பார்ப்பனியம் கட்டமைத்த ஜாதிய ‘அடுக்கு அதிகாரம்’ யுவால் நோவா ஹராரி
உலகம் முழுதும் அண்மையில் விற்பனையில் முதலிடம் பெற்றுள்ள நூல், யுவால் நோவோ ஹராரி எழுதிய ‘சேப்பியன்ஸ்’ என்ற மனித குல வரலாறு, 30 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பார்ப்பனர்கள் திணித்த ‘ஜாதி – அடுக்கு முறை’ அதிகாரம் குறித்தும் அது கடவுளால் உருவாக்கப்பட்டது என்ற புரோகிதர்கள் புரட்டுகளையும் விளக்கும் பகுதி இது.
சாதி அமைப்பு முறையைக் கடைப் பிடிக்கின்ற இந்துக்கள், பிரபஞ்ச சக்திகள்தான் ஒரு சாதியை இன்னொரு சாதியைவிட உயர்ந்ததாக ஆக்கியிருப்பதாக நம்புகின்றனர். படைப்புக் குறித்து இந்துக்கள் கொண்டுள்ள கட்டுக்கதைகளில் மிகப் பிரபலமான ஒன்று இப்படி அமைந்துள்ளது. ‘புருஷம் (சமஸ்கிருதத்தில் புருஷ்) என்ற ஒரு பண்டைய ஜீவனின் உடலிலிருந்து கடவுளர் இவ்வுலகத்தைப் படைத்தனர். புருஷத்தின் கண்ணிலிருந்து சூரியனும், அதன் மூளையிலிருந்து சந்திரனும், அதன் வாயிலிருந்து பிராமணர்களும், அதன் கைகளிலிருந்து சத்திரியர்களும், அதன் தொடைகளிலிருந்து வைசியர்களும், அதன் கால்களிலிருந்து சூத்திரர்களும் படைக்கப் பட்டனர்’. நீங்கள் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டால், பிராமணர்களுக்கும் சூத்திரர் களுக்கும் இடையேயான சமூக மற்றும் அரசியல் ரீதியான வேறுபாடுகள், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையேயான வேறுபாடுகளைப் போல இயல்பானவைதான் என்றும் நிரந்தர மானவை என்றும் நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டி யிருக்கும். பண்டைய சீனர்களிடம் மற்றொரு நம்பிக்கை இருந்தது. நூவா என்ற பெண் கடவுள் மண்ணிலிருந்து மனிதர்களைப் படைத்ததாகக் கூறுகின்ற அவர்கள், மேட்டுக்குடியினரை அருமையான மஞ்சள் நிற மண்ணிலிருந்தும், சாமானியர்களைப் பழுப்பு நிறச் சகதியிலிருந்தும் உருவாக்கியதாகக் கூறுகின்றனர்.
ஆனால், நமக்குத் தெரிந்தவரை, இந்த ‘மேல்-கீழ்’ என்ற அனைத்து அடுக்கதிகார அமைப்புகளும் மனிதக் கற்பனையின் விளைவாக உருவானவைதான். பிராமணர்களும் சூத்திரர் களும் ஒரு பழங்கால உயிரினத்தின் உடலின் பல உறுப்புகளிலிருந்து கடவுளரால் உருவாக்கப் பட்டவர்கள் அல்லர். மாறாக, சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் மனிதர்கள் உருவாக்கிய சட்டங்களும் கட்டுப்பாடு களும்தான் இவ்விரு சாதிகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தோற்று வித்தன. அடிமைகளுக்கும் சுதந்திரமான மனிதர்களுக்கும் இடையே உயிரியல்ரீதியாக எந்த வேறுபாடும் இல்லை. இது அரிஸ்டாட்டிலின் கருத்தோடு முரண்பட்டு நிற்கின்ற உண்மை. மனிதச் சட்டங்களும் கட்டுப்பாடுகளும்தான் சிலரை அடிமைகளாகவும் மற்றவர்களை எஜமானவர்களாகவும் மாற்றியுள்ளன. கறுப்பின மக்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே பாரபட்சமற்ற உயிரியல் வேறுபாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, அவர்களுடைய தோலின் நிறம், தலைமுடியின் அமைப்பு ஆகியவற்றைக் கூறலாம். ஆனால், அறிவிலும் அறப்பண்பு களிலும் அவர்களுக்கு இடையே வேறுபாடுகள் இருப்பதற்கான சான்றுகள் எதுவும் நம்மிடம் இல்லை.
