனப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக ஏன், பல நூற்றாண்டுகளாக மக்களின் அறியாமையையும் தப்பெண்ணங் களையும் பயன்படுத்திக்கொள்ளும் சுயநல அரசியல் போக்குகளை உருவாக்குவதற்காக ஏகாதிபத்திய ஆட்சி கடைப்பிடித்த ‘பிரித்தாளும் சூழ்ச்சி’யின் பகுதியாக இருந்திருக்கக்கூடும்.

மொழிப் பிரிவினை

ஆனால், மேற்சொன்ன ‘மொழிப் பிரிவினை’, இந்திய வரலாற்றின் முற்றிலும் அறியப்படாத ஒரு குறிப்பிட்ட நபரால்தான் சாத்தியமாயிற்று. அவர்தான் ஜான் கில்கிரைஸ்ட்; ஹிந்துஸ்தானி மொழிகளின் தந்தை என்று அங்கீகாரம் கிடைக்காமல் போனவர். ’சேம்பர்ஸ் வாழ்க்கை வரலாறு அகராதி’யில் அவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவரான ஜான் போர்த்விக் கில்கிரைஸ்ட், மொழியியலை சுயமாகக் கற்றவர். சொந்த ஊரான எடின்பரோவில் அவர் செய்து வந்த வங்கித் தொழில் நொடிந்துபோன பிறகு 1762இல் இங்கிலாந்தின் கப்பற்படையைச் சேர்ந்த ஓர் அறுவை சிகிச்சை மருத்துவரிடம் பயிற்சி பெற்றுவந்த அவர் மும்பைக்கு வந்து சேர்ந்தார். அங்கு கிழக்கிந்தியக் கம்பெனியின் மருத்துவ சேவைப் பிரிவில் சேர்ந்த அவருக்கு 1784இல் துணை அறுவை சிகிச்சை மருத்துவர் பதவி தரப்பட்டது. இந்தியாவிலுள்ள பல இடங் களுக்குப் பயணம் செய்கையில் ஹிந்துஸ்தானி மொழிகளைக் கற்பதில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதன் பொருட்டு அவர் ஓராண்டு விடுப்பில் சென்று மொழிகளைக் கற்றுக் கொள்வதில் தீவிரமாக ஈடுபட்டார். மருத்துவத் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்ட அவர் வெளியிட்ட முதல் நூலான ‘ஓர் அகராதி; ஆங்கிலமும் ஹிந்துஸ்தானியும்’ 1787-90ஆம் ஆண்டுகளில் கொல்கத்தாவிலிருந்த ஸ்டூவர்ட் அண்ட் கூப்பர் என்னும் புத்தக வெளியீட்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது .

பிரிட்டிஷாரின் நிர்வாகத்துக்குத் தேவையான மொழி என்று ஹிந்துஸ்தானியைப் பிரபலப்படுத்திய அவர், அன்றைய கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி பிரபுவையும் கிழக்கிந்தியக் கம்பெனியையும் அந்த மொழிகளைப் (ஹிந்தி, உருது) பயிற்றுவிக்கின்ற பயிற்சி மையத்தை கொல்கத்தாவில் நிறுவும்படி கேட்டுக் கொண்டார். ‘ஓரியண்டல் செமினாரி’ அல்லது ’கில்கிரைஸ்ட் கா மதராஸா’ என்று தொடக்கத்தில் அழைக்கப்பட்ட அந்தப் பயிற்சி மையம் ஒராண்டுக்குள் விரிவுபடுத்தப்பட்டு கொல்கத்தாவிலுள்ள வில்லியம் கோட்டை வளாகத்திலேயே செயல்பட்டுவந்த வில்லியம் கோட்டைக் கல்லூரியாக 1800ஆம் ஆண்டு முதல் செயல்பட்டது. 1804ஆம் ஆண்டுவரை அக்கல்லூரியின் முதல் முதல்வராக இருந்த கில்கிரைஸ்ட் மேலை, கீழைத் தேச மொழிகளின் ஒலி அமைப்பு, அந்த மொழிகளின் கட்டமைப்பு விதிகள் முதலியனவற்றைக் கூறும் நூலை 1804இல் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து மேலும் பல நூல்களை எழுதினார்.

