காங்கிரஸ் “ஜெயித்தது”
காங்கிரஸ் சட்டசபைத் தேர்தலுக்கு இதுவரை தமிழ் நாட்டில் அபேக்ஷகர்களை நிறுத்தப்பட்டதிலிருந்தே ஒரு அளவுக்குக் காங்கிரசின் கொள்கை வெற்றி பெற்று விட்டதென்றே கூறலாம். என்னவெனில் இன்று தென்னாட்டில் சிறப்பாகத் தமிழ் நாட்டில் காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்க ஆயுதம் என்பதும் அவ்வாதிக்கத்துக்கு ஜஸ்டிஸ் கட்சியால் ஏற்படப் போகும் ஆபத்திலிருந்து தப்புவதற்காகவே காங்கிரஸ் நடத்தப்படுகிறது என்பதும் அறிஞர் அறியாததல்ல. அதற்கு ஆகவே காங்கிரஸ் இன்று சட்டசபை வேட்டை ஆடுகின்றது. முடிவு எப்படி இருந்தாலும் பார்ப்பன ஆதிக்கத்துக்கு வெற்றி ஏற்பட்டுவிட்ட தென்றுதான் சொல்லவேண்டும். என்ன வெற்றி என்றால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சட்டசபைக்குப் பொதுத் தொகுதி மெம்பர்கள் பெண்கள் உள்பட 64 பேர்களேயாகும். இந்த 64 ஸ்தானங்களுக்கு இதுவரை காங்கிரஸ் 62 ஸ்தானங்களுக்கு ஆட்களை நிறுத்தி இருக்கிறது. இவற்றிலும் தோழர்கள் சுப்பையா, சொக்கலிங்கம், அண்ணாமலை, காமராஜ நாடார், கிருஷ்ணசாமி பாரதி, ஆதிகேசவ நாயக்கர், சேலம் சுப்பிரமணியம், ராமநாதன், கிருஷ்ணசாமி பாரதி மனைவி முதலிய சுமார் பதின்மர்களை அவர்கள்...
