கற்பின் பெயரால் …- ஓவியா அன்புமொழி

பொதுதளத்தில் பெண் உரிமை பேசும் ஆண்கள் கூட அவர்கள் ஒருவரை இழிவு செய்யப் பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகள் எல்லாம் பெண்ணின் உடல் சார்ந்துதான் இருக்கும்.

இன்றைக்கும்  இந்த  சமூகத்தில் பெண்களை அடிமைப்படுத்த  இங்கு பயன்படுத்தும் வார்த்தை கற்பு. இந்த வார்த்தை  ஒன்று தான் பெண்களின் உடல் மீதான வன்முறையை காலம் காலமாக நிகழ்த்தி கொண்டுவருகிறது. கற்பு  என்ற ஒன்றை வைத்து சங்க கால  இலக்கியம் முதல்  இன்றுள்ள  ஊடகம் வரை பெண்களை ஒரு புனித பிம்பமாக சித்தரித்து வருகிறது. இந்த புனித பிம்பத்தையும் , அடிமைத் தனத்தையும் முதலில் எதிர்த்து அதில் எந்த புனிதமும் இல்லை புடலங்காயும் இல்லை என்று போட்டு உடைத்த, உலகில்  ஒரே தலைவர் தந்தை பெரியார் மட்டுமே.

இன்னும் ஒரு படி மேலே சென்று கற்பு  என்ற வார்தையை பகுபதமா பகாபதமா என்று அதன் இலக்கணத்தையே ஆராய்ந்து  கற்பு என்ற ஒன்று இருக்குமேயானால் அது ஒழுக்கம்  சார்ந்தது  என்றால் அது ஆணுக்கும் இருக்க வேண்டும் அல்லவா என்றார். மகளிர் நிறை என்ற வார்த்தை எப்படி வந்தது? கற்பு என்பது எப்படி பெண்ணுக்கு மட்டு மான சொல்லாய் மாறியது? இது பெண்ணை அடிமையாக்க ஆண்களால் கட்டமைக்கபட்ட வார்த்தையே அன்றி வேறில்லை.  இதை பெண்கள் தூக்கி எறியாதவரை இந்தத் திணிப்பு நீண்டு கொண்டுதான் இருக்கும். இந்த அடிமை  விலங்கை உடைத்து எறியாவிடில் பெண் விடுதலையும் இல்லை சமூக விடுதலையுமில்லை.

பெண் சுதந்திரம் என்று பேசினாலே, இப்போது பெண் கள் எல்லாம் சுதந்திரமாகத் தானே இருக்கிறீர்கள். எல்லோ ரும் வேலைக்கு போறிங்க. படிக்குறிங்க. உயர்ந்த இடத்தில் இருக்குறிங்க. இன்னும் என்ன இல்லை என்று கேட்பவர்கள் அதிகம் உண்டு. உண்மை தான் எல்லா உரிமைகளும் பெற்றா லும் கற்பு என்ற கட்டமைப்பில் தான் இன்னும் சிக்குண்டு இருக்கிறோம். இதை வெறும் சாதி, மதம் மட்டும் புனிதமாக உயர்த்தி பிடிக்கவில்லை. பெண் களாகிய நாமும் இதனை புனிதமாக கருதி அதில் இருந்து வெளிவர யோசிக்கின்றோம்.

காரணம் நமக்கு சொல்லபட்ட கதைகள் எல்லாமே கற்பில்  சிறந்தவள் கண்ணகி, நளாயினி, சீதை. இவர்கள் கதை சொல்வது எல்லாம் கணவன் என்ன கொடுமை  செய்தாலும் அதனை பொருத்து கொள்ளும் பெண்தான் கற்பில் சிறந்தவள். மன்னனைக்கூட கேள்வி கேட்கும் துணிச்சல் உள்ள கண்ணகிக்கு தன் கணவனை கேள்வி கேட்க தைரியம் இல்லை. ஆனால் அவள் தான் “கற்புக்கு அரசி”. காட்டில் தவிக்க விட்டு சென்றாலும் அவன்தான் கண்கண்ட தெய்வம். கணவன் ஆசைப்பட் டால் கூடையில் வைத்து தாசி வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும். இவர்களை தான் இந்த சமூகம் கற்பின் இலக்கணமாய் வைத் துள்ளது. இப்பொழுது கற்பை அதன் கட்டமைப்பை ஏற்றுக் கொள்ளும் பெண்கள் இதை செய்வோமா? ஏன் பெண் களுக்கு மட்டும் இவ்வளவு கட்டமைப்புகள் என்றால் இந்த கதைகள் அனைத்தும் ஆண் களால் எழுதப்பட்டது. இது ஆண்களின் மொழியாக உள்ளது. இதைத் தான் பெரியார் கேட்டார் இதையே ஒரு பெண் எழுதியிருந்தால் இந்த வார்த்தை வந்திருக்குமா என்று? இப்படியான ஒரு கருத்தியல் உருவாகியிருக்குமா என்று? இதில் வள்ளுவரின் குறளையும் விடவில்லை. கற்பு சார்ந்தும், வாழ்க்கை சார்ந்தும் வள்ளு வரின் குறளை ஆய்வுக்குட் படுத்தினார் பெரியார். ஒரு வேளை வள்ளுவர் பெண்ணாக இருந்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டாரோ என்று கேட்டார்.

பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? நூலினை வாசிக்கும் பொழுதுதான் ஓல்கா அவர்கள் எழுதிய மீட்சி வாசித் தேன். அதில் புராணக் கதை களில் வரும் அனைத்து பெண் கதாபாத்திரத்தையும் அவர் களின் குரலாய் எழுதியிருந்தார். ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் நடக்கும் பிரச் சனையில் பெண்கள் எப்படி பாதிப்பு அடைகிறார்கள் என்றும், ஆண்களின் கொடுமைகள் பற்றியும் விரிவாக பேசிய புத்தகம் அது. அதில் அவர்களின் சுயமரியாதையும், உணர்வுகளையும்  மிக தெளிவாக கூறியிருப்பார். பெரியாரின் பெண்ணிய பார்வையோடு மீட்சி  எழுதப் பட்டிருக்கும். ஆண் சமூகத்தின் அடிமை விலங்கில் இருந்து மீண்டெழுந்து தனக்கான மாண்பை மீட்டுருவாக்கம் செய்ய செய்தது ஓல்காவின் மீட்சி.

குழந்தைப் பருவம் தொடங்கி காதல், திருமணம்,  பிள்ளைபேறு வரை அவர்களை ஒரு இயந்திர பொருளாகத்தான் இந்த  சமூகம் பார்க்கிறது.  தன் துணையைத் தேர்வு செய்வதில் தொடங்கி பிள்ளை பெறும் வரை ஆணாதிக்க சிந்தனை தான் தலை தூக்கி இருக்கிறது. வேண்டாம் என்று சொல்லும் உரிமை பெண்ணுக்கு இல்லை. ஆணின் காதலை ஒரு பெண் நிராகரிக்கவே முடியாது அதை மீறி நிராகரித்தால் அவளை பின் தொடர்வது, வற்புறுத்துவது, இறுதியில்  வன்புணர்வு செய்யும் எல்லை வரை ஆண்கள் செல்கிறார்கள். பின் அந்த ஆணையே திருமணம் செய்து கொள்வார்கள் கேட்டால் இழக்க கூடாத ஒன்றை  இழந்து விட்டேன் என்றும் தன் சுயமரியாதையை விட, உணர்வைவிட கலாச்சாரம், கௌரவம் தான் முக்கியம் என்று பெண்ணையே சொல்ல வைத்ததில் இந்த ஆண் சமூகம் வெற்றி அடைந்து விட்டது. இதை உடைத்து ஆண்மை ஒழியும் வரை பெண்கள் விடுதலை சாத்தியம் இல்லை என்றவர் தந்தை பெரியார். இதோடு இல்லாமல் ஆண்மையை நிலைநாட்டுவதில்  சாதிக்கு மிக பெரிய பங்கு இருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் இந்தியாவில் சாதிகள் என்ற புத்தகத்தில் பெண்ணடிமை குறித்து பேசும் போது சதி பழக்கம் குறித்து குறிப்பிடுகிறார். சதி பழக்கம் அதாவது உடன்கட்டை ஏறுதல் நடைமுறைப்படுத்த மிக முக்கிய காரணம் ஆண் இறந்த பிறகு அந்த பெண் வேறு சாதி ஆணைத் திருமணம் செய்ய நேரிடும்; அப்படி செய்துவிட கூடாது என்பது தான் சதியின் சூழ்ச்சி. அந்த சதியை கற்போடு இணைத்துப் பார்த்தால் புரியும். கற்பு என்பதே ஒரு ஆணுடன் மட்டுமே உறவு வைத்து கொள்வதுதானே. வேறொரு ஆணுடன், வேறு சாதி என்றால் கற்பும் கலாச்சாரமும் என்ன ஆவது? கற்பும் சாதியும் பெண் களின் வாழ்வில் எவ்வளவு குரூரமான கட்டமைப்பை உரு வாக்கியுள்ளது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தொலைநோக்கு சிந்தனை யாளர் பெரியார் இதை தான் மிக தெளிவாக சொன்னார் அந்தப் பெண்கள் உடன்கட்டை ஏறினால்கூட ஒருமுறைதான் சாவார்கள், ஆனால்  உங்கள் கற்பிதத்தால் அதில் சிக்கி தினம்தினம் கொடுமைக்குள்ளா கிறார்கள் . உங்கள் கலாச்சார மும், கற்பிதமும் முதலில் ஒழிய வேண்டும் என்றார். இவர்கள் கலாச்சாரம் என்பது ஒரு பெண் ஒரு முறை தான் காதல் கொள்ள வேண்டும், அவனுடன்தான் உறவுவைத்து கொள்ள வேண்டும் காலத்திற்கும் அந்த ஆணுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும். ஆணுக்கு மறுமணம் என்பது மிக எளிது ஆனால் ஒரு பெண்னுக்கு மட்டும் அவ்வளவு விமர்சனங்கள், அறிவுரைகள், கட்டுப்பாடுகள். ஆண் என்றால் வீரம், கோபம், ஆண்மை யுடயவன். பெண் என்றால் பூ, புனிதம், மென்மை, பெண்மை. பொறுத்துப் போகும் பெண்களே பூமி ஆள்வார்கள் என்ற பசப்பு வசனம்  பேசும் இந்த ஆண் சமூகம்.