ஹிந்தியை வளர்த்த ஆங்கிலேயர்

தனது கல்லூரியில் இந்திய எழுத்தாளர் களையும் அறிவாளிகளையும் சேர்த்துக் கொண்ட அவர், ஹிந்தியில் எழுதுவதற்கு ஊக்குவிப்புத் தொகைகளையும் கொடுத்தார். அவர்களின் பங்களிப்பின் காரணமாக ஹிந்தி மொழியும் இலக்கியமும் குறுகிய காலத்தில் துரித வளர்ச்சி கண்டன. அவருடைய முன்முயற்சியால்தான் லல்லுலால் என்பவர் எழுதிய ‘பிரேம்சாகர்’ என்னும் பிரபலமான ஹிந்தி நூல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து 1818இல் விவிலியத்தின் ஹிந்தி மொழியாக்கம் கொண்டுவரப்பட்டது. 1826இல் கொல்கத்தாவிலிருந்துதான் ‘உதான் மார்தண்ட்’ என்னும் முதல் ஹிந்தி நாளிதழும் வெளிவரத் தொடங்கியது.

கடிபோலியை மூலவேராகக் கொண்ட ஹிந்துஸ்தானியை இரண்டாகப் பிரித்ததன் காரணமாக தனித்தனியான தன்மையையும் எழுத்துகளையும் கொண்ட இரு மொழிகள் உருவானதாக அவர் எழுதினார். அதாவது தேவநாகரியில் எழுதப்படும் ஹிந்தியும் பாரசிக எழுத்துகளில் எழுதப்படும் உருதுவும் உருவாக்கப்பட்டு, முறைப்படுத்தப்பட்டன. இந்த விவரத்தை உறுதிப்படுத்தியுள்ள சந்தோஷ்குமார் கரெ என்னும் அறிஞர், ‘இந்தியாவிலுள்ள மொழி பற்றிய உண்மை’ என்னும் ஆய்வுக்கட்டுரையில், ஹிந்தியும் உருதும் தனித்தனியான இரு மொழிகளாக உருப்பெறுவதன் பொருட்டு அவற்றின் மொழியியல், இலக்கியக் கூறுகள் கட்டமைக்கப்பட்டன – பாரசிக, அரபு மொழி களிலிருந்து கடன்வாங்கப்பட்டவையிலிருந்து உருதுவும் சம்ஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டவை யிலிருந்து ஹிந்தியும் – என்று கூறுகிறார்.

19ஆம் நூற்றாண்டின் விளைபொருள்

‘ஹிந்தி இலக்கியத்தின் வரலாறு’ என்னும் நூலில் ஆய்வாளர் கே.பி.ஜிண்டால், “இன்று நாம் ஹிந்தி என்று அறியப்படும் மொழி, பத்தொன் பதாம் நூற்றாண்டின் விளைபொருள்” என்று எழுதுகிறார். ஹாலந்து நாட்டைச் சேர்ந்த வரலாற்றாய்வாளர் தாமஸ் தெ ப்ரூயினின் கருத்தும் இதுதான். புகழ்பெற்ற ஐரிஷ் மொழியி யலாளர் ஜார்ஜ் ஆப்ரஹாம் க்ரீர்ஸன், இன்று இந்தியாவில் ‘தூய’ ஹிந்தி மொழி என்று சொல்லப்படுவது இந்த நாட்டில் பிறந்த எந்த வொருவரின் தாய்மொழியாக இருக்கவில்லை என்றும், ஐரோப்பியர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட அற்புதமான கலப்பினமே ஹிந்தி என்றும் கூறுகிறார்.