தங்களுடைய சமுதாய அடுக்கதிகார அமைப்பு மட்டுமே இயல்பானது என்றும் நியாயமானது என்றும், மற்றவற்றின் அடுக்கதிகார அமைப்புகள் தவறான மற்றும் நகைப்பிற்குரிய காரணிகளின் அடிப்படையில் அமைந்துள்ளன என்றும் சிலர் முழங்குகின்றனர். நவீன மேற்கத்தியர்கள், இனரீதியான அடுக்கதிகார அமைப்பைப் பற்றிய யோசனையை எள்ளி நகைக்கின்றனர். கறுப்பின மக்கள் வெள்ளையர்கள் வாழும் பகுதிகளில் வாழக் கூடாது. வெள்ளையர்களின் பள்ளிகளில் சேர்ந்து பயிலக் கூடாது. வெள்ளையர்களுக்கான மருத்துவமனைகளில் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படக் கூடாது என்று வலியுறுத்துகின்ற சட்டங்கள் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கின்றன. ஆனால், பணக்காரர்கள் மற்றும் ஏழைகளின் அடுக்கதிகார அமைப்பு அர்த்தம் வாய்ந்ததாக இருப்பதாகப் பல அமெரிக்கர்களும் ஐரோப்பியர் களும் கருதுகின்றனர். செல்வந்தர்கள் தனியான, அதிக ஆடம்பரமான வீடுகள் அமையப் பெற்றப் பகுதிகளில் வாழ்வதையும், அதிக மதிப்புமிக்கத் தனியார்ப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிப்பதையும் தனியான மற்றும் சிறந்த மருத்துவக் கருவிகளைக் கொண்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதையும் அந்த அடுக்கதிகார அமைப்பு ஓர் ஆணையாகவே செயல்படுத்தி யுள்ளது. ஆனாலும், பெரும் பாலான பணக்காரர்கள் பணக்காரர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்ததுதான் என்பதும், பெரும்பாலான ஏழைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஏழைகளாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்ததுதான் என்பதும் நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும்.
துயரம் என்னவென்றால், சிக்கலான மனிதச் சமுதாயங்களுக்குக் கற்பனையான அடுக்கதிகார அமைப்புகளும் நியாயமற்றப் பாகுபாடுகளும் தேவையாக இருப்பதுபோலத் தெரிகிறது. எல்லா அடுக்கதிகார அமைப்புகளும் அறநெறி ரீதியாக ஒரே மாதிரியாக இல்லை. சில சமுதாயங்கள் மற்றவற்றைவிட மிகத் தீவிரமான பாகுபாட்டால் துன்புற்றன. ஆனால், பாகுபாட்டை ஒட்டு மொத்தமாகத் தூக்கியெறிந்த எந்தவொரு பெரிய சமுதாயத்தையும் பற்றி அறிஞர்கள் இதுவரை கேள்விப்பட்டதில்லை. மேல்வகுப்பினர் மற்றும் கீழ் வகுப்பினர் என்றும், வெள்ளையர்கள் மற்றும் கருப்பர்கள் என்றும், மேட்டுக்குடியினர் மற்றும் சாதாரண மக்கள் என்றும், பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் என்றும் கற்பனையான வகை களுக்குள் தங்கள் கூட்டத்தினரைப் பிரிப்பதன் மூலம் மக்கள் தங்களுடைய சமுதாயங்களில் மீண்டும் மீண்டும் ஒழுங்கை உருவாக்கி வந்துள்ளனர். சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிலரை மற்றவர்களைவிட அதிக மேன்மையானவர்களாக ஆக்கியதன் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு இடையேயான உறவுகளை இவ்வகைகள் முறைப்படுத்தியுள்ளன.
அடுக்கதிகார அமைப்புகள் ஒரு முக்கியமான விஷயத்திற்கு உதவுகின்றன. முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவரைத் தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ளுவதற்குத் தேவையான நேரத்தையும் ஆற்றலையும் விரயம் செய்யாமலேயே ஒருவரையொருவர் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை அவை மக்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றன. ஜார்ஜ் பெர்னார்டு ஷாவின் பிக்மேலியன் நாடகத்தில், எலைஸா டூலிட்டிலுடன் தான் எவ்வாறு பழக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு அவளோடு ஒரு நெருக்கமான பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை ஹென்ரி ஹிக்கின்ஸ்க்கு இருக்கவில்லை. ஏனெனில், அவள் கீழ்வகுப்பைச் சேர்ந்த ஒருத்தி என்பதையும், அவளைத் தன் விருப்பம்போலத் தன்னால் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும் அவள் பேசும் விதத்திலிருந்தே அவன் தெரிந்து கொள்கிறான். ஒரு பூக்கடையில் வேலை பார்க்கின்ற நவீனப் பெண்ணான எலைஸா, தினமும் தன் கடைக்கு வருகின்ற ஏராளமான மக்களிடம் ரோஜாக்களை விற்பதற்குத் தான் எவ்வளவு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டி யுள்ளது. ஒவ்வொரு தனிநபரின் ஆர்வம் என்ன, அவருடைய பர்ஸில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைப் பற்றி அவளால் விலாவாரியாக அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. மாறாக, அந்நபர் உடையணிந்திருக்கும் விதம், அவருடைய வயது போன்றவற்றையும், சில சமயங்களில் அநாகரீகமாக அவருடைய தோலின் நிறத்தையும் அவன் பயன்படுத்திக் கொள்ளு கிறாள். விலையுயர்ந்த ரோஜாக்களை அதிக எண்ணிக்கையில் வாங்கக்கூடிய சாத்தியம் கொண்ட ஓர் உயர் நிர்வாக அதிகாரியையும், ஒரு சில டெய்ஸி மலர்களை மட்டுமே வாங்கும் சக்தி கொண்ட ஒரு கடை நிலை ஊழியரையும் அவள் அப்படித்தான் உடனடியாக அடையாளம் காண்கிறாள்.
இயல்பான திறன்களில் உள்ள வேறுபாடு களும் சமுதாயப் பிரிவினைகளின் உருவாக்கத்தில் ஒரு பங்கு வகிக்கின்றன என்பதை மறுப்பதற் கில்லை. ஆனால், அத்தகைய இயல்பான திறன்களும் நடத்தைகளும் பொதுவாகக் கற்பனையான அடுக்கதிகார அமைப்புகளின் வாயிலாகவே உருவாக்கப்படுகின்றன. இது இரண்டு முக்கியமான வழிகளில் நடக்கிறது. முதலில், பெரும்பாலான திறன்கள் பராமரித்து வளர்க்கப்பட வேண்டியுள்ளன. ஒருவர் ஒரு குறிப்பிட்டத் திறனுடன் பிறந்திருந்தாலும்கூட, அது அக்கறையோடு வளர்க்கப்பட்டு மெரு கூட்டப்பட்டுப் பயன்படுத்தப்படும் வரை அத்திறமை அவருக்குள் ஓரிடத்தில் வெறுமனே முடங்கிக் கிடக்கும். அவ்வளவுதான். தங்களுடைய திறன்களை வளர்ப்பதற்கும் மெருகூட்டுவதற்கு மான வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அவர்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கிறதா இல்லையா என்பது பொதுவாக அவர்கள் தங்கள் சமுதாயத்தின் கற்பனையான அடுக்கதிகார அமைப்பில் எந்த அடுக்கில் இருக்கிறார்கள் என்பதைச் சார்ந்திருக்கும். ஹாரி பாட்டர் (உலகப் புகழ் பெற்ற குழந்தைகளுக்கான காமிக் எழுத்தாளர்) இதற்கான ஒரு சிறந்த எடுத்துக் காட்டாவான். தன்னுடைய பிரபலமான மாயஜாலக் குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு, அறிவிலிகளால் வளர்க்கப்பட்ட அவன், மாயா ஜாலத்தில் எந்த அனுபவமும் இல்லாமல்தான் ஹார்வார்ட்ஸ் மாயாஜாலப் பள்ளிக்கு வருகிறான். தன்னுடைய சக்திகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதற்கும் தனக்குள் இருக்கும் தனித்துவமான திறன்களை அறிந்து கொள்வதற்கும் அவனுக்கு ஏழு ஆண்டு களும் எண்ணற்ற சாகசங்களும் தேவைப்படு கின்றன.
இரண்டாவதாக, சமுதாயத்தில் வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் துல்லியமாக அதே திறமைகளைத் தங்களிடம் வளர்த்துக் கொண்டாலும், சம அளவு வெற்றி அவர்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனெனில், சமுதாய விதிமுறைகள் ஒரே மாதிரியானவையாக இருப்பதில்லை. ஆங்கிலேய ஆட்சியின்கீழ் இருந்த இந்தியாவில், தீண்டத்தகாதவர் ஒருவரும், ஒரு பிராமணரும், அயர்லாந்து நாட்டுக் குடிமகனான ஒரு கத்தோலிக்கரும், ஓர் ஆங்கிலேயப் புராட்டஸ்டென்டும் ஒரே மாதிரியான வியாபார அறிவைத் தங்களிடம் வளர்த்திருந்தாலும், பணக்காரர்களாக ஆவதற்கான வாய்ப்பு அவர்கள் எல்லோருக்கும் ஒன்றுபோல அமைந்திருக்காது. சட்டக் கட்டுப்பாடுகளும், நலிந்தவர்களை முன்னேற விடாதபடி தடுக்கின்ற அதிகார பூர்வமற்ற முட்டுக்கட்டைகளுமாகச் சேர்ந்து பொருளாதாரப் போட்டியில் தில்லு முள்ளுகளைச் செய்தன.
நச்சுச் சுழற்சி
அனைத்துச் சமுதாயங்களும் கற்பனையான அடுக்கதிகார அமைப்புகளின் அடிப்படை யிலேயே அமைந்துள்ளன என்றாலும், அவை ஒரே அடுக்கதிகார அமைப்பின் அடிப்படையில் அமையவில்லை. இந்த வேறுபாடுகளுக்கு எவை காரணம்? பாரம்பரிய இந்தியச் சமூகம் சாதியின் அடிப்படையிலும், ஓட்டோமான் (துருக்கி) சமுதாயம் மதத்தின் அடிப்படையிலும், அமெரிக்கச் சமுதாயம் இனத்தின் அடிப்படை யிலும் மக்களைப் பிரித்தது ஏன்? பெரும்பான்மை விஷயங்களில் தற்செயலான வரலாற்றுச் சூழல்களின் விளைவாகவே அடுக்கதிகார அமைப்புகள் முதலில் உருவாயின. ஆனால், பல்வேறு குழுக்களுக்கு அதில் தனிப்பட்ட ஆதாயம் இருந்ததால், பல தலைமுறைகளின் ஊடாக அவர்கள் அவற்றைத் தம்முடைய சமுதாயத்திற்குள் ஆழமாகப் புகுத்தி மெருகேற்றினர்.
எடுத்துக்காட்டாக, சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தோ-ஆரிய மக்கள் இந்தியத் துணைக் கண்டனத்தை ஆக்கிரமித்து உள்ளூர் மக்களை அடக்கி ஒடுக்கியபோதுதான் இந்து மதத்தின் சாதி அமைப்பு முறை வடிவம் பெற்றதாகப் பல அறிஞர்கள் ஊகிக்கின்றனர். அந்த இந்தோ-ஆரியர்கள் அச்சமூகத்தை ஓர் அடுக்கதிகார அமைப்பாகப் பிரித்தனர். அதில், வந்தேறிகளான புரோகிதர்களும் படைவீரர்களும் உயர்ந்த நிலையை வகித்தனர் (அதில் வியப்பதற்கு எதுவும் இல்லை). உள்ளூர்க்காரர்கள் வேலைக் காரர்களாகவும் அடிமைகளாகவும் வாழ்ந்தனர். எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்த ஆக்கிரமிப்பாளர்கள், சமுதாயத்தில் தங்களுடைய உயர்ந்த நிலையும் தனித்துவமான அடையாளமும் போய்விடுமோ என்று அஞ்சினர். இந்த அச்சத்தைத் தடுப்பதற்கு, மக்களை அவர்கள் பல சாதிகளாகப் பிரித்தனர். ஒவ்வொரு சாதியும் ஒரு குறிப்பிட்டத் தொழிலையோ அல்லது சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்டப் பாத்திரத்தையோ வகிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு சட்டத் தகுதி நிலையும் சலுகைகளும் கடமைகளும் உருவாக்கப்பட்டன. சாதிகள் ஒன்றோடொன்று கலப்பது தடை செய்யப்பட்டது. அதன்படி, வெவ்வேறு சாதி யினருக்கிடையே எந்தவிதமான சமூகத் தொடர்புகளும் இருக்கக் கூடாது. இருவேறு சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இடையே திருமணம் நடைபெறக் கூடாது. அவர்கள் ஒருவரோடு ஒருவர் உணவைப் பகிர்ந்து கொள்ளக்கூட அவர்களுக்கு அனுமதி இருக்க வில்லை. இந்த வேறுபாடுகள் சட்டபூர்வ மானவையாக இருந்ததோடு, மதரீதியான கட்டுக் கதைகளின் பிரிக்கப்பட முடியாத அம்சமாகவும் மத நடைமுறைகளின் ஒரு பகுதியாகவும் ஆயின.
சாதி அமைப்பு முறை ஒரு தற்செயலான வரலாற்று நிகழ்வு அல்ல. மாறாக, அது ஒரு நிரந்தரமான பிரபஞ்ச யதார்த்தத்தைப் பிரதிபலித்தது என்று அந்த ஆட்சியாளர்கள் வாதிட்டனர். தூய்மை, தூய்மை யின்மை ஆகிய கோட்பாடுகள் இந்து மதத்தில் இன்றியமையாத விஷயங்களாக இருந்தன. சமுதாயப் பிரமிடைத் தூக்கிப் பிடிக்க அவை வலிமைப்படுத்தப்பட்டன. வேறொரு சாதியைச் சேர்ந்தவர்களுடன் கலந்து பழகுவது தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்தச் சமுதாயத்தையும் மாசுபடுத்தி விடும் என்றும், எனவே, அத்தகைய தொடர்புகள் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டும் என்றும் சமயப் பற்றுக் கொண்ட இந்துக்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட யோசனைகள் இந்துக்களுக்கு மட்டுமே தனித்துவமானவை அல்ல. வரலாறு நெடுகிலும், கிட்டத்தட்ட அனைத்துச் சமுதாயங்களிலும், சமுதாயப் பிரிவு களையும் அரசியல் பிரிவுகளையும் வலியுறுத்து வதில் தீட்டு, தூய்மை ஆகிய கோட்பாடுகள் ஒரு முன்னணிப் பங்கு வகித்து வந்துள்ளன. ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்கள் தங்களுடைய சலுகைகளைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்காக அவற்றைத் தங்களுக்கு ஏற்ற விதத்தில் வளைத்து வந்துள்ளனர். ஆனால், தீட்டு குறித்த அச்சம் முழுக்க முழுக்க மதகுருக்களும் அரசர்களும் புனைந்து வந்துள்ள ஒன்று அல்ல. உயிர் பிழைத்து இருப்பதற்கு நம்முள் செயல்படுகின்ற ஓர் உள்ளுணர்விலேயே அது வேரூன்றியிருக்கலாம். நோயாளிகள், சடலங்கள் போன்ற நோய்களைப் பரப்பக்கூடிய எந்தவொரு காரணியையும் கண்டவுடன் நமக்குள் ஓர் அருவருப்பும் வெறுப் பும் ஏற்படும்படி செய்வது இந்த உள்ளுணர்வு தான். பெண்கள், யூதர்கள், ரோமா பழங்குடியினர், ஓரினச் சேர்க்கையாளர்கள், கருப்பர்கள் போன்ற ஏதேனும்ஒரு மனிதக் குழுவைத் தனிமைப்படுத்த நீங்கள் விரும்பினால், இவர்கள் எல்லோரும் தீட்டுப்பட்டவர்கள் என்றும், தீட்டைப் பரப்புபவர்கள் என்றும் மற்றவர்களை நீங்கள் நம்ப வைத்துவிட்டால் போதும்.