கடவுள் பெண்களை விபச்சாரிகளாக தான் படைத்தாராம். அதனால் தான் அவர்களை சுதந்திரமாக விடக் கூடாது. அப்படி விட்டால் அவர்கள் ஒழுக்கம் கெட்டு நடப்பார்கள். மேலும்  பேதமையே பெண்ணிற்கு அழகு என்று தான் புராணங்கள் சொல்கின்றன. அறியாமையே பெண்களின் ஆபரணமாம். இந்த அசிங்கத்தைத் தான் புராணங்கள் பேசின. பெண் விடுதலை குறித்து பேசும் சில ஆண்கள் கூட இந்த இடத்தில் தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ளவேண்டும். மேடையில், இன்றைய சூழலில் பெரியாரை ஆண்களை விட பெண்கள்தான் மிக சுலபமாக உள்வாங்கி கொண்டு அதை நடைமுறைப் படுத்துகிறார்கள் ஆண்களுக்கு அது சற்று கடினமாகவே உள்ளது, காரணம் அந்த ஆண்மை. ஆயிரம் இருந்தாலும் நான் ஆண் என்ற எண்ணம். இதிலிருந்து வெளி வருவது சற்று கடினம்தான். ஆனால்  இது தான் பெண்களை குழந்தை பெறும் இயந்திரமாக மாற்றி உள்ளது.  இதில் இரண்டு முக்கியமான பார்வை இருக் கிறது ஒன்று கணவனுக்குத் தந்தை என்ற அங்கீகாரம், பெண்ணுக்குத் தாய்மை என்ற புனிதம்; இதுதான் பெண்ணை முழுமை அடையச் செய்யும் என்று பெண்களை நம்ப வைக்கப் படுகிறது இந்த ஆண் சமூகத்தால். பெண்களே இந்த பெண்மையை முதலில் தூக்கி வீசுங்கள், நீங்கள் பிள்ளை பெற்று கொள்ளவில்லை என்றால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு விடாது, அப்படியே வந்தாலும் பரவாயில்லை, உங்கள் விடுதலை தான் முக்கியம் என்று அந்த காலத்தில் அறியாமையிலே வைக்கப் பட்டிருந்த சூழலில் மிக துணிச்சலாக பேசிய தலைவர் அதனால் தான் அவர் பெரியார்.  இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் அனைத்திற்கும் மூலதனமே அவரின் “பெண் ஏன் அடிமையானாள்” என்ற புத்தகம் தான்.

கற்பும், ஆண்மையும் உடன் பெண்மையும் ஒழிந்தால் மட்டுமே சமூகத்தில் பெண்கள் முழு சுதந்திரம் பெற முடியும். நமக்காக வாழ்நாள் முழுக்க போராடி நாம் சுயமரியாதை யோடு வாழ தன் இறுதி மூச்சு வரை பேசிய தந்தைக்கு நாம் நன்றி கடனாக ஒன்று செய் வோமேயானால் அது பெரி யாரை அடுத்த தலைமுறைக்கு நேர்மையாக கொண்டு செல்ல வேண்டும். நம் பிள்ளைகளுக்கு சொத்துக்கள் சேர்ப்பதைவிட மிகமுக்கியம் அவர்களுக்கு சுதந்திரத்தையும், சுயமரியதை உணர்வையும் கொடுப்பது தான்.

பெரியாரை வாசிப் போம்… பெரியாரைப் பரப்பு வோம்… பெரியாரியலை வாழ்வியலாகக் கொண்டு சமூக விடுதலை பெறுவோம்.

கட்டுரையாளர் : பெரியாரிஸ்ட்

 

நிமிர்வோம் நவம்பர் 2019 மாத இதழ்

You may also like...