ஆக, காலஞ்சென்ற எனது பாட்டி சொன்னது சரிதான்; நவீன ஹிந்தியின் பிறப்பிடம் கொல்கத்தா. ஜான் கில்கிரைஸ்ட்டின் ஓய்வொழிச்சலில்லாத முயற்சிகளின் கீழ் அது புதிதாக உருவாக்கப்பட்டது.

கில்கிரைஸ்ட்டின் குழந்தைகள்

ஆங்கிலத்தை விரும்பும் இந்தியர்கள் ‘மெக்காலேவின் குழந்தைகள்’ என்று ஏளனம் செய்யப்படுகிறார்கள். அப்படியானால், ஹிந்தி பேசும் இந்தியர்களை ‘கில்கிரைஸ்ட்டின் குழந்தைகள்’ என்றழைக்கலாமல்லவா?

நவீன இந்திய நாகரிகம் 8000 ஆண்டுப் பழைமையானது என்றால், 200 வயதேயானதும், காலனிய ஏகாதிபத்திய எஜமானர்களால் – அதுவும் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற கொள்ளைக்காரத் தனியார் நிறுவனத்தின் ஊழியராக இருந்தவரால் – உருவாக்கப்பட்ட துமான ஒரு மொழியை இந்தியாவின் தேசிய மொழி என்று கருத முடியாது.

சம்ஸ்கிருதமும்கூட இந்தியாவின் தாய்மொழி அல்ல. இண்டிக் இந்தோ – ஆரிய, திராவிட, சைனோ – திபெத்திய, ஆஸ்ட்ரோ – ஆசியாடிக், தாய் – கடாய், பெரும் அந்தமானிசிய எனப் பல்வேறு மொழிக் குடும்பங்களால் உருவாக்கப்பட்ட மொழிப்பன்மைத்துவம் கொண்ட தொன்மையான நமது நாட்டில் எந்தவொரு தனி மொழியையும் இந்திய மக்கள் எல்லோருக்குமான தாய்மொழி என்று கூற முடியாது.

ஆக, ஹிந்தியை இந்தியாவின் தேசிய மொழி என்று திணிக்க முடியாது. இந்தியாவுக்குத் தனியொரு தேசிய மொழி தேவையில்லை, பன்மைத்துவம் என்பதுதான் இந்தியாவின் அடிப்படையான தேசியத் தன்மை, அது அப்படியே நீடிக்க வேண்டும்.

முஸ்லிம் – கிறிஸ்துவர்கள் அளித்த கொடை

இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 29, இந்தியாவின் அனைத்துக் குடிமக்களுக்கும், அவரவர்களுடைய மொழியைப் பாதுகாத்தல், அவர்களது கலாச்சாரத்தையும் அவர்களது எழுத்தையும் பாதுகாத்தல் என்பதைப் பொறுத்தவரை சமத்துவத்தை வழங்குகிறது.

எந்தத் தனி மொழியையும் மற்றவர்கள் மீது திணிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது; அப்படிச் செய்தால் அது மொழி, இனத்துவ, கலாச்சார பன்மைத்துவம் கொண்ட நவீன இந்தியாவில் எதிர்விளைவை உண்டாக்கி, நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் சீர்குலைக்கும்.

இந்தியாவுக்குத் தேவையானது ‘ஒரு மொழி, ஒரு தேசம்’ என்பதல்ல; மாறாக, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற தனது இறையாண்மையுள்ள, தன்னிகரற்ற ‘நாகரிக உணர்வை’ அறுதியிட்டு உறுதிப்படுத்துவதுதான் தேவை.

சங் பரிவாரம் என்றழைக்கப்படும் இந்துத்துவக் கருத்துநிலை, ‘இந்தி இந்து, இந்துயிஸம், இந்துஸ்தான்’ என்னும் நான்கு சொற்களை அடிப்படையாகக் கொண்டிருக் கிறது. முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் இந்தியா மீது படையெடுத்து வந்த அந்நியர்கள் என்று கருதுகிறது. ஆனால் ‘இந்து’, ’இந்துஸ்தான்’ என்ற சொற்களை உருவாக்கி யவர்கள் பாரசிகர்கள். ஹிந்தி மொழியை வளர்த்தெடுத்ததுடன் ‘இந்து’ என்ற சொல்லின் பின்னொட்டாக ‘இஸம்’ என்பதைச் சேர்த்தவை கிழக்கிந்தியக் கம்பெனியும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும்தான்.