இந்து மதத்தின் சாதி அமைப்பு முறையும் இனக் கலப்பிற்கு எதிரான சட்டதிட்டங்களும் இந்தியக் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றி யுள்ளன. இந்தோ-ஆரிய ஆக்கிரமிப்பு மறக்கப்பட்டு நெடுங்காலத்திற்குப் பிறகும்கூட இந்தியர்கள் சாதி அமைப்பு முறையில் தொடர்ந்து நம்பிக்கைக் கொண்டனர். தீட்டு உருவாகி விட்டது என்று கருதப்பட்டாலும், காவிய அடையாளம் அப்படியே நீடிக்கவில்லை. அவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. உண்மையில், காலப்போக்கில் பெரிய சாதிகளுக்குள் பல உட்பிரிவுகள் தோன்றின. இறுதியில் முதன்முதலாகத் தோன்றிய நான்கு சாதிகள் மூவாயிரம் வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்தன. சாதிகள் இவ்வாறு பெருகியபோதும், சாதி அமைப்புமுறையின் அடிப்படைக் கொள்கை மட்டும் மாறவில்லை. அதாவது, ஒவ்வொரு நபரும் சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட அடுக்கு நிலைக்குள் பிறக்கிறார். அந்நிலையின் விதிமுறைகளை அவர் மீறினால் அது அவருக்கும் ஒட்டு மொத்தச் சமுதாயத்திற்கும் தீட்டு ஏற்படுத்தி விடுகிறது என்ற கொள்கை தொடர்ந்து நீடிக்கிறது. ஒருவருடைய தொழிலையும், அவர் என்ன உண்ணலாம் என்பதையும், அவர் எங்கு வாழலாம் என்பதையும், யாரை அவர் மண முடிக்கலாம் என்பதையும் அவருடைய சாதிதான் தீர்மானிக்கிறது. பொதுவாக, ஒரு நபரால் தன்னுடைய சாதிக்கு உள்ளேயேதான் மண முடிக்க முடியும். அதனால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அதே சாதியைச் சேர்ந்தவர்களாக ஆகின்றனர்.
ஒரு புதிய தொழில் உருவாகியபோது அல்லது ஒரு புதிய மக்கட் குழு தோன்றியபோது, இந்துச் சமுதாயத்திற்குள் முறையான ஓர் இடம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் ஒரு சாதியாக அங்கீகரிக்கப்பட வேண்டி யிருந்தது. ஒரு சாதி என்ற அங்கீகாரத்தைப் பெறத் தவறிய குழுவினர் விலக்கி வைக்கப்பட்டனர். பல பிரிவுகளைக் கொண்ட அச்சமுதாயத்தில் கீழ்மட்ட நிலையில்கூட அவர்கள் இல்லை. அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள். அவர்கள் மற்றவர்களிடமிருந்து முற்றிலுமாக விலகி வாழ வேண்டியிருந்தது. குப்பைக் கூளங் களைக் கிளறி அவற்றிலிருந்து கிடைத்தவற்றை உட்கொண்டு மிகவும் அருவருப்பான, மிகவும் அவலமானதொரு வழியில் அவர்கள் வாழ வேண்டியிருந்தது. சமுதாயத்தில் அடிமட்டத்தில் இருந்த சாதியினர்கூட அந்தத் தீண்டத்தகாதவர் களுடன் கலந்து பழகுவதையும், சேர்ந்து உண வருந்துவதையும், அவர்களைத் தொடுவதையும், அவர்களைத் திருமணம் செய்து கொள்ளுவதை யும் தவிர்த்தனர்.
சாதி வேறுபாடுகளைக் களையவும் சாதிக் கலப்பினால் தீட்டு எதுவும் ஏற்படுவதில்லை என்று இந்துக்களை ஒப்புக் கொள்ள வைக்கவும் இந்திய அரசாங்கம் முயற்சிகள் மேற் கொண்டும்கூட, நவீன இந்தியாவில், திருமணம், வேலை ஆகிய விஷயங்கள் மீது சாதி அமைப்பு முறை இன்றளவும் ஓர் அளப்பரிய தாக்கம் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.
ட
நிமிர்வோம் செப்டம்பர் 2019 மாத இதழ்