ஆக, சங் பரிவாரத்தின் “அடையாளம், உலகக் கண்ணோட்டம், தேசியவாத அரசியல்” எல்லாமே “முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்” நமக்குக் வழங்கிய கொடைகளை அடிப்படை யாகக் கொண்டவையே! இதைவிடப் பெரிய முரண்நகை இருக்க முடியுமா?

மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு:

ஹிந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருந்தவரும், நாடெங்கிலும் ‘ஹிந்தி பிரசாரச் சபை’கள் உருவாக்கப்படுவதை ஊக்குவித்து வந்தவருமான காந்தியும் கூட பரிந்துரைத்தது தற்போது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஆட்சி மொழியாக இடம்பெற்றுள்ள ‘ஹிந்தி’யை அல்ல; மாறாக, வட இந்தியாவில் இந்துக்களும் முஸ்லிம்களும் இயல்பாகப் பேசி வருகின்ற ‘இந்துஸ்தானி’யைத் தான். ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 351 கூறுகிறது: “ஹிந்தி மொழியைப் பரப்புவதை ஊக்குவிப் பதும்; இந்தியக் கூட்டுப் பண்பாட்டின் ஊடகமாக அம்மொழியை வளர்ப் பதும்; ஹிந்தி மொழியின் தனித் தன்மைக்குக் கேடு ஏற்படாவண்ணம் அதனைச் செழுமைப் படுத்தும் பொருட்டு எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா இந்திய மொழிகளிலிருந்தும் இந்துஸ் தானியிலிருந்தும் வடிவங்கள், பாணிகள், சொற்றொடர்கள் ஆகியவற்றை உட் கிரகித்துக் கொள்வதும்; அதன் சொற் களஞ்சியத்தை வளப்படுத்தும் பொருட்டுத் தேவை ஏற்படும்போதும் விருப்பத்துக்கு ஏற்பவும் முதன்மையாக சம்ஸ்கிருதத்தி லிருந்தும் இரண்டாவதாகப் பிற மொழி களிலிருந்தும் சொற்களை எடுத்துக் கொள்வதும் இந்திய ஒன்றியத்தின் கடமையாகும்”.

ஆனால், மத்திய அரசாங்கத்தின் ஆட்சி மொழியாக உள்ள ‘ஹிந்தி’ மேன்மேலும் சம்ஸ்கிருதமயமாக்கப்பட்டுத்தான் வருகிறதேயன்றி, பிற மொழிகளிலிருந்து, குறிப்பாக தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளி லிருந்து அது எதையும் கடன் வாங்கியதில்லை. மத்திய அரசாங்கம் கொண்டுவரும் திட்டங்கள் எல்லா வற்றுக்கும் சம்ஸ்கிருதப் பெயர்களே வைக்கப்படுகின்றன. ஆனால், இப்படி சம்ஸ்கிருத மயமாக்கப்பட்ட ‘அதிகார பூர்வமான ஆட்சி மொழி’யில் பேசுவதற்கு நிர்மலா சீதாராமன் போன்ற மத்திய அமைச்சர்களும்கூடத் திணறுகிறார்கள் என்பதுதான் உண்மை.

கட்டுரையாளர் தேவ்தான் சௌதுரி மேற்கு வங்க எழுத்தாளரும் ஆய்வாளரும் ஆவார்.

மொழி பெயர்ப்பாளர் எஸ்.வி. ராஜதுரை,

மார்க்சிய-பெரியாரிய-அம்பேத்கரிய ஆய்வாளர்

நிமிர்வோம் அக்டோபர் 2019 மாத இதழ்

You may also